ஃபாத்திமா நளீரா வெல்லம்பிடடிய
[ ஆண்களை விடப் பெண்களோ அதிகளவில் உணர்வுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அன்பு, அரவணைப்பு, பந்த பாசம் வேதனை, கவலை, விரக்தி என்ற பலவிதமான உணர்வுகளை உள்வாங்கி ஒரு சுமைதாங்கியாக பல தியாகங்களைச் செய்து இறுதியில் நோயாளியுமாகி விடுகிறாள். இதுவே குடும்ப வாழ்க்கை இவளுக்குக் கொடுக்கும் பரிசு.
மேலும், கணவன் மூலமாக ஏற்படும் பயம் அல்லது கோபம் இவர்களின் இதயப் துடிப்பு, குருதி ஓட்டத்தைப் பாதிக்கிறது. எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண்களை விடப் பெண்களே அதிகளவு மனோ ரீதியாகத் தாக்கப்படுவது உண்மை.
குடும்ப வன்முறைகளால் வஞ்சிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பெண்கள் வலுவில்லாதவர்கள். எதற்கும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் ஆண் வர்க்கத்தினரிடமிருந்து மாற வேண்டும். பெண்களால் எதனையும் செய்து விடமுடியாதென்ற காழ்ப்புணர்வு ஆண் வர்க்கத்தினரிடமிருந்து விடைபெற வேண்டும்.]
வாழ்க்கை ஒரு பூங்கா வனமுமல்ல. அதே நேரம் பாலைவனமும் அல்ல.. வாழ்க்கை ஒரு சவால். வாழ்க்கை ஒரு போராட்டம். சவால்களும் போராட்டங்களும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. தீர்வு கண்டு கரையைக் கடப்பவர்களும் உண்டு.வேதனை தாங்காமல் மூழ்கிக் காணாமல் போய் விடுபவர்களும் உண்டு.
வாழ்க்கை என்ற நூலகத்தின் முக்கியமான பகுதிதான் திருமணம் என்ற குடும்ப வாழ்க்கை. திருமணத்தின் மூலம் வாழ்க்கை முழுமையடைகிறதோ அல்லது எத்தனை சதவீதம் வெற்றியீட்டுகின்றதோ தெரியாது. ஆனால் குடும்ப வாழ்க்கைக்குத் தலைமை வகிக்கின்ற கணவனின் தும்புறுத்தலுக்கு ஆளாகி உடல், உள ரீதியாகப் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்கின்றார்களென்பதே பாரிய உண்மை மேலும,; இந்தக் குடும்ப வன்முறை, அட்டூழியம் ஆசியப் பெண்கள் மீதே அதிகளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறை என்கின்ற போது அது ஏதாவது ஒரு உறவுமுறையான ஆண்; வர்க்கத்திடமிருந்து தினமும் ஒரு பெண் ஏதோ ஒரு வகையில் சித்திர வதைக்கும் பாலியல் ரீதியிலும் உள்ளாக்கப்படுகிறாள். என்றாலும் கணவன்-மனைவி என்ற உறவுப் பாலம்தான் அதிகளவில் சேதமடைகிறது. இணைந்த வேகத்தில் பிரிபவர்களும் உள்ளனர். வயது சென்று விவாகரத்து செய்பவர்களும் உண்டு.
குடும் வாழ்க்கை என்பது நேற்று நடந்து, இன்று வாழ்ந்து, நாளை பிரிவதில்லை. ஆயினும் விஞ்ஞான, தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்து வியப்பூட்டும் அளவுக்கு முன்னேறியுள்ளதோ அதனை விடப் பலமடங்கு குடும்ப வன்முறையும் அட்டூழியமும் தலைவிரித்தாடுகின்றன.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் புரிந்துணர்வின்மை, சந்தேகம், விதண்டாவாதம், வைராக்கியம்,குரோதமனப்பான்மை மற்றும் கடின வார்த்தைகள் போன்றவை வாழ்க்கையில் பெரும் பிளவை ஏற்படுத்துகின்றன. அதிலும் இல்லத்தரசிகளான பெண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். வக்கிரமும் வன்முறைகளும் நிறைந்த வார்த்தைகள் நடவடிக்கைகள் இவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
மன அழுத்தம் என்றால் மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது எதற்குமே இனி நம்மால் ஈடு கொடுக்க முடியாத நிலை என்று வரும்போது வெளிப்படுத்தும் பல அறிகுறிகள்தான் மன அழுத்தம். அதாவது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஓர் இறுக்கமான நிலைக்கு வந்து விடுவதனையே மன அழுத்தம் என்கின்றனர்.உளவியலாளர்கள்.
மன அழுத்தமும் ஒரு நோய்தான். இது பலவிதமான நோய்களுக்கும் மூல காரணியாக அமைகிறது. கவலை, சோர்வு, டென்ஷன் என்பன சீரற்ற இதயத் துடிப்பு, முதுகு வலி கழுத்து வலிகள் வயிற்று உபாதைகள் பிரஷர் என்ன வைத்தியம் செய்தாலும் தீராத தலை வலி மற்றும் தூக்கம் இன்மையை ஏற்படுத்துகின்றன. நிம்மதியற்ற சூழலும் பல உபாதைகளும் கூடவே மன அழுத்தத்துக்குத் வித்திடுகின்றன.
பெண்களின் மன அழுத்தத்துக்கு உடல் ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. அவர்களின் ஹோமோன்களின் சமநிலை ஆண்களைப் போல் இருப்பதில்லை. வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது.
ஆண்களை விடப் பெண்களோ அதிகளவில் உணர்வுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அன்பு, அரவணைப்பு, பந்த பாசம் வேதனை, கவலை, விரக்தி என்ற பலவிதமான உணர்வுகளை உள்வாங்கி ஒரு சுமைதாங்கியாக பல தியாகங்களைச் செய்து இறுதியில் நோயாளியுமாகி விடுகிறாள். இதுவே குடும்ப வாழ்க்கை இவளுக்குக் கொடுக்கும் பரிசு. மேலும், கணவன் மூலமாக ஏற்படும் பயம் அல்லது கோபம் இவர்களின் இதயப் துடிப்பு, குருதி ஓட்டத்தைப் பாதிக்கிறது. எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் ஆண்களை விடப் பெண்களே அதிகளவு மனோ ரீதியாகத் தாக்கப்படுவது உண்மை.
இவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல் மரபு வேலிக்குள் சுருங்கி வாழ வேண்டியுள்ளது. சில நேரம் இந்தப் பெண்கள் வேலிகளைத் தாண்டும் போதுதான் ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இது சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மனநோய் மருத்துவர்கள். அதே நேரம் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் ஏதோ ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். முறையான சிகிச்சை கூட அவர்களை மாற்றலாம்.
ஆண் என்ற ஆதிக்க சமூகத்துக்கு பெண் எப்போதுமே தாழ்த்தப்பட்ட இரண்டாம் பட்சம்தான். ஆனால் இது முற்றிலுட் தவறானது. ஆண்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் சௌகரியங்களும் அதிகாரங்களும் பெண்ணுக்கும் உள்ளன.
பெண் என்பவளுக்கு கனவு, நனவு எல்லாம் அவள் குடும்பத்தைச் சுற்றியே வட்டமிடும். ஆனால், உழைப்பு என்ற ஆயுதத்தை பெரும்பாலும் தன் வசம் வைத்திருக்கும் ஆண்கள் அதன் மூலம் பெண்களை நசுக்கி அடிமைகளாக வைத்திருக்க நினைக்கிறார்கள். இந்தப் பெண்களின் சுகம், தியாகம், உழைப்பினைச் சுரண்டி வீட்டுத் தலைவி என்ற பெயரில் முழுநாள் வீட்டு வேலைக்காரியாக உரிமை பெற்றுள்ளாள். சில பெண்களோ வீட்டுக்கு வெளியேயும் வீட்டினுள்ளேயும் உழைக்க வேண்டியுள்ளது. என்றாலும் கணவன் என்பவன் தனது ஆண் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மாத்திரம் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை.
ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகிறான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு குறைவாகவே உள்ளன. சமூக கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாக அவளது கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை. தனக்குள் அடக்கப்படும் கோபமே மன அழுத்தம் ஏற்படக் காரணியாக அமைகிறது. பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு உடல் பலவீனமும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.
குடும்ப வாழ்க்கையில் சோகமும் சந்தோஷமும் இருபக்கங்கள.; அனுபவமின்றி யாரும் அறிவாளியாகி விடமுடியாது. முடிந்தவரை கவலைக்கு மனதை அடிமையாக்காமல் தீர்வுகளின் பக்கம் கவனத்தைச் செலுத்தலாம்;. தியானம், மதவழிபாடுகளில் அதிகளவில் ஈடுபாடு காட்டுவதோடு தனக்கு நெருக்கமானவர்கள் அல்லது விசுவாசமான நண்பர், நண்பிகளுடன் மனத்துயரங்களை வெளிப்படுத்தலாம். ஆனால, எல்லோரிடமும் எல்லா விடயத்தையும் கூறிவிட முடியாது. மிக ‘முக்கிய’மானவர்களிடம் இதயத்தின் ரணங்களை மனம்விட்டு எடுத்துக் கூறலாம். மனம் விட்டுப் பேசவேண்டும். வார்த்தைகள் வெளிவருகின்றபோது மன இறுக்கம் குறையும். பழிக்குப்பழி,வைராக்கியம்,விரோதம் போன்ற உணர்வுகள் மறையலாம். நெருக்கமானவர்களிடம் நன்றாக மனம்விட்டு பேசுவதாலேயே பாதிப் பிரச்சினை குறைந்து விடுகிறது என்கிறார்கள் மனோ தத்துவ நிபுணர்கள்.
சினம் வன்செயல்களைத் தூண்டும், அன்பு உலகை ஆட்சி செய்யும் வன்செயல்களின் ஈடுபாடு, வெருட்சி ஆகியன தீவிர மனவெழுச்சிகளின் விளைவாகும். பிறரிடம் எப்படி அன்பு செலுத்தப்படுகின்றதோ அதே அன்பை திரும்பிப் பெறவும் இந்தப் பெண்கள் எதிர்பார்ப்பார்கள். எல்லா வயதுக்கும் அன்பு தேவையானது. கணவன் தன்மேல் அன்போ அக்கறையோ காட்டாத பட்சத்;தில் மூன்றாம் நபர் மூலம் கிடைக்கும் அன்பால் ஆறுதலடைகிறது பெண் மனம். அன்பை வைத்தே இவர்களிடம் எதனையும் சாதித்துவிட முடியும்.
குடும்ப வன்முறைகள் தலைதூக்காமலிருக்க புரிந்துணர்வும் அன்பும் அவசியம். அதேநேரம் பெண் சமூக என்பது ஆண்களை மட்டும் கொண்டதான அமைப்பல்ல என்பதனையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக்கொள்ளும் தொட்டாசிணுங்கியல்ல பெண். சதா காலமும் அவளைத் திட்டிக் கொண்டே இருப்பது நோய்வினை செய்து மூன்றாம் நபர் முன்னால் இழிவாகப் பேசி அவமதிப்பது, உரிமைகள் பறிக்கப்படுவது, போன்ற சந்தர்ப்பங்களிலும் வார்த்தைகளால் இம்சிக்கப்படும்போதும் அவள் எரிமலையாகச் சீறி எழுகிறாள்.
லண்டனில் வசித்து வரும் இந்தியப் பெண் கிரண்ஜித் அலுவாலியாவை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். மனவக்கிரம் பிடித்த கணவனுக்கு எதிராக சீறியெழுந்து அவனையே எரித்தவள்தான் இந்தப் பெண். 1989 இல் லண்டனில் நடந்த இந்தச் சம்பவம் உலகையே அதிரவைத்தது. சிறைக்குச் சென்ற கிரணின் வாழ்க்கையப் பற்றி கேள்விப்பட்ட பெண்கள் உரிமைச்; சங்கம் அவளது வழக்கினை மீளெடுத்து நடாத்தி 1992 இல் விடுதலை வாங்கிக் கொடுத்தது. குடும்ப வன்முறைகளுக்கு எதிராக வழங்கப்பட்ட அந்த உன்னத தீர்ப்பு, பெண்களை மனைவி என்ற கோதாவில் வாட்டி வதைக்கும் ஆண்களுக்கான முதல் அடி. 2001 ஆம் ஆண்டு கிரண்ஜித்துக்கு குடும்ப வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதும் கிடைத்தது.
குடும்ப வன்முறைகளால் வஞ்சிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படும் பெண்கள் வலுவில்லாதவர்கள். எதற்கும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் ஆண் வர்க்கத்தினரிடமிருந்து மாற வேண்டும். பெண்களால் எதனையும் செய்து விடமுடியாதென்ற காழ்ப்புணர்வு ஆண் வர்க்கத்தினரிடமிருந்து விடைபெற வேண்டும்.
மனிதனின் தேவை என்பது ஒரு பக்கம் சார்ந்ததல்ல.. அனைத்துத் தேவைகளுக்கும் இரு கைகளும் இணைய வேண்டும். பெண்களை மட்டம் தட்டிவிட்டு தனித்து இயங்கிவிட முடியுமென்பது மடமைத்தனமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும். குடும்ப வாழ்க்கையின் இணைப்பும் இப்படித்தான். அதேநேரம், சினம் கொண்டு வன்முறைகளைக் கையிலெடுப்பதனை முடிந்தளவு பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் எல்லாப் பெண்களுக்கும் உயரிய விருது கிடைத்துவிடாது. ஆண் வர்க்கத்தை வஞ்சம் தீர்த்து காலமெல்லாம் பழி சுமப்பதனை விட இவர்களை வேறு விதமாகத் தண்டிக்கலாம். முடிவாக விவாகரத்துக் கூட செய்யலாம். “அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும்”.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 16-05-2010