இது தற்கொலையா? கொலையா?
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரும் கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான சாதிக் பாட்சா இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ அதிகாரிகள் டிசம்பர் மாதம் 8 ம் தேதி சாதிக் பாட்சாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். மேலும் இன்று மாலை டெல்லியில் உள்ள சி.பி. ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டு இருந்ததாகவும் அதற்காக மதியம் 2 மணிக்கு சாதிக் பாட்சா டெல்லி செல்ல இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2004 ம் ஆண்டு தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்தில் இணை இயக்குனராக இருந்த ராசாவின் மனைவி 2008 ல் விலகிக் கொண்டார். ராசாவின் சகோதரர் கலிய பெருமாள் இந்நிறுவனத்தின் இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார். 2004 ௦ ம் ஆண்டு ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப் பட்ட கிரீன் கௌஸ் நிறுவனத்துக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து உள்ளதாம். ஐந்து ஆண்டுகளில் ரூ 600 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி என்பது குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் கடந்த 2007 ம் ஆண்டு கிரீன் கௌஸ் புரமொட்டர்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலும் தனது கிளையைத் துவக்கியுள்ளது. சிங்கப்பூர் கிளைக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனைகள் குறித்தும் சி.பி.ஐ விசாரணை செய்து வருகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் வரும் மார்ச் 31 அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட உள்ளதாக சி.பி.ஐ இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் சாதிக் பாட்சா தற்கொலை செய்தது இருப்பது குறிப்பிடத் தக்கது. சாதிக் பாட்சா மரணம் தற்கொலை தான் எனபது குறித்து உறுதியான தகவல் தெரிய வில்லை. எனினும் சாதிக் பாட்சாவின் மனைவி பானு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரபல தொலைக் காட்சி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி சாதிக் பாட்சா பலவீனமான மனிதர் அல்ல என்றும் இது கொலையா அல்லது தற்கொலையா என உறுதியான முடிவுக்கு வர முடிய வில்லை என்று தெரிவித்துள்ளார்.
source: http://www.inneram.com/2011031614577/rajas-close-aide-sadiq-batcha-commits-suicide