உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தொடர்புண்டு இக்கட்டுரையுடன்!
மவ்லவீ, எஸ். லியாகத் அலீ, மன்பஈ
[ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இவ்வுலக முடிவு நாள் வரை தோன்றவிருக்கின்ற மனித சமுதாயம் முழுவதையும் அல்லாஹ் காட்டினான். தனது வயது 1,000 ஆண்டுகள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 60 தான் என்று தெரிந்தவுடன் மனதில் இரக்கம் ஏற்பட்டு தனது வயதைக் குறைத்துக் கொண்டாவது அவர்கள் வயதில் நாற்பதை அதிகரிக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றார்கள்.
அல்லாஹ்வும் அதை ஏற்றுக்கொண்டு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயதை 100 ஆக நிர்ணயித்து விட்டான். மனிதன் தனது ஆயுள் உட்பட எதையும் பிறருக்கு வழங்கிட இறைவன் அனுமதித்திருக்கின்றான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.]
எப்படி உலகம் தோன்றியது? மனிதன் தோன்றியது எப்போது? என்பது போன்ற கேள்விகள் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே இன்றும் நீடித்துக் கொண்டிருந்தாலும், அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் நம்பும் நமக்கு அவை பற்றிய உறுதியான, ஆதாரப்பூர்வமான, ‘அறிவுப்பூர்வமான பதிலகள்’ மிகத் தெளிவாகவே இருக்கின்றன.
முதல் மனிதர் யார்? அவர் எதிலிருந்து தோன்றினார் என்பதையெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனியாக திருக்குர்ஆன் மிக அற்புதமாக விளக்கி வைக்கின்றது. அந்த முதல் மனிதரின் வாழ்வு எப்படி இருந்தது? ஆயுள் எவ்வளவு? மரணம் எப்போது? எப்படி? என்ற வினாக்களுக்குக் கூட இஸ்லாம் தெளிவான பதிலைத் தந்திருக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், ‘‘அல்லாஹ், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து உயிரை ஊதியவுடன் அவர்கள் தும்மினார்கள். உடனே ‘அல்ஹம்துலில்லாஹ்’ (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று அல்லாஹ்வை அவனது அனுமதியுடன் புகழ்ந்தார்கள். உடனே இறைவன் சொன்னான், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு அருள் புரிவானாக).
ஆதமே! அதோ அமர்ந்திருக்கும் அந்த வானவர்களின் கூட்டத்தின் அருகில் சென்று அவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறுவீராக!’ இதைச்செவியுற்ற ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அப்படியே செய்தார்கள். பதிலுக்கு அந்த வானவர்கள், ‘வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்’ (உம்மீது அல்லாஹ்வின் அருளும் அமைதியும் இறங்கட்டும்) என்றுரைத்தார்கள். அதைப் பெற்றுத் திரும்பிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி ‘ஆதமே! இதுதான் உமக்கும், உமது சந்ததியினருக்கும் உரிய காணிக்கை!’ என்று அல்லாஹ் கூறினான்.
இதற்குப் பின் அவர்களுக்கு அவர்களின் பிள்ளைகளைக் காட்சியளிக்க வைத்தான். ‘யா அல்லாஹ்! இவர்களெல்லாம் யார்?’ என்று அவர்கள் வியந்து வினவ, இவர்களனைவரும் உமது பிள்ளைகளும், சந்ததியினரும் தான்’ என்றான் இறைவன்.
அவர்களை ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு வந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒருவரைப் பார்த்து ‘என் இறiவா! இவர் யார்?’ என்று வினவ, ‘இவரும் உமது பிள்ளைதான், தாவூது (அலைஹிஸ்ஸலாம்) என்பது அவருடைய பெயர்’ என்று அல்லாஹ் கூறினான்.
தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரு கண்களுக்கிடையே கவர்ச்சிகரமான ஒரு பிரகாசம் இலங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்து வியந்துபோன ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘யா அல்லாஹ்! இவருக்கு எத்தனை வயதைக் கொடுத்திருக்கிறாய்?’ எனக் கேட்டார்கள். ’60 வயது’ என்றான் இறைவன். ‘வெறும் 60 தானா? அதை அதிகரிக்கச்செய்!’ என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள். ‘நான் அவருக்கு 60 வயதுதான் எழுதியிருக்கிறேன்’ என இறைவன் சொன்னான். ‘அப்படியானால் என் வயதிலிருந்து 40 வயதை எடுத்து தாவூதுக்கு வழங்கிவிடு’ என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூற ‘சரி!’ என்று இறைவனும் கூறிவிட்டான்.”
இதன் பின்னர் அவர்கள் தன் துணைவியாருடன் சுவனத்தில் வாழ்ந்து தடுக்கப்பட்ட மரத்திலிருந்த கனியைப் புசித்து அதன் காரணமாக பூமிக்கு இறக்கப்பட்டு இங்கு வாழ்ந்து வரும்போது, ஒருநாள் மரணத்தின் தூதர் மலக்குல் மவ்த் திடீரென்று வந்து நின்றார்.
‘என்ன அவசரம் அதற்குள் வந்து விட்டீர்களே!’ எனக்கு ஆயிரம் வயதல்லவா? இன்னும் 40 ஆண்டுகள் மீதி இருக்கின்றதே!’ என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொல்ல, ‘ஆதமே! மறந்து விட்டீரா? உமது பிள்ளைகளில் ஒருவரான தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உமது ஆயுளிலிருந்து 40 ஆண்டுகளைக் கொடுத்தது நினைவில்லையா?’ என்று அல்லாஹ் கேட்டபிறகுதான் அவர்களுக்குப் பழைய நினைவு வந்தது.
‘இதன் பின்னர்தான் எந்தப் பிரச்சனையிருந்தாலும் வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே சாட்சிகள் வேண்டும் என்றும், எழுதி வைப்பது அவசியம் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டான்’ என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். திர்மிதீ ஷரீஃபில் இந்த நபிமொழி 3282 மற்றும் 3607 ஆகிய இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
சிந்திப்பதற்கு சுவையான இந்நிகழ்ச்சியின் மூலம் பல முக்கியமான விஷயங்களை நாம் பெறலாம்.
1. அல்லாஹ் மனித இனத்தின் முதல்வரை அழகிய அமைப்பில், பூரண வடிவில் முழு மனிதனாகவே படைத்தான் என்பது தெளிவாகின்றது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் விபரமறியாமல் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று குழம்பி, குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு அந்த குழப்பம் தேவையில்லை.
2. உயிர் ஊதப்பட்டவடன் அவர்களுக்கத் தும்மல் வந்திருக்கிறது. உடனே ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்திருக்கின்றார்கள். அதற்குப் பதில் கூறிய அல்லாஹ் மலக்குகளின் அருகே சென்று ‘ஸலாம்’ சொல்லச்செய்து பதிலையும் பெறறுக் கொண்டு தமக்கும், தம் சந்ததியினருக்கும் உரிய முகமன் (காணிக்கை) இந்த அழகிய அற்புத ‘ஸலாம்’ தான் என்று புரிந்து கொள்ள வைத்துள்ளான். நம்மைப்போன்று அவர்களுக்குக் குழந்தைப்பருவம் இருந்ததில்லை. எல்லா ஆற்றலும் மிக்க முழு மனிதனாகவே படைக்கப்பட்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
3. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இவ்வுலக முடிவு நாள் வரை தோன்றவிருக்கின்ற மனித சமுதாயம் முழுவதையும் அல்லாஹ் காட்டினான். தனது வயது 1,000 ஆண்டுகள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 60 தான் என்று தெரிந்தவுடன் மனதில் இரக்கம் ஏற்பட்டு தனது வயதைக் குறைத்துக் கொண்டாவது அவர்கள் வயதில் நாற்பதை அதிகரிக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக்கொண்டு தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயதை 100 ஆக நிர்ணயித்து விட்டான். மனிதன் தனது ஆயுள் உட்பட எதையும் பிறருக்கு வழங்கிட இறைவன் அனுமதித்திருக்கின்றான் என்பது இதிலிருந்து விளங்குகின்றது.
4. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது வயதை எண்ணிக் கணக்கிட்டு வந்திருக்கின்றார்கள் என்பதும் தமக்கு வழங்கப்பட்ட ஆயுள் 1,000 ஆண்டுகள் என்பதை நினைவில் வைத்திருந்தார்கள் என்பதும், மரணத்தின் தூதுவர் தம்மிடம் வரும் வரையில் எவ்வித நோய் நொடியுமின்றி ஆரோக்கியமாகவே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் இச்செய்தியின் மூலம் நன்கு புலனாகின்றது.
5. இயல்பான மனிதர்களின் பலவீனம் அவர்களிடமும் இருந்ததால் தனது ஆயுளில் 40 ஆண்டுகள் குறைந்ததற்கான காரணத்தை அவர்கள் உடனே கண்டுபிடிக்கவில்லை. எனவேதான் எனது ஆயுள் முடிவதற்கு இன்னும் 40 ஆண்டுகள் இருக்க அதற்குள் வந்தவிட்டீர்களே என்று மலக்குல் மவ்த்திடம் அவர்கள் கேள்விகளைத் தொடுத்தார்கள். ஆனால், அதற்குரிய காரணத்தை – அது, ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தானே உருவாக்கிக் கொண்டதுதான் என்று அல்லாஹ் கூறியதும், எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது மிக உயரிய மனிதத்தன்மையாகும். தனது தவறை அல்லது மறதியை நினைவூட்டப்பட்டால், தம் தவறை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ள வேண்டும். அது நம் ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இருந்ததால்தானே தடுக்கப்பட்ட கனியை புசித்ததற்குரிய பாவ மன்னிப்பை பூமியிலேயே பெற்று பரிசுத்தமானார்கள். பிடிவாதம் செய்திருந்தால் இப்லீஸின் நிலைதானே ஏற்பட்டிருக்கும்?
6. மரணம் என்ற வார்ததையைக் கேட்டவுடன் யாருக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுவத இயற்கை. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குல் மவ்த்தின் கன்னத்தில் அறைந்து அவர்களின் ஒரு கண்ணைப் பெயர்த்து எடுத்தார்கள் என்பதை அறிந்த நாம் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ‘ஏன் அதற்குள் வந்தீர்கள்?’ என்று கேட்டதை ஒரு குறையாகக் கருதக்கூடாது. மனிதர்கள் பொதுவாக யாராக இருந்தாலும் இவ்வாறு நடந்து கொள்பவர்கள்தான், எனினும் தனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் முழுமையாக ஒத்துழைத்தார்கள் என்பதை அறிந்து அவர்களின் சிறப்புகளைப் புரிந்து கொள்கிறோம்.
7. தனது ஆயுளில் 40 வயதை தாமாகவே வழங்கிட முன் வந்ததின் மூலம், இரக்க உணர்வும், தயாள குணமும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நிரம்பியிருந்தது என்பதற்கு இந்நிகழ்ச்சி ஆதாரதமாகும்.
அந்த இரக்க உணர்வும் தயாளகுணமும் அவர்களின் சந்ததிகளான நமக்கும் வர வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.