அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா?
மவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
[ நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,
“நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.” என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)
ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை “அல் உம்” என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
எனவே ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை” என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)
‘யார் தங்கத்தையும் – வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு” (அல்குர்ஆன் – 9:34,35)
இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்ணடணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது.
தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (நூல்: புகாரி)]
தங்கம், வெள்ளி ஆகியவை நாணயங்களாகவோ, கட்டிகளாகவோ வியாபாரத்திற்காக உள்ள ஆபரணங்களாகவோ, உபயோகிக்கத் தடைசெய்யப்பட்ட ஆபரணங்களாகவோ, (ஆண்கள் அணியும் ஆபரணங்கள் உருவப்படம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள்) அல்லது பாத்திரங்களாகவோ இருந்தால் அவற்றுக்கு ஜகாத் வழங்கியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு அறவே இல்லை.
ஆனால், பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டுமா? என்பதில் அன்றைய நபித்தோழர்கள் முதல் இன்றைய மார்க்க அறிஞர்கள் வரை அனைவரிடையேயும் பலத்த கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதில் பாமர மக்கள்தான் அதிகம் குழப்பம் அடைந்துள்ளனர்.
இக்கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் ஆபரணங்களுக்கு ஜகாத் உண்டு அல்லது இல்லை எனக் கூற குர்ஆனிலும் நபி மொழியிலும் நேரடியான சரியான தெளிவான சான்றுகள் இல்லை என்று கருதப்பட்டதுதான்.
எனவே, குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எந்த கருத்து சரியானதாக இருக்க முடியும்? என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளவே இச்சிறிய ஆய்வினை வாசகர்களாகிய உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். அல்லாஹ் உண்மையை அனைவருக்கும் தெளிவுபடுத்தி அதனை செயல்படுத்தக் கூடியவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக!
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் முன் வைக்கும் சான்றுகள்
பெண்கள் அணியும் நகைகளுக்கு ஜகாத் இல்லை எனக் கூறும் சாரார் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
(1) عن عافية بن أيوب عن الليث بن سعد عن أبي الزبير عن جابر عن النبي – قال ليس في الحلي زكاة. (رواه البيهقي في المعرفة, وإبن القيم الجوزي في التحقيق
“நகையில் ஜகாத் இல்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: மஃரிஃபத்துஸ் ஸுனன் லில் பைஹகி, தஹ்கீக்)
(2) عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِىِّ . قَالَ அ لَيْسَ عَلَى الْمُسْلِمِ صَدَقَةٌ فِى عَبْدِهِ وَلاَ فَرَسِهِ ஞ رواه البخاري
“தனது அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு தர்மம் (ஜகாத்) வழங்குவது ஒரு முஸ்லிமின் மீது கடமை இல்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நூல்: புகாரி 1464)
தன் உபயோகத்திற்கு அவசியமான குதிரை, பணிவிடைக்குத் தேவையான அடிமை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து அறிய முடிகிறது. இதன் அடிப்படையில் குடியிருக்கும் வீடு, உடுத்தும் ஆடைகள் ஆகியவை ஜகாத் இல்லை என்ற இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அது போன்றுதான் பெண்கள் அணிந்து கொள்ளும் நகைகள் சொந்த உபயோகப் பொருளாகக் கருதப்பட்டு அதற்கும் ஜகாத் இல்லை என்று கூறப்படுகிறது.
(3) வளர்ச்சி அடையக் கூடிய அல்லது வளர்ச்சிக்கு காரணமாக உள்ள பொருட்களில்தான் ஜகாத் கடமையாகும். தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆபரணங்களாக மாறியதால் வளர்ச்சிக்குரியது அல்லது வளர்ச்சிக்கு காரணமானது என்ற நிலையிலிருந்து மாறிவிட்டது. எனவே, அவற்றில் ஜகாத் கடமை இல்லை.
(4) “ஆயிஷா, அஸ்மா பின்தா அபீ பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் ரளியல்லாஹு அன்ஹும் ஆகிய ஐந்து நபித் தோழர்கள் நகைகளுக்கு ஜகாத் இல்லை” என்று கூறுவதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள். (பைஹகி)
حدثني يحيى عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تلي بنات أخيها يتامى في حجرها لهن الحلي فلا تخرج من حليهن الزكاة مؤطأ مالك. كذا رواه البيهقي وإبن أبي شيبة
“அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னிடம் அனாதைகளாக வளர்ந்து வந்த தனது சகோதரரின் பெண் மக்களுக்குச் சொந்தமான நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை.” அறிவிப்பாளர்: காசிம் பின் முஹம்மது. நூல்: முஅத்தா, பைஹகி, இப்னு அபீ ஷைபா.
وحدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يحلى بناته وجواريه الذهب ثم لا يخرج من حليهن الزكاة
“அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு தன் பெண்மக்களுக்கும், அடிமைப்பெண்களுக்கும் நகை அணிவித்திருந்தார்கள். அவற்றிற்கு அவர்கள் ஜகாத் வழங்கவில்லை.” (அறிவிப்பாளர்: நாஃபிஉ நூல்: முஅத்தா)
பலவீனமான நபி மொழி
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் மேற்கண்டவற்றை தங்களின் கூற்றுக்கு சான்றுகளாக கூறுகின்றனர். இவர்கள் எடுத்து வைக்கும் இச்சான்றுகளை சற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
முதல் சான்றான ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் நபி மொழியில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று முடிவுக்கு எளிதாக வரலாம். ஆனால், இந்த செய்தியைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைஹகி அவர்கள்,
(قال البيهقي: وما يروى عن عافية بن أيوب عن الليث عن أبي الزبير عن جابر مرفوعاً: ليس في الحلي زكاة فباطل لا أصل له, وإنما يروى عن جابر من قوله. وعافية بن أيوب مجهول, فمن إحتج به مرفوعاً كان مغرّراً بدينه…. معرفة السنن والأثار للإمام البيهقي)
“இந்த ஹதீஸ் அடிப்படையற்ற தவறான செய்தியாகும். ஜாபிர் கூறியதாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. (இறைத்தூதர் கூறியதாக அறிவிப்பது அடிப்படையற்றது.) மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆஃபியத் பின் அய்யூப் நிலை அறியப்படாதவர். இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர் இவரின் வணக்க வழிபாடு கண்டு ஏமாற்றம் அடைந்து விட்டனர்….” என்று குறிப்பு எழுதியுள்ளார்கள்.
“ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் பரவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்” என்று அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதாக அல் ஜர்ஹ் வத் தஃதீல் என்று நூலில் (7/59) பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னுல் ஜவ்ஜி, “ஆஃபியத் பின் அய்யூப் என்பவரை யாரும் குறை கூறியதாக நாம் அறியவில்லை” என்றும் “ஆஃபியத் பின் அய்யூப் பலவீனமானவர் எனக் கருத அவர் பற்றிய எந்தக் குறையும் நமக்கு கிடைக்க வில்லை” என இமாம் முன்திரி ஆகியோர் ஆஃபியத் பின் அய்யூப் குறித்து நற்சான்று அளித்துள்ளனர்.
ஆனால், ஒர் அறிவிப்பாளரை ஆதாரமாக ஏற்க வேண்டுமெனில் வணக்க வழிபாடுகளில் சிறந்து விளங்கினால் மட்டும் போதாது. மாறாக நல்ல நினைவாற்றல் உள்ளவர், மறதி இல்லாதவர், பொய் உரைக்காதவர், நேர்மையானவர் போன்ற நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு உரிய அவசியமான பண்புகள் அவரிடம் இருக்க வேண்டும். இந்த அடிப்படை விதியின்படி, ஆஃபியத் பின் அய்யூப் என்பவர் அறிவிக்கும் செய்திகளை ஆதாரமாகக் கருதுவோர், நம்பகமான அறிவிப்பாளருக்கு இருக்க வேண்டிய இந்த அடிப்படைத் தகுதி இவரிடம் இருந்தது என்ற நற்சான்றினை முதலில் ஆதாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வரை இப்பண்புகள் உள்ளதாக அறியப்படாத ஒருவரின் அறிவிப்பை ஆதாரமாக ஏற்க இயலாது. குறிப்பாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸிற்கு எதிராக இவர் அறிவிப்பதை ஆதாரமாக ஏற்க முடியாது.
“அவரிடம் ஒரு குறையும் அறியப்படவில்லை” என்ற இப்னுல் ஜவ்ஜியின் கூற்றும், “ஆஃபியத் என்பவரை பலவீனப்படுத்தும் ஒரு குறையும் எனக்கு கிடைக்கவில்லை” என்ற முன்திரி அவர்களின் கூற்றும் ஆஃபியத்திற்கான நற்சான்றாக அமையாது. ஏனெனில், அவரது நிலை என்னவென்று யாராலும் அறிந்து கொள்ளப்படவில்லை என்பதனால்தான் அவர் குறித்து நல்லவர் அல்லது கெட்டவர் என்ற ஒரு செய்தியும் பதிவு செய்யப்படவில்லை. “பராவாயில்லாதவர் என்ற நிலையில் உள்ளவர்” என அபூ ஜுர்ஆ அவர்கள் கூறியதுகூட, ஆஃபியத் என்பாரின் வணக்க வழிபாடுகளை மட்டும் பார்த்து விட்டுதான் என்பது பைஹகியின் கூற்றிலிருந்து தெளிவாகிறது.
ஹதீஸ் கலையின் தலை சிறந்த அறிஞரும், அறிவிப்பாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்தவருமான இமாம் பைஹகி அவர்கள் “ஆஃபித் என்பார் நிலை அறியப்படாதவர்” என்று கூறியுள்ள நிலையில், இவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கருதுவோர், அவரின் நமபகத்தன்மையை – நேர்மையை நிரூபிக்க வேண்டும்.
எனவே, நிலை அறியப்படாத ஒர் அறிவிப்பாளர் இந்நபி மொழியில் இடம் பெற்றுள்ளதால் இது பலவீனமடைகிறது. எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு இதனைச் சான்றாக கருத முடியாது.
ஒரு வாதத்திற்காக இந்நபி மொழி ஸஹீஹானதுதான் என ஏற்றுக் கொண்டாலும்கூட இந்நபி மொழியின் முழுக் கருத்தையுமே இதனை சான்றாக கூறுபவர்களே ஏற்கவில்லை என்பதை இவர்களின் கூற்றிலிருந்தே அறியலாம். ஏனெனில், “நகை” என்ற வார்த்தை தங்கத்திலான வெள்ளியிலான பெண்கள் அணியும் நகை, ஆண்கள் அணியும் நகை என அனைத்தையும் குறிக்கும் பொதுவான சொல். இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைக்கு ஜகாத் இல்லை என்றால் ஆண்கள் அணியும் நகையிலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அவ்வாறு இவர்கள் கூறவில்லை. மாறாக ஆண்கள் அணியும் நகைகளுக்கு (ஆண்கள் தங்க நகை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி மோதிரம் அணியத் தடையில்லை) மட்டும் ஜகாத் உண்டு என்று இந்த ஹதீஸிற்கு மாற்றமாகவே கூறிவருகிறார்கள். எனவே இந்த ஹதீஸ் இவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டுவிட்டது என்றால் இதை எப்படி ஆதாரமாக ஏற்க முடியும் என்பதே நமது கேள்வி.
தவறான ஒப்பீடு
இரண்டாவது சான்றான “அடிமை, குதிரை ஆகியவற்றுக்கு ஜகாத் இல்லை” என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். எனினும், இந்த ஹதீஸின் அடிப்படையில் நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது. ஏனெனில் குதிரை, அடிமை ஆகியவை அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டிய இனத்தைச் சார்ந்ததல்ல. மாறாக வியாபாரத்திற்கு என்று ஆகும்போதுதான் அவை வியாபாரப் பொருளாகக் கருதப்பட்டு அவற்றின் மீது ஜகாத் கடமையாகிறது. வியாபார நோக்கமில்லாமல் ஒருவன் எவ்வளவு குதிரை வைத்திருந்தாலும் அடிமை வைத்திருந்தாலும் அதற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. அது போன்றுதான் குடியிருக்கும் வீடும் உபயோகித்து வரும் ஆடைகளும் அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்தவை அல்ல.
மாறாக நகை என்பது அடிப்படையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி இனத்தைச் சார்ந்ததாகும். இந்நிலையில் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் (நகைக்கு) விதி விலக்கு அளிக்க வேண்டும் எனில் அதற்கு சரியான சான்றுகள் கூற வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க ஆதாரப்பூர்வமான எந்த ஒரு சான்றும் இருப்பதாக தெரியவில்லை. எனவே, இரண்டாவது நபி மொழியையும் ஆதாரமாகக் கொண்டு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று கூற முடியாது.
முரண்பாடுகள்
“வளர்ச்சி அடையக்கூடிய அல்லது வளர்ச்சிக்குக் காரணமான பொருளில்தான் ஜகாத் கடமை. நகை இந்நிலையிலிருந்து மாறிவிட்டதால் ஜகாத் வழங்க வேண்டும் என்ற சட்டமும் மாறிவிட்டது” என்ற அவர்கள் கூறும் மூன்றாவது சான்றும் முரண்பாடுகள் நிறைந்த தவறான சான்றாகும். ஏனெனில் நகை வளர்ச்சிக்கு காரணமாக இல்லை என்று கூறுவது பொருத்தமற்ற வாதமாகும்.
தங்க நாணயங்கள் வழக்கில் இருந்த காலத்தில் எவ்வாறு அதனை வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்த முடிந்ததோ அதே போன்று இன்று நகைகளும் வளர்ச்சிக்குரியதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் நகைகளை வாடகைக்கு கொடுத்து அதன் மூலம் வருமானமும் பெறப்படுகிறது. (நபித் தோழர்கள் காலத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நகைகள் இரவலாகக் கொடுக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை வாடகைக்கு கொடுக்கபடுவது நடை முறைக்கு வந்தது. இந்நடைமுறை இப்போதும் சில நாடுகளில் வழக்கில் உள்ளது.) இதன் அடிப்படையில் நகை வளர்ச்சிக்குரியதாக உள்ளதால் அதில் ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் கூற வேண்டும். நகை வளர்ச்சிக்கு காரணமானதல்ல எனக் கருதி அவற்றிற்கு ஜகாத் இல்லை என்று கூறுவது அடிப்படையற்ற எந்த ஆதாரமும் இல்லாத கூற்றாகும்.
மேலும் நகைகள் வளர்ச்சிக்குக் காரணமானதல்ல என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட, வேறு பல சந்தேகங்களுக்கும் அது வழி வகுக்கிறது. அதாவது, உபயோகப்படுத்தாமல் கட்டியாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தங்கத்திலும், வெள்ளியிலும் வளர்ச்சி ஏற்படுவதில்லைதான். மேற்கண்ட காரணத்தின் அடிப்படையில் இவற்றிற்கும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் கூறுவதில்லையே ஏன்?
அதே போன்று ஆண்கள் அணியும் நகைகள், தங்க வெள்ளிப் பாத்திரங்கள் (தங்கம் வெள்ளிப் பாத்திரங்கள் உபயோகிக்கத்தான் தடை தவிர, வைத்திருப்பதற்கு அல்ல.) இன்றைய நவீன காலத்தில் விளையாட்டு வீரர்கள் பெறும் விருதுகளான தங்கம் மற்றும் வெள்ளிக் கோப்பைகள், பதக்கங்கள் ஆகியவையும் வளர்ச்சிக்கு காரணமானதில்லைதான். இவற்றிலும் ஜகாத் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால், இவற்றிற்கு மட்டும் ஜகாத் உண்டு என இவர்கள் கூறிவருகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?
மாற்றுக் கருத்துடைய நபித் தோழர்கள்
அன்னை ஆயிஷா, அஸ்மா பின்தா அபி பக்கர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் உமர், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகிய ஐந்து நபித் தோழர்களும் நகைக்கு ஜகாத் இல்லை எனக் கூறியுள்ளனர் என்பதையும் ஆதாரமாக ஏற்க இயலாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் போன்ற வேறுசில நபித் தோழர்கள் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு நபித் தோழர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது ஒரு சாராரின் கூற்றை ஏற்றுக் கொண்டு மற்றொரு சாராரின் கூற்றை புறக்கணித்தால் அதற்கான சரியான காரணம் கூற வேண்டும். ஏற்கத்தக்க எந்தக் காரணமும் நிச்சயமாக அவர்களால் கூற இயலாது.
மேலும் நகைளுக்கு ஜகாத் இல்லை என இப்னு அப்பாஸ், அனஸ் (ரளியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்பட்ட செய்தியும் உறுதியானதல்ல. காரணம் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நகைக்கு ஜகாத் உண்டு என்று கூறுவதாக இமாம் முன்திரி அவர்கள் தர்கீப் வதர்ஹீப் என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதாக “அல் முஹல்லா”, பைஹகி போன்ற பல்வேறு நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முரண்பட்ட இரு கருத்துகள் இவ்விரு நபித்தோழர்கள் குறித்துக் கூறப்படுவதால்தான் இமாம் ஷாஃபி அவர்களும் அச்செய்தியில் சந்தேகம் அடைந்து, பின் வருமாறு கூறியுள்ளார்கள்.
قال الشافعي: ويروى عن ابن عباس وأنس بن مالك ولا أدري أثبت عنهما معنى قول هؤلاء ليس في الحلي زكاة (الأم)
“அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் ஜகாத் இல்லை என்று கூறுவதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியானதுதானா?” என்று நான் அறியேன் என கூறி உள்ளார்கள். (அல் உம்.)
நகைக்கு ஜகாத் இல்லை என்ற கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,
قال الشافعي وقد قيل في الحلى صدقة وهذا ما أستخير الله عز وجل فيه (الأم)
“நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.” என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)
ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை “அல் உம்” என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள். நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்று இல்லை என்பதையே இது காட்டுகிறது. எனவே ஷாஃபி மத்ஹபை பின்பற்றுவதாக கருதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டு நகைக்கு ஜகாத் வழங்க முன்வரவேண்டும். ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
“இறைவனிடம் இஸ்திகார செய்து பிரார்த்தித்தப் பின் நகைக்கு ஜகாத் இல்லை என இமாம் ஷாஃபி அவர்கள் கூறியதாக அவரது மாணவர் ரபீஃ பின் சுலைமான் அவர்கள் “உம்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி சரி என ஏற்றுக் கொண்டாலும், இமாம் ஷாஃபி அவர்களின் இந்தத் தீர்வு ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏதேனும் ஆதாரம் கிடைத்திருக்குமேயானால், அதனைக் கூறியிருப்பார்கள். மேலும், இறைவனிடம் இஸ்திகார செய்து விட்டு கூறப்படும் செய்திகளை சான்றாக ஏற்க முனைந்தால், “ஒவ்வொருவரும் நான் இஸ்திகார செய்தேன். இதுவே தீர்வு” என்று கூறிக் கொண்டு பல்வேறு புதிய சட்டங்களைக் கூற முனைவார்கள். அப்போதும் அதனை மறுக்க இயலாது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சொல்லும், செயலும்
தன்னிடம் வளர்ந்த அனாதைகளின் நகைகளுக்கு ஜகாத் வழங்க வில்லை என்று அன்னை ஆயிஷா அவர்கள் குறித்து கூறப்பட்டுள்ளது போன்றே, அவர்கள் நகைகளுக்கு ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
حدثنا محمد بن إسماعيل (بن إسحاق) الفارسي ثنا يحيى بن (جعفر بن الزبرقان) أبي طالب ثنا عبد الوهاب (بن عطاء الخفاف) أنا الحسين (بن ذكوان) المعلم عن عمرو بن شعيب عن عروة عن عائشة قالت لا بأس بلبس الحلي إذا أعطي زكاته رواه الدارقطني والبيهقي
“நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை” என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)
இதன் அறிவிப்பாளர்களில் சிலர் குறித்து குறை கூறப்பட்டிருந்தாலும், அக்குறை, இந்த செய்தியை புறக்கணிக்கின்ற அளவுக்கு இல்லை. ஏனெனில் குறை கூறப்பட்டவர்கள் புஹாரி, முஸ்லிம் உட்பட ஸிஹாஹு ஸித்தா எனப்படும் ஆறு நூற்களில் இடம் பெற்றவர்கள். எனவே இச்செய்தி ஏற்கத்தக்கதே.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இவ்வாறு முரணான இரு வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. இவ்விரு செய்தியும் ஆதாரப்பூர்வமானதுதான் என்பதிலும் சந்தேகமில்லை. இவ்வாறு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் குறித்து இருவிதமாக அறிவிக்கப்படுவதால் ஜகாத் வழங்கவில்லை என்ற செய்தியை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொள்வது என்ன நியாயம்?
மேலும் ஒருவரின் கூற்று அவரது செயலுக்கு முரண்பாடாக இருக்குமேயானால் செயலைவிட அவர் கூற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ் கலையின் அடிப்படை விதியின் படியும், ஜகாத் உண்டு என்ற அன்னை ஆயிஷாவின் கூற்று குர்ஆன், மற்றும் வேறு நபி மொழிகளுக்கு ஒத்து இருப்பதாலும் அவர்களின் செயலைவிட அவர்களின் கூற்றையே முற்படுத்த வேண்டும். எனவே, ஜகாத் வழங்க வில்லை என்ற அவர்களது செயலை ஆதாரமாகக் கருதுவது கூடாது.
நகையின் அளவினைத் தீர்மானிப்பதிலும் குழப்பம்
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் வேறொரு குழப்பத்திலும் உள்ளனர். அதாவது, நகைக்கு ஜகாத் இல்லை என்றால் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால், அதிகமாக நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அந்த “அதிக அளவு” எவ்வளவு என்பதை அவர்களால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அதே சமயத்தில் எவ்வளவு இருந்தாலும் ஜகாத் இல்லை என்றும் அவர்களால் கூற இயலவில்லை. அவ்வாறு கூறினால் ஏமாற்ற நினைப்போருக்கு அது சாதமாக அமைந்து விடும்.
எனவே நகைகளுக்கு ஜகாத் இல்லை என்றால், அதிகமான நகை வைத்திருப்போர் மட்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன சான்று? மேலும், “இது அதிகமானது”, “இது குறைவானது” என்று எதனை அளவுகோலாகக் கொண்டு தீர்மானிப்பது? அனைவருக்கும் பொருந்தி வரக்கூடிய பொதுவான அளவினை கூறமுடியாது போய் இறுதியில் வேறொரு சட்டச்சிக்கலுக்குத்தான் இது வழி வகுக்கும்.
அணியும் நகைகள் எனும் போது, அணிந்திருக்க வேண்டிய கால அளவு எவ்வளவு என்பதை ஜகாத் இல்லை என்போரால் தெளிவு படுத்தப்படாமல் அவற்றிலும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதாவது, ஜகாத் இல்லை என்பது எப்போதும் அணிந்து கொண்டிருக்கும் நகைகளுக்கு மட்டுமா? அல்லது எப்போதாவது ஒரு முறை அணிந்திருந்தாலும் போதும் என்ற நிலையில் உள்ள எல்லா நகைகளுக்குமா?. இதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.
அதிகம் நகை வைத்திருப்போர் எவ்வாறு அதற்கு ஜகாத் வழங்க வேண்டும்?
அதிக நகை வைத்திருப்போர் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறுவோர் அதை எந்த முறையில் வழங்க வேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அதாவது அதிகம் நகை வைத்திருப்போர் அதனை இரவல் கொடுக்க வேண்டும் என்றும் அதுவே அதற்கான ஜகாத் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றனர். அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இவ்வாறு கூறுவதாக பைஹகியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
عن عبد الملك عن أبي الزبير عن جابر رضي الله عنه قال: ((لا زكاة في الحلي)) قلت: إنه يكون فيه ألف دينارزقال: يعار, ويلبس. رواه الشافعي والبيهقي
அபூ ஜுபைர் அறிவிக்கிறார்கள்: “நகைக்கு ஜகாத் இல்லை என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய போது ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் இரவல் கொடுத்து விட்டு அணிந்துக் கொள்ள வேண்டும்” என்றார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி.
عن سفيان عن عمرو بن دينار قال سمعت رجلا يسأل جابر بن عبد الله عن الحلي أفيه زكاة؟ فقال جابر: لا. فقال: وإن كان يبلغ ألف دينار؟ فقال جابر: كثير. رواه البيهقي والشافعي
ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “நகைக்கு ஜகாத் உண்டா?” என்று வினவிய போது “இல்லை” என்று பதிலுரைத்தார்கள். “ஆயிரம் தீனார் அளவு இருந்தாலுமா?” என்று அவர் மீண்டும் வினவிய போது “அது அதிகமான அளவு” என்றார்கள். (அறிவிப்பாளர்: அம்ர் பின் தீனார். நூல்: முஸ்னத் ஷாஃபி, பைஹகி)
(ஜகாத் என்பதற்கு “இரவல் கொடுப்பது” என்ற புதிய விளக்கம் குர்ஆன் மற்றும் நபி மொழியிலிருந்து பெறப்பட்ட விளக்கமல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.)
“மற்ற பொருட்களுக்கு இரண்டரை சதவீதம் ஜகாத் வழங்கி வருவது போன்றே இந்த அதிக நகைகளுக்கும் இரண்டரை சதவீதம் வழங்க வேண்டும்” என்று வேறு சிலர் கூறுகின்றனர். இரவல் கொடுப்பதற்காகவும், அணிவதற்காகவும் வைத்துள்ள நகைகளுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக பைஹகியிலும் “அல் முஹல்லா” என்ற நூலிலும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போர் பல்வேறு குழப்பத்தில் உள்ளதாலும், நகைகளுக்கு ஜகாத் இல்லை என்று குர்ஆனிலும், நபி மொழியிலும் தெளிவாகவோ அல்லது மறை முகமாகவோ கூறப்படாத நிலையிலும் ஜகாத் இல்லை என்ற வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும் என்பது இதன் மூலமும் உறுதியாகின்றது.
இதன் காரணமாகவே, நகைகளுக்கு ஜகாத் இல்லை என்போரில் பெரும்பான்மையோர், பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்கி விடுவதே சிறந்தது என்று கூறுகின்றனர். இதனை கதாபி என்பவர் மஆலிமுஸ் ஸுனன் என்ற நூலில் உறுதி செய்கிறார். இன்றைய இஸ்லாமியப் பொருளாதார மற்றும் மார்க்க அறிஞர்களும் இதனைத்தான் உறுதி செய்கின்றனர்.
நகைக்கு ஜகாத் இல்லை என்ற வாதத்திற்கு குர்ஆனிலும், நபி மொழியிலும் சான்றுகள் இருக்குமேயானால், அந்த சான்றுகளின் அடிப்படையில் ஜகாத் கொடுக்காமல் இருப்பதுதான் சரியானதும், பேணுதலானதுமாகும். குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மாற்றமாக செயல்படுவது பேணுதலானது என ஒருபோதும் கூற முடியாது. மாறாக, அது அதிகப் பிரசிங்கித்தனமானது என்றுதான் கூறப்படும். எனவே, பேணுதலின் அடிப்படையில் ஜகாத் வழங்குவது சிறந்தது என்ற இவர்களின் கூற்றிலிருந்தே இவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களில் உள்ள பலவீனங்கள் தெளிவாகவே தெரிகிறது. எனவே, ஜகாத் இல்லை எனக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை என்ற நம் கருத்து மேலும் வலுவடைகிறது.
பெண்களின் அடிப்படையான அவசியப் பொருளே ஆபரணங்கள்
(أَوَمَنْ يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ) (الزخرف:18)
”அலங்காரத்தில் வளர்க்கப்படும், தன் வழக்கைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாதவற்றையா?” (பெண்களையா அவர்கள் இறைவனுக்கு இணையாகத் கருதுகிறார்கள்.) (அல் குர்ஆன்: 43:18)
நகைக்கு ஜகாத் இல்லை என்போர் இவ்வசனத்தை துணைச் சான்றாக கருதுகிறார்கள். முதலில் இந்த வசனத்தின் கருத்தை புரிந்து கொள்வோம். அதன் பிறகு, இந்த வசனத்தை எவ்வாறு சான்றாக கருதுகிறார்கள் என்பதை அறிவோம்.
வானவர்களை இறைவனின் பெண் மக்களாகக் கருதி அவர்களை இறை மறுப்பாளர்கள் வழிபட்டு வந்தார்கள். அதனை இடித்துரைக்கும் முகமாக இவ்வசனத்தை இறைவன் இறக்கினான். அதாவது அலங்காரத்தில் வளர்ந்து வரும், தன் தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ள இயலாத, தன் வழக்குகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாத பலவீனமுள்ள பெண்களையா இறைவனுக்கு இணையாகக் கருதுகிறார்கள்? என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.
அலங்காரம் இல்லாப் பெண்கள் குறையுள்ளவர்கள் என்பதை இறைவன் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான். இதன் மூலம் அலங்காரம் என்பது பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம். அந்த அலங்காரத்தின் ஒரு அம்சம்தான் நகை. எனவே, மனிதனின் அடிப்படைத் தேவையான வாகனம், பணியாளன், வீடு, விலை உயர்ந்த ஆடைகளுக்கு ஜகாத் இல்லாதது போலவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் இல்லை.
இவ்வாறு இந்த வசனத்திற்கு விளக்கம் அளித்து, அதனைச் சான்றாகக் கருதுகிறார்கள்.
இந்த விளக்கமும் அதன் அடிப்படையில் எடுத்து வைக்கின்ற கருத்தும் ஒரு போதும் சான்றாக அமையாது. ஏனெனில், பெண்களின் அலங்காரத்திற்கு அவசியப் பொருள்தான் நகை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லைதான். அதனால்தான், ஆண்களுக்குத் தடை செய்யப்பட்ட ஆபரணங்கள் பெண்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவசியப் பொருள் என்பதால், அது எவ்வளவு இருந்தாலும் அதற்கு ஜகாத்தே இல்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? என்றால் அதற்கு எந்த ஒரு முன் மாதிரியும் இல்லை.
ஒரு பெண்ணின் அலங்காரத்திற்கு நகை அவசியமாக இருப்பதை விட, மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவுப் பொருள் பன்மடங்கு அவசியமானதாகும். உணவின்றி மனிதன் உயிர் வாழவே முடியாது. அதனால், விளைபொருளில் ஜகாத் இல்லை என்ற முடிவுக்குதான் வர முடியுமா? தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும் மனிதனின் அவசியப் பொருட்கள்தான். அவற்றிலும் ஜகாத் இல்லை என்று முடிவு செய்ய முடியுமா?
மனிதனுக்குத் தேவைப்படும் அவசியப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கும் போதுதான் அவற்றில் ஜகாத் வழங்க வேண்டும். நகையைப் பொருத்தவரை அக்குறிப்பிட்ட அளவு என்பது 11 பவுனாகும்.
இது ஒரு பெண்ணை அலங்கரிக்க போதுமான அளவும்கூட. அதற்கு மேல் நகை வைத்திருப்பவர்கள்தான் அவற்றிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று இஸ்லாம் கூறியுள்ளது. எனவே, “நகை பெண்களின் அவசியப் பொருள். அவற்றிற்கு ஜகாத்தே இல்லை” என வாதிப்பது பொருத்தமற்றதாகும்.
இவற்றுக்கெல்லாம் மேலாக, “நகைகளுக்கு ஜகாத் இல்லை” என்பது குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை நாம் ஆரம்பத்திலேயே தெளிவாகவே உறுதிப்படுத்தியுள்ளோம்.
மவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்போன்: 050-9746919
மின்னஞ்சல்: