Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அமுதம் போன்ற இதயம் வேண்டும்

Posted on February 27, 2011 by admin

AN EXCELLENT ARTICLE மிகச்சிறந்த கட்டுரை

   K.R..மஹ்ளரி  

[ உளத்தூய்மை நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால், நன்மை செய்யாமலேயே நாம் நற்கூலியைப் பெறலாம்.  

ஒரு தீயசெயலை மனிதர்கள் யாரும் பகிரங்கமாகச் செய்வதில்லை. அதுபோல் நன்மையான செயல்களையும் முடிந்த அளவு நாம் மறைத்தே செய்ய வேண்டும்.

‘இரவில் மக்கள் எல்லோரும் தூங்கும்போது நீங்கள் எழுந்து படைத்த இறைவனை வணங்குங்கள். உங்கள் வலது கரம் வழங்கும் தர்மம் இடதுகரத்துக்கு தெரியாதவாறு வழங்குங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், ஒரு நூறு ரூபாய்க்கு விளக்கை வாங்கி பள்ளிக்கு அன்பளிப்பு செய்துவிட்டு அந்த விளக்கின் வெளிச்சமே தெரியாத அளவுக்கு நம் பெயரை கொட்ட எழுத்தில் எழுதி வைக்கிறோமே எப்படி?!

நாளை மறுமையில் நம்முடைய செயல்கள் யாவும் இறைவன் முன் கொண்டுவரப்படும். அவற்றில் உளத்தூய்மையோடு நிறைவேற்றப்பட்டவை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு மட்டும் வெகுமதிகள் இறைவனால் வழங்கப்படும். அவையல்லாத மற்றவை அனைத்தும் பதர்களும், கழிவுகளும் குப்பைக்கூடையில் கொட்டப்படுவதைப் போல எரிநரகில் வீசப்படும். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடுக்கும் எச்சரிக்கை மொழி (நூல்: பைஹகி)]

அமுதம் போன்ற இதயம் வேண்டும்

ஒருவன் மீது இறைவன் கோபம் கொண்டால் அவனுக்கு மூன்று நன்மைகளைத் தந்து மூன்று நன்மைகளைத் தடுத்துவிடுவான்.

நல்லவர்களின் நட்பை அவனுக்கு வழங்குவான். ஆனால் அவர்களிடமிருந்து எதையும் உள்வாங்காமல் செய்துவிடுவான்.

அறிவாற்றலை அவனுக்கு நிறைய வழங்குவான். ஆனால் அதிலிருந்து பெறவேண்டிய உண்மையை பிடுங்கிக்கொள்வான்.

நல்லறங்கள் அதிகம் புரிய அவனுக்கு வாய்ப்புகள் வழங்குவான். ஆனால் அவற்றில் உளத்தூய்மைக்கு இடம் இல்லாமல் செய்துவிடுவான்.

‘இக்லாஸ்’ எனும் உளத்தூய்மைக்கு ஏற்படும் அபாயம் குறித்து இமாம் கஜ்ஜாலி ரஹ்மதுல்லாஹி

அலைஹி அவர்கள் குறிப்பிடும் எச்சரிக்கை இது.

அந்த வகையில் முகஸ்துதி என்பது மர்மமான ஒன்று. இருள்சூழ்ந்த இரவொன்றில் கரும்பாறை மீது ஒரு சிற்றெரும்பு மெதுவாக ஊர்ந்து செல்வது போல, இந்த முகஸ்துதி மனித மனங்களின் அடித்தளத்தில் ஊர்ந்து திரிகின்றது.

அந்த முகஸ்துதி நம் மனங்களில் ஊடுருவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக எந்தவொரு செயலையும் நான்குபேர் பார்க்க மெச்சவேண்டும் என்பதற்காகவே நாம் செய்கிறோம். அதனால்தான் அதைப் பகிரங்கப்படுத்துகிறோம்.

ஆனால், இஸ்லாம் என்ன கூறுகிறதென்றால், ஒரு தீயசெயலை மனிதர்கள் யாரும் பகிரங்கமாகச் செய்வதில்லை. அதுபோல் நன்மையான செயல்களையும் முடிந்த அளவு நாம் மறைத்தே செய்ய வேண்டும்.

‘இரவில் மக்கள் எல்லோரும் தூங்கும்போது நீங்கள் எழுந்து படைத்த இறைவனை வணங்குங்கள். உங்கள் வலது கரம் வழங்கும் தர்மம் இடதுகரத்துக்கு தெரியாதவாறு வழங்குங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், ஒரு நூறு ரூபாய்க்கு விளக்கை வாங்கி பள்ளிக்கு அன்பளிப்பு செய்துவிட்டு அந்த விளக்கின் வெளிச்சமே தெரியாத அளவுக்கு நம் பெயரை கொட்ட எழுத்தில் எழுதி வைக்கிறோமே எப்படி?!

உங்களின் நல்லறங்கள் அந்த ஷைத்தானுக்கத் தெரியக்கூடாது. அந்த வானவருக்கும் தெரியக்கூடாது. ஏன் தெரியுமா? ஷைத்தானுக்குத் தெரியவந்தது என்றால், அதை செய்ய விடாமல் உங்களைத் தடுப்பான். வானவருக்குத் தெரிந்தால் அதை அவர் குறிப்பெடுத்துக் கொள்வார். அதற்குக்கூட இடம் தராமல் மறைத்துச் செய்யுங்கள் என்று ஒரு அறிஞர் சொல்வார். (இதன் கருத்து என்னவெனில் நல்லறங்களை மறைத்துச்செய்வதே மிகவும் நன்மையானது).

இதையெல்லாம் தாண்டி மனிதர்களுக்குமுன் நல்லறங்கள் புரியும் நிலை ஏற்பட்டாலும் கூட ஆடு, மாடு முதலான பிராணிகளுக்குமுன் செயல்படுவதுபோல் நாம் செயல்பட வேண்டும்.

தொழும்போது நம் முன்னே ஆடோ, மாடோ வந்தால் எப்படி நம் மனதில் இறையச்சம், பக்தி அதிகரித்து விடுவதில்லையோ, அதுபோல, எந்தவொரு மனிதரும் வரும்போதும் அந்த மனோநிலை இருக்க வேண்டும். இந்த நிலையை நாம் வரப்பெற்று விட்டால், நம்மிடம் உளத்தூய்மை வந்துவிட்டது என்று அர்த்தம்.

இதுபோன்ற உளத்தூய்மை, மனோபாவம் உலகிலுள்ள ஒவ்வொரு துறை சார்ந்தவர்களிடமும் வந்து விட்டால், அதன் மூலம் தனிமனிதப் பலனையும் பெறலாம், சமூகப் பலனையும் பெறலாம். நான் பணி செய்கிறேன் … ஆனால் அதற்கான முழுப்பயனை நான் பெறவில்லையே … எனது செயல் விழலுக்கிறைத்த நீராகவல்லவா போய்விட்டது! என்ற விரக்தியும் – வேதனையும் எந்த மனிதனுககும் ஏற்படாது.

அதே போல வெறுமனே சம்பளத்துக்காக மட்டும் உழகை;காமல் உளப்பூர்வமாக ஒருவன் பணி செய்கிறபோது அதன் மூலம், அதிக உற்பத்தி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு இந்த தேசமும், தேசமக்களும் அதிகப்பயனும் – நலனும் பெறுவார்கள். அதோடல்லாமல், நாளை மறுமையில் கிடைக்கவிருக்கும் வெகுமதிகளைச் சொல்லிமுடியாது.

உளத்தூய்மை நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால், நன்மை செய்யாமலேயே நாம் நற்கூலியைப் பெறலாம்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா உங்களுக்கு?! இதோ, இதைத் தெளிவுபடுத்திச் சொல்கிறார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

‘முன்னொரு காலத்தில் ஒரு மணல் மேட்டுக்கருகில் நடந்து சென்றார் ஒருவர். இந்த மணல்மேடு முழுவதும் உணவுக் குவியலாக மாறினால், நான் அதை பசியால் வாடும் ஏழை மக்களுக்கு வாரி வழங்குவேன் என்று தன் மனதில் உளப்பூர்வமாக எண்ணினார்.

அப்போதிருந்த இறைத்தூதருக்கு இறைவன் எப்படி செய்தி அனுப்பினான் தெரியுமா?

‘மானசீகமான அவனுடைய தர்மச் செயலை நான் அங்கீகரித்துக் கொண்டேன். உண்மையிலேயே அந்த மணல்மேடு உணவுக் குவியலாக மாறி, அதை அவர் தர்மம் செய்திருந்தால், என்ன நன்மையைப் பெறுவாரோ அதை நான் அவருக்கு வழங்கி விட்டேன்’ என்ற சுபச்செய்தியையும் அவனிடம் தெரிவித்து விடுங்கள் என்பதாக.’

வீடொன்று கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் காற்றோட்டத்துக்காக ஜன்னல் பொருத்தும்போது, வெறுமனே காற்றோட்டம் என்ற எண்ணத்தோடு, காற்றோடு சேர்ந்து பள்ளியின் பாங்கொலியும் காதில் விழவேண்டும் என்ற எண்ணமும் நம் மனதில் இணைந்தால், ஒரு கல்லில் இரு மாங்காய் என்பதுபோல் காற்றுக்கு காற்றும் கிடைக்கும், நன்மைக்கு நன்மையும் கிடைக்கும்.

இன்னுமொரு அருமையான உதாரணம் சொல்ல வேண்டுமானால், வேலையில் வெகு மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மூன்று கட்டிடத் தொழிலாளிகள். ‘இங்கே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று பொத்தாம் பொதுவாய்க் கேட்டார் அந்த வழியாகச் சென்ற ஒரு அறிஞர். ‘செங்கல்லை எடுத்து இந்தச் சுவரை எழுப்பிக் கொண்டிருக்கிறேன்’ என்றான் முதல் தொழிலாளி.

‘மாலையில் எனக்குக் கூலியாகக் கிடைக்கும் 100 ரூபாய்க்காக இங்கே நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றான் இரண்டாம் தொழிலாளி.

‘அறிவை போதிக்கும் கல்வி நிலையம் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கான எனது பங்களிப்பை நான் வழங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்றான் மூன்றாம் தொழிலாளி.

ஒரே செயல். ஆனால் வௌ;வேரான எண்ணப்பாடுகள். முதல் தொழிலாளி வெறும் சாமானியன். இரண்டாம் தொழிலாளி வெறும் கூலிக்காக மாரடிப்பவன். மூன்றாம் தொழிலாளிதான் உளப்பூர்வமானவன். அவனைப் போன்றுதான் ஒரு ஆன்மீகவாதி இவ்வுலகில் செயல்பட வேண்டும்.

போர்களத்தில் எதிரியின் நெஞ்சின் மீதேறி அவனை வெட்டி வீழ்த்த தயாராகி விட்டார்கள் வீரத்தின் சிகரமான அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். அந்த நேரம் பார்த்து அலீ ரளியல்லாஹு அன்ஹு

அவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டான் அந்த எதிரி.

என்ன நடந்திருக்க வேண்டும் அங்கே? ஆத்திரத்தின் விளிம்பிற்கே சென்று எதிரியின் தலையை அவர்கள் துண்டித்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது அங்கே? எதுவும் செய்யாமல் அமைதியாக எழுந்துவிட்டார்கள் அந்த மாவீரர் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட எதிரி ஒன்றும் புரியாமல் என்னவென்று வினவினான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை. அதற்கு அலீ ரளியல்லாஹு அன்ஹு

சொன்னார்கள், ‘நீ என் மீது காரி உமிழ்வதற்குமுன் என் மனோநிலை ‘கலிமத்தில்லாஹியல் உல்யா’ தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான இந்த யுத்தத்தில், தர்மம் வெல்ல வேண்டும் என்ற தூய எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த தூய மனோநிலை உருமாறி, பழிக்குப்பழி என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. எனவே எழுந்துவிட்டேன்’ என்றார்கள்.

இன்னொரு செய்தியையும் கேளுங்கள். சாதாரணமாக நம்மில் பெரும்பாலானோர் சுவனத்துக்கு ஆசைப்பட்டு இறைவனை வணங்கி வழிபடுவார்கள். அல்லது நரகத்துக்கு பயந்து இறைவனை வணங்கி வழிபடுவார்கள். ஆனால், சுவன ஆசையும் இல்லை, நரக பயமும் இல்லை. எனவே இந்த இரண்டுக்கும் சொந்தக்காரணான இறைவனுக்காக நான் அவனை வணங்கி வழிபடுகிறேன் என்றார்கள் அன்னை ராபியத்துல் பஸரிய்யா அவர்கள்.

இதுபோன்ற வித்தியாசமான சிந்தனைகள் நம் உள்ளங்களில் நிரம்பி வழிய வேண்டும். இங்கே ஒரு கேள்வி எழ வாய்ப்புண்டு. உளத்தூய்மையோடு உலகாதாய நோக்கமும் இணைந்த செயல்களுக்கான நிலை என்ன? என்ற கேள்வியே அது. இது குறித்த விஷயங்களில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும் உள்ளன.

இப்படித்தான் ஒரு நபித்தோழர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘நான் தர்மம் செய்கிறேன். அதில் இறைவனுக்காக என்ற தூய எண்ணமும் உள்ளது. அதே நேரம் மக்களின் பாரட்டு மொழிகளையும் நான் விரும்பகிறேன்’ என்றார்.

அப்போது இறைவனிடமிருந்து திருவசனம் இப்படி இறங்கியது: ‘தமது இறைவனின் சந்திப்பை விரும்புபவர், உளப்பூர்வமாக நல்லறங்களை செய்யட்டும் அவற்றில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்’  (அல்குர்ஆன்)

இதிலிருந்து உலகாதாய எண்ணம் உள்ளத்தில் தோன்றினால் அதற்கு ஒரு நன்மையும் கிடைக்காது என்பது நமக்கு விளங்குகிறது. இருந்தாலும் இறைவன் கருணையாளன். நமது செயலிலுள்ள உளத்தூய்மைக்கு தகுந்தவாறு கூலி வழங்குவான் என்றே அறிஞர்கள் முடிவுக்கு வருகின்றனர். ஆனால் ஒரு நிபந்தனை. நாம் புரியும் நல்லறங்களில் உளத்தூய்மையைவிட உலகாதாய எண்ணம் சற்றுத் தூக்கலாக இருந்து விடக்கூடாது.

உதாரணமாக, வியாபார நோக்கத்தையும் உள்ளடக்கிய ஹஜ் பயணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் நன்மை கிடைக்கும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. ஆனால், ஹஜ் செய்வதற்கு முதலிடமும் வியாபார நோக்கத்திற்கு இரண்டாமிடமும் இருந்தால் ஓ.கே. அவ்வாறு இல்லாமல் ஹஜ்ஜைவிட வியாபார நோக்கம் முதலாவதாக இருந்தால் நன்மை விஷயத்தில் வெறும் பொக்கேதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக, நாளை மறுமையில் நம்முடைய செயல்கள் யாவும் இறைவன் முன் கொண்டுவரப்படும். அவற்றில் உளத்தூய்மையோடு நிறைவேற்றப்பட்டவை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு மட்டும் வெகுமதிகள் இறைவனால் வழங்கப்படும். அவையல்லாத மற்றவை அனைத்தும் பதர்களும், கழிவுகளும் குப்பைக்கூடையில் கொட்டப்படுவதைப் போல எரிநரகில் வீசப்படும். இது நபி ஸல்லல்லாஹு

அலைஹி வஸல்லம் அவர்கள் விடுக்கும் எச்சரிக்கை மொழி (நூல்: பைஹகி)

அறிவு என்பது நாற்று போன்றது. செயல் என்பது அதில் விளையும் கதிர் போன்றது. அதற்குப் பாய்ச்சப்படும் தூய நீர்தான் ‘இக்லாஸ்’ என்ற உளத்தூய்மை. எப்படி நீரின்றி பயிர் வளராதோ அதுபோல உளத்தூய்மை இல்லாமல் ஒரு பயனும் கிடைக்காது.

‘என்னிடம் நல்லறங்கள் குறைவாக உள்ளனவே என்ற யாரும் கவலைப்பட வேண்டாம். அவை இறைவனிடம் அங்கீகாரம் பெறுகின்றனவா என்று மட்டும் பாருங்கள்’ என்று அலீ ரளியல்லாஹு அன்ஹு

அவர்கள் கூறுவார்கள்.

எனவே சாணம், இரத்தம் இவற்றிலிருந்து அமுது – தூய்மையானது இருப்பதுபோல நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் உலகாதாய எண்ணங்களிலிருந்து தூயதாக அமையட்டும்.

வானம் பொழிவது போல

சூரியன் உதிப்பது போல

நதி பாய்வது போல

தென்றல் தவழ்வது போல

கைமாறு எதுவும் கருதாமல், இறைதிருப்தி ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு இந்த மானிட சமூகத்துக்கு நாம் பணி செய்வோம். நமது கடமைகளுக்கான கைமாறு ஒருவேளை இந்த உலகில் வேண்டுமானால் கிடைக்காமல் போகலாம். ஆனால், இறையருளால் என்றும் அழியாத அந்த மறுமையில் அதற்கான கூலி இரட்டிப்பாய் – இன்னும் சொல்லப்போனால் பன்மடங்காய்க்கூட கிடைக்கும் என்பது நிச்சயம் என்று நம்புவோம்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 + = 68

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb