(2) நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை
இனி, அல்லாஹ்வின் தூதரின் மனைவியர் தொடர்பான ஹிஜாபைப் பற்றிய ஹதீஸ்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர், அஹ்ஸாப் (33) அத்தியாயத்தின் மூன்று இறைவசனங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.
النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ …
“இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள்தம் உயிரைவிட (நம்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மேலானவர். அவரின் துணைவியர் அவர்களுக்கு அன்னையர் …” (அல்குர்ஆன் 33:6).
… وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِن بَعْدِهِ أَبَدًا …
“(இறைநம்பிக்கையாளர்களே!) … அவர்களிடம் நீங்கள் (எதையேனும்) கேட்பதாயின் திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள். அது, உங்களுடையை உள்ளங்களையும் அவர்களது உள்ளங்களையும் மிகத்தூய்மையாக்கி வைக்க ஏற்றதாகும். அல்லாஹ்வின் தூதரை நீங்கள் சங்கடத்துக்குள்ளாக்குவது உங்களுக்குத் தகுமானதன்று. அவரின் மனைவியரை அவருக்குப் பின்னர் ஒருக்காலும் நீங்கள் மணமுடித்தலாகாது … (அல்குர்ஆன் 33:53).
يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ
“நபியின் மனைவியரே! நீங்கள் (சாதாரண குடும்பத்துப்) பிற பெண்களைப் போன்றோர் அல்லர்(தூதரின் மனைவியர் என்ற தனிச்சிறப்புத் தகுதி பெற்றோர்). எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்) பேச்சில் குழைவு காட்டாதீர்! …” (அல்குர்ஆன் 33:32).
அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ (سودة بنت زمعة ) ரளியல்லாஹு அன்ஹா
சான்று [2:1] ஹதீஸ் :
حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْجُبْ نِسَاءَكَ قَالَتْ فَلَمْ يَفْعَلْ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجْنَ لَيْلًا إِلَى لَيْلٍ قِبَلَ الْمَنَاصِعِ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ وَكَانَتْ امْرَأَةً طَوِيلَةً فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ فِي الْمَجْلِسِ فَقَالَ عَرَفْتُكِ يَا سَوْدَةُ حِرْصًا عَلَى أَنْ يُنْزَلَ الْحِجَابُ قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ الْحِجَابِ
உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘தங்கள் துணைவியரை ஹிஜாப் அணியச் சொல்லுங்கள்(அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)’ என்று கூறி வந்தார்கள். ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (அவ்வாறு) செய்யவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வோர் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) ‘அல்மனாஸிஉ’ எனுமிடத்திற்குச் செல்வது வழக்கம்.
(ஒருபோது நபியவர்களின் துணைவியார்) ஸவ்தா பின்த் ஸம்ஆ (سودة بنت زمعة
மேற்காணும் ஹதீஸில் உமர் ரளியல்லாஹு அன்ஹு, அன்னையருக்கான ஹிஜாபைப் பற்றிப் பலமுறை வலியுறுத்தியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைப் பொருட்படுத்தவில்லை என்று விளங்குகிறது.
பிறிதொரு ஹதீஸ் மூலம் அல்லாஹ், தன் தூதரின் கருத்தையே உறுதிப்படுத்துகிறான்:
சான்று [2:2] ஹதீஸ் :
ஹிஜாப் சட்டம் அருளப்பெற்ற பின்னர், ஸவ்தா பின்த் ஸம்ஆ ரளியல்லாஹு அன்ஹா ஒருபோது, தம் தேவைக்காக வேண்டி, வெளியே சென்றார். அவர், (உயரமான) கனத்த உடல்வாகுடைய பெண்மணியாக இருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு அவர் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவரை அப்போது, உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு பார்த்துவிட்டு, “ஸவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள்(அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!” என்று குறை கூறினார்கள்.
ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்போது என் வீட்டில் இரவு உணவு உண்டுகொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத்துண்டு ஒன்று இருந்தபோது ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா என் வீட்டினுள் வந்து, “இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினார்” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘வஹீ’ (வேத வெளிப்பாடு) அறிவித்தான். வஹீ்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டபோது எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (புகாரீ 4795)
இப்போதும் தம் மனைவியை, “முகத்தை மூடிக் கொண்டு வெளியே செல்”லுமாறு அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கட்டளை வரவில்லை.
ஆனால், ஒரு சிறுவன் விஷயத்தில் “ஹிஜாபைப் பேணிக் கொள்!” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹாவுக்குக் காரணத்தோடு கட்டளையிட்டார்கள்.
சான்று [2:3] ஹதீஸ் :
ஓர் அடிமைப்பெண் இருவேறு காலகட்டங்களில் இரு ஆண்களின் ஆளுகையின்கீழ் இருந்திருக்கிறார். அவ்விருவருள் ஒருவர் உத்பா இப்னு அபீவக்காஸ். இவர், புகழ்பெற்ற நபித்தோழர் ஸஅத் இப்னு அபீவக்காஸின் அண்ணனாவார். இரண்டாமவர் அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தையான ஸம்ஆ (زمعة) என்பவர்.
“ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனொருவன் மக்காவில் வளர்கிறான். அவன் எனக்குப் பிறந்தவன். எனவே, நீ மக்காவுக்குச் சென்றால் அவனைக் கைப்பற்றிக் கொண்டு வந்துவிடு” என்று உத்பா இபுனு அபீவக்காஸ், தம் தம்பியான ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்.
அவ்வாறே மக்கத்து வெற்றியின்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அந்தப் பையனைக் கைப்பற்றிக்கொள்ள முனைந்தபோது, “இவன், என் தந்தையின் ஆளுகையில் அந்த அடிமைப்பெண் இருந்தபோது பிறந்த என் தம்பியாவான்” என்று ஸம்ஆவின் மகன் அப்து ரளியல்லாஹு அன்ஹு எதிர்ப்புத் தெரிவித்தார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வழக்குக் கொண்டுவரப்பட்டது.
அந்தப் பையனின் முகத்தில் உத்பாவின் சாயல் நிரம்பி இருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டார்கள். இருப்பினும், ‘ஓர் அடிமைப்பெண் எந்த ஆணுடைய ஆளுகையின்கீழ் இருக்கும்போது குழந்தை பெற்றெடுக்கிறாளோ அந்த ஆணுக்கே அக்குழந்தை உரியது’ என்ற நியதியின்படி, “அப்தே! இவன் உனக்கு உரியவன்தான்” எனத் தீர்ப்பளித்தார்கள்.
பின்னர் தம் மனைவியிடம், “ஸம்ஆவின் மகள் ஸவ்தாவே! இந்தப் பையனிடம் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்” என்று கூறினார்கள். அதிலிருந்து அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அந்தப் பையனைப் பார்த்ததேயில்லை. (புகாரீ 2218, 2421, 2533, 2745, 4303, 6749, 6765, 6817, 7182)
இந்த ஹதீஸில் நாம் கவனிக்கத் தக்க நான்கு அம்சங்கள் உள்ளன:
1. மேற்காணும் தீர்ப்பின்போது அந்தப் பையன் ஹிஜாப் பேணக்கூடிய தேவையில்லாத ஒரு சிறுவன் ( غلام).
2. தீர்ப்பின்படி, அச்சிறுவன் அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தம்பி்.
3. “இவனிடம் ஹிஜாபைப் பேணிக்கொள் ஸம்ஆவின் மகளே!” என்று உறவையும் சுட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் துணைவியான ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குக் கட்டளை இடுகிறார்கள்.
4. அந்தக் கட்டளைக்குப் பின்னர் – அச்சிறுவன் வளர்ந்து பெரியவனான பிறகும் – அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவனைக் கடைசிவரையிலும் பார்க்கவேயில்லை.
وَأَمَّا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ) فَأَمَرَهَا بِهِ نَدْبًا وَاحْتِيَاطًا ، لِأَنَّهُ فِي ظَاهِرِ الشَّرْعِ أَخُوهَا لِأَنَّهُ أُلْحِقَ بِأَبِيهَا ، لَكِنْ لَمَّا رَأَى الشَّبَهَ الْبَيِّنَ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ خَشِيَ أَنْ يَكُونَ مِنْ مَائِهِ فَيَكُونَ أَجْنَبِيًّا مِنْهَا فَأَمَرَهَا بِالِاحْتِجَابِ مِنْهُ احْتِيَاطًا (صحيح مسلم بشرح النووي – كِتَاب الرِّضَاعِ – الولد للفراش وللعاهر الحجر ).
“இவை அத்தனையும் அச்சிறுவன் உத்பாவின் மகனாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தாம்” என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) விளக்குகின்றார்கள் (அல்மஜ்மூஉ). அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களோடு தொடர்புடைய ஹிஜாபின் நிலை இதுதான்.
அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா
சான்று [2:4] ஹதீஸ் :
கைபர் போரின்போது அடிமைப் படுத்தப்பட்ட அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடுதலை செய்து மணமுடித்துக் கொண்டபோது, “ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, அண்ணலாரின் பிற மனைவியரைப் போன்ற ஒரு மனைவியா? அன்றி, அடிமைப் பெண்ணா?” என்பது பற்றி நபித்தோழர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.
இறுதியாக, “ஸஃபிய்யாவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாப்(திரை) இட்டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவர். இல்லையெனில் அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்” என்று முடிவுக்கு வந்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் வாகன(மான ஒட்டக)த்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி) விட்டார்கள். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 4213)
மேற்காணும் ஹதீஸ், வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்சிவிகையைச் சுற்றிக் கட்டப்படும் திரையைப் பற்றி பேசுகிறது.
சான்று [2:5] ஹதீஸ் :
“அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம்கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இழுத்து (மூடி)விட்டார்கள்” என்று புகாரீ ஹதீஸ் 5085 விளக்குகிறது. அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு பயணித்ததாக ஹதீஸ்களில் குறிப்பேதும் இல்லை.
சான்று [2:6] ஹதீஸ் :
நானும் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடனிருந்த ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத் தம் (ஒட்டக) வாகனத்தில், பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து)பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நபியவர்களின் ஒட்டகம் இடறி விழுந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர்.
உடனே அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தம் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணை(ஸஃபிய்யாவை)க் கவனி!’ என்று கூறினார்கள்.
அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்தம் துணியைத் தம் முகத்தில் போட்டு(மூடி)க் கொண்டு அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா இருந்த திசையை நோக்கி நடந்து சென்று, அவர்களின் மீது அத்துணியைப் போட்டார். அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா எழுந்துகொண்டார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா ஆகிய இருவருக்காகவும் அவர்களின் சிவிகையை அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு கட்டி(ச்சீராக்கி)னார். (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 5968)
மேற்காணும் ஹதீஸிலும் அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா முகத்தை மூடிக் கொண்டு பயணித்ததாகக் குறிப்பேதுமில்லை. அந்தச் சூழலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதும் சொல்லாமலேயே, அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக நபித்தோழர் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு தம் முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு போனார்கள் என்பது இறைவசனம் 33:53 கூறும் சரியான ஹிஜாபை, மிகச் சரியாக நினைவு படுத்துகிறது. இங்கும் பெண்களுக்கான முகத்திரை பற்றிப் பேசப்படவில்லை.
சான்று [2:7] ஹதீஸ் :
இந்த நிகழ்வின்போது உதவிக்கு விரைந்தோடி வந்த அறிவிப்பாளர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “அவர் உம் அன்னைதாம்” என்று அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை உரிமையோடு சுட்டி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதும் அப்போது அனஸ் ரளியல்லாஹு அன்ஹு பதின்ம வயதுச் சிறுவர் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
இறைமறையின் 24ஆவது (அந்நூர்) அத்தியாயத்தின் வசனங்களுள் 11-16 வசனங்கள் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றிய அவதூறுகளை முறியடிக்க அல்லாஹ்வால் அருளப்பெற்றவையாகும். “நான் தூயவள் என்பதை அல்லாஹ், தன் தூதரின் கனவில் கொண்டுவருவான் என்று எதிர்பார்த்தேனேயன்றி எனக்காகத் தன் வேதத்தில் இடம்கொடுத்து என்னைக் குற்றமற்றவள் என்று அல்லாஹ் நிரூபிப்பான் என்று நான் சற்றும் எதிர்பாக்கவேயில்லை” என்று அன்னை நன்றிநெகிழ்வுடன் கூறினார் என்றாலும் இடைப்பட்ட காலத்தில் அவர் அனுபவித்த மனவேதனைகளை எழுத்தில் வடிக்கவியலாது.
சான்று [2:8] ஹதீஸ் :
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே(எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என முடிவு செய்ய) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
அவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.
இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் (அப்பயணத்தின்போது திரையிடப்பட்ட) என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன்; அதில் நான் அமர்ந்திருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கப்படுவேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் தேவையை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என்(இயற்கைத்) தேவையை முடித்துக்கொண்டபின் படைமுகாமை நோக்கித் திரும்பி வந்தேன்.
அப்போது என் கழுத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ‘ழஃபாரி’ நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது(தெரியவந்தது). எனவே, நான் (ஒதுங்கிய இடத்திற்குத் திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவித் தேடிக்கொண்டிருந்தது, (நான் விரைந்து திரும்பிச் சென்று படையினருடன் சேர்ந்துவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று, நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார்கள்.
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்குமளவுக்கு அவர்களுக்குச் சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியவர்கள், அது கனமில்லாமல் இருந்ததை உணரவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்துக்கொண்டு) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல்போன) என்னுடைய கழுத்துமாலை கிடைத்தது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்)அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. என் சிவிகை இறக்கப்பட்ட இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று கருதினேன். நான் இறக்கப்பட்ட அந்த இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டு, தூங்கி விட்டேன்.
படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களைச் சேகரித்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் இருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.
அவர் (அங்குத்) தூங்கிக்கொண்டிருந்த ஓர் உருவத்தை(என்னை)ப் பார்த்துவிட்டு, என்னை நோக்கி வந்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். ஹிஜாபுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருக்கிறார்.
அவர் என்னை அறிந்துகொண்டு, “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று கூறிய அவரது (உரத்த) குரல் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த)என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து(நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை(த்தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடந்து வரலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக)நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள் …” (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா – (புகாரீ: 4750, 2661, 4141)
மேற்காணும் ஹதீஸிலும் பெண்கள் வெளியில் செல்லும்போது எப்போதும் முகத்திரை அணிந்து கொண்டிருக்க வேண்டும் எனும் கருத்தைப் பெறமுடியவில்லை. பெண்கள் பயணிக்கும் வாகன (ஒட்டக) முதுகின்மீது வைக்கப்படும் சிவிகைக்கே திரையிடப்படும்; பெண்களின் முகத்துக்கன்று. மேலும் அந்நியரைக் கண்டதும், “என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்” என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுவதிலிருந்து முகத்தை மூடுவதற்கான ‘நிகாப்’ எனும் முகத்திரையைப் பயணத்தில் அவர் அணிந்து கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
சான்று [2:9] ஹதீஸ் :
நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான அல்காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அல்காசிம் கொச்சைப் பேச்சுக்காரராக இருந்தார். அவரிடம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, “இந்த என் சகோதரரின் மகனைப் போன்று நீ தெளிவாகப் பேசுவதில்லையே ஏன்? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்து கொண்டேன்”, “இவரை, இவருடைய தாய் வளர்த்திருக்கிறார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது எரிச்சலடைந்தார்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குமுன் உணவுத் தட்டு கொண்டு வரப்பட்டபோது அல்காசிம் எழுந்து விட்டார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா “எங்கே (போகிறாய்)?” என்று கேட்க, அல்காசிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா “உட்கார்!” என்றார்கள். அல்காசிம், “நான் தொழப்போகிறேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா “அவசரக்காரனே! உட்கார். ‘உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர், மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியேற்று இருக்கிறேன்” என்றார்கள். (அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வழியாக இப்னு அபீஅத்தீக் ரஹ்மதுல்லாஹி அலைஹி – முஸ்லிம் 869)
மேற்காணும் நிகழ்வு, அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெகுகாலம் கழித்து நடந்ததாகும். இதில், தம் வீட்டுக்கு வருகை தந்த அந்நியர் இருவரைத் தம்மோடு அமர்ந்து உணவு உண்ணுமாறு அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வற்புறுத்துகிறார்கள். பெற்ற மகனை ஒரு தாய் அதட்டுவதுபோல் அதட்டுகிறார்கள்.
அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (رَضِيَ اللَّهُ عَنْهُ زينب بنت جحش) ரளியல்லாஹு அன்ஹா – ஹிஜாப் இறைவசனத்தின் பின்னணியில்
அன்னை ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அத்தையான உமைமா பின்த் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளாவார். அன்னை ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பர்ரா ( بَرَّةَ
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் திருமணப் பரிசாக அன்பளிக்கப்பட்ட ஸைத் இப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு எனும் அடிமையை உடனே விடுதலை செய்து, தம் சொந்த மகனைப்போல அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வளர்த்து வந்தார்கள். அவர் வாலிப வயதை அடைந்ததும் தம் அத்தை மகளான ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களை ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மணமுடித்து வைத்தார்கள்.
தொடக்கத்திலிருந்தே குரைஷிக்குலப் பெண்ணான ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மேட்டிமைக்கும் முன்னாள் அடிமையான ஸைத் ரளியல்லாஹு அன்ஹு விவகாரம் முற்றிப்போய், ஸைத் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, “ஸைனபிடமிருந்து நான் பிரிந்துவிடவே விரும்புகிறேன்” என உறுதியாகக் கூறியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் சரிப்பட்டு வராது என்று தெரிந்துவிட்டது. என்றாலும் மக்களின் எள்ளலுக்கு அஞ்சியவர்களாக, “அவ்வாறு செய்யாதே!” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைத் தடுத்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஏற்பாடு அதற்கு எதிராக – வேறுவிதமாக – இருந்தது:
وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا …
“(நபியே!) அல்லாஹ் அருள்புரிந்து, நீங்களும் அருள்புரிந்தவரிடத்தில், “அல்லாஹ்வுக்கு அஞ்சி, நீர் உம் மனைவியை (மணவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்” என்று நீங்கள் சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு அஞ்சி, நீங்கள் உங்கள் உள்ளத்துக்குள் ஒளித்து வைத்திருந்தீர்கள். ஆனால் அல்லாஹ்தான் நீங்கள் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன். ஆகவே, ஸைது அவளை மணவிலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம் …” (அல்குர்ஆன் 33:37).
பிற்றைய காலத்தில், “பிற பெண்களுக்கெல்லாம் அவர்தம் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இந்த பூமியில் வைத்துத் திருமணம் செய்து கொடுத்தனர். தன் தூதரை எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுத்து, ஏழுவான்களுக்கு மேலிருந்து அல்லாஹ் என் திருமணத்தை நடத்தி வைத்தான்”எனப் பெருமை பொங்கக் கூறுபவராக அன்னை ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா திகழ்ந்தார் (புகாரீ 7420)
இந்தத் திருமணத்தின்போதுதான் ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் “ஹிஜாபுடைய வசனம்” எனக் குறிக்கப்படும் (33:53) வசனம் இறக்கியருளப் பெற்றது. ஹிஜாபுடைய வசனம் எனப்படுவது முகத்திரை பற்றியதா? எனப் பார்ப்போம்.
சான்று [2:10] ஹதீஸ் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; போய்விடுவார்கள்.
இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதுவரை நான் மக்களை அழைத்துவிட்டேன். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை’ என்றேன். அவர்கள், ‘உங்களுக்கான உணவை எடுத்துச் செல்லுங்கள்!’ என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்றுபேர் மட்டும் (நேரம் போவது தெரியாமல்) வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறைக்குச் சென்று ‘இல்லத்தாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் – உங்களின்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!’ என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ‘வஅலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் – தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!தங்களின் (புதிய) துணைவியார் எப்படி இருக்கிறார்? பாரக்கல்லாஹ்! – அல்லாஹ் தங்களுக்கு வளவாழ்வு வழங்கட்டும்!’ என்று (மணவாழ்த்துக்) கூறினார்கள். பிறகு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியது போன்றே (பிரதி முகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (புதுமணப்பெண் ஸைனப் அவர்களிடம்) திரும்பிவர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அதிக கூச்ச(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, (விருந்தினர்களைச் சீக்கிரம் எழுந்துபோகச் சொல்லாமல், மீண்டும்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறைய நோக்கி நடந்தபடி புறப்பட்டார்கள். (இறுதியாக) அந்த மூவரும் வெளியேறினர். அதை நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா? (யார் மூலமாவது)தெரிவிக்கப்பட்டதா? என்று எனக்கு (சரியாக) நினைவில்லை. (அதை அறிந்தவுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஸைனபின் இல்லத்துக்குத்) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை (அறையின்)வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَن يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ …
“இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் விருந்துண்ண அழைக்கப்பட்டாலேயன்றி, நபியுடைய வீடுகளில் நுழையாதீர்கள். (அழைக்கப்பட்டாலும்) முன்னதாகச் சென்று, (சமையலாகும்)பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு (காத்துக்) கிடக்காதீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டால் சென்று, விருந்துண்டு முடித்துவிட்டால் (விரைந்து) கலைந்துபோய் விடுங்கள்; (அங்கேயே) அமர்ந்து,(உங்கள்) பேச்சுகளில் மெய்மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அது நபிக்குச் சங்கடமளிக்கும். அதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார். ஆனால் உண்மையைக்கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. (நபியுடைய மனைவியரான) அவர்களிடம் ஏதாவது கேட்பதாயின், திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள் …” எனும் ஹிஜாப் தொடர்பான இறைவசனம் (33:53) அருளப்பெற்றது. (அறிவிப்பாளர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ: 4791, 4792, 4793, 4794, 5166, 5466, 6238, 6239, 6271)
“ஹிஜாபுடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம்” எனக் குறிக்கப்படும் மேற்காணும் (33:53) வசனத்திலோ இந்த வசனத்துக்கு விளக்கமான புகாரீ ஹதீஸ் பதிவிலான மேற்காணும் 9 அறிவிப்புகளிலோ இன்னபிற ஹதீஸ்களிலோ முகத்திரை பற்றிப் பேசப்படவேயில்லை. மாறாக, வீட்டின் அறைகளுக்குப் போடப்படும் திரைச்சீலை பற்றிய விபரம்தான் கூறப்படுகிறது.இதன்மூலம் ஹிஜாப் என்பது இந்த இடத்தைப் பொருத்த மட்டில், இல்லத்தில் பயன்படும் திரைதானேயன்றி முகத்தை மறைக்கும் துணியல்ல என்று தெள்ளென விளங்குகிறது.
இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு ‘‘Next” ஐ ”கிளிக்” செய்யவும்.