சதாம்
”இல்லறத்தில் மற்றவரை வாழச் செய்து தானும் அறம் தவறா வாழ்க்கை நடத்துவது தவம் செய்வோரை விடவும் மிக வல்லமையுடைய வாழ்க்கை.” என்கிறது ஒரு குரல். சமூகம் மாறினால் சிறப்புடைய சமூகம் உருவாகும். ஆனால் இன்று தனது வாழ்க்கையையே தொலைத்தும், எப்படி அமைப்பது என்றறியாமல் தள்ளாடும் போக்கிலும் இது சாத்தியமாகுமா?
ஆண், பெண் செப்பமான முறையில் இல்வாழ்க்கைத் துவங்கி நாளும் நகர்த்திச் செல்வது, ஆற்று நீரின் நேர், எதிர்ப்போக்கில் செலுத்தப்படும் படகுப் பயணங்களுக்கு ஒப்பானது.
படகு பக்கவாட்டின் இரு மருங்கிலும் பிணைக்கப் பட்டிருக்கும் வளையத்திற்குள் அகப்பட்ட இரண்டு துடுப்புகளும் சம நேரத்தில், சமநிலையில் நீரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும்போது இலக்கை இலகுவாக அடையும். துடுப்புகளில் ஒன்று சமமற்ற நிலையில் நீரைக் கிழித்தாலோ, ஒரு துடுப்பு மட்டும் செயலற்றாலோ இருப்பை விட்டு நகராது படகு. இல் வாழ்க்கையுடன் இந்த ஒப்புமை பொருந்திப் பார்த்தல் அவசியம்.
படித்தவன், பட்டறிவாளன், நுண்ணறிவாளன் வாழ்க்கைக் கிணற்றின் மேலேறி தாண்டி விடலாம், அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்லலாம் என தண்ணீரின் மேல் மட்டத்தை நோக்கி நீந்தி 100 அடியில் நின்று திரும்பி பார்க்கிறான்.
கீழ் மட்டத்தின் 10 அடியில் நிற்கும் மனைவி கணவன் எதற்காக நீந்துகிறான், என்ன சாதிக்கப் போகிறான் அறியாதவளாக, புரியாதவளாக அவனை புதிரோடு பார்க்கிறாள். 100 அடி மேல் நின்று வா என அழைக்கும் கணவனைக் காலில் கட்டிய தண்டனைக் கல்லாக அழுத்தி மேலே செல்லவிடாது கீழ்நோக்கி இழுக்கிறாள்.
பொதுவாழ்வில் ஈடுபட்ட மிகப்பெரிய மனிதர்கள் இந்நிலை வாழ்வுத் துணையாளரைப் பெற்றதன் விளைவாகச் சடாரென காணாமல் மறைந்தனர். மரித்தனர். அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்ற இடத்தை மாமனார், மருமகன்கள், மனைவி, பெயரர் நிரப்பியது போல் நிரப்புவதற்கு முஸ்லிம் சமூகத்தில் எவரும் இல்லை.
பல ஆண்டுகள் மணம் செய்தவரோடு வாழ்ந்தாலும், மனப்புரிதல் இல்லாமலேயே வாழ்ந்து மறைகின்றனர். ”கணவனது ஆற்றல், அறிவு, புகழ் அறியாத மனைவியைப் பெற்றவன் பகைவர் முன் காளைபோல் செருக்கோடு, மிடுக்கோடு நடைபோட வியலாது” எனக்கூறுகிறது இன்னொரு குரல்.
”தகுதியுடைய புகழைக்காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்” என்கிறது மற்றொரு குரல்.
சமூக வாழ்வில் துணைதேடும் படலத்தில் ஆணோ, பெண்ணோ அவர் அறிவாளி என்றால் மதிப்பதில்லை. இரு பாலினத் துணைத் தேடலிலும் அழகு, பணம், சொத்து, வருமானம், குடும்பப்பின்புலம் மட்டுமே மரபுத் தேடலாக மலர்கிறது. விளைவு அறிவுள்ள பெண்ணுக்கு அறிவிலி கணவாகவும், நுண்ணறிவாளன், சிந்தனையாளனுக்கு பிணைக்கப்பட்ட கால் விலங்காகப் பத்தாம் பசலிப் பெண் மனைவியாகவும் துணை சேர்கின்றனர்.
காலம் செல்கிறது கடமை நிறைவேற வேண்டும். பெற்றோரின் தவிப்பு. தாய், தந்தையர் ஆவலை நிறைவேற்றுவோம் என அப்போதைய தேவைக்கு ஆம் போடும் பிள்ளைகள். சீரற்ற போக்கால் இருபக்க வாழ்வும் சீரழிகிறது.
அழகு, பணம், கார், நிலம், மனை, பின்புலம் பார்த்து மணமுடிப்பதைக் கைவிட்டு குணம், பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவு பார்த்து ஆண், பெண் இருவரும் ஒத்துப் போகக் கூடிய தன்மையாளர்களா, இருவரது சிந்தனையும் சமநோக்குடையதா, புரிதலும், உள்வாங்கும் திறனும் நேர்கோட்டில் பயணிக்கிறதா எனப்பார்த்தலே வெற்றிகர வாழக்கைக்கு வித்திடும். பொது வாழ்விலிருந்து அவசர கதியில் விலகும் கணவர்களைக் காப்பாற்றும்.
நன்றி: முஸ்லிம் முரசு, டிசம்பர் 2010