ஃபாத்திமுத்து ஸித்தீக்
மண்ணுக்கு மழையாய்
உணவுக்கு உப்பாய்
ஜாடிக்கு மூடியாய்
ஜோடி சேரும்
இல்லறத் தென்றலின் இதத்தில்
மகரந்தங்கள் சங்கமித்து
சந்தோஷிக்கும் உளம் மலர்ந்தது!
கருத்து வேற்றுமை கற்களும்
வாக்குவாத முட்களும்
கணக்கற்றிருப்பினும்
வாழ்க்கைப்பயண வண்டியை
ஒன்றிணைத்து இழுக்கும்
இரட்டை மாடுகள்
விட்டுக்கொடுத்து ஓடுவதில்
முரண்படலாகாது!
பேனாமுனை முள்ளின்
ஒருங்கிணைப்பாய் தம்பதியர்
தன்முனைப்பு ஆக்கிரமிப்பின்றி
படைக்க வேண்டும்
பார் போற்றும்
இல்லறக்காவியம்!
தீவுக்கும் தண்ணீருக்குமுள்ள
உறவினும் தகு உறவாய்
பருவச் செழிப்பில்
பற்றிப் படர்ந்து கிளைத்து
வாழ வேண்டிய பொற்கொடியாள்
என்றென்றும் மதித்திடுவாள்
தீன் கொள்கையையும்
கொண்ட கணவனையும்
விழியிரண்டாய்!
இமையின் நிழலில்
இளைப்பாறும் விழியாய்
ஆண்மையின் அரவணைப்பு தரும்
பாதுகாப்பில் பெண்மை
பூரணப் படுவதையும்
உணர்த்திடுவான்
உணர்ந்திடுவாள்!
மணமகரந்தங்கள் சங்மித்து
சந்தோஷிக்கும் உளம் மலர்ந்து,
இல்லறத் தென்றலின் இதத்தில்!