ஒரு பல்லின சமுதாயத்தில் வாழும் முஸ்லிம் சிறுபான்மை
ஷஹீத் பழனி பாபா
இவ்வாய்வு பின்வரும் நான்கு உபதலைப்புகளைக் கொண்டதாக அமைகின்றது:
1. சிறுபான்மை, முஸ்லிம் சிறுபான்மை பற்றிய எண்ணக்கருக்கள்.
2. இன்றைய உலகளாவிய முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றிய விபரம்
3. சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய ஷரீஆ நோக்கு
4. பிற சமூகங்களுடனான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்.
1. சிறுபான்மை, முஸ்லிம் சிறுபான்மை பற்றிய எண்ணக்கருக்கள்:
எமது ஆய்வுக்குரிய பொருளை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு ‘சிறுபான்மை’ எனும் எண்ணக்கருவை வரைவிலக்கணப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.
1. ‘சிறுபான்மை’ என்பதற்கு சமூகவியலாளர்கள் தந்துள்ள வரைவிலக்கணங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.
“ஓர் ஊரிலோ அல்லது நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வாழுகின்ற இன அல்லது மொழி அல்லது சமயரீதியாக அங்கு வாழும் பெரும்பான்மையிலிருந்து வேறுபடுகின்ற ஒரு சனக்குழுமத்தைக் குறிக்கும்.” (அப்துல் வஹ்ஹாப் அல்கயாலி, நூல் : மவ்சூஅதுஸ் ஸியாஸா,)
“ஒரு நாட்டில் வாழும், இனத்தால் அல்லது மொழியால் அல்லது சமயத்தால் அந்நாட்டின் பெரும்பான்மை குடிமக்கள் சாராத ஒன்றை சார்ந்திருக்கும் பல நூறு குடிமக்களை குறிக்கும்.” (அஹ்மத்)
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குடிமக்கள்; ஏனைய குடிமக்களை விட தொகையில் குறைந்த இவர்கள் தமக்கென தனியான கலாசாரத்தையும் மொழியையும் சமயத்தையும் கொண்டிருப்பர். ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் தமது தனித்துவத்தையும் கலாசாரத்தையும் பேணிக்காப்பதில் கரிசனை காட்டுவர்.”
“A small group of people separated from the rest of the community by a different in race, religion, language etc..”
‘இனம், சமயம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனையோரி லிருந்து வேறுபட்ட ஒரு சிறு மனித குழுமம்”
(The Oxford English Dictionary)
“A part of population differing in some characteristics and often subjected to deferential treatment.”
“குடிமக்களில், சில பண்புகளில் பிறரிலிருந்து வேறுபடுகின்ற அவ்வப்போது பாகுபாடான கவனிப்புக்குட்படுகின்ற ஒரு பிரிவினரைக் குறிக்கும்” (Webster’s 7th new collegiate dictionary)
மேற்குறிப்பிட்ட வரைவிலக்கணங்களில் இருந்து ஒரு சனக்கூட்டத்தை சிறுபான்மை சமூகம் என அடையாளப்படுத்துவதாயின் அது பின்வரும் பண்புகளைப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது தெளிவாகின்றது.
1. இனம், மதம், மொழி முதலானவற்றில் சமூகத்தின் ஏனைய குடிமக்களில் இருந்து வேறுபட்ட ஒரு சனக்ககூட்டமாக இருத்தல்.
2. தாம் வாழும் சமூகத்தில் பாகுபாடாகவும் சமத்துவமற்ற முறையிலும் நடாத்தப்படும் ஒரு பிரிவினராக இருத்தல்.
இன்று உலகின் பல பாகங்களிலும் இனரீதியாகவும், மொழிரீதியாகவும், சமயரீதியாகவும், சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. மொழிரீதியான சிறுபான்மை சமூகத்திற்கு உதாரணமாக கனடாவில் வாழும் பிரெஞ்சு மொழி பேசும் சமுதாயத்தை குறிப்பிடலாம். இராக், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் வாழும் குர்திஷ் இனத்தவர்களையும், அல்ஜீரியாவிலும், மொரோக்கோவிலும் வாழும் பர்பர் இனத்தவர்களையும் இனரீதியான சிறுபான்மையினருக்கு உதாரணங்களாக குறிப்பிட்ட முடியும். உலகில் சமயரீதியான சிறுபான்மையினராக இருப்போரே குறிப்பிடத்தக்க வர்களாக விளங்குகின்றனர். இவர்கள் தொடர்பிலேயே பல்வேறு பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தோன்றுவது உண்டு. சமய ரீதியான சிறுபான்மையினருக்கு உதாரணமாக இராக், எகிப்து, சிரியா, பாகிஸ்தான் முதலான நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களையும், மொரோக்கோ, ஈரான், துருக்கி போன்ற நாடுகளில் வாழும் யூதர்களையும் குறிப்பிடலாம்.
2. உலக முஸ்லிம் சிறுபான்மையினர்:
உலக முஸ்லிம்களை அவர்கள் வாழும் நாடுகளை பொறுத்து இரு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்குவர்:
1. தாருல் இஸ்லாத்தில் வாழ்வோர்
இன்று தாருல் இஸ்லாம் என்பது பொதுவாக முஸ்லிம் நாடுகளைக் குறிக்கும். அதாவது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளைச் சுட்டும்.
2. தாருல் இஸ்லாத்திற்கு வெளியே வாழ்வோர்
இஸ்லாமிய வழக்கில் தாருல் இஸ்லாம் அல்லாத பூமி தாருல் குப்ர் என அழைக்கப்படுகின்றது. இத்தகைய நாடுகளில் வாழ்வோரையே சிறுபான்மை முஸ்லிம்கள் என வழங்குகின்றோம்.
இன்றைய உலக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களையும் இரு பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடியும்.
1. பாரம்பரிய முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்
இவர்கள் தாம் வாழும் நாட்டின் குடிமக்களாக இருப்பர்;.
பல நூற்றாண்டு காலமாக இஸ்லாத்தில வாழ்வோராகவும் இருப்பர். உதாரணமாக, இந்தியா, இலங்கை முஸ்லிம் சமூகங்கள், பொல்கன் நாடுகளான சேர்பியா, பல்கெரியா, மெஸடோனியா முதலான நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்கள்.
2. புலம்பெயர்ந்த முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள்
உதாரணமாக: 1950 களுக்குப் பின்னர் அரசியல், கல்வி, பொருளாதாரம் முதலான காரணங்களுக்காக அரபுலகிலிருந்தும் மற்றும் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அங்கு உருவான முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களைக் குறிப்பிடலாம்.
உம்: இங்கிலாந்து, ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர்.
3. சமகால உலகளாவிய முஸ்லிம் சிறுபான்மையினர் பற்றிய விபரம்:
இன்று உலகில் முஸ்லிம்கள் வாழாத எந்தவொரு நாடும் இல்லையெனலாம். உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஒரு சிறு சமூகமாகவேனும் முஸ்லிம்கள் வாழ்வதைக் காணமுடியும். இன்றைய உலக சனத்தொகை 6036.97 மில்லியன் ஆகும். இதில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 1430.08 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது. மற்றொரு கணிப்பீட்டின் படி உலக முஸ்லிம் சனத்தொகை 1484.71 மில்லியன் ஆகும். (பார்க்க: Romania fact book 2003 website.) ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அறிக்கையின் படி மொத்த உலக மக்கள்தொகையில் 25.12% முஸ்லிம்கள் ஆவர்.
உலக முஸ்லிம் மக்கள்தொகையில் சிறுபான்மையினராக வாழ்வோரின் எண்ணிக்கை சுமார், 450 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது. மற்றொரு மதிப்பீட்டின் படி உலக முஸ்லிம்களில் 1/3 பங்கினராக சிறுபான்மை முஸ்லிம்கள் விளங்குகின்றனர். முஸ்லிம் மக்கள்தொகையில் சிறுபான்மையினர் 45% என இன்னும் ஒரு கணிப்பீடு குறிப்பிடுகிறது. இன்றைய உலகில் ஒவ்வொரு நால்வரிலும் ஒருவர் முஸ்லிமாக இருக்க, ஒவ்வொரு 12 முஸ்லிம்களிலும் ஒருவர் சிறுபான்மையாக வாழும் முஸ்லிமாக இருக்கிறார் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகைப் பற்றியும், உலக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் சனத்தொகை விபரங்கள் பற்றியும் சரியானதும் துள்ளியமானதுமான புள்ளி விபரங்கள் கிடைப்பதற்கில்லை. சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை குறைமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே முஸ்லிம் சார்பு வட்டாரங்கள் சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் தொகையை மிகை மதிப்பீடு செய்துள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலைக்கான காரணங்களை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
பல நாடுகள் சமய அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமை.
பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக சமயரீதியான விபரங்களை வெளியிடாமை.
சில நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் சிலர் உத்தியோகபூர்வமாக தங்களை முஸ்லிம்கள் என இனங்காட்டிக் கொள்ளாமை.
சில நாடுகளில் முஸ்லிம்களின் சனத்தொகையைத் திட்டமிட்டு குறைமதிப்பீடு செய்தல்.
சனத்தொகை மதிப்பீட்டாளர்களின் ஆய்வுகளில் முரண்பாடுகள் காணப்படுகின்றமை.
OIC முதலான முஸ்லிம் நிறுவனங்களின் முஸ்லிம்கள் பற்றிய சனத்தொகை மதிப்பீடுகள் விஞ்ஞான பூர்வமாக அமையாமை.
முஸ்லிம்கள் வேகமாக வளர்ச்சியடையும் ஒரு சமூகமாக இருத்தல்.
எது எப்படியாயினும் உலக முஸ்லிம் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க, கணிசமான தொகையினர் சிறுபான்மையினராக உள்ளனர் என்பது தெளிவானதாகும். பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் சனத்தொகையை விட சில நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் சனத்தொகை பல மடங்கு கூடியதாகும். உதாரணமாக: இந்திய முஸ்லிம் சிறுபான்மை சமூகம் உலகின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக விளங்குகின்றது. அதன் சனத்தொகை சுமார் 12 கோடியாகும். சீனாவில் சுமார் 11 கோடி முஸ்லிம்கள் சிறுபான்மை என்ற நிலையில் வாழ்கின்றனர். இதே வேளையில் உலகின் மிகச்சிறிய முஸ்லிம் சிறுபான்மை சமூகமாக ஹெய்ட்டி நாட்டில் வாழும் முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர். இங்கு சில நூறு முஸ்லிம்கள் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 60 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் போது 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். உலக சிறுபான்மை முஸ்லிம்களில் 90% ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் மையம் கொண்டுள்ளனர். ஆசியாவில் மொத்தம் 251 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரும், ஆபிரிக்காவில் 24 மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரும் இருப்பதாக நம்பப்படுகின்றது.
அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாக முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. அமெரிக்காவில் சுமார் 7 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பிரான்ஸ், ஐக்கிய ராச்சியம் , ஜேர்மனி ஆகிய நாடுகளில் முறையே 2.2 மில்லியன், 3 மில்லியன், 2.5 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்தமாக, ஐரோப்பாவில் முஸ்லிம்களின் சனத்தொகை 15 மில்லியன் என மதிப்பிடப்படுகிறது.
சிறுபான்மை முஸ்லிம்கள் பற்றிய ஷரீஆ நோக்கு
இஸ்லாமிய ஷரீஆ நோக்கில் நாடுகளை இரு பெரும் பிரிவுகளாக வகுத்து நோக்குவர். அவையாவன:
1. தாருல் இஸ்லாம்
2. தாருல் குஃப்ர்
1. தாருல் இஸ்லாம்:
தாருல் இஸ்லாத்தை வரைவிலக்கணப்படுத்துவதில் இஸ்லாமிய சட்ட மேதைகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அக்கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து நோக்குகின்ற போது தாருல் இஸ்லாம் என்பது பின்வரும் இரு நிபந்தனைகளைக் கொண்ட பூமியைக் குறிக்கும் எனும் முடிவைப் பெறமுடிகின்றது.
முஸ்லிம்களின் அதிகாரமும் ஆட்சியும் உள்ள பூமி
ஷரீஅத் சட்டம் அமுலாக்கப்படும் பூமி
பொதுவாக மேற்கண்ட இரு நிபந்தனைகளையும் வைத்து நோக்குகின்ற போது தாருல் இஸ்லாம் என்ற வரையறைக்குள் ஓரிரு நாடுகளையேனும் அடக்க முடியுமா எனும் கேள்வி பிறப்பது தவிர்க்க முடியாததாகும். ஆயினும் இமாம் அபூ ஹனீபாவின் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்துப்படி முஸ்லிம்கள் அச்சமின்றி பாதுகாப்பாக, பெரும்பான்மையாக வாழும் எந்த ஒரு நாட்டையும் தாருல் இஸ்லாமாக கருத முடியும். இந்த வகையில் இன்றைய பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை தாருல் இஸ்லாமாக கொள்ள முடிகின்றது.
2. தாருல் குஃப்ர்:
தாருல் குஃப்ரை வரைவிலக்கணப்படுத்துவதிலும் சட்ட அறிஞர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. பொதுவாக நோக்குமிடத்து பின்வரும் பண்புகளைக் கொண்ட பூமியை தாருல் குஃப்ர் என அடையாளப்படுத்தலாம்.
முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் இல்லாத பூமி
ஷரீஅத் சட்டங்கள் அமுலில்லாத பூமி
தற்கால உலகில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் அனைத்தும் தாருல் குப்ர் எனும் வட்டத்திற்குள் அடங்குபவையாகவே அமைந்துள்ளன. இத்தகைய தாருல் குப்ரில் அல்லது முஸ்லிமல்லாத நாட்டில் அல்லது சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வது தொடர்பாக ஷரீஆவின் நோக்கு என்ன என்பது தொடர்ந்து ஆராயப்படுகின்றது. பொதுவாக தாருல் குப்ரில் வாழ்வது தொடர்பாக ஆரம்பகால சட்ட அறிஞர்கள் மத்தியில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் நிலவிவந்துள்ளன. மாலிகி மத்ஹபை சார்ந்தோரும் இமாம் இப்னு ஹஸ்ம் முதலான அறிஞர்கள் தாருல் குஃப்ரில் வாழ்வதை ஹராம் என்றும், தாருல் இஸ்லாத்தை நோக்கி ஹிஜ்ரத் மேற்கொள்வது வாஜிப் என்றும் கருதுகின்றனர். (பார்க்க: அல்பயான் வத்தஹ்ஸீல், அபுல்வலீத் இப்னு ருஷ்த்) ஆயினும் ஹனபிய்யாக்கள், ஷாபிஇய்யாக்கள், ஹன்பலி மத்ஹபை சார்ந்தோர் உட்பட பெரும்பாலான சட்டமேதைகள் இதற்கு மாற்றமான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். (பார்க்க: அஹ்காமுல் குர்ஆன், அல்ஜஸ்ஸாஸ்)
ஒரு முஸ்லிம் தனது மார்க்கத்தை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு பலயீனனாக இருக்கும் நிலையிலேயே அவர் தாருல் குஃப்ரில் வாழ்வது ஹராமானதாக கொள்ளப்படும். மாறாக தனது மார்க்கத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலையிலும் தனக்கான பாதுகாப்பைப் பெற்ற நிலையிலும் இருக்கின்ற ஒருவர் தாருல் குப்ரில் வாழ்வதற்கு எத்தகைய ஷரீஅத் ரீதியான தடையும் இல்லையென்பதே மேற்கண்ட சட்ட மேதைகளின் நிலைப்பாடாகும். இவர்கள் தமது வாதத்திற்கு சார்ப்பாக பின்வரும் சான்றாதாரங்களை முன்வைக்கின்றனர்.
1. “யார் (தங்கள் மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு தாருல் குப்ரில் இருந்து கொண்டு) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் போது (அவர்களை நோக்கி மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத நாட்டில்) ‘நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்;’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘அந்த பூமியில் நாங்கள் பலயீனமானவர்களாகவே இருந்தோம்’ என்று பதில் கூறுவார்கள். (அதற்கு மலக்குகள்) ‘அல்லாஹ்வுடைய பூமி விசாலமுடையதல்லவா? நீங்கள் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டிருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள். இத்தகையோர் தங்குமிடம் நரகம் தான். செல்லுமிடங்களில் அது மிகவும் கெட்டது. எனினும் ஆண், பெண், குழந்தைகள் ஆகியவர்களில் பலயீனமானவர்கள் எத்தகைய வழியும் தேடிக்கொள்ள முடியாமல் (அதைவிட்டு வெளிப்படவும்) வழிகாணாமல் இருந்தால் அத்தகையோரை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும். ஏனெனில் அல்லாஹ் மிக மன்னிப்போனும் பிழைபொறுப்போனுமாயும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5 : 97-99)
இவ்வசனம், தனது சன்மார்க்கத்தை நிலைநாட்ட முடியாத இடத்திலிருந்து ஒருவர் ஹிஜ்ரத் செய்ய வேண்டுமென்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றதென இமாம் பைளாவி விளக்குகின்றார்.
‘மார்க்கத்தை நிலைநாட்ட முடியாமல் இருந்து, ஹிஜ்ரத் செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தும் அவ்வாறு ஹிஜ்ரத் மேற்கொள்ளாமல் முஷ்ரிக்குகள் மத்தியில் தொடர்ந்தும் வாழ்ந்து வருபவரைப் பற்றியே இவ்வசனம் பேசுகின்றது. இத்தகையோர் தமக்குத்தாமே, தீங்கிழைத்துக் கொண்டு பெரும் பாவத்தை செய்தவர்கள் என்பதை இவ்வசனம் முடிவாகச் சொல்லுகின்றது’ என இமாம் இப்னு கஸீர் கூறுகின்றார்.
தனது சன்மார்க்கத்தை வெளிக்காட்டுமளவுக்கும் அதன் கடமைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலும் பலம் பெற்றிருப்போர் தாருல் குப்ரில் வாழலாம் என்பதற்கு இந்த அல்குர்ஆன் வசனம் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதாகும்.
2. நபியவர்கள் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ளக்கூடிய வசதியிருந்தும் அவ்வாறு செல்லாமல் மக்காவில் தங்கிய சில சஹாபாக்களை ஆட்சேபிக்காமல் அங்கீகரித்தார்கள். இவ்வேளையில் மக்கா தாருல் குப்ராகவே விளங்கியது. இது பற்றி இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி பின்வருமாறு விளக்குகின்றார்: “ஹிஜ்ரத், அதனை மேற்கொள்ளக்கூடிய சக்தியுள்ளவருக்கே கடமையாகும்;. அதிலும் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பூமியில் தனது தீனை நிலைநாட்ட முடியாத நிலையில் இருத்தல் வேண்டும் என்பதையே நபியவர்களின் ஸுன்னா உணர்த்தி நிற்கின்றது. ஏனெனில் அன்னார் இஸ்லாத்தை தழுவிய பின்னரும் சிலரை மக்காவில் தொடர்ந்தும் வாழ்வதற்கு அனுமதித்தார்கள். இந்த வகையிலேயே பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அச்சுறுத்தல் காணப்படாத அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு முதலானோர் மக்காவில் தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.”
3. நுஅய்ம் இப்னு அப்தில்லாஹ் அந்நஹ்ஹாம் என்ற நபித்தோழர் ஹிஜ்ரத் மேற்கொள்ள இருந்த வேளையில் அவருடைய கோத்திரத்தவர்களான பனூ அதீ கோத்திரத்தவர்கள் அவரிடம் வந்து ‘நீர் உமது மார்க்கத்தை பின்பற்றிக் கொண்டு எம்முடன் வாழலாம். உமக்கு எத்தீங்கும் வராதவண்ணம் நாம் பாதுகாப்போம். நீர் எமது கோத்திரத்தவர்களில் அநாதைகளையும், விதவைகளையும் பராமரித்து வந்தமைக்கு பிரதியுபகாரமாக இதை நாம் செய்கின்றோம் என்று கூறினர். இதனால் அவரும் சற்று காலம் தன் ஊரிலேயே தங்கினார். சிறிது காலத்தின் பின்னர் ஹிஜ்ரத் மேற்கொண்டு மதீனாவைப் போய் அடைந்தார். அவரை வரவேற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘எனது சமூகத்தை விட உமது சமூகம் மேலானவர்களாவர். எனது சமூகத்தவர்களோ என்னை ஊரிலிருந்து வெளியேற்றினர். என்னைக் கொலை செய்யவும் முயன்றனர். உமது சமூகமோ உமக்கு அபயம் அளித்து பாதுகாப்பு தந்தனர்’ எனக் கூறினார்கள். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் தூதரே அப்படியல்ல, உங்களது சமூகம் நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படவும், அவனது எதிரியுடன் போராடவுமே உங்களை ஊரில் இருந்து வெளியேற்றியது’ எனக் கூறினார்.” ஆதாரம்: தபகாத் இப்னு ஸஃத் (இந்த ஹதீஸை பலயீனமானது என கூறுவோரும் உளர்)
4. அபீஸீனிய மன்னராக இருந்த நஜ்ஜாஷி, ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை தழுவிய போதும் தொடர்ந்தும் தாருல் குப்ராக இருந்த தனது நாட்டிலேயே வாழ்ந்து அங்கேயே மரணமானார். நபியவர்கள் அவரின் மரணச்செய்தியை கேள்விப்பட்ட போது அவருக்காக ஜனாஸா தொழுகையை நிறைவேற்றி விட்டு, ‘இன்று ஒரு நல்ல (ஸாலிஹான) மனிதர் மரணமடைந்து விட்டார்’ எனக் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி)
5. புதைக் என்ற நபித்தோழர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே ஹிஜ்ரத் செய்யாதவர் நாசமடைந்து விட்டார் என மக்கள் நினைக்கின்றார்களே?’ என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர், ‘புதைக்கே! தொழுகையை நிலைநாட்டுவீராக. ஸக்காத்தை கொடுத்து வருவீராக. பாவத்தை தவிர்ந்து வாழ்வீராக. உமது சமூகத்தின் ஊரில் நீர் விரும்பிய இடத்தில் குடியிருப்பீராக. அப்போது நீர் ஹிஜ்ரத் மேற்கொண்டவராவீர்’ என்றார்கள். (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
6. புரைதா அல்அஸ்லமி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்: ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஅலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு படைக்கு ஒருவரை தளபதியாக நியமித்து அனுப்பும் வேளையில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களை நலல முறையில் நடாத்துமாறும் உபதேசம் செய்துவிட்டு பின்வருமாறு சொல்வார்கள்: “அல்லாஹ்வின் பெயரால் அல்லாஹ்வின் பாதையில் போராடச் செல்லுங்கள். அல்லாஹ்வை நிராகரித்தவரோடு யுத்தம் புரியுங்கள். நீங்கள் முஷ்ரிக்கான உங்களின் எதிரிகளை சந்தித்தால் மூன்றில் ஒன்றின் பால் அவர்களை அழையுங்கள். அதில் ஒன்றை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை அங்கீகரித்து அவர்களை விட்டுவிடுங்கள்.
முதலில் அவர்களை அவர்களின் பூமியில் இருந்து முஹாஜிரீன்களின் பூமிக்கு வருமாறு அழையுங்கள். அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் முஹாஜிரீன்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு எனக் கூறுங்கள். அவர்கள் அதனை ஏற்க மறுத்து தாம் தமது ஊரிலேயே வாழப்போவதாக கூறினால், அவர்கள் நாட்டுப்புற அஃராப் முஸ்லிம்கள் போல் கருதப்படுவர் என்றும் முஃமின்களுக்கான இறைச்சட்டமே அவர்கள் மீதும் அமுல்படுத்தப்படும் என்றும் கூறுங்கள். ஆயினும் ‘பைஉ’, ‘கனீமத்’ ஆகியவற்றில் அவர்களுக்கு எத்தகைய பங்கும் கிடைக்காது என்றும் கூறுங்கள்.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத்திர்மிதி, ஸுனனு அபீதாவூத்)
7. “ஊர்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ஊர்களாகும். அடியார்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்களாவர். எனவே நீர் எங்கு நன்மையைக் கண்டீரோ அங்கு தங்கிவிடும்.” இது ஒரு பலயீனமான ஹதீஸ் என்பர். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்)
8. முதலாவது ஹிஜ்ரத் அபீஸீனியாவிற்கு மேற்கொள்ளப்பட்டது. நபியவர்களின் கட்டளையின் படி ஆரம்ப முஸ்லிம்கள் அங்குப் போய் தங்கினர். ஆனால் அக்காலத்தில் அபீஸீனியா தாருல் இஸ்லாமாக இருக்கவில்லை.
9. இன்று தாருல் குப்ர் பற்றிய எண்ணக்கரு முன்னைய காலத்து நிலையில் இருந்து மாறுபட்டுள்ளது. இன்று முஸ்லிம் அல்லாத ஒரு நாட்டுக்கு புலம்பெயருபவர் அவரது மதம் பற்றி நோக்கப்படாமல் உள்நாட்டு குடிமகன் பெறும் சட்ட ரீதியான முழுப்பாதுகாப்பையும் பெறக்கூடியவராய் உள்ளார்.
10. இன்று உலக நாடுகள் பலவற்றில் இஸ்லாம் பரவுவதற்கு அந்நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் முயற்சியே பிரதான காரணமாகும். தாருல் குப்ரில் வாழ்வது கூடாது என தடைசெய்யப்படுகின்றபோது அடிப்படைக் கடமைகளில் ஒன்றான இஸ்லாமிய தஃவாப் பணி பாதிப்புக்குட்படும்.
11. முஸ்லிம்கள் ஒரு நாட்டில் சிறுபான்மையினராக வாழ்வது பற்றிய அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சட்டத்தீர்ப்பு பின்வருமாறு:
“ஒரு சமய சார்பற்ற நாடாயினும் அல்லது இஸ்லாமல்லாத மற்றொரு மதத்தை சமயமாகக் கொண்ட நாடாயினும் அங்கு ஒரு முஸ்லிமுக்கு தனது மார்க்கத்திற்கான பாதுகாப்பும் மார்க்க கடமைகளை சுதந்திரமாக நிறைவேற்றும் சந்தர்ப்பமும் காணப்படின், அங்கு அவர் வாழலாம். ஆனால் அவரது மார்க்கத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ அல்லது பொருள், மானம் ஆகியனவற்றிற்கோ உரிய பாதுகாப்பு இல்லையெனக் காணும் நிலையில் பாதுகாப்பான ஒரு நாட்டுக்கு புலம்பெயர்வது கடமையாகும்.” (ஆதாரம்: அல் அஸ்ஹர் சஞ்சிகை, ஆறாம் பாகம், டிசம்பர், ஜனவரி, 1991)
12. இமாம் அல்மாவர்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“ஒருவருக்கு தாருல் குப்ரில் தனக்கென ஒரு குடும்பமும், குலமும் உருவாகி அங்கு தனது மார்க்கத்தைப் பின்பற்றி வாழக்கூடிய நிலையும் இருந்தால் அங்கிருந்து அவர் ஹிஜ்ரத் செய்வது கூடாது. ஏனெனில், அவர் இப்போது வாழும் இடமே அவரைப் பொறுத்தவரையில் அவருக்குரிய தாருல் இஸ்லாமாகும்.” (பார்க்க: புஸ்தானுல் ஆரிபீன், இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி)
தாருல் குஃப்ரில் வாழலாகாது என்பதற்கான ஆதாரங்கள்:
தாருல் குஃப்ரில் வாழலாகாது எனக் குறிப்பிடும் சில ஆரம்ப கால சட்ட அறிஞர்களுடைய (ஃபுகஹாக்களுடைய) வாதம் அக்கால நிலையை கருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்டதாகவே கொள்ள முடியும். அவர்கள் தம் வாதத்திற்கு முன்வைக்கின்ற கருத்துக்கள் இன்றைய உலக ஒழுங்குக்கு பொருத்தமற்றவையாகும். அவர்கள் தம் வாதத்தை நிறுவ முன்வைத்துள்ள குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களும் அவர்களது வாதத்தை நிறுவுவதற்கான தெளிவான சான்றாதாரங்களாக அமையவில்லை. உதாரணமாக பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஒருவர் தாருல் குப்ரில் வாழ்வதை தடைசெய்வதாக அவர்கள் கருதினர்.
“அல்லாஹ்வுடைய பாதையில் எவர் (தான் இருந்த இடத்தை விட்டு) வெளியேறி செல்கின்றாரோ அவர் பூமியில் வசதியான பல இடங்களையும் சௌகரியங்களையும் அடைவார்.” (அல்குர்ஆன் 4:100)
இவ்வசனம் தாருல் குப்ரில் ஒரு முஸ்லிம் வாழ்வதை தடை செய்வதாக அமைகின்றது என அவர்கள் வாதிட்ட போதிலும் இது வெறுமனே ஹிஜ்ரத் மேற்கொள்வதற்கான ஒரு தூண்டுதலாக மட்டுமே அமைகின்றது என இமாம் இப்னு கஸீர் விளக்கம் அளிக்கின்றார்.
“நான் முஷ்ரிக்குகள் மத்தியில் வாழுகின்ற எந்த ஒரு முஸ்லிமிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நீங்கியவனாவேன்” (ஆதாரம்: திர்மிதி)
“எவர் முஷ்ரிக்குடன் சேர்ந்து கூடி வாழ்கின்றாரோ அவர் அவரைப் போன்றவராவார்.” (ஆதாரம்: அபூதாவூத்)
இவ்விரு ஹதீஸ்களும் காபிர்களுடன் சேர்ந்து வாழ்வதைத் தடைசெய்வதோடு, அவர்களை விட்டும் பிரிந்து ஹிஜ்ரத் மேற்கொள்வதை விதியாக்குவதாக குறித்த அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆயினும், இவ்விரு ஹதீஸ்களும் தாருல் குப்ரில் தனது சன்மார்க்க கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் முஸ்லிமையும், முஷ்ரிக்குகளோடு வாழ்ந்து இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட அவர்களுக்கு துணைபோகின்ற முஸ்லிமையுமே குறிக்கும் என அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். நபியவர்கள் தனக்கும் தனது தோழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கண்ட போதே மக்காவில் இருந்து ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். இந்நிலையில் தன்னோடு மதீனாவிற்கு வராமல் தொடர்ந்தும் மக்காவில் தங்கியிருந்த தோழர்களை குறித்தே தாம் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு பொறுப்பானவர் அல்ல என்ற கருத்திலேயே மேற்கூறிய முதலாம் ஹதீஸை குறிப்பிட்டார்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.
எனவே இதுவரை கலந்துரையாடிய விஷயங்களில் இருந்து உலகின் எப் பாகத்திலும் முஸ்லிம்கள் – தமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதற்குமான சூழல் காணப்படும் நிலையில் சிறுதொகையினராகவோ, பெருந் தொகையினராகவோ வாழ்வதற்கான அனுமதியை ஷரீஅத் வழங்குகின்றது என்ற தெளிவு பெறப்படுகின்றது.
[ இக்கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும் அல்லது ”பிற சமூகங்களுடான உறவு பற்றிய ஷரீஆ கண்ணோட்டம்” எனும் கட்டுரையைப் பார்க்கவும்.]