அர்த்தமுள்ள மனித வாழ்வு
“நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காகவேயென்றும் நீங்கள் நம்மிடம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?
உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். அவனைத் தவிர வேறு நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குரிய இறைவன் அவனே.
எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனை அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய எத்தகைய ஆதாரமும் இல்லை. நிச்சயமாக, அவனுடைய பாவக்கணக்கு அவனின் இறைவனிடத்தில்தான் தீர்க்கப்படும்.
நிச்சயமாக, இத்தகு காஃபிர்கள் சித்தி பெறவே மாட்டார்கள்.
நபியே! நீங்கள் கூறுங்கள்: என் இறைவனே, நீ என்னை மன்னித்து அருள் புரிவாயாக! அருள் புரிவோர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.” (அல்முஃமினூன் – 115 -118)
ஸூறா அல்முஃமினூன் எனும் அல்குர்ஆன் அத்தியாயத்தின் இறுதி வசனங்களுக்கான விளக்கம் இங்கு இடம் பெறுகின்றது.
நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காகவேயென்றும் நீங்கள் நம்மிடம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? என்பது முதல் வசனமாகும்.
இது மறுமையில் அல்லாஹ் அவனுக்கு மாறு செய்த வாழ்ந்த மனிதரை நோக்கி தொடுக்கவிருக்கும் கேள்வியாகும். இதே கருத்தில் இந்த வசனத்தின் பாணியிலேயே மேலுமோர் அல்குர்ஆன் வசனத்தைக் காண்கின்றோம்.
”தான் எத்தகைய கேள்வியுமின்றி விட்டுவிடப்படுவோமென்று மனிதன் நினைக்கின்றானா?” (ஸூறா அல்கியாமா: 36)
இத்தகைய வசனங்களின் மூலம் அல்லாஹ் எமக்கு உணர்த்த விரும்புவது மனித இனம் இவ்வுலகில் அர்த்தமின்றி, நோக்கமின்றி படைக்கப்படவில்லை என்ற அடிப்படை உணமையையாகும்.
மனித வாழ்வு அர்த்தமுள்ளது. இவ்வாழ்வுக்குப் பின்னால் ஒரு வாழ்வுண்டு. அதுவே நிலையானது. நிரந்தரமானது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்களையும் அத்தாட்சிகளையும் அல்லாஹ் மனிதனிலும் அவனைச் சூழவுள்ள இப்பிரபஞ்சத்திலும் அமைத்து வைத்திருக்கின்றான். அவற்றை உற்று நோக்கி, படைத்தவனை அறிந்து, மனிதன் தனது உலக வாழ்வின் பெறுமதியை உணர்ந்து, அதனை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டுமென அல்லாஹ் எதிர்பார்க்கின்றான்.
அல்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:
உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள படைப்புகள், ஜீவராசிகள் ஆகியவற்றையும் நோக்குகின்ற போதும் அவற்றின் நுணுக்கமும் நேர்த்தியும் – ஒழுங்கும் நிறைந்த அமைப்பை அவதானிக்கின்ற போதும் இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு பாரிய சக்தி இருக்க வேண்டும்.ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் இயக்கக்கூடிய ஒருவன் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர முடிகின்றது. அவ்வாறே இப்பாரிய திட்டமிட்ட இமைப்பு வீணானதாக அர்த்தமற்றதாக அமைய முடியாது. மாறாக இவற்றிற்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்ற தெளிவும் பிறக்கும்.
வானங்களும் பூமியும் அமைக்கப்பட்டுள்ள முறையைப் பார்க்கின்ற போதும் இரவு பகல் மாறி மாறி வரும் ஒழுங்கை அவதானிக்கின்ற போதும் ஏனைய அம்சங்களை நோக்குகின்ற போதும், ஏன் மனிதன் தன்னையும் தனது அமைப்பின் நுணுக்கத்தையும் ஆராயும் போதும் தானும் தன்னைச் சூழவுள்ள இப்பாரிய உலகும் வீணாகப் படைக்கப்பட்டிருக்க முடியாது. இவை அர்த்தமின்றி அழிந்து விட முடியாது.
இந்த வாழ்வுக்குப் பின்னால் ஒரு வாழ்விருந்தாக வேண்டும். அங்கு மனிதனின் நடத்தைகள் பற்றிய விசாரணை நடைபெற வேண்டும். நல்லோருக்கு நற்பலனும் தீயோருக்குத் தண்டனையும் கிட்ட வேண்டும் என்பதையெல்லாம் மனிதன் ஆழமாக உணர்கிறான். இந்நிலையில் இறைவனது தண்டனை பற்றிய அச்சமும் அவனைத் தானே ஆட்கொள்ளும்.
இந்த உணர்வானது எவ்வாறு வார்த்தைகளாக வெளிப்படும் என்பதை அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது:
அறிவுடைய இத்தகையோர் வானங்கள் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்து எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத்தூயவன். நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக. எங்களிறைவனே! நிச்சயமாக நீ எவர்களை நரக நெருப்பில் புகுத்தினாயோ அவர்களை நிச்சயமாக இழிவுபடுத்திவிட்டாய். அத்தகு அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை (ஸூறா ஆலஇம்ரான்: 191-192)
மனிதனது ஆயுள் மிகவும் குறுகியது. அவனுக்கு உலகில் வாழக் கிடைக்கும் நாட்களோ மிகவும் சொற்பமானவை. ஆனால், அவனுக்குள்ள ஆசைகளுக்கு முடிவில்லை. தேவைகளுக்கு எல்லையில்லை. ஆயினும், மனிதனோதனது ஆசைகள் பல கைக்கூடாத நிலையில், எதிhபார்ப்புக்களை அடையாத நிலையில் இருக்கிறான். தான் பிரிய விரும்பாத பலரை பிரிந்து செல்கிறான். அவனது பிரிவைத் தாங்க முடியாத பலரும் அவனை நிர்ப்பந்தத்தால் வழியனுப்பி வைக்கின்றனர்.
இங்கு ஒவ்வொரு மனித ஆத்மாவிலும் எழும் கேள்வி, இந்த ஆசைகள் முழுமையாகக் கைக்கூடும் சந்தர்ப்பம் கிட்டாதா? இந்தத் தேவைகள் நிறைவேறும் வாய்ப்பு வராதா? இனி என்றுமே நிகழாதா? இவ்வளவு தூரம் இந்த வாழக்கை வீணானதாகவும் அர்த்தமற்றதாகவும் அமைய முடியுமா? என்பதுதான்.
மறுபக்கத்தில் உலகில் என்றும் எப்போதும் நன்மைக்கும் தீமைக்குமிடையில், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையில் சர்ச்சை நிலவிக் கொண்டே இருக்கின்றது. இந்தச் சர்ச்சையில் பல சந்தர்ப்பங்களில் சத்தியத்தை அசத்தியம் ஜெயித்து விடுகிறது.
அசத்தியம் தலை நிமிர்ந்து நிற்பதைக் காண முடிகின்றது. சத்தியமும் அதன் காவலர்களும் இங்கு உரிய கூலியைப் பெற்றுக் கொள்ளாத பல சந்தர்ப்பங்களைக் காண முடிகின்றது. இவ்வேளைகளிலெல்லாம் சத்தியத்திற்கு உரிய கூலியும் அசத்தியத்திற்குரிய தன்டனையும் மேலுமொரு உலகத்திலாவது வழங்கப்பட வேண்டுமென மனித உள்ளம் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றது. அதாவது, மறுமையின் அவசியத்தை உணர்கிறது.
மற்றுமோர் அம்சமும் உண்டு. உலகை வளமாக்கி இத்தனை சாதனைகளைப் புரிந்த இந்த மேலான மனிதனது முடிவு சாதாரண அற்பமான பூச்சி புழுக்களினதும் மிருகங்களினதும் முடிவைப் போன்று அமைந்துவிட முடியுமா? எதுவுமே நிiவாகவும் முழுமையாகவும் கைக்கூடாத ஒரு குறுகிய வாழ்க்கை, ஆயுள்தான் இந்த மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் மனித உள்ளத்தால் சீரணிக்க முடியாதுள்ளது.
மேலே நாம் கூறிய இத்தகைய உணர்வுகளினதும் சிந்தனைகளினதும் விளைவாகவே உலகம் தோன்றியது முதல் மனித இனமானது வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பித்து வந்தது மாத்திரமல்ல, ஏதோ ஓர் அடிப்படையில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்வு பற்றி, மறுமை பற்றி நம்பி வந்துள்ளது. ஆயினும் அல்குர்ஆன்தான் முதல் தடவையாக மறுமை பற்றிய சரியான, தெளிவான, மயக்கமற்ற கருத்தை எளிமையாக முன்வைத்த வேதமாகும்.
நாம் விளக்க எடுத்துக் கொண்ட அல்குர்ஆன் வசனங்களில் முதல் வசனமும் இந்த மறுமையின் உண்மை நிலையை தனக்கே உரிய தனித்துவமான பாணியில் விளக்குகின்றது:
”நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காகவேயென்றும் நீங்கள் நம்மிடம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் நினைத்தீர்களா?” என்பதே அவ்வசனமாகும்.
இந்த வசனத்திற்கு விளக்கமாக கலீபா உமர் இப்னுல் அஸீஸ் அவர்கள் தனது அந்திம காலத்தில் நிகழ்த்திய உரை அமைந்திருக்கின்றது:
மனிதர்களே! நீங்கள் வீணாகப் படைக்கப்பட்டவர்களல்லர். நீங்கள் சும்மா விடப்படமாட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு ஒரு மீட்சி உண்டு. அப்போது அல்லாஹ் உங்களிடம் வந்து உங்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவான். எவரை அல்லாஹ் தனது அருளிலிருந்து வெளியேற்றி வானங்கள் பூமியினளவு விசாலமான சுவர்க்கத்தை விட்டும் தடுத்து விடுகின்றானோ, அவர் தோல்வியடைந்தவர். நஷ்டமடைந்தவர். இது கலீபா அவர்கள் நிகழ்த்திய உரையின் முதற்பகுதியாகும்.
”உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன்”
இனி நாம் அடுத்த வசனத்தை நோக்குவோம்:
”உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன்”.
அதாவது, அல்லாஹ் வீணாக, அர்த்தமின்றி எதனையும் படைப்பதை விட்டும் தூய்மையானவன் – உயர்ந்தவன் என்பது இவ்வசனத்தின் பொருளாகும். பரிபூரணத்துவத்தின் மொத்த வடிவமாகத் திகழும் அல்லாஹ் இத்தகைய குறைகளை விட்டும் தூய்மை பெற்ற, உயர்ந்தவனாகவே இருப்பான். தொடர்ந்தும் அல்லாஹ்வுடைய தன்மை பற்றியே விளக்கப்படுகின்றது:
அவனைத் தவிர வேறு நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குரிய இறைவன் அவனே.
இவ்வசனத்தில் வரும் இலாஹ் என்ற பதமே நாயன் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இப்பதமானது மூன்று கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அல்மஃபூத் – வணக்கத்திற்குரியவன் என்பது இப்பதம் கொடுக்கும் ஒரு கருத்தாகும். அல்முஸ்தஆன் – உதவிக் கோரத்தக்கவன் என்பது இலாஹ் என்ற இப்பதத்திற்குள்ள அடுத்த பொருளாகும். வாழ்வின் அனைத்துத்துறைகளுக்கும் தேவையான வழிகாட்டல்களையும் அஹ்காம்களையும் வழங்கும் அதிகாரமுள்ளவன் என்பது இப்பதம் கொடுக்கும் மற்றுமொரு பொருளாகும்.
எனவே, அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லையெனும் போது இம்முப்பெரும் கருத்துக்களும் ஒருங்கே மனதிற் கொள்ளப்படல் வேண்டும்.
இனி அடுத்த வசனத்தை நோக்குவோம்:
எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனை அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய எத்தகைய ஆதாரமும் இல்லை.
உண்மையில் இறைவன் அவன் ஒருவனாகவே இருக்க வேண்டும். அவனுக்கு இணை துணை இருக்க முடியாது என்பதற்கு அறிவார்ந்த, தர்க்கரீதியான ஆதாரங்கள், அத்தாட்சிகள் ஏராளமிருக்கின்றன.
ஆனால் அவனுக்கு இணையுண்டு. துணையுண்டு எனும் வாதத்திற்கோ எத்தகைய ஏற்கத்தக்க ஆதாரமும் இல்லை. இருக்க முடியாது என்பதையே அல்லாஹ் இவ்வசனத்தின் மூலமாக வலியுறுத்திக் கூற விரும்புகின்றான்.
இணை கற்பிப்பவர்ககளுக்குரிய தண்டனை பற்றி:
இவ்வாறு எவ்வித ஆதாரமும் – அடிப்படையுமின்றி அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்ககளுக்குரிய தண்டனை பற்றி வசனத்தின் அடுத்த பகுதி கூறுகின்றது:
நிச்சயமாக, அவனுடைய பாவக்கணக்கு அவனின் இறைவனிடத்தில்தான் தீர்க்கப்படும். நிச்சயமாக, இத்தகு காபிர்கள் சித்தி பெறவே மாட்டார்கள்.
ஸூறா அல்முஃமினூனுடைய முதல் வசனம் நிச்சயமாக முஃமின்கள் வெற்றி பெறுவர் என அமைந்தது. இங்கு இந்த ஸூறாவின் இறுதியிப் பகுதியில் வருகின்ற வசனம் நிச்சயமாக, காபிர்கள் சித்தி பெறவே மாட்டார்கள் என்று கூறுகின்றது.
இங்கு ஸூறாவின் ஆரம்பப்பகுதிக்கும் இறுதிப்பகுதிக்குமிடையிலுள்ள நுணுக்கமான தொடர்பை, பொருத்தப்பாட்டை அவதானிக்கின்றோம். இவ்வாறுதான் அல்குர்ஆனில் வசனங்களுக்கிடையில் மாத்திரமன்றி அத்தியாயங்களுக்கிடையிலும் கூட ஆழமான தொடர்பு இருப்பதனை நுணுக்கமாக நோக்கினால் காண முடியும்.
ஸூறாவின் இறுதி வசனம்
முடிவாக ஸூறாவின் இறுதி வசனம் இவ்வாறு அமைகின்றது:
”நபியே! நீங்கள் கூறுங்கள்: என் இறைவனே, நீ என்னை மன்னித்து அருள் புரிவாயாக! அருள் புரிவோர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.
அல்லாஹ் இவ்விறுதி வசனத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோருமாறும் தனதருளை வேண்டுமாறும் தனது தூதருக்கு ஏவுகின்றான். இதன் மூலம் நபியின் உம்மத்திற்கு தன்னைப் புகழும் முறையையும் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் அமைப்பையும் அவன் கற்றுக் கொடுத்துள்ளான்.
நாம் இதுவரை விளக்கிய ஸூறா அல்முஃமினூன் எனும் அத்தியாயத்தின் இந்த வசனங்கள் மிகவும் சிறப்புக்குரியவையாக இருக்கின்றன. இவ்வசனங்களின் சிறப்புப் பற்றி பல அறிவிப்புக்களைகளையும் காண முடிகின்றது.
ஒரு தடைவ ஒரு நோயாளியைக் கண்ட அப்துல்லாஹ் இப்னு மஸஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வசனங்களை அதாவது ஸூறா அல்முஃமினூனில் வரும் கடைசி வசனங்களை அம்மனிதனின் காதில் ஓதி ஊதவே அவன் மரணமடைந்தான். இது பற்றி அல்லாஹ்வின் தூதரிடம் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்து அம்மனிதனிடம் என்ன ஓதினீர் என்று வினவிய போது, அவர்கள் தான் ஓதிய இவ்வசனங்களைக் குறிப்பிட்டார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள், எவன் கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக இவ்வசனங்களை ஒரு மனிதன் உள உறுதியுடன் ஒரு மலையின் மீது ஓதினால் அது இடம் பெயர்ந்து விடும் என்றார்கள்.
முஹம்மத் இப்னு இப்ராஹீம் இப்னுல் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்குத் தனது தந்தை சொன்னதாக கீழ்வருமாறு கூறினார்கள்:
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தபோது காலையிலும் மாலையிலும் அபஹஸிப்தும் அன்னமா கலக்னாகும் அபஸா என ஆரம்பித்து முடிவடையும் வசனங்களை ஓதுமாறு பணித்தார்கள். நாங்களும் ஓதினோம். அந்த யுத்தத்தில் எங்களுக்கு நிறை கனீமத் பொருட்களும் கிடைத்தன். பாதுகாப்பாகவும் திரும்பினோம்.
source: http://kadheroli.wordpress.com/