நாகூர் மீரான்
சிறு வணிகம் பெரு வணிகத்தில் தனித்து கோலோச்சும் முஸ்லிம்கள், கூட்டு வணிகத்தில், கொள்முதலில் ஈடுபாடு காட்டுவதில்லை. தமது வட்டம் தவிர்த்து வெளிவட்டத் தொடர்பில்லை. வேறு வணிகர்ளோடு கூட்டு வைப்பதில்லை.
நாடார், தேவர், வன்னியர், மார்வாரி, குஜராத்தி, போரா போன்றவர்களிடம் கூட்டு முயற்சி, ஒருங்கிணைப்பு, கூட்டுக் கொள்முதல், கூட்டு வணிகம் நடைபெறுகிறது. கூட்டு வணிகத்தில் நாட்டமில்லாத முஸ்லிம் வியாபாரி திடீரென திவாலாகிறார், காணாமல் போகிறார்.
கூட்டுறவு நிறுவனமான T.U.C.S. சில்லரை வணிகத்தை சென்னையில் முதலில் துவங்கியது. அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை காமதேனு அங்காடி 1996இல் துவங்கப்பட்டது. தமிழகத்தில் 34 கூட்டுறவு பண்டக சாலைகள் இயங்குகின்றன. 2009-10க்கு 1,400 கோடிக்கு பொருட்கள் விற்பனையானதாக A.I.T.U.C பொருளாளர் முத்தையா தினசரி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
முஸ்லிம் சமூகம் இரு இயக்கமாகச் செயல்படுகிறது. ஒரு அமைப்புக்கும் மற்றோர் அமைப்புக்கும் தொடர்பில்லை. இரண்டு மதரஸாக்களுக்கிடையில் நட்பில்லை. சேரி முஹல்லா வாசிக்கும் முன்னேறிய முஹல்லா வாசிக்குமிடையில் பெண் கொடுக்கல், வாங்கல் நடைபெறவில்லை. நட்பு, பழக்கம் எதுவுமில்லை. தொழுகை வரிசை தவிர ஒரு உறவுமில்லை. இந்த நிலையில் கூட்டுக் கொள்முதல் மூலமாவது ஒருங்கிணையலாம்.
தமிழக முஸ்லிம் ஜனத்தொகை 40 இலட்சம். ஒரு குடும்பம் ஐவர் எனில் 8 இலட்சம் குடும்பங்கள்.
மாதம் 5,000/ம் செலவழிக்கும் குடும்பத்திலிருந்து 50,000ம் செலவு செய்யும் குடும்பங்கள் வரை உள்ளன.
ஒரு குடும்பத்திற்கு சராசரியாக மாதம் 10,000 செலவு என்ற கணக்கில் 8 லட்சம் குடும்பத்திற்கு 800 கோடி செலவாகும்.
இத்தொகையனைத்தும் பரவலாகப் பிரிந்து வெளி வணிகர்களுக்குச் சென்றடைகிறது. இதனைச் சமூகத்திற்குள் திருப்பலாம்.
கூட்டுக் கொள்முதல் நடத்தி தேவையான பொருட்களை மொத்தமாகப் பெற்று வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு 200 கோடி நிகர லாபம் கிடைக்கும்.
மாதம் பத்தாயிரம் செலவிடுபவர்க்கு அதிகபட்சம் 2,000/ + ம் மிச்சமாகும். சமூகத்திற்குள் ஒருங்கிணைப்பு ஏற்படும். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்படும்.
இந்த ஒருங்கிணைப்பையே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பினார்கள்.
தனித்து செல்பவன் இஸ்லாம் என்ற வளையத்தை தன் கழுத்திலிருந்து கழற்றி வீசியவன் ஆவான் என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது தவிர்க்கப்படும்.
சமூகம் ஆழமாய்ச் சிந்தித்து இந்த மூன்றாவது இயக்கத்தை முன்னெடுக்கலாம். சிறிய அளவில் துவங்கினால், பரவலாகச் சென்றடையும். விருட்சமாய் விரிவடையும்.
நன்றி: முஸ்லிம் முரசு, அக்டோபர் 2010