மின்னல் போன்று ஒளிக்கீற்று தெறித்து பாறை பிளந்தது…
அகழ்ப் போரின் வரலாற்றுப் பொன்னேடுகள்
இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய அகழ்ப் போரின்போது, பகைவர்களின் பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயந்துவிடாமல் உள்ளங்களில் ஈமான் பொங்கிட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு போன்ற முஹாஜிர்களும், ஸஅத் இப்னு உபாதா ரளியல்லாஹு அன்ஹு போன்ற அன்ஸார்களும் போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அகழ் வெட்டியபோது பெரும் பாறையொன்று எதிர்ப்பட்டு தகர்க்க இயலாமல் இடையூறு செய்தது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போட்டுத் தந்த பாதை. ஆகவே ஸஹாபாக்களுக்கு அதை சுற்றிச் செல்லவும் மனமில்லை.
செய்தியறிந்த அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோடாரியை தமது கையில் வாங்கி ‘இறைவனின் வாக்குறுதி முழுமையான உண்மையாகும்’ என்று கூறி கோடாறியை போட்டார்கள். மின்னல் போன்று ஒளிக்கீற்று தெறித்து பாறையின் கால்பாகம் பிளந்தது.
‘இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் உள்ளது’ என்று கூறியவாறே மீண்டும் அடித்தார்கள். பாறையின் இன்னொரு பகுதி உடைந்தது.
பிறகு மூன்றாம் முறையாக ‘இறைவனின் வார்த்தைகளை எவரும் மாற்றிட முடியாது’ என்று கூறிக்கொண்டே மீண்டும் அடித்தார்கள். பாறை முழுவதும் தூளானது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘யா ரஸூலல்லாஹ்! தாங்கள் ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் ஓர் ஒளிக்கீற்று வெளிப்பட்டதே!’ என்று கேட்டதற்கு,
‘முதல் ஒளிக்கீற்றில் யமன் மாளிகையை நான் கண்டேன். (அவற்றை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள்) இரண்டாவதில் ரோமானியர்களின் அரண்மனையைக் கண்டேன். (அவற்றையும் வெற்றி கொள்வார்கள்) மூன்றாவதாக மதாயின் (கிஸ்ராவின்) மாளிகையைக் கண்டேன்’ எனக் கூறினார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்: ”நான் (‘ஸபா’ என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆது’ சமுகத்தார் (‘தபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்” என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி 4105)
பராஉ இப்னு ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப் போரின்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவர்களின் வயிற்றின் தோலை என்னைவிட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டிருந்ததை கேட்டேன் (அந்தப் பாடல் இதுதான்:)
”இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.”
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (‘நாங்கள் இடம் தரமாட்டோம்’ என்ற) கடைசி வார்த்தையை நீட்டிய படி முழக்கமிட்டார்கள்” என்று அறிவிப்பாளர் கூறுகிறார். (புகாரி 4106)
அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எதிரிகளுடைய வீடுகளையும், புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பினால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள். (புகாரி 4111)
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப்போரின்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு குறைஷிக்குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் தொடங்கும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை” என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸர் தொழவில்லை” என்று கூறினார்கள். பின்னர் ‘புத்ஹான்’ என்னும் பள்ளத்தாக்கிற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உளூச் செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள். (புகாரி 4112)
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
“அகழ்ப்போரின்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்?’ என்று கேட்டார்கள். ஸுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு, “நான்” என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும்; எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்?’ என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு, “நான்” என்று கூறினார்கள். பிறகு, “எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்?” என்று (மீண்டும்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு, ‘நான்” என்று கூறினார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் உண்டு; என்னுடைய (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைராவார்” என்று கூறினார்கள். (புகாரி 4113)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக சென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை” என்று கூறினார்கள். (புகாரி 4114)
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
(அகழ்ப்போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி 4115)
அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது முதலில் மூன்று முறை, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன். நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும் திரும்புகிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான். தன் அடியாருக்கு உதவினான். தன்னந்தனியாக (எதிர்) அணியினரைத் தோற்கடித்துவிட்டான்.” (புகாரி 4116)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அகழ்ப்போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எங்கே (போவது)?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘இதோ, இங்கே!” என்று ‘பனூ குறைழா’ (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (புகாரி 4117)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
”(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்கி கிளையாரின் குறுகலான வீதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பனூ குறைழா’ குலத்தாரை நோக்கிச் சென்றபோது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனிவந்தததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது”. (புகாரி 4118)
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழவேண்டாம்” என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ரு(த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், ‘பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம்” என்று கூறினர். வேறு சிலர், ‘(தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை; (‘வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம்” என்று கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை. (புகாரி 4119)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள்:
அகழ்ப்போரின்போது ஸஅத் இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு தாக்கப்பட்டார்கள். அன்னாரின் கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் இப்னு அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி)விட்டான். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.
அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தலையிலிருந்து புழுதியைத் தட்டிய வண்ணம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.
அதற்கு ‘எங்கே? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அப்போது ‘பனூ குறைழா’ குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் சைகை செய்தார்கள். உடனே, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள்.
(பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தீர்ப்பை ஸஅத் இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு, ‘பனூ குறைழாக்களில் போர் புரியும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்படவேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தபோது) ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு, ”இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர் புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டாய் என்று எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் என்னுடைய காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு” என்று பிரார்த்தித்தார்கள்.
அன்னாரின் நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களின் கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த ‘பனூ ஃம்பார்’ குலத்தாருக்கு ஸஅத் அவர்களின் கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது.
அப்போது மக்கள், ‘கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வழிய ‘ஸஅத்’ ரளியல்லாஹு அன்ஹு இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக! (புகாரி 4122)
பராஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், (‘பனூ குறைழா’ நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘இணைவைப்பவர்களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள். (புகாரி 4123)
பராஉ இப்னு ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பனூ குறைழா’ போரின்போது ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி, இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார்” என்று கூறினார்கள். (புகாரி 4124)
அல் பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப் போரின்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்” தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம். (புகாரி : 2837
ஸஹ்ல் பின் ஸஅது ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள். (புகாரி : 3797)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:
அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், ‘நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) ‘நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’ என்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்” என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள். (புகாரி : 2961)