இதயத்தாகம்!
எம்.எம். அலீ அக்பர்
அந்த நகரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை அது. இப்போது ஒரு வருட காலமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதில்தான் தன் தங்கை சுமையாவை வேலையில் சேர்த்திருந் தான் சகோதரன் பாஸித். பாஸித்துக்கு அவளை வேலையில் சேர்க்க விருப்பிமில்லைதான். என்றாலும் அவள் இருக்கும் சூழ்நிலையில் அவளின் நிம் மதிக்காகத்தான் இதில் சேர்த்திருந்தான்.
இந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்த சுமையாவின் தோழி ஒருத்திக்கு அண்மையில்தான் திருமணமாகியிருந்தது. மூன்று கிழமைகள் லீவு வழங்கப்பட்டு இன்றைய நாள்தான் அது முடிவடைந்திருந்தது. தன் கணவனுடன் மீண்டும் வேலையில் இணைவதற்கு வந்திருந்தாள். கணவன் விட்டுச் சென்றதும் கேலிப் பேச்சுக்கள் பேசத்தான் செயதார்கள் சில தோழியர்கள். அவளும் விட்டுக் கொடுக்காமல் அவர்களின் பேச்சுக்கு ஈடுகொடுத்தாள்.
சில நிமிடங்களில் அனைவரும் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். தன் தோழி கணவனுடன் வந்ததைக் கண்டதிலிருந்து, இவளது கணவன் இல்லாக்குறை முள்ளால் குத்துவது போன்று அவள் மனதைக் குத்திக் கொண்டே இருந்தது. சுமையா தன் பழைய தடங்களைப் புரட்டிப் பார்க்கின்றாள்.
தான் தந்தையென்று அறிந்திராத பருவத்திலேயே சுமையாவின் தந்தை காலமாகி விட்டார். தாயின் கண்காணிப்பில் வளர்ந்து சாதாரணதரம் வரைக்கும் கல்வி கற்றாள். ஒரேயொரு மூத்த சகோதரன் பாஸித் தான். தான் கற்றுவந்த கல்வியை இடையில் நிறுத்தி விட்டு தாயையும் தங்கையையும் வாழ வைக்க தொழில் முயற்சியில் இறங்கினான். தனியார் நிறுவனமொன்றில் சாதாரண வேலையும் கிடைத்தது.
சுமையா பருவ வயதை அடைந்ததும் தாயாரும் மரணித்துவிடவே பாஸித்துக்கு ஒரே திண்டாட்டமாகி விட்டது. ஒரேயொரு தங்கை, அவளை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பும் பாஸித்திடம் தான். எதுவந்தாலும் அவன் தானே கவனிக்க வேண்டும். தகுந்த ஒரு மாப்பிள்ளையைத் தேடி அலைவதில் முற்படடான். அவனது நிறுவனத்தில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாளராக இருக்கும் மாஹிரை தங்கைக்கு மணவாளனாக கேட்டபோது அவனது பெற்றோர் தாய் தகப்பன் இல்லாத பிள்ளையென்று தயக்கம் காட்டினாலும் மாஹிர் பெண்ணைப் பார்த்து தனக்கு பிடித்தால் தான் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தான். அதன் பிரகாரம் சுமையாவை நேரில் பார்த்ததும் அவளை நன்றாகவே பிடித்துவிட்டது மாஹிருக்கு.
பாஸித்தின் விருப்பத்திற் காகவே பெற்றோர்கள் முடிவெடுத்து மாஹிர், சுமையா திருமணத்தை நடத்தி வைத்தார்கள். சுமையாவின் வீட்டிலேயே மாஹீர் சந்தோசமாக வாழ்ந்துவந்தான். மூன்று வருடங்களாக இன்பகரமாக வாழ்க்கை ஓடிக் கொண்டி ருந்தது. ஆனால் ஒரு குழந் தைச் செல்வம் இல்லாமல் வருந்தினார்கள்.
மாஹிரின் உயிர் நண்பன் பர்ஸாத். இவனது தந்தைக்கு நகரத்தில் சில கடைத்தொகுதி கள் சொந்தமாக இருந்தன. பெரும்பாலும் இதனை நிருவகிப்பவன் பர்ஸாத். அப்போது மூவருடன் சேர்ந்து பர்ஸாத் இந்தியா சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தான். 20 நாட்கள் கொண்ட இப்பயணத்தில் மாஹிரையும் அழைக்கவே பாஸித் இதனை விரும்ப வில்லை. ஆனால் சுமையா இதற்கு சம்மதம் தெரிவிக்கவே பாஸித் இந்தியா சுற்றுலாவை மேற்கொண்டான். பயணச் செலவுகள் அனைத்தையும் பர்ஸாத் தான் மேற்கொள்வதாகச் சொல்லியும் இருந்தான்.
மாஹிர் இந்தியா பயணம் செய்து 20 நாட்கள் தாண்டியும் வீடு வரவில்லை. பாஸித் பர்ஸாதிடம் விசாரித்தபோது இந்தியாப் பயணத்தில் பத்தாம் நாள் அன்று மாஹிர் பயணத்தை இடையில் முறித்துக் கொண்டு வந்துவிட்டதாக கூறினான். எங்கே போய் தேடுவது, யாரிடம் கேட்டு விசாரிப்பது என்று இருந்து விட்டார்கள் சுமையாவும் பாஸித்தும். என்றாலும் தன் கணவன் உயிரோடு தான் இருக்கிறார். என்றாவது ஒருநாள் தன்னைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையிலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் சுமையா.
அன்று தன் சகோதரன் பாஸித்திடம் சுமையா, தனக்கு வீட்டிலே தனிமையாக இருப்பது மனக் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் நகரத்திலே இருக்கும் ஆடைத்தொழிற் சாலையில் தன்னை சேர்த்து விடுமாறும் வேண்டினாள். பாஸித்துக்கும் இது திருப்தி இல்லைதான். என்றாலும் வீட்டில் தன் கணவனையே நினைத்துக்கொண்டு மனம் சஞ்சலப்படுவதைவிட பரவாயில்லை என்று சேர்த்துவிட்டான்.
சுமையாவுக்கு அவளின் வாழ்க்கைத் தடயங்கள் அப்படியே மறைந்து விடுகின்றன. தற்போது தன் கணவனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பது போலவே எண்ணிக் கொண்டு முகத்தில் எவ்வித கவலையுமின்றி வேலை செய்து கொண்டிருந்தாள். மாஹிரும் இந்தியா சென்று 4 வருடங்களையும் தாண்டின. அவனைப் பற்றிய எந்தத் தகவலுமே கிடைக்கவில்லை.
அன்று பாஸித்துக்கு கொஞ்சம் அலுப்பு ஏற்பட்டதால் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை. சுமையா ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தாள். காலை 10 மணியைத் தாண்டியபோது தபால்காரன் சுமையாவின் பெயருக்கு கடிதம் ஒன்றை கொடுத்துவிட்டுச் சென்றான். அனுப்பியவரின் பெயர் புதிய விலாசத்தில் மாஹிர் என்றிருந்தது. சுமார் நாலரை வருடங்களின் பின்னர் மாஹிரிடம் இருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும் பாஸித்துக்குப் போன உயிர் திரும்பவந்தது போன்று இருந்தது.
மனதிற்குள் திக் திக்… என்று பலமாக அடிக்க அவசர அவசரமாக கடித உரையின் ஓரம் கிழித்து சந்தோஷத்துடன் கடிதத்தினை வாசிக்க ஆரம்பித்தான் பாஸித். பல மடங்கு சந்தோசப் பட்டவனுக்கு மிகத் துக்கத்தை ஏற்படுத் தியது அக்கடிதம். அதனை அப்படியே மடித்து வைத்துவிட்டு தங்கை சுமையாவின் வரவை கவலை மேலிட எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
எப்போதும்போல் சந்தோசமாக வேலை முடிந்து வந்தாள் சுமையா. கவலை தோய்ந்த முகத்துடன் பாஸித்தைப் பார்த்ததும், ‘என்ன நானா நடந்தது ஒங்களுக்கு… ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிங்க…’ என்றவளிடம் ‘எனக்கு ஒன்னு மில்லை, நீ உன் உடைகளை மாற்றிக் கொண்டுவா’ என்றான் பாஸித். அப்படியே செய்து விட்டு வந்தவளிடம் இந்தா உன் புருஷனிடம் இருந்து கடிதம் என்றதும் “யா அல்லாஹ்! நா நெனச்சிருந்தது சரியாய்தான் ஆகிடிச்சி நானா…” “சந்தோஷப்படுறதை விட்டுப்போட்டு வாசி…” என்றான் பாஸித். ஆவலோடு பிரித்துப் படித்தாள் சுமையா.
பாசமில்லா சுமையாவுக்கு!
இந்தக் கடிதம் உனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட உன்னைப் பிரிந்து நாலரை வருடங்களாகின்றன. எனது பிரிவு உன்னைப் பெரிதும் வாட்டியிருக்கும். அந்தப் பிரிவினால் நீ மனமுடைந்து போய், கணவனை இழந்தவள் போன்று வீட்டிலேயே என்னை நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டவளாய் இருப்பாய் என்றே எண்ணியிருந்தேன். ஆனால், அந்த எண்ணம் மூன்று நாட்களுக்கு முன்னர் தவிடு பொடியாகி சிதறிவிட்டது.
உன்னைக்கண்டு அதிர்ச்சிக் குள்ளாக்க ஓடோடி வந்தேன். நான் வந்த பஸ் நகர ஆடைத் தொழிற்சாலை வீதியால் செல்லும்போது, நீ மூன்று பெண் பிள்ளைகளுடன் நடந்து வருவதைக் கண்டேன். ஆனால், நீ என்னைக் காணவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் உனக்கு இருக்கவில்லை. உடனே அடுத்த பஸ் தரப்பில் இறங்கி உன்னை நோட்டமிட்டேன். ஆம், நீ இந்தத் தொழிற் சாலையில் வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொண்டு உன் முகத்திலே முழிக்கக் கூடாதென்று திரும்பிவிட்டேன். இப்போ நான் இருப்பது உனக்குத் தேவையில்லை. கடிதத்தில் எனது விலாசம் தப்பானது.
இந்த நாலரை வருடங்களாக எங்கிருந்தேன் என்பதையும் நான் பட்ட வேதனைகளையும் சொல்லித்தான் ஆகணும். நண்பர் பர்ஸாத்துடன் இந்தியா சென்ற எனக்கு உன் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. அதனால் நான் விடாப்பிடியாக நின்று கேரளாவில் இருந்து சென்னைக்கு பஸ் மூலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால், அந்த பஸ் விபத்துக்குள்ளானது மட்டுமே நினைவில் இருந்தது.
சுய நினைவிழந்து ஒரு மாதகாலமாக நான் ஊர், பெயர் தெரியா வைத்திய சாலையொன்றில் இருந்தேன். சுயநினைவு வந்தவுடன் நான் வாழ்ந்த வாழ்க்கையையே மறந்துவிட்டேன். ஏன் என் பெயரையே மறந்துவிட்டேன். நல்லவேளை என் பயணப் பையில் இருந்த அடையாள அட்டை, பாஸ்போட்டினால் என்னைப் பற்றிய தகவல்களை அறிந்து ஒரு முஸ்லிம் பணக்காரர் சென்னையில் அவர் வீட்டில் வைத்திருந்தார்.
அவர்கள் கேட்கும் கேள்வி களுக்கும் என்னால் எந்தப் பதிலுமே சொல்ல முடியாத நிலையிலேயே இவ்வளவு காலமாக இருந்தேன். இடையில் மூன்று வைத்தியர்களிடம் என்னைக் காண்பித்து சிகிச்சையும் செய்திருக்கிறார் அவர். இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் நான் யார், எனது வாழ்க்கை விபரங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. அவர்களிடம் எல்லா வற்றையும் கூறினேன்.
எல்லாவற்றையும் கேட்ட அவர் நீ தாமதிக்காமல் உடனே உன் மனைவியைப் போய்ப் பார், உன்னையே நினைத்துக் கொண்டு அழுதழுது துரும்பாகியிருப்பாள். ஒரு மூனு மாசம் கழிச்சி உன்னையும் கட்டாயமாக அழைத்து வருமாறு சொல்லித்தான் அனுப்பி வைத்தார். எவ்வளவோ சந்தோஷமான வந்தேன். கவலையில் இருக்கும் உனக்கு அதிர்ச்சியைத் தரவேண்டும் என்று. ஆனால், நீயோ என் இதயத் தாகத்தை சுக்குநூறாக்கி வெடித்து சிதறவைத்து விட்டாயே! நீயோ கணவனைப் பிரிந்த துக்கம் எதுவுமில்லாமல் என்னையே மறந்தவளாக மறந்து சந்தோஷமாக திருமணமே ஆகாதவள் போன்று வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இனி நீ நியாகவே வாழ்ந்துகொள். நான் நானாக எங்கேயோ வாழ்ந்து கொள்கிறேன்.
சுமையாவின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வடிய அக்கடிதம் கீழே விழுகின்றது.
source: www.meelparvai.net