[ ஆணுக்குப் பெண் என்றுமே தாழ்வானவர்களல்ல. ஏன், ஆண்களை விடத் திறமையாகப் பல சமயங்களில் பெண்கள் செயலாற்றுவதைக் காணமுடிகிறது.
ஆனால் பெண்களால் கிடைக்கும் வசதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயக் கோட்பாடுகள் என்னும் அநீதியான பல விதிகளுக்குள் அவர்களை முடக்கி விடும் பல ஆண்கள் இந்த நவீன காலத்திலும் மலிந்து கிடக்கிறார்கள் என்பதும் வேதனைக்குரிய ஒன்றுதான்.
பெண்களின் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடையணிந்து, கட்டுப்பாடின்றித் திரிவதல்ல. அதை அப்படியாகத் திரிபு படுத்தி வைத்திருக்கும் பெண்கள் உண்மையிலேயே பெண்களின் சுதந்திரத்தை விரும்புகிறவர்களும் அல்ல.
தன்னுடைய சுயத்தை அறிந்து, அந்தச் சுயத்தின் உதவியுடன் சமுதாயத்தினில் எவ்வித தடையுமின்றி தனது கலாச்சார வரம்புக்குள் இயங்கக் கூடிய வல்லமை அடைவதே பெண்களின் சுதந்திரம் என்று கூறலாம். ]
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம். 2011 ஆம் ஆண்டிலே பெண்கள் மீதான ஆண்களின் பார்வை, சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது? பெண்களின் திறமைகள், அத்திறமைகளுக்கு ஏற்றதாக அங்கீகரிக்கப்படுகிறதா? பெண்களுக்கு சமுதாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பு அவர்களின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றதா?
– இப்படி பல கேள்விகள் எனக்கு மட்டுமல்ல, பெண்கள் குறித்த உயர்வான சிந்தனையுடைய பலருக்கும் தோன்றுகிறது. பெண்கள் குடும்பத்தில், சமுதாயத்தில் வகிக்கும் முக்கியத்துவம் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கின்றது என்பது கசப்பான உண்மை.
உதாரணமாக, புலம் பெயர் வாழ்வை எடுத்துக் கொண்டோமானால் இங்கு (லண்டனில்) வாழும் தமிழ்ச்சமூகம் தம்மினப் பெண்கள் மீதோ, அன்றி தம்மைச் சுற்றியுள்ள வேறு இனப் பெண்கள் மீதோ கொண்டிருக்கும் பார்வை எத்தகையது என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அனைத்திலும் நாகரீகமடைந்து விட்டோம் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம், பெண்கள் மீதான் நமது பார்வையை மாற்றிக் கொண்டோமா? என்று கேட்டால் அதன் விடை என்னவோ கவலைக்குரியதாகவே இருக்கிறது.
இங்கே சில உதரணங்களைப் பார்ப்போம்.
ஒரு ஆணும் பெண்ணும் (கணவன், மனைவி) நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே உலகப் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு சிறு கருத்துரையாடல் வருகிறது. கணவனை விட, மனைவி அந்த கருத்துக்களில் சில நல்ல கருத்துக்களைக் கொண்டிருக்கிறாள் என்றால், அங்கிருக்கும் மற்ற ஆண்கள் தமக்குச் சமமாக அன்றி தமக்கு மேலாக கருத்துக்களை வைக்கும் அந்தப் பெண்ணுடன் பேசுவதையே தவிர்க்கப் பார்க்கிறார்கள். ஏனென்றால் தமது மனைவியரின் முன்னால் அந்தப் பெண்ணின் புத்தி சாதுர்யத்தை நிலைநாட்ட இயலாத நிலை அவர்களுக்குள் விரோதத்தை உருவாக்குகிறது.
– இது நான் பல இடங்களில் நேரடியாகப் பார்த்த நிகழ்வு. இதுபோல்,
ஒரு குடுபத்தில் கணவன் பொறுப்பற்றவனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தின் நன்மை கருதி, அக்குடும்பத்தின் நிதி நிர்வாகங்களை மனைவியே கவனித்து வருகிறாள். அப்போது சமூகத்தில் பெருபான்மையானோர் ஏதோ அந்தப்பெண் அகங்காரம் பிடித்தவள் போல் நடந்து கொள்கிறாள் என்றும், கணவனை அடக்கியாளுகிறாள் என்றும் தவறான எண்ணத்துடன் புரிந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் நானறிந்த பல நண்பர்கள் தாம் கல்வி பயின்று கொண்டிருந்த போதே மணமுடித்து வந்தவர்கள். தமது படிப்புக்கு வசதியாக தமது மனைவியரை வெளியே வேலைக்கு அனுப்பி விடுவார்கள். அவர்கள் கல்வியைப் படித்து முடித்துப் பட்டம் பெற்றதும், தமது மனைவியின் நிலையைக் கொஞ்சம் உயர்த்தி விடுவதற்காக அவளைக் கல்வி பயில அனுப்புவோமே என்று எண்ணுவோர் மிகவும் சொற்பமே. ஒரு சமுதாயத்தின் உயர்வு அந்தச் சமுதாயத்தில் ஆண்களுக்குச் சரி நிகராகப் பெண்களும் தமது கல்வியறிவை உயர்த்தி, பொது அறிவினில் தம்மை வளர்த்துக் கொள்வதினிலேயே உள்ளது.
ஆணுக்குப் பெண் என்றுமே தாழ்வானவர்களல்ல. ஏன், ஆண்களை விடத் திறமையாகப் பல சமயங்களில் பெண்கள் செயலாற்றுவதைக் காணமுடிகிறது. ஆனால் பெண்களால் கிடைக்கும் வசதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயக் கோட்பாடுகள் என்னும் அநீதியான பல விதிகளுக்குள் அவர்களை முடக்கி விடும் பல ஆண்கள் இந்த நவீன காலத்திலும் மலிந்து கிடக்கிறார்கள் என்பதும் வேதனைக்குரிய ஒன்றுதான்.
பெண்களின் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடையணிந்து, கட்டுப்பாடின்றித் திரிவதல்ல. அதை அப்படியாகத் திரிபு படுத்தி வைத்திருக்கும் பெண்கள் உண்மையிலேயே பெண்களின் சுதந்திரத்தை விரும்புகிறவர்களும் அல்ல. தன்னுடைய சுயத்தை அறிந்து, அந்தச் சுயத்தின் உதவியுடன் சமுதாயத்தினில் எவ்வித தடையுமின்றி தனது கலாச்சார வரம்புக்குள் இயங்கக் கூடிய வல்லமை அடைவதே பெண்களின் சுதந்திரம் என்று கூறலாம்.
எனது நண்பரொருவரின் அலுவலகத்திலே மேலாளராக ஒரு பெண் இருக்கிறார். அவருக்குத் தான் ஒரு பெண்ணுக்குக் கீழே பணிபுரிகிறேன் என்று சொல்லும் போதே, அவரது முகத்தினில் ஒரு சோகம் கலந்த மாற்றத்தைப் பார்க்க முடியும். இத்தனைக்கும் அவர் இங்கிலாந்திலே, முன்னேற்றமடைந்த கலாச்சாரம் என்று கூறப்படும் சமூகத்திலே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். இந்தச் சமூகத்தில் உள்ள பல நாகரீக அடையாளங்களைத் தான் ஏற்றுக் கொண்டு வாழும் அதே வேளை, தனது மனதில் கவிழ்ந்துள்ள மடமை என்னு இருளை விலக்க முடியாத அளவிற்கு கோழைத்தனத்தைக் கொண்டிருக்கிறார்.
இன்றுதான் பெண்கள் பல துறைகளில் உயர்ந்த பதவிகளை வகிக்கிறார்களே, பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? என்ற கேள்வி பலருக்குள்ளும் தோன்றக் கூடும். பல பெண்கள், உயர்ந்த பதவிகளைப் பெற்றிருப்பது உண்மையே. பெண்கள் கல்வித்துறையில் பல சாதனைகளைச் செய்து வருவதும் உண்மையே. ஆனால் இவையெல்லாம் பெண்கள் சுதந்திரமடைந்து விட்டார்கள் என்பதற்கு சான்றுகளாகி விடுமா?
அப்படியானால் பெண்கள் தாம் வாழ்க்கையில் எதிர் நோக்கிய இடர்பாடுகளின் செறிவு என்ன? அவர்களின் இந்த முன்னேற்றத்தின் போது அவர்களை நோக்கிய ஆண்களின் பார்வை எத்தகையதாக இருந்தது? இவைகளுக்கெல்லாம் முழுமையான பதில் கிடைக்கும் போதுதான் பெண்களின் சுதந்திரத்தைப் பற்றி நாம் சரியாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
பெண்கள் சமூகத்தில், சமுதாயத்தில் முன்னேறுவதற்கு ஆண்களின் ஆதரவும், புரிந்துணர்வும் அவசியம். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு ஒரு பெண்ணின் முழுச்சுதந்திரத்தின் பின்னால் ஒரு ஆண் இருப்பதும் அவசியமாகிறது.
சக்திதாசன், லண்டன்.