[ ஹிஜாப் பற்றிய ஓர் விரிவான ஆக்கம் ]
‘ஒருவனின்’ அடிமை
[1] இறைமறை வசனங்கள் – நபிமொழிச் சான்றுகள்
[2] நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை
[3] நபித்தோழர்கள் / தோழியர்
[4] நபித்தோழியரின் முகத்திரை (நிகாப்)
குறிச்சொற்கள்: திரை(ஹிஜாப்-Hijab), முகத்திரை(நிகாப்-Niqab), புர்கா-Burqa, பருவமடைந்த பெண்கள், புனித உறவுடையோர்(மஹ்ரம்-Mahram), ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு, அல்-அஹ்ஸாப்-Al Ahzab (33ஆவது) அத்தியாயம், அந்நூர்-Al Noor (24ஆவது) அத்தியாயம்.
[1] இறைமறை வசனங்கள் – நபிமொழிச் சான்றுகள்
[சான்று 1:1] இறைவசனம்
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ …
“(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில்(இயல்பாக) வெளியே தெரிபவற்றைத்தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும், தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் …” (அல்குர்ஆன் 24:31)
இந்த இறைவசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள கும்ரு ( خُمْرُ ) எனும் அரபுச்சொல், கிமார் ( خِماَرٌ ) எனும் சொல்லின் பன்மையாகும். அதற்கு, தலையை மறைக்கும் துணி (ஸ்கர்ஃப்/மஃப்ளர்) என்பது பொருளாம்.
சான்று (1:2) ஹதீஸ் :
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود
“மாதவிடாய் (வரத்தகுந்த, பருமடைந்த) பெண்ணின் தொழுகையை, முக்காடு(கிமார்) இன்றித் தொழுதால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா – அபூதாவூது5460).
கிமார் எனும் சொல்லை, முகத்தை மறைக்கும் திரை(ஹிஜாப்) எனச் சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவ்வாறு பொருள் கொண்டால் மேற்காணும் ஹதீஸுக்கு, “பெண்கள் தொழும்போது முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்” எனும் மிகத் தவறான முடிவு பெறப்படும்.
மேற்காணும் (24:31) இறைவசனத்தின் மூலம் பருவமடைந்த பெண்கள், இல்லத்தைவிட்டு வெளியே சென்று அந்நிய ஆண்களிடையே தோன்றும்போது தங்கள் உடல் முழுதும் மறைக்கும் இயல்பான மேலாடை, கீழாடையோடு, தலையையும் மார்பையும் கூடுதலாக மூடிக் கொண்டிருக்க வேண்டும் எனும் கட்டளை பெறப்படுகின்றது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை இவ்வசனத்தில் இல்லை.
மேலும், நபித்தோழர்கள்/தோழியர் தாங்களாக ஒரு செயலைச் செய்வதற்கும் இறைவசனத்தை/நபிமொழியைச் செயற்படுத்துவதற்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது.
மேற்காணும் (24:31)இறைவசனம் அருளப்பெற்றவுடன் நபித்தோழியர் அதைச் செயற்படுத்திய விதத்தைப் பார்ப்போம்.
சான்று [1:3] ஹதீஸ் :
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا رواه البخاري
“தமது முக்காடுகளைத் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் …” எனும் இறைவசனம் அருளப்பெற்றதும், பெண்கள் தங்கள் கீழ்அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனை(மார்பை மறைக்கும் கனமான) துப்பாட்டா ஆக்கிக் கொண்டார்கள்” (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வழியாக ஸஃபிய்யா பின்த் ஷைபா ரஹ்மதுல்லாஹி அலைஹி – புகாரீ 4759)
சான்று [1:4] இறைவசனம் :
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
“நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள்தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமலிருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் …” (அல்குர்ஆன் 33:59).
திரை(ஹிஜாப்) பற்றிய பேசுபொருளில் மேற்காணும் இறைவசனம் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வசனத்தில் “முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு” கட்டளை இருக்கிறதே அன்றி, முகத்தை மூடிக் கொள்ளுமாறு கட்டளை இல்லை.
பெண்கள்தம் தலையில் போடப்படும் முக்காடு, அரைகுறையாக இல்லாமல் தலையை மறைத்து முழுமையாகவும் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை, முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று இந்த இறைவசனம் கூறுகிறது. வேறு சொற்களால் கூறவேண்டுமெனில், முக்காட்டைத் தாழ்த்திக் கொள்வது முகத்துக்கான திரை(ஹிஜாப்) என்று இந்த இறைவசனம் விளக்கம் கூறுகிறது.
மேலும், “பெண்கள் அறியப்படவேண்டும்” என்றும் அவ்வாறு அறியப்படுவதால் “அவர்கள் தொல்லைக்கு உள்ளாக மாட்டர்கள்” என்றும் அறுதியிடும் இந்த வசனம், முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் இன்றைய சமகாலச் சங்கடங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும் அவர்களுக்கு வழிவகைகளைச் சொல்லித் தருகிறது.
சான்று [1:5] இறைவசனம் :
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ …
“(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக! …” (அல்குர்ஆன் 24:30) ‘திரை (ஹிஜாப்) என்பது முகத்தை மூடிக்கொள்வது’ எனப் பொருள் கொண்டால், மேற்காணும் (24:30) இறைவசனம் பொருளற்றுப் போய்விடும். முழுக்க மறைத்த முகத்தை, ஆண்கள்தம் பார்வையை உயர்த்திப் பார்ப்பதும், பார்வையைத் தாழ்த்திப் பார்க்கமலிருப்பதும் சமமே.
முகம் திறந்திருக்கும் அந்நியப் பெண்களை, உற்று உற்றுப் பார்க்காமல் இயல்பாகப் பார்க்கும் பார்வைக்கு ஆண்களுக்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.
சான்று [1:6] ஹதீஸ் :
يا علي لا تتبع النظرة النظرة، فإنما لك الأولى، وليس لك الأخرى
“அலீயே! (அந்நியப் பெண்களை) உற்று உற்றுப் பார்க்காதீர். உமக்கு (இயல்பான) முதல் (வகை)பார்வை அனுமதிக்கப் பட்டது; பிற (வகை) பார்வைக்கு அனுமதியில்லை” என்று (தம் மருமகனார்) அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவுரை கூறினார்கள். (அஹ்மது5/353), திர்மிதீ 2777), அபூதாவூது 2149).
ஆண்களை ஈர்க்கும் அழகை/வசீகரத்தை, அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்திருக்கிறான். அதைத் தன் வேதத்திலும் எடுத்துக் காட்டி உணர்த்துகிறான்:
சான்று [1:7] இறைவசனம் :
لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ …
“(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துணை ஈர்த்தாலும் உம் மனைவியர்க்குப் பகரமாக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு உமக்கு அனுமதி இல்லை …” (அல்குர்ஆன் 33:52).
இந்த வசனத்தில் “பெண்களின் அழகு, ஆண்களை ஈர்க்கும்” என்று படைப்பாளனான அல்லாஹ் திட்டவட்டமாகக் கூறுகிறான். ஒரு பெண், பேரழகியாகவே இருந்தாலும் அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டால் எவரையும் ஈர்க்க முடியாது. முழுக்க மறைத்துக் கொண்டால் அழகியும் விகாரியும் குமரியும் கிழவியும் ஒன்றுபோல்தான்.
சான்று [1:8] ஹதீஸ் :
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், வழியில் செல்லும் ஒரு பெண்ணை (ஒருபோது) பார்த்தார்கள். உடனே, தம் துணைவியான ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று தம் தேவையை நிறைவு செய்தார்கள். பின்னர் தம் தோழர்களிடம் வந்து, “(கவர்ச்சி காட்டும்) ஒரு பெண் முன்னோக்கி வரும்போதும் கடந்து செல்லும்போதும் ஷைத்தானின் கோலத்தில் வந்து செல்கிறாள் … உங்களில் ஒருவர் (அந்நியப்) பெண்ணொருத்தியை (வழியில்) பார்த்து, அவளால் ஈர்க்கப்பட்டால், அவர் உடனே தம் துணைவியிடம் சென்று (தம் தேவையை) நிறைவு செய்து கொள்ளட்டும் …” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, – முஸ்லிம் 1403).
இதே ஹதீஸ் முஸ்னது அஹ்மதில்
من طريق حرب بن أبي العالية عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري : أن رسول الله صلى الله عليه وسلم رأى امرأة فأعجبته
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள்” என்று கூடுதல் தகவலோடு (3/310) பதிவாகியுள்ளது. ஆனால், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள் என்பது மறுக்கத் தக்கதாகும். ஏனெனில் அது, அறிவிப்பாளர் ஹர்பு பின் அபில் ஆலியாவின் இடைச்செருகல். ‘நான் ஈர்க்கப்பட்டேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லாமல் அறிவிப்பாளர் ஹர்புக்குத் தெரிந்தது எப்படி?” என்ற தர்க்கரீதியான வினாவை இமாம் நவவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி முன்வைக்கிறார்கள் (அல்மஜ்மூஉ).
இருப்பினும், வழியில் சென்ற ஒரு கவர்ச்சியான பெண்ணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டார்கள் என்பதில் இருகருத்தில்லை. மதீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பெண்ணைப் பார்த்து, “முகத்தை மூடிக் கொண்டு போ” என்று அதட்டவில்லை; அறிவுறுத்தவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.
மேலும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இளைய தோழர்களுக்குக் கூறினார்கள்:
சான்று [1:9] ஹதீஸ் :
وفي الصحيحين وغيرهما عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء قال في القاموس : والباءة والباء النكاح . وفي لفظ ” عليكم بالباء ” وذكر الحديث.
“இளைஞர்களே! உங்களில் திருமணச் செலவுகளுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமணம் செய்வது பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். திருமணம் செய்து கொள்ளச் சக்தி பெறாதவர் நோன்பிருந்து கொள்ளட்டும். அது இச்சையைக் கட்டுப்படுத்தும்” (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 1905)
பிறிதொருமுறை கூறினார்கள்:
சான்று (1:10) ஹதீஸ் :
” الصِّيَامُ جُنَّةٌ …”
“நோன்பு என்பது கேடயமாகும் …” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 1894)
இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்.