மிக முக்கியமான சிறப்பான கட்டுரை
டாக்டர், அஹ்மது பாகவி PhD
[ “வாழ்கையை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வழிகாட்டி” எனப் புரிந்து கொள்ள வேண்டிய திருக்குர்ஆனைப் பற்றி சிலர் கூறும் கருத்துக்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கின்றன.
”அது நமக்குப்புரியாது. திருக்குர்ஆனை ஓதினால் மட்டும் போதும். அதன் சிறப்புகளைத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளவோ, அதன் ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவோ, அதற்கான முயற்சிகளில் முனைவதோ அவசியமில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளவும் முடியாது. ஆலிம்களுக்கு மட்டுமே அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்!” என்பதாகும்.
தஃலீம் புத்தகத்தைப்படிக்காது குர்ஆனின் பொருளைப் படித்ததனால் ஓர் அமீர், தனது சிஷ்யரை பலருக்கு முன்னால் கன்னத்தில் அறைந்ததையும் வேதனையோடு இங்கே குறிப்பிடவேண்டும்.
இப்படிப்பேசுவதும், அடிப்பதும் இஸ்லாமியச் சித்தாந்தகளுக்கும், நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது, முரணானது என்பதையும், அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்தே வெளியேறிவிடுவார்கள் என்பதையும் ஏனோ இன்னும் இந்த முஸலிம் பெயர் தாங்கிகள் புரிந்து கொள்ளாமலிருக்கின்றனர்.
இது எவ்வளவு பெரிய பேரிழப்பையும் பேராபத்தையும் விளைவிக்கக் கூடியது என்பதையும், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கததையே திசைதிருப்பக் கூடியது என்பதையும் நமது மக்கள் இன்னும் உணராமலிருக்கின்றனர் எனபதை எண்ணும் போது இரத்தக்கண்ணிர் வடிக்க வேண்டியதிருக்கிறது. இவை யூதகிறித்தவச் சிநதனைகளாகும்.
“நமக்குப்புரியாது” என்று ஒரு மருத்துவரே சென்ற ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்தபோது கூறியதைக் கேட்டதும் எந்த அளவுக்கு மூளைச்சலவைச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பதற்கே பெரும்பாடாகிவிட்டது.
இன்று உலகிலுள்ள மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. அரபி மொழி தெரியாது. ஆகவே, திருக்குர்ஆனை அறிந்துகொள்ள முடியவில்லை என்று எவரும் கூறிவிடமுடியாது.]
திருமறைக்குத் திரை போடும் விந்தை!
”மூன்று விஷயங்கள் குறித்து நாம் முடிவு செய்யாதவரை கீழ்த்திசை நாடுகளில்(இஸ்லாமிய நாடுகளில்) நமது ஏகாதிபத்திய திட்டங்களை செயல்படுத்தமுடியாது” என ஒருவர் கர்ஜித்தார்.
முதலாவது: குர்ஆன். (என்று கூறிக்கொண்டே ஒரு குர்ஆனை எடுத்துக் கிழித்தார்)
இரண்டாவது: வெள்ளிக்கிழமை கூடும் ஜும்மா நிகழ்ச்சி.
மூன்றாவது: ஆண்டுதோறும் அரபாத்தில் பெருவெளியில் உலக முஸ்லிம்கள் சங்கமமாவது.
தொடர்ந்து பேசினார்:
குர்ஆனை இப்படிக் கிழித்து விடுவதால் அது அழிந்துவிடும் என நான் கருதவில்லை. அதை முஸ்லிம்களின் இதயங்களிலிருந்தே கிழித் தெறிய வேண்டும்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இங்கிலாந்து பிரதமர் கிளாட்ஸ்டோன் (Glad stone) எனபவர் முழங்கிய முழக்கமே இது.
முஸ்லிம்கள் திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் காலம் வரை அவர்களை எந்த ஆதிக்கமும் அதிகாரமும் அசைக்கமுடியாது! வீழ்த்த முடியாது! என்பதை கிளாட்ஸ்டோன் இவ்வாறு கூறியுள்ளார்.
திருக்குர்ஆனின் மாண்பையும் அதன் ஆற்றலையும் புரிந்து கொண்டதால் தான் இவ்வாறு வெறித்தனமாக குதறியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர்.
திருக்குர்ஆனை அணுகினால், அதைப்படித்துப் பின்பற்றினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், என்னென்ன விளைவுகள் ஏற்படும். அதை பின்பற்றும் முஸ்லிம்கள்எப்படிப்பட்ட சக்தியாக உருவாவார்கள் என்பதை வல்லரசுகள் புரிந்துதான் வைத்துள்ளன. ஆனால் அதை முஸ்லிம்கள் தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
முஸ்லிம்கள் இன்று எப்படி அணுகுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே உள்ளம் வெதும்புகிறது.
குர்ஆனைப் பயன்படுத்தும் முறையைப்பாருங்கள்!
1. மணப்பெண்ணுக்கு சீதனமாக!
2. சண்டைச் சச்சரவுகளில் சத்தியம் செய்வதற்காக!
3. பண்டிகை நாட்களில் மட்டும் பக்தியோடு ஓதும் வேதமாக!
4. மந்திர உச்சாடணங்களாக!
5. மதக்கூட்டங்களுக்கு பயன்படும் வேதாந்த மொழியாக!
6. ஆண்டவைனை வழிபடும் சுலோகங்களாக!
7. மறுவுலகிற்கு மட்டும் பயன்படும் உபதேசங்களாகக் கருதிக்கொண்டு,
நமது வாழ்வுக்கும், குர்ஆனுக்கும் தொடர்பில்லையென்றும் அதுபற்றிய அக்கரை நமக்குத் தேவையில்லையென்றும் துணிந்து தங்களை அந்த மாமறையிலிருந்து விலக்கிக் கொண்டு நிற்கின்றனர்.
திருமறை அருளப்பட்டது இதற்குத்தானா?
திருமறை அருளப்பட்டது இதற்குத்தானா? அப்படியானால் இந்த குர்ஆனை அருளப்படுவதற்கு 23 ஆண்டுகள் தேவையில்லையே! அத்தனை வசனங்களையும் தொகுத்து ஒரேநேரத்தில் தருவது இறைவனுக்கு ஒன்றும் கடினமான வேலையில்லையே!
திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் திருக்குர்ஆனை வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்ந்து காட்டினார்கள். எனவே அவர்களால் ஒரு புதிய சமுதயத்தை உருவாக்க முடிந்தது.
“வாழ்கையை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வழிகாட்டி” எனப் புரிந்து கொள்ள வேண்டிய திருக்குர்ஆனைப் பற்றி சிலர் கூறும் கருத்துக்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கின்றன.
அது நமக்குப்புரியாது?
அது நமக்குப்புரியாது. திருக்குர்ஆனை ஓதினால் மட்டும் போதும். அதன் சிறப்புகளைத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளவோ, அதன் ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவோ, அதற்கான முயற்சிகளில் முனைவதோ அவசியமில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளவும் முடியாது. ஆலிம்களுக்கு மட்டுமே அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.
தஃலீம் புத்தகத்தைப்படிக்காது குர்ஆனின் பொருளைப் படித்ததனால் ஓர் அமீர், தனது சிஷ்யரை பலருக்கு முன்னால் கன்னத்தில் அறைந்ததையும் வேதனையோடு இங்கே குறிப்பிடவேண்டும்.
இப்படிப்பேசுவதும், அடிப்பதும் இஸ்லாமியச் சித்தாந்தகளுக்கும், நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது, முரணானது என்பதையும், அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்தே வெளியேறிவிடுவார்கள் என்பதையும் ஏனோ இன்னும் இந்த முஸலிம் பெயர் தாங்கிகள் புரிந்து கொள்ளாமலிருக்கின்றனர்.
இது எவ்வளவு பெரிய பேரிழப்பையும் பேராபத்தையும் விளைவிக்கக் கூடியது என்பதையும், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கததையே திசைதிருப்பக் கூடியது என்பதையும் நமது மக்கள் இன்னும் உணராமலிருக்கின்றனர் எனபதை எண்ணும் போது இரத்தக்கண்ணிர் வடிக்க வேண்டியதிருக்கிறது. இவை யூதகிறித்தவச் சிநதனைகளாகும்.
“நமக்குப்புரியாது” என்று ஒரு மருத்துவரே சென்ற ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்தபோது கூறியதைக் கேட்டதும் எந்த அளவுக்கு மூளைச்சலவைச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பதற்கே பெரும்பாடாகிவிட்டது.
“மறை என்றாலே மறைத்து வைப்பதா?
“மறை என்றாலே மறைத்து வைக்கப்படவேண்டும். மக்களின் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் அதை தொடவேண்டும், ஓதவேண்டும் ” என்ற வேதாந்தம் இஸலாத்தில் இல்லவே இல்லை.
திருக்குர்ஆனின் ஆழிய கருத்துக்களைப் புரிந்து கொள்ள அரபி மொழியில் புலமையும், இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்த தெளிவும் அவசியம் எனபதில் சந்தேகமே இல்லை. ஆனால் இத்தகையத் தகுதிகள் பெற்றவர்கள் தான் இன்று திருக்குர்ஆனுக்குப் பொருளுரையும், தெளிவுரையும் தந்துள்ளார்கள். இந்தத் தெளிவுரைகளை தங்களின் மொழிகளில் படித்துத் திருக்குர்ஆனைப் புரிந்து கொள்வதில் எந்தத் தடையுமில்லை.
இன்று உலகிலுள்ள மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. அரபி மொழி தெரியாது. ஆகவே, திருக்குர்ஆனை அறிந்துகொள்ள முடியவில்லை என்று எவரும் கூறிவிடமுடியாது.
திருக்குர்ஆனை ஓதுவதும், அதனைத் தெரிந்து கொள்வதும், தெரிந்தவற்றை அப்படியே நடைமுறைப்படுத்துவதும் முஸ்லிம்களின் கட்டாயக்கடமையாகும்.
குர்ஆன் அருளப்பட்ட நோக்கம்?
இறைவன் குர்ஆன் அருளப்பட்ட நோக்கததை இவ்வாறு குறிப்பிடுகிறான்.
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُوْلُوا الْأَلْبَابِ
நபியே! இந்த புனித வேதத்தை நாம் இறக்கியருளியுள்ளோம். இந்த மக்கள் இதன் வசனங்களை சிந்திக்கவேண்டும், அறிவுடையோர் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் 38:29)
திருக்குர்ஆனை சிந்தித்துச் செயல்படாவிட்டால் எத்தகைய பேராபத்து ஏற்படும் எனபதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கை படம் பிடித்துக்காட்டுகிறது.
“ஒருகாலம் வரும் அப்போது இஸ்லாம் பெயரளவில்தான் இருக்கும். (அதன் நடைமுறை இருக்காது. குர்ஆன் புத்தகவ வடிவில் எழுத்துகளாகத்தானிருக்கும், அதன் செயலாக்கம் இருக்காது. பள்ளிவாசல்கள் வானளாவ உயர்ந்து நிற்கும். ஆனால் அவற்றில் நேர்வழி (ஹுதா)இருக்காது.” (ஆதாரம்: மிஷ்காத்துல் மஸாபீஹ்)
யூதர்கள் வேதம் வழங்கப்பட்டவர்களாக இருந்தும் அவர்கள் அதன் பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காததால் தான்
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَاراً
“வேதம் சுமந்த கழுதைகள்” என வர்ணிக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 62:5 )
ஒருமுறை நாயகத்தோழர் ஸைத் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டார்கள்.
நாமும் இஸ்லாமிய அறிவைப் பெறுகிறோம். நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறோம். அவர்களும் இனி வரும் சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுப்பார்கள். இப்படி இருக்க இஸ்லாமிய அறிவு மறைந்து விடும் என்று நீங்கள் கூறுவது எப்படி சாத்தியமாகும்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்.
யூதர்களும், கிறித்தவர்களும் தவ்ராத்தையும், இஞ்சீலையும் படிக்கவில்லையா? இருந்தும் அவர்கள் அவற்றைப் பின்பற்றவில்லை.
وَهَـذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُواْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ
”இவ்வேதத்தையும் நாம் தான் அருளினோம். இது மிக்க அருள் வளமுடையது. ஆகவே, இதனைப் பின்பற்றுங்கள். மேலும் (நம்மை) அஞ்சுங்கள்.அருள் செய்யப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 6:155)
திருக்குர்ஆனை வாழ்வின் வழிகாட்டியாக ஏற்று ஓதியுணர்ந்து செயல்படவேண்டும். அப்போது தான் நாம் அதன் முழுப் பயனையும் பெற முடியும்.
திருக்குர்ஆனை அணுகுங்கள்!
அருள்மறையில் :
அறிவியல் உண்மைகள், வியப்பூட்டும் வரலாறுகள் திகைப்பூட்டும் தீர்க்கதரிசனங்கள், மலைப்பூட்டும் சான்றுகள், நெறிப்படுத்தும் ஒழுக்க மாண்புகள், அரசியல் பொருளாதாரத் தீர்வுகள், நயமிகு இலக்கியச் சிறப்புகள் என ஏராளம் உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக நமது வாழ்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும், தேவைகளுக்கும் வழிகாட்டும் ஒப்பற்ற உயர் வேதம் என்ற தூயநோக்கோடும் தூர நோக்கோடும் குர்ஆனை நாம் அணுகவேண்டும். இதுவே அணுக வேண்டிய முறையாகும்.
இம்மை வாழ்வை செம்மைப்படுத்தி, மறுமை வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டுவது திருக்குர்ஆன் ஒன்றே!
அல்குர்ஆன் அருளப்பட்ட ஆரம்ப காலத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைமறை வசனங்கள் இறங்கியதும் அவர்களின் உற்ற தோழர்கள் யாவரும் அது அறிவுறுத்துகிறபடி தங்களின் வாழ்க்கையை அடிபிறழாது அமைத்துக் கொண்டார்கள்.
நாயகத்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“நாங்கள் ஒரே சமயத்தில் பத்து வசனங்களுக்கு மேல் மனனம் செய்வதில்லை. ஓதிய வசனங்களை ஒழுங்காகச் செயல்படுத்திய பிறகே நாங்கள் அடுத்த வசனங்களை மனனம் செய்ய முற்படுவோம்.
உலகில் வழிகாட்டும் ஒரே நூல்!
திருமறை திருக்குர்ஆன் இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதம். அதையே இன்று வாழும் மக்களும், இனி வரப்போகும் மக்களும் பின்பற்றவேண்டும் என்பது இறைக் கட்டளையாகும். ஏனெனில் இது உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட பொதுமறை. இந்த வேதத்திருமறை அருளப்பட்டதும் ஏனைய வேதங்கள் யாவும் செயலற்றதாகிவிட்டன.
அன்று நாயகத்தோழர் உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தவ்ராத் வேதத்திலிருந்து சில வசனங்களை கொண்டு வந்து காட்டிய போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
”இன்று நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) நம்மிடையே இருந்திருந்திருந்தால் அவர்களும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை.” என்றார்கள்.
திருக்குர்ஆன் அருளப்பட்டபின் ஏனைய வேதங்களைப் பின்பற்றுவது கூடாது. அதுபோலவே மனிதனால் வகுக்கப்பட்டு இன்று உலகில் உலா வரும் ஏனைய கொள்கைகளையும் பின்பற்றுவது கூடாது.
குர்ஆன் உயிரினும் மேலான நூல்
அன்று குர்ஆன் அருப்பட்ட போது பல்வேறு கொள்கைகள் பலவும் வழக்கிலிருந்தன. அவற்றை மக்கள் நன்றாகவே தெரிந்திருந்தனர். இன்று நாம் காணும் மேலை நாட்டு நாகரிகத்திற்கெல்லாம் முன்னோடியாக விளங்கியது ரோமாபுரி நாகரிகம். இதையும் கிரேக்க நாட்டுத் தத்துவம், கலாச்சாரம், சட்டங்கள் யாவறறைறையும் அந்தமக்கள் தெரிந்து அவற்றையெல்லாம் பின்பற்றித்தான் வந்தார்கள்.
ஆனால் குர்ஆன் மூலம் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றதும் அவற்றை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டார்கள். அன்றைய மக்களுக்கு திருக்குர்ஆனைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியே கிடையாது என்று யாரும் வாதிட முடியாது.
ஏனைய கலாச்சாரங்களும், கொள்கைகளும் தங்களைச் சூழ்ந்திருந்த போதும் அவர்கள் அத்தனையையும் உதறிவிட்டுத் திருக்குர்ஆனை மட்டுமே தங்களது வாழ்வின் வழிகாட்டியாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் அடுக்கடுக்காக தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்ததன் இரகசியமும் இதுவேதான்!
திறந்த மனதுடன் திருக்குர்ஆனைப் படியுங்கள்!
திருமறை திருக்குர்ஆனை திறந்த மனத்துடன் படிகக்கவேண்டும். மாற்றுக் கருத்துகளையும் கொள்கைகளையும் மனத்திலே பதியவைத்துவிட்டு, அவற்றின் பால் ஒரு ஈடுபாட்டையும், மோகத்தையும் ஏற்படுத்திக்கொண்டு நம்மிலே பலர் திருக்குர்ஆனை அணுகுவதைக் காணுகிறோம். அவர்கள் குர்ஆனைப் படிக்கும்போதே தங்கள் கொள்கைகளுக்குத் தோதுவான இறைவசனங்கள் உள்ளனவா எனத்தேடுகிறார்கள். இவ்வாறு குர்ஆனை அணுகுவது சரியான முறையல்ல. இதன் மூலம் தங்களையே ஏமாற்றிக்கொண்டு, தங்களையறியாமலே அவர்கள் நேர்வழியைவிட்டும் தடம் புரண்டுசெல்கிறர்கள் என்பதை அவர்கள புரிந்து கொள்ளவேண்டும்..
ஒவ்வொரு பிரச்சனை குறித்தும் திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? அது் எவ்வாறு மனித சமுதாயத்திற்கு வழிகாடகிறது. எனபதை அறிந்து கொள்ள திருக்குர்ஆனை திறந்த மனத்துடன் படிக்கவேண்டும். இதற்காக திருக்குர்ஆனை திறக்குமுன்னரே நமது மனத்தை ஏனையக் கொள்கைகளின் பிடியிலிருந்தும் பற்றிலிருந்தும் முதலில் தம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும்..
மாற்றுக்கொள்கைகளை துடைத்தெறியுங்கள்!
மாற்றுக்கொள்கைகளை மனதிலே தேக்கி வைத்துக் கொண்டு திருக்குர்ஆனை படித்த காரணத்தினால் தான் இன்று முஸ்லிம் களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே கருத்து வேறுபாடுகள் நிலவக் காணுகிறோம்.
ஒவ்வொருவரும் ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு அதற்குப் பக்கத்துணையாக சில திருக்குர்ஆன் வசனங்களைப் பயன் படுத்துகின்றனர். பல சந்தர்பங்களில் தங்களது தவறுகளை நியாயப்படுத்தி திருமறை வசனங்களை கூறுபோட்டும் திரித்தும், மறித்தும் தாம் விரும்பியவாறு விளக்கமளிக்கினறனர்.
சிக்கல்களை அவிழ்ப்பதற்காக அருளப்பட்ட அல்லாஹ்வின் அருள் மறையையே தங்களின் கருத்துக்குழப்பங்களில் சிக்கவைக்கும் அறிவாளிகளுக்கு இறைமறை இவ்வாறு கூறுகிறது.
உங்கள் தீர்வுக்கு குர்ஆனை அணுகுங்கள்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்றவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)
பிரச்சனைகள் எழுந்தால் அதனைத் தீர்க்க குர்ஆனை அணுகுவதற்குப் பதிலாக குர்ஆனையே பிரச்சனைக்கு ஆளாக்கும் நிலையை என்னென்பது? இதை சமுதாயம் சந்திக்க வேண்டும்.
அக்கரையும் ஆர்வமும் வேண்டும் .
لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَّرَأَيْتَهُ خَاشِعاً مُّتَصَدِّعاً مِّنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
நாம் இந்தக் குர்ஆனை ஏதேனும் ஒரு மலையின் மீது இறக்கியிருந்தால் அது பணிவுள்ளதாகவும் அல்லாஹ்வின் அச்சத்தால் பிளந்து போவதாகவும் நீர் கண்டிருப்பீர். நாம் இந்த உவமைகளை மக்கள் முன் விளக்கிக் கூறவது, அவர்கள் (தங்களின் நிலைமையைப் பற்றிச்) சிந்திக்கவேண்டும் எனபதற்காகத்தான! (அல்குர்ஆன் 59:21)
திருமறையின் திருவசனங்கள் மலையே நடுங்க வைக்கும் ஆற்றல் பெற்றவை. ஆனால் இன்றைய மனிதர்களின் மனங்கள் திருக்குர்ஆனைப் படிக்கும் போது நடுங்குவதில்லை. காரணம், மலையைவிடவும் அவர்களின் மனங்கள் கடினமாகிவிட்டன.
மனித மனங்கள் திருக்குர்ஆனைப் படிப்பவரை இழுக்கும் காந்தம் என்பதில் ஐயமில்லை.ஆனால் படிப்பவர்கள் இருமபாக இருக்க வேண்டும். அவர்கள் மரமாக,கல்லாக இருந்தால்?
ஒரு நூலைப்போல் வாசிக்காதீர்!
ஒரு நூலைப்போல குர்ஆனை வாசிக்க முற்பட்டால் நாம் நம்மிலே எவ்வித மாற்றத்தையும் காணமுடீயாது. அதன் கருத்துக்களைப் புரிந்து நமது வாழ்வை நெறிப்படுத்தவேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு படித்தால் தான் நாம் பயனடைய முடியும்.
هُدًى لِّلْمُتَّقِينَ
உள்ளச்சத்தோடு படிப்பவர்களுக்கே அது வழிகாட்டும் என்ற 2:2 வசனம் கூறுகிறது.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَاناً وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் வேதவசனங்களில் அவனது) பெயர் கூறப்படும் பொழுது அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கும். மேலும் அவனுடைய வசனங்கள் அவர்ளின் முன் ஓதப்பட்டால் அவர்களின் நம்பிக்கை அதிகமாகும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (அல்குர்ஆன் 8:2)
وَإِذَا سَمِعُواْ مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُواْ مِنَ الْحَقِّ
இறைதூதரின் மீது இறக்கியருப்பட்ட அவர்கள் செவியுறும் போது சத்தியத்தை அவர்கள் தெரிந்து கொண்டதன் விளைவாக அவர்களின் கண்கள் கண்ணீர் வடிப்பதைநீர் காண்பீர். (அல்குர்ஆன் 5:83)
இறையச்தோடும் ஆர்வத்தோடும் படியுங்கள்!
திருக்குர்ஆனை ஓதும்போது இறையச்சத்தோடும், வாழ்வை அதன்படி அமைத்துச் செயலாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், அக்கரையோடும் படிக்க வேண்டும்.
பொருளைப் புரிய முயலுங்கள்!
وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمّاً وَعُمْيَاناً
”மேலும், தம் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டி அவர்களுக்கு நல்லுரை வழங்கப்படும் போது அவைகுறித்து குருடர்களாகவும், செவிடர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை.” (அல்குர்ஆன் 25:73)
சான்றுகளைச் சிந்தியுங்கள்!
திருக்குர்ஆன் ஆங்காங்கே பல அத்தாட்சிகளை சுட்டிக்காட்டி அவற்றை மனிதன் சிந்திக்க வேண்டும் எனத் தூண்டுகிறது. உலகம், இயற்கை,மனிதன்,வரலாறு ஆகியவற்றில் காணப்படும் அரிய அத்தாட்சிகளை ஆழ்ந்து உணருமாறு வேண்டுகிறது.
சிந்தித்துப்பாருங்கள்! சிந்தித்துப்பாருங்கள்! (பத்தாம் பசலிகளாக இராதீர்கள்!)
என பல்வேறு இடங்களில் திரும்பத் திரும்பக் கூறுகிறது. உலகில் எதையும் சிந்தித்துப்பார்த்தே செயலாற்ற வேண்டும் என வலியுறுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.
தொடர்ந்து படிக்கவேண்டும்
குர்ஆனின் வசனங்களுக்கு விளக்கம் குர்ஆனிலேயே உள்ளது. ஒருவசனத்தைப் படிக்கும் போது அதற்குரிய விளக்கம் கிடைக்காத போது அதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து படித்து வரும் போது இன்னொருவசனத்தின் வாயிலாக அதற்குரிய விளக்கம் கிடைத்துவிடும்.
பல்வேறு விளக்க உரைகள் படியுங்கள்!
திருக்குர்ஆனின் பல வசனங்களுக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே விளக்கமளித்துள்ளார்கள். அந்த வசனங்களைப் பொறுத்தவரை அதுவே சரியான விளக்கமாகும்.
திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் விளக்கம் கிடைக்காதபோது திருக்குர்ஆன் விரிவுரையாளர்களான முஃபஸ்ஸிரீன்களால் எழுதப்பட்ட விரிவுரைகளை (தஃப்ஸீர்களை) துணைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவசனத்தை வைத்து முடிவு செய்யாதீர்கள்!
ஒரு விஷயம் குறித்து குர்ஆனில் பல வசனங்கள் வரும்போது ஏதேனும் ஒரு வசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு அது பற்றி முடிவு செய்வது கூடாது. மாறாக, அதுகுறித்து வரும் எல்லா வசனங்களையும் தொகுத்து ஆராய்ந்த பின்னரே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இவ்வாறு செய்யும்போது தான் அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து குர்ஆனில் வரும் அனைத்து வசனங்களின் ஒட்டுமொத்த தீர்வை நாம் அறிய முடியும். எடுத்துக்காட்டாக:
1. வட்டி
வட்டி குறித்து பல வசனங்கள் வருகின்றன.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافاً مُّضَاعَفَةً
”விசுவாசிகளே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்!” (அல்குர்ஆன் 3:130) என்ற வசனத்தை மட்டும் படித்துவிட்டு கொடும் வட்டி (கந்து வட்டி)யை மட்டுமே ஹராம் என்ற தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அத்துடன்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ.فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ
“இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (உங்களுக்கு வரவேண்டிய ) வட்டிப் பாக்கிகளை விட்டுவிடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் (உங்களுக்கு எதிராக) போர் அறிவிக்கப்பட்டு விட்டதென அறிந்து கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 2:278,279)
என்ற வசனத்தையும் சேர்த்துப் படிக்கும் போது கொடும் வட்டி ( கந்து வட்டி) மட்டுமல்ல. அசலுக்கு அதிகமாக வசூலிக்கப்படும் சிறிய அளவாயினும் எந்த பொருளும் கூடுதல்-குறைவு என்ற பாகுபாடில்லாமல் சந்தேகமற வட்டிதான் என்பதை உறுதியாகப் புரிந்து கொள்ளமுடியும்.
2. மது
முதல் கட்டமாக அருளப்பட்ட மது பற்றிய வசனம்.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا
”(நபியே!) மதுவைப்பற்றியும, சூதாட்டத்தைப்பற்றியும் அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும் சில பயன்களும் உள்ளன. ஆயினும் அதன் பயனைவிட பாதிப்பே மிகவும் அதிகமானது”. (அல்குர்ஆன் 2:219)
என்ற வசனம் அருளப்பட்டபோது சில பயன்களும் உள்ளன என்று கூறப்பட்டதால் அதன் ஆபத்தை எண்ணி சிலர் நிறுத்திக் கொண்டனர். பயனைக்கருதி பலர் மதுவை விடாது தொடர்ந்து குடித்து வந்தனர்.
இரண்டாவது கட்டமாக அருளப்பட்ட வசனம்.
َيَاأَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقْرَبُواْ الصَّلاَةَ وَأَنتُمْ سُكَارَى حَتَّىَ تَعْلَمُواْ مَا تَقُولُونَ
”இறைநம்பிக்கைகொண்டேரே! நீங்கள் போதையிலிருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்”.(அல்குர்ஆன் 14:43)
என்ற வசனம் அருளப்பட்டபோது “தொழுகையில் இருக்கும் போது தான் குடிக்கக் கூடாது ” எனக்கருதி சிலர் குடித்துவரவே செயடதனர். ஆனால் பலரும் குடிப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.
மூன்றாவது கட்டமாக அருளப்பட்ட வசனம்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
”இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, பலிபீடங்கள், (குறிகேட்பதற்கான) அம்புகள் ஆகியவை அருவருப்பானதும் ஷைத்தானின் நடவடிக்கைகளுமாகும். எனவே இதிலிருந்து (முற்றாக) விலகிக் காள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”. (அல்குர்ஆன் 5:90)
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاء فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللّهِ وَعَنِ الصَّلاَةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ
”மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே, நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91)
ஆகிய இருவசனங்கள் அருளப்பட்டதும் மது அருந்துவது தடை செய்ப்பட்டுவிட்டது என்பதைத் தெரிந்து அனைவரும் முற்றிலுமாக மது அருந்துவதை விட்டுவிட்டனர்.
இந்த வசனங்களில் முதலில் அருளப்பட்ட வசனத்தைவைத்தோ, இரண்டாவது கட்டத்தில் அருளப்பட்டதை வைத்தோ நாம் மதுவைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது. மூன்றாவது கட்டமாக அருளப்பட்ட வசனங்களையும் வைத்து சீர்தூக்கிப் பார்த்த பிறகே மதுவைப்பற்றிய முடிவுக்கு வரமுடியும்.
எனவே, எல்லா வசனங்களையும் நாம் அலசியபிறகே குர்ஆனின் வசனங்களைப் பற்றிய எந்த முடிவுக்கும் நாம் வர முடியும்.
திருக்குர்ஆன் துறவுமடங்களிலோ, ஆசிரமங்களிலோ, ஞானபீடங்களிலோ, மதப்பள்ளிகளிலோ, வழிபாட்டுத்தலங்களிலோ இருந்து கொண்டு அதன் கருத்துகளை இரகசியமாக அறிந்து கொள்ளக்கூடிய இரகசிய நூலன்று. அறிஞர்களால் விவாதிக்கப்படும் ஒரு தத்துவ நூலுமன்று. உலகளாவிய அளவில் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய பொது மறை! இந்த இறைமறை ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்க வந்த அதிசய நூல்.
தீமைகளிலும், பஞ்சமாபாதகங்களிலும் சுகங்கண்ட சமுதாயத்தையும், கொடுமைக்காரர்களின் இரும்புப்பிடியிலே சிக்கி விழிபிதுங்கி நின்ற அப்பாவிகளையும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என ஏனோ தானோ என வாழ்ந்த நாடோடிகளையும், சின்னஞ்சிறு விஷயத்தையும் தனது மானப்பிரச்சனையாகக் கருதிக்கொண்டு ஆயுள் முழுவதும் போர்வெறியோடு தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுப் பழிவாங்குவதிலும் வாழ்வை மாய்த்துக் கொண்டவர்களையும் மீட்டு தன்மானமிக்கவர்களாக, மனிதப்புனிதர்களாக, மாண்புக்குரியவர்களாக மாற்றி சுதந்திரம் வழங்கி உலக அரங்கிலே ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ஒரு இயக்கத்தை தோற்றுவித்த வேதம் அருள்மறை அல்குர்ஆன்.
அந்த இயக்கமும் அதன் அழைப்புப்பணியும் நிறைவடைய 23 ஆண்டுகள் ஆயின. இந்த காலகட்டங்களில் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப அவ்வப்போது குர்ஆனின் இறைவசனங்கள் அருளப்பட்டன.
எனவே, திருக்குர்ஆன் இன்று மனிதர்களால் எழுதப்படும் ஒரு நூலைப் போலவோ, ஒரு கட்டுரையயைப் போலவோ இல்லாது மனிதக் கற்பனைக்கும் அறிவிற்கும் அப்பாற்பட்டு , தெய்வீகத் தன்மையுடன் ஒளிரும் ஒரு அழைப்பாகவே அது மிளிர்வதைக் காணலாம். அதுவும் ஒரு இறைதூதர் என்னும் சீர்திருத்தவாதியின் வழியாக முழங்கும் ஒரு சங்கநாதமாகவே -அறிவியற் களஞ்சியமாகவே- மனித சமுதாயத்தை வந்தடைந்தது.
திருக்குர்ஆனை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்தக் கண்ணோட்டம் மிகவும் அவசியமாகும்.
செயலாக்கமே அதனைப் புரிந்து கொள்ளும் ஒரே வழி!
நாம் நமது அன்றாட வாழ்வில் குர்ஆனைச் செயல்படுத்திப் பார்ப்பதே “குர்ஆனைப் புரிந்து கொள்ளும் சரியான வழி.
குர்ஆனை வெறுமனே படிப்பதற்கும் அதனைச் செயல்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற நோக்கில் படிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
வாழ்க்கையில் செயல் படுத்தும் போது எந்த சூழ்நிலையில் எந்த வசனங்கள் தேவை என்பதையும், அதன் வழிகாட்டுதல் அவசியம் எனபதையும், எவ்வளவு பொருத்தமானவை என்பதையும், எல்லாக் காலத்திற்கும் ஏற்றவை என்பதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனின் போதனைகள், சட்டங்கள், கட்டளைகள், ஒழுக்க மாண்புகள், பொருளாதார விதிமுறைகள் ஆகியவற்றை நடை முறைப் படுத்தாதவரை அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. சொந்த வாழ்கையை திருக்குர்ஆனுக்கு மாற்றமாக அமைத்துக் கொள்ளும் எந்த மனிதனாலும் அதன் முழுப்பயனையும் அடைய முடியாது.
source: http://albaqavi.com/home/?p=742