[4] நபித்தோழியரின் முகத்திரை(நிகாப்)
சான்று [4:1] ஹதீஸ் :
மக்கத்து வெற்றியை அடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஆண்களிடம் பைஅத் பெற்ற பின்பு பெண்களிடம் பைஅத் வாங்கினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஃபாவின் மீது அமர்ந்திருந்தார்கள். அதற்குக் கீழே உமர் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு விஷயமாகக் கூற, அதனை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவியான ஹிந்த் பின்த் உத்பா, நபியவர்களிடம் வந்தார். உஹுதுப் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு உடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார் ஹிந்த்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தரவேண்டும்” என்று கூற, உமர் ரளியல்லாஹு அன்ஹு பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, “நீங்கள் திருடக் கூடாது” என்றார்கள். அதற்கு, “அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?” என ஹிந்த் வினவினார். “நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே” என்று அபூஸுஃப்யான் (இடைமறித்துக்) கூறினார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரின் உரையாடலைக் கேட்டுப் புன்னகை புரிந்தவர்களாக, “நிச்சமாக, நீ ஹிந்த்தானே?” என்று கேட்டார்கள். அதற்கவர், “ஆம்! நான் ஹிந்த்தான். சென்றுபோன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்தருள்வான்!” என்று கூறினார். – (ரஹீக்)
புகாரீயின் (5364) அறிவிப்பில், “உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கினார்கள் என்ற குறிப்பு உள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதிருந்த அச்சத்தின் காரணமாக ஹிந்த், தம்மை முழுதும் மூடிக் கொண்டு அவைக்கு வந்தார் என்ற செய்தி, காரணத்துடன் பதிவாகியுள்ளது. அச்சம் தீர்ந்த நிலையில் ஹிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்ற ஒரு செய்தியும் பதிவாகியுள்ளது.
சான்று [4:2] ஹதீஸ் :
குரைஷியரின் தலைவனான அபூஜஹல் இஸ்லாத்தின் தலையாய எதிரியாகத் திகழ்ந்தவன். பத்ருப் போரில் அவன் கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய மகனான இக்ரிமா குரைஷியருக்குத் தலைமை ஏற்கத் தக்கவராகக் கருதப்பட்டார். அகழிப் போரில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காட்டிய வீரதீரத்துக்கு முன்னால் நிற்கமுடியாமல் இக்ரிமா அஞ்சி ஓடிப்போனார்.
( وَقَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَامَ الْفَتْحِ ) لِمَكَّةَ ( فَلَمَّا رَآهُ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَثَبَ ) بِمُثَلَّثَةٍ فَمُوَحَّدَةٍ ، قَامَ بِسُرْعَةٍ ( فَرَحًا ) بِهِ ، بِفَتْحِ الرَّاءِ وَكَسْرِهَا ( وَمَا عَلَيْهِ رِدَاءٌ ) لِاسْتِعْجَالِهِ بِالْقِيَامِ حِينَ رَآهُ ( حَتَّى بَايَعَهُ ) وَفِي التِّرْمِذِيِّ مِنْ حَدِيثِهِ : ” قَالَ النَّبِيُّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – يَوْمَ جِئْتُهُ : مَرْحَبًا مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ ” . وَعِنْدَ الْبَيْهَقِيِّ عَنِ الزُّهْرِيِّ : ” فَوَقَفَ بَيْنَ يَدَيْهِ وَمَعَهُ زَوْجَتُهُ مُنْتَقِبَة …
மக்கத்து வெற்றியின்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தம்மைத் தண்டிப்பார்கள் என்று அஞ்சி, மக்காவை விட்டே ஓடிப்போய் யமனில் ஒளிந்து கொண்டார் இக்ரிமா. மக்கத்து வெற்றியின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ‘பொது மன்னிப்பு’ அறிவிப்பைக் கேள்விப்பட்டு, முஸ்லிமாகிவிட்ட இக்ரிமாவின் மனைவியான உம்மு ஹகீம் ரளியல்லாஹு அன்ஹா, தம் கணவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்தபோது முகத்திரை (நிகாப்) அணிந்து கொண்டு வந்தார் என்ற செய்தி, இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி வழியாக பைஹகீயில் பதிவாகி உள்ளது.
இதுபோக, கூடுதல் நாணத்தின் காரணமாகவும் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்த ஹதீஸும் அதற்கு நபித்தோழர்களின் விமர்சனமும் உண்டு:
ரோமர்கள் மதீனாவின்மீது படையெடுக்கும் முயற்சியில் இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேள்விப்பட்டார்கள். அவ்வேளை கைபரில் யூதர்களின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. அவர்களை அடக்குவதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், முஸ்லிம் படைவீரர்களுடன் கைபருக்குப் புறப்பட்டுச் சென்று கைபரை வெற்றி கொண்டார்கள். கைபரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெற்றி கொண்டுவிட்ட செய்தியறிந்து ரோமர்கள் தம் மதீனப் படையெடுப்பைக் கைவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.
சான்று [4:3] ஹதீஸ் :
عون المعبود شرح سنن أبي داود – كِتَاب الْجِهَادِ – ابنك له أجر شهيدين قالت ولم ذاك يا رسول الله قال لأنه قتله أهل الكتاب
بَاب فَضْلِ قِتَالِ الرُّومِ عَلَى غَيْرِهِمْ مِنْ الْأُمَمِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنْ فَرَجِ بْنِ فَضَالَةَ عَنْ عَبْدِ الْخَبِيرِ بْنِ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا أُمُّ خَلَّادٍ وَهِيَ مُنْتَقِبَةٌ تَسْأَلُ عَنْ ابْنِهَا وَهُوَ مَقْتُولٌ فَقَالَ لَهَا بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِئْتِ تَسْأَلِينَ عَنْ ابْنِكِ وَأَنْتِ مُنْتَقِبَةٌ فَقَالَتْ إِنْ أُرْزَأَ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُكِ لَهُ أَجْرُ شَهِيدَيْنِ قَالَتْ وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّهُ قَتَلَهُ أَهْلُ الْكِتَابِ
கைபர் போரில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லிம் வீரரின் தாயான உம்மு கல்லாத் ரளியல்லாஹு அன்ஹா என்பவர், தம் மகனின் நிலையை அறிந்து கொள்ள முகத்திரை(நிகாப்) அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைக்கு வந்தார். நபித்தோழர்களுள் சிலர், “மகனின் நிலையை அறிந்து கொள்வதற்கு வந்திருக்கும் நீ, முகத்தை மறைத்துக் கொண்டு வந்திருக்கிறாயே!” என்று கேட்டனர்.
அதற்கு, “என் மகனைப் பற்றிய சோகம் போதாதென்று எனது வெட்கத்தை விடும் சோகத்தையும் நான் அடைவதற்கில்லை” என்று அந்தத் தாய் கூறினார். (அவரை அடையாளம் தெரிந்து கொண்டு) “உன் மகன் இரு அறப்போராளிகளின் நன்மையை அடைந்து விட்டார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். “அது எப்படி?” என்று அந்தத் தாய் வினவ, “வேதம் வழங்கப்பட்டவர்களால் அவர் கொல்லப்பட்டதால்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடை பகர்ந்தார்கள். (அறிவிப்பாளர் : தாபித் இபுனு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு – அபூதாவூத் 2482)
கைபர் போர் ஹிஜ்ரீ 7இல் நடைபெற்றது. அதாவது ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்.
ஹிஜாபுடைய வசனத்தின் மூலமாக ‘பெண்கள் முகத்தை மூடிக்கொண்டுதான் வெளியில் வரவேண்டும்’ என்பது சட்டமாக்கப்பட்டிருந்தால் நபித்தோழர்கள், “முகத்தை ஏன் மூடிக்கொண்டு வந்திருக்கிறாய்?” என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கவே முடியாது. அப்படியே கேட்டாலும் நபித்தோழர்களுடைய கேள்விக்கு உம்மு கல்லாத் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பதில் “ஹிஜாபுடைய வசனமான அல்லாஹ்வின் வேதச்சட்டப்படி நான் முகத்திரை அணிந்து வந்திருக்கிறேன்” என்பதாக இருந்திருக்கும். ஆனால், உம்மு கல்லாத் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பதில் அவருடைய சொந்த விருப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
இதுபோன்ற இன்னபிற நபித்தோழியர் பற்றிய அறிவிப்புகள் சில உள. அவை அனைத்தும் அவர்தம் சொந்த விருப்பங்களைத் தெரிவிக்கின்றனவேயன்றி, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டத்தைச் சுட்டி நிற்கவில்லை.
ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டு ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஹஜ்ஜத்துல் விதா நடைபெற்றது. அந்த ஹஜ்ஜின்போது நடந்த நிகழ்வை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்:
சான்று [4:4] ஹதீஸ் :
“இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று ஒருவர் எழுந்து கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் சட்டைகளையும் கால்சட்டைகளையும் தலைப்பாகைகளையும் தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண், முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!” என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் – இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு – புகாரீ 1838)
இந்த ஹதீஸில், நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பெறத்தக்க சட்டம் ஒன்றுள்ளது. இயல்பு வாழ்வில் அனுமதிக்கப்பட்ட சில நடைமுறைகளும் உடைகளும் இஹ்ராமின்போது தடை செய்யப்படும். காட்டாக, தைக்கப்பட்ட உடைகள், தலைப்பாகை, தொப்பி ஆகியன ஆண்களுக்கு இஹ்ராமின்போது தடை செய்யப் பட்டவையாகும். அதற்கு எதிராக, இயல்பு வாழ்வில் ஹராமாக்கப்பட்ட எதுவும் இஹ்ராமின்போது ஹலால் ஆகிவிடாது.
இயல்பு வாழ்க்கையில் அனுமதிக்கப்பட்டவைதாம் இஹ்ராமிலும் அனுமதிக்கப்படும். இயல்பு வாழ்வில் பெண்கள் தம் முகத்தையும் கைகளையும் வெளிக்காட்டுவது தடுக்கப்பட்டது எனில் அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்ராமின்போது ஹலாலாக்க மாட்டார்கள். “இஹ்ராமின்போது பெண்கள் முகத்திரை அணியக்கூடாது; கையுறைகள் அணியக்கூடாது” எனும் அல்லாஹ்வின் தூதரின் கட்டளையிலிருந்து பெண்களின் முகமும் கைகளும் கட்டாயம் மறைக்கப்பட வேண்டியவை அல்ல; இயல்பு வாழ்வில் அவை அனுமதிக்கப் பட்டவைதாம் என்ற தெளிவு நமக்குக் கிடைக்கிறது.
முடிவுரை
ஹிஜாப் என்பது உடலையோ முகத்தையோ மறைத்துக் கொள்ளும் உடை/துணி மட்டுமன்று. ஹிஜாப் ஆடை என்பது பெண்களின் ஒட்டுமொத்த ஒழுக்கத்துக்கான பகுதிகளுள் ஒன்று.
பார்க்கும் பார்வைக்கு ஹிஜாப் இருக்கிறது:
“(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! …”(24:31).
பேசும் பேச்சுக்கு ஹிஜாப் இருக்கிறது:
“… எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்)பேச்சில் குழைவு காட்டாதீர்! …” (33:32).
நடந்து செல்லும் நடைக்கும் ஹிஜாப் இருக்கிறது:
“… தங்களின் மறைவான அலங்காரங்கள் அறியப்படுவதற்காகத் தங்கள் கால்களை(த் தரையில்) தட்டி(க்காட்டி)நடந்து செல்லக்கூடாது …” (24:31).
‘ஹிஜாப்’ என்ற பெயரில் முழுக்க உடையணிந்தும் எல்லாம் வெளியில் தெரியப் பொதுவில் வைத்து பவனிவரும் நவநாகரிக நங்கையரை நாம் இன்று நேரில் காண்கிறோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்றே கூறினார்கள்:
صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
“நரகவாசிகளுள் இருபிரிவினரை நான் பார்த்ததில்லை. மாட்டுவாலைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு மனிதர்களை அடிப்பவர்கள் (முதல் வகையினர்). ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்கள் (இரண்டாம் வகையினர்) அவர்கள் தம் பக்கம் (ஆண்களை) ஈர்க்குமாறு தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடந்து செல்வர். அசைந்தாடும் ஒட்டகத்திமில் போன்ற தலை(முடி)யைக் கொண்ட அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணம் இத்துணை இத்துணை பயண தூரத்தில் கமழ்ந்து கொண்டிருக்கும். ஆனால், அதன் வாடையைக்கூட அவர்கள் நுகரமாட்டார்கள்” – அறிவிப்பாளர் அபூஹுரைரா, முஸ்லிம் 3972(4316) தலைப்பு : (َنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ) “ஆடையணிந்தும் நிர்வாணமான, தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடக்கும் பெண்கள்”.
முழுக்க ஆடை அணிந்திருந்தாலும்…
• உடல் தெரியும் மெல்லிய ஆடைகள் ஹிஜாப் ஆகாது.
• இறுக்கமாக அணிந்து, திரட்சி காட்டுவது ஹிஜாப் ஆகாது.
• ஆபாசமான வடிவமைப்பு ஆடைகள் ஹிஜாப் ஆகா.
• அரைகுறையாகத் தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.
• காதைத் திறந்து தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.
• சில ஊர்களில் புழக்கத்தில் உள்ள ‘அரைத் துப்பட்டிகள்’ ஹிஜாபைச் சேர்ந்தவையல்ல.
அந்நிய ஆண்களின்முன் தோன்றும்போது பெண்கள்தம் நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலும் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்துதலே நிறைவான கண்ணிய ஹிஜாப் ஆகும்.
முஸ்லிம் சமுதாயப் பெண்கள் எப்போதும் முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று நிறுவுவதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லா நாட்டினருக்கும் எந்தக் காலத்தவருக்கும் இயைந்த சட்டங்களைத் தன்னுள்ளே கொண்டிலங்கும் இஸ்லாம், இந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வு வைத்திருக்கிறதா? எனும் வினாவோடு, சமகால முஸ்லிகளின் பழக்க-வழக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இஸ்லாத்தின் வேர்களைத் தேடும் முயற்சியே இக்கட்டுரை.
அவற்றுள் தலையாய வேர்:
“… அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக)அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் …” (அல்குர்ஆன் 33:59).
யாரென்று அறியப்பட முடியாத, முகம் உட்பட முழுதும் மறைத்துக் கொள்ளும் ‘புர்கா’ உடையை ஓர் ஆண் அணிந்து கொண்டால், ‘பெண்களுக்கு மட்டும்’ இயக்கப்படும் பேருந்துகளிலோ ரயில்பெட்டிகளிலோ பயணிக்கலாம். மாட்டிக் கொள்ளும்வரை பெண்களோடு கலந்து குறும்புகள் செய்யலாம்.
மொத்த சமுதாயத்தையும் சீரழிக்க வந்துள்ள சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து, ‘ஓடிப்போகும்’ கலாச்சாரம் தற்போது தமிழகத்தில் பெருகி வருவதை யாரும் மறுக்க முடியாது. முகத்தை முழுமையாக மறைக்கும் நிகாப் அணிந்து கொண்டால், எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் எங்கு வேண்டுமானாலும் நடந்தும் போகலாம்; ஓடியும் போகலாம்.
நீதிமன்றத்துக்கு அபராதம் கட்டுவதற்காக வருகின்ற வாடிக்கை விபச்சாரிகள், கண்ணியம் என்பதாக நாம் கருதும் முகத்தை மூடும் புர்காவை அணிந்து கொண்டு வந்து போகின்றனர்.
உண்மையோ பொய்யோ, இராக்கில் தற்கொலைப் படையினரான ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் முகம் மறைக்கும் புர்காவைப் பயன்படுத்திக் கொண்டு, குண்டு வெடிக்கச் செய்வதாகச் செய்திகளில் படிக்கிறோம்.
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, சங்கீதா என்ற சகோதரி “100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா” என்று நான்காண்டுகளுக்கு முன்னர் சித்தரிக்கப் பட்டதையும் அவரைத் தேடுதவதாகக் கூறிக்கொண்டு, “எல்லாத்தையும் தெறந்து காட்டு” என்று நம் முதல்வரின் காவல்துறை, பர்தா அணிந்து கொண்டு வெளியில் வந்த முஸ்லிம் பெண்களை மிரட்டி இழிவு செய்ததையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை.
நம் முதல்வரின் மாவட்டமான திருவாரூக்குள் அடங்குகின்ற, ‘முஸ்லிம் ஊர்கள்’ என்றே அறியப்படுகின்ற மூன்று ஊர்களுள் ஒன்றில் 6-12 வகுப்புகள்வரை பெண்கள் மட்டும் பயிலும் ஓர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் நிர்வாகம், “தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது” என்று அண்மையில் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஏனெனில், பயிலும் மாணவிகளுள் முக்காலே மூணுவீசம் நம் பெண்பிள்ளைகள் என்றாலும் நிர்வாகம் பிறமதத்தவர் கையில். கல்வி இயக்குநரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர்களின் கையில்.
பல அமைப்புகளின் இடைவிடாத போராட்டத்துக்குப் பின்னர் – குறிப்பாக, மக்கள் செல்வாக்குப் பெருகி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டுக்குப் பின்னர் – வெகு அண்மையில் நம் பெண்பிள்ளைகள் ‘முக்காடு’ போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.
கல்வி கற்றுக் கொள்வதற்காக நம் பெண்கள் படும்பாடு நம் தமிழகத்தோடு நின்றுவிடவில்லை. ஒருகாலத்தில் உலகம் முழுவதற்குமான கிலாஃபத்தாக – இஸ்லாமியப் பேரரசாக விளங்கி, பின்னர் (1920இல்) அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான முஸ்தஃபா கெமாலால் ‘மதசார்பற்றதாக’ மாற்றப்பட்ட துருக்கியில், பல்கலைக் கழகத்தில் பயில வேண்டுமெனில், “பெண்கள் தம்தலையில் முக்காடு போடக்கூடாது” என்ற ‘ஸெக்யூலர்’ சட்டம் இன்றைய தேதிவரை நடப்பில் உள்ளது (allowing headscarves at universities by taking into consideration religious belief grounded a public law regulation on religious principles and therefore contradicted the principle of secularism).
ஒரு பெண் கல்வி பயிலுவதற்கு அவள் தலையில் இடும் முக்காடு எவ்வாறு தடைக்கல்லாக இருக்கிறது? இது முட்டாள் சட்டமன்றோ? என் நம்பிக்கையோடு வாழும் வாழ்க்கையே எனக்கு உகந்தது (I don’t feel I have to comply with what the state says. This is my faith – and I want to live by my faith) எனும் மாணவிகளின் எதிப்புக்குரல் இப்போது அங்கு வலுவடைந்து வருகிறது.
நம் சமுதாயம் – அதிலும் பெண் சமுதாயம் கல்வியில் எவ்வளவு பின்தங்கிக் கிடக்கின்றது? நம் பெண்மக்களுக்கு இன்னும் என்னென்ன வழிகளில் கல்வியூட்டலாம் என்று கவலையும் சிந்தனையும் கொண்டு, அதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அறப்போர்களில் பங்கு பெற்றஅன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் இனத்தை “அறைக்குள் பூட்டி வைத்தே கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்” என்பதுபோல் ஒரு சகோதரர் தெரிவித்திருந்த கருத்து உண்மையில் வருத்தத்தைத் தந்தது!
இதுவரை நாம் படித்த குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாற்று/சமகால நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இரண்டு முடிவுகளை நம்மால் பெற முடிகிறது:
1. பருவமெய்திய முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவர்முன் தோன்றும்போது முகத்தை மறைத்துக் கொள்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை.
2. தானாக விரும்பி முகம் முழுவதையுமோ கண்கள் தவிர்த்தோ திரையிட்டுக் கொள்வது பெண்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை, சுதந்திரம்.
முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
source: http://www.satyamargam.com/