அபூ அஹ்மத் அல் அதரி
[ இன்றைய குத்பாக்களினதும், மிம்பர்களினதும் மிக மோசமான ஒரு நிலைதான் வெள்ளிமேடைகளின் அமானத் இழக்கப்படும் நிலையாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி குத்பா பிரசங்கத்தை ஆரம்பித்தார்கள் என்கின்ற நபிவழியை புறக்கணிப்பது மாத்திரமன்றி மஹ்ஷர் ஓதி பித்அத்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற குத்பாக்களைத்தான் இன்றைய படித்த தவ்ஹீத்வாதிகள்(?) தேர்ந்தெடுக்கின்றார்கள். மக்கள் கூட்டமும், சொகுசான மிம்பர்களும், ஊன்றிக் கொள்ள அஸாவும், ஏனைய அலங்காரங்களுக்கும் குறைவில்லை.
உயரந்த சப்தமும், கம்பீரத் தோற்றமும், மூத்த அறிஞர்கள், அரபுநாட்டு ஆலிம்கள் போன்ற மாயைகள் மூலம் தமது அசத்தியக் கருத்துக்களை ஒரு சில மக்களிடமும் பதித்துவிடுகின்றனர். சாதாரணமாக ஒரு ஆசிரியர் பாடத்தை தயார் செய்யக்கூடிய அளவிற்கு கூட இவர்கள் குத்பாக்களை தயார் செய்வதாகத் தெரியவில்லை.
தேர்தல் காலம் வந்தால் ‘நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்’ போன்ற கோஷங்களுக்கு சில ஆலிம்களும் விதிவிலக்கல்ல. ‘முஸ்லிம் சமூகத்தின் தேவைப்பாடுகள், இஸ்லாமியப் பிண்ணனி, சமூகத்திற்குப் பொறுப்புச் சொல்லும் தலைமை’ போன்ற விஷயங்களை சமூகமன்றத்தில் முன்வைப்பதற்கு இவர்கள் தயாரில்லை.
இன்றைய ஆலிம்களுக்கென்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச் சென்றது போன்றதொரு நபிமொழி காணப்படுகின்றது. ‘மிகச் சிறந்த அறப்போர் அநியாயக்கார அரசனிடம் சத்தியத்தை எடுத்துச் சொல்வதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயி 4209)]
முஸ்லிம்கள் தனித்துவமானவர்கள். ஏனைய கொள்கையாளர்களுடன் ஒப்பிடுகையில் மிக உன்னதமான, உயர்பண்புகளைக் கொண்டவர்கள். காரணம், அவர்களை ஆட்சி செய்வது மனித பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட உயர்தரமான வஹி. அவர்களது சொந்த, சமூக வாழ்வு அனைத்துமே அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமைந்தது. அன்றாட விடயங்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முன்மாதிரிகள் அவர்களிடம் நிறைந்து காணப்படும். அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து தியாகத்துடன் பெற்ற தெளிவுகளை ஒரு போதும் தாரை வார்க்காத உயர்தரமானவர்கள்.
முஸ்லிம்கள் என்போர் சத்தியப்பிரச்சாரப் பணியில் ஈடுபடுபவர்கள். தாம் பெற்ற இத்தூய கொள்கையை ஏனையவர்களுக்கும் எத்திவைக்கும் போதுதான் சத்தியத்தின் அமானத்தைப் பேணியவர்களாக இருப்பர். இதனை அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது. ‘அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?’ (அல்குர்ஆன்-41:33)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவ்ஹீத்வாதிகள் மீது சுமத்தியிருக்கும் மிகப்பெரும்பணி அது. தன்னால், தனது தூய பிரச்சாரத்தால் வார்த்தெடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அருமைத் தோழர்களிடம் ஒப்படைத்த மிகப்பெரும் அமானத்தே பிரச்சாரப் பணியாகும். தான் உண்டு, தனது குடும்பம் உண்டு எனது வணக்க வழிபாடுகள், என் பிள்ளைகளின் கல்வி, நற்பண்புகள் என்று இராது தமது இலக்கில் ஸ்த்திரமானவர்கள் தௌஹீத்வாதிகள்.
இத்தகைய பிரச்சாரங்களில் மிக உயர் தரமானதுதான் மிம்பர் மேடைகள். இஸ்லாமிய சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம். ஒரு பாங்கின் மூலம் மாத்திரம் அந்தந்தப் பகுதிகளில் கூட்டப்படும் மிகப்பெரும் மாநாடு. அல்லாஹ் வழங்கிய அனுமதியோடு வேளைக்கு கூட்டப்படும் பாராளுமன்றம். நபிகளார் காலத்தில் மிக முக்கிய தீர்மானங்களையும், தெளிவுகளையும் வழங்கும் ஊடகம். பெண்களும் கலந்து கொள்ளும் தன்னிகரில்லா தஃவாக் களம்.
ஓராண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு ஜும்ஆவில் கலந்து கொண்ட பெண்மணியின் வாக்கு மூலம் இதோ: ‘நாங்களும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்தி வந்தோம். நான் ‘காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50வது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.’ (அறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹா, நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1582)
ஆனால், இன்றைய குத்பாக்களினதும், மிம்பர்களினதும் மிக மோசமான ஒரு நிலைதான் வெள்ளிமேடைகளின் அமானத் இழக்கப்படும் நிலையாகும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி குத்பா பிரசங்கத்தை ஆரம்பித்தார்கள் என்கின்ற நபிவழியை புறக்கணிப்பது மாத்திரமன்றி மஹ்ஷர் ஓதி பித்அத்களுடன் ஆரம்பிக்கப்படுகின்ற குத்பாக்களைத்தான் இன்றைய படித்த தவ்ஹீத்வாதிகள்(?) தேர்ந்தெடுக்கின்றார்கள். மக்கள் கூட்டமும், சொகுசான மிம்பர்களும், ஊன்றிக் கொள்ள அஸாவும், ஏனைய அலங்காரங்களுக்கும் குறைவில்லை.
உயரந்த சப்தமும், கம்பீரத் தோற்றமும், மூத்த அறிஞர்கள், அரபுநாட்டு ஆலிம்கள் போன்ற மாயைகள் மூலம் தமது அசத்தியக் கருத்துக்களை ஒரு சில மக்களிடமும் பதித்துவிடுகின்றனர். சாதாரணமாக ஒரு ஆசிரியர் பாடத்தை தயார் செய்யக்கூடிய அளவிற்கு கூட இவர்கள் குத்பாக்களை தயார் செய்வதாகத் தெரியவில்லை.
தத்தம் ஊர்களில் நடைபெறும் அநியாயங்களையும், அத்துமீறல்களையும், அரசியல் அடாவடித்தனங்களைக் கூட எடுத்துக் கூறத் திராணியற்ற இவர்களுக்கு ஏன் இந்த மிம்பர் மேடைகள்? காலத்திற்கு காலம் கொள்கைகளையும், கட்சிகளையும் மாற்றிக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்தின் மேன்மையையும், தனித்துவத்தையும் சமூகத்தை ஏமாற்றி வரும் மனிதர்களைப் பகைத்துக் கொள்ளக் கூட இந்த கதீப்களுக்கு விருப்பமில்லை.
கூட்டத்தோடு சேர்ந்து வேண்டுமென்றால் அறிக்கைகள் விடுவார்கள். இத்தனைக்கும் மத்தியில் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் அனுசரணையோடு தீவைப்புக்கள், கொலை மிரட்டல்கள், பழிவாங்கல்கள் என நீண்டு கொண்டே செல்லும் அந்தப் பட்டியல். சாதாரண ஒரு ஏழையால் சிறு தவறு நடந்தாலும் அதற்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கக் கூடிய இவர்கள் இந்த இமாலயத் தவறுகளை கண்டும் காணாது இருந்து விடுகின்றார்கள்.
தேர்தல் காலம் வந்தால் ‘நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்’ போன்ற கோஷங்களுக்கு சில ஆலிம்களும் விதிவிலக்கல்ல. ‘முஸ்லிம் சமூகத்தின் தேவைப்பாடுகள், இஸ்லாமியப் பிண்ணனி, சமூகத்திற்குப் பொறுப்புச் சொல்லும் தலைமை’ போன்ற விஷயங்களை சமூகமன்றத்தில் முன்வைப்பதற்கு இவர்கள் தயாரில்லை.
இன்றைய ஆலிம்களுக்கென்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச் சென்றது போன்றதொரு நபிமொழி காணப்படுகின்றது. ‘மிகச் சிறந்த அறப்போர் அநியாயக்கார அரசனிடம் சத்தியத்தை எடுத்துச் சொல்வதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸாயி 4209)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போன்று பித்அத்களின் விபரீதங்களை தெளிவாக பிரச்சாரம் செய்யமாட்டார்கள். மாறாக, சில நேரங்களில் மாத்திரம் பூசி மெழுகக் கூடிய இவர்கள் அரசியல் காலம் வந்து விட்டால் அதனையும் கூறமாட்டார்கள். எவ்வாறு கூற முடியும். எவ்வழியிலாவது, யாருடைய உரிமை பறிக்கப்பட்டாலும், எவர் மீது அசிட் வீசப்பட்டாலும், எவருடைய உடலுறுப்புக்கள் இழக்கப்பட்டாலும் தான் நேசிக்கும் அரசியல்வாதி வெற்றி பெற வேண்டுமென நினைக்கும் ஆலிம்கள் எவ்வாறு வாய் திறப்பார்கள்.
எனவே, பள்ளிவாயல் நிர்வாகிகள், நடுநிலையாளர்கள் மிம்பர் மேடைகளில் கட்டுக்கதைகள், ஆதாரபூர்வமற்ற செய்திகளையும் கூறி மிம்பர் மேடைகளை அசிங்கப்படுத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும். அர்ஷின் இரட்சகனின் கலப்பற்ற வஹியை எடுத்துக் கூறும் தளங்களாக மிம்பர்களை மாற்றியமைக்க முன்வருவார்களா?
source: http://dharulathar.com/