சகோதரி லறீனா அப்துல் ஹக்
“டீன் ஏஜ்” எனப்படும் வயதுப் பிள்ளைகளின் உள்ளத்தில் பல்வேறு வகையான மனக்கிளர்ச்சிகள் தோன்றுவது இயல்பு. அவர்களின் உள்ளத்தில் வித்தியாசமான, விசித்திரமான, வசீகரமான எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கத் தொடங்குவது இந்த வயதில்தான் என்றே சொல்லலாம்.
பெற்றோராரகிய நாம் இந்த பருவத்தை அடைந்திருக்கும் நமது பிள்ளைகளின் உளப்பாங்கையும் புறச்செயற்பாடுகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதற்க்காகக் காலம் முழுவது கண்ணீர் சிந்திக் கதறும் நிலையும் ஏற்படலாம்.
பாடாய்ப் படுத்தும் காதல் வயதுப் (TEEN AGE) பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒரு பெரும் பிரச்சனை என்று இந்தக் “காதல்” விவகாரத்தைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.
முதலில், பெற்றோராகிய நாம் ‘எதிர்பால் கவர்ச்சி’ என்பது இயல்பான ஒரு மனவெழுச்சி என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். சினிமா, சின்னத்திரை, திரையிசைப் பாடல்கள், மூன்றாந்தரப் பத்திரிக்கைகள், நாவலகள் என்பன “காதல்” உணர்வு பற்றிய அதீதத் கற்பனைகளை, ஒருவகையான சுவாரசியத்தை இளம் உள்ளங்களில் விதைப்பதில் பெறும் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையில் வெறும் எதிர்பால் கவர்ச்சியை “காதல்” என்று நம்பி அது புனிதமானது அதற்பொருட்டு பெற்றோரையும் குடும்பத்தையும் உதறித்தள்ளலாம் அது நிறைவேறாத பட்சத்தில் சாவதே ஒரே தீர்வு என்றெல்லாம் வீண் பிரமைகளை வளர்த்துக் கொள்ளும் இளம் சிறுவர் சிறுமியரைப் பற்றி நாம் அன்றாடம் காண்கிறோம், கேள்விபடுகின்றோம். இதனைத் தவிர்க்க என்ன வழி?
சிறு வயது முதலே பிள்ளைகளுடன் தோழமையுடன் கூடிய சுமூகமான, கலகலப்பான உறவ நிலையைப் பேணும் பெற்றோராக நாம் இருக்கும் பட்சத்தில் பிள்ளைகள் தமது விஷயங்களை ஒளிவுமறைவு இன்றி நம்மோடு பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள். பெற்றோர் தமது பிள்ளைகளுடன் வாழ்க்கை என்றால் என்ன? குடும்பம் என்றால் என்ன? பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்க பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள்! பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்துவருகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் முடிந்தளவு எளிமையாக அன்றாடம் கலந்துறையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
கணவன் மனைவி இருவரும் தொழில் பார்ப்பவர்களாக இருந்தால் இரவுணவை குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசியபடி உண்ணும் வழக்கத்தை கடைபிடிக்கலாம் இரவு உணவின் போதோ அதன் பின்போ சற்று மனம்விட்டு உரையாடலாம்.
உதாரணமாக “இன்னைக்கு உன் வகுப்பில் என்னென்ன பாடம் நடந்தது? எப்படி, பின்னேரம் விளையாட்டும் பயிற்சியெல்லாம் ஒழுங்கா நடந்ததா? உன் தோழிக்கு உடம்பு சரியில்லைன்னியே இப்போ எப்படியிருக்கு? இந்த செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்ச கையோடு எங்காவது பிக்னிக் போகலாம்” என்ற ரீதியிலான உரையாடல்கள் பெற்றோர் பிள்ளைகளிடையே உள்ள இடைவெளிகளை குறைக்கப் பெரிதும் உதவும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நம்முடைய பெற்றோரைவிட நமக்கு நெருக்கமான உறவு கிடையாது அவர்கள் எப்போதும் நமது நலனையே நாடுவார்கள். எந்தப் பிரச்சனை என்றாலும் அவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம். அவர்கள் நமக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கி உதவுவார்கள்; இக்கட்டான நிலைமைகளில் நம்மைக் கைவிடமாட்டார்கள் தோள்தந்து உதவித் தூக்கிவிடுவார்கள் என்பதான மனப்பதிவுகள் பிள்ளைகளின் மனதில் மிகக்கவனாமாக ஏற்படுத்தப்படுமானால், எத்தனையோ பிரச்சனைகளை எழாமலேயே தவிர்த்துக் கொள்ள முடியும் இன்ஷா அல்லாஹ். நமது சொல்லும் செயலும் பிள்ளை களின் மனதில் இத்தகைய நேர்மறைப் பதிவை ஏற்படுத்தத் துணையாக நிற்கும் என்பதில் நாம் யாரும் ஐயம் கொள்ளத்தேவையில்லை.
எவ்வளவுதான் வேலைப் பளு இருந்த போதிலும் குழந்தைகளுக்காக அன்றாடம் நமது நேரத்தில் ஒரு சிறு பகுதியையேனும் ஒதுக்குவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது. நிம்மதியான ஒரு குடும்ப வாழ்வு வாய்க்காத பட்சத்தில் எவ்வளவு பணமிருந்தென்ன, எவ்வளவு சொத்து சுகம் இருந்தென்ன! என்ற வாழ்க்கைத் தத்துவத்தை நாம் மனங்கொள்ளவேண்டும்.
மனிதன் நிம்மதியாக வாழ்வதற்காகத்தான் தொழில் செய்து பணம் சம்பாதிகிறானே தவிர அதுமட்டுமே வாழ்க்கையாகிவிடாது. எனவே பணம் சம்பாதிக்கும் பராக்கில் நாம் நம் குழந்தைகளுக்கு நம்முடைய அன்பயும் அரவணைப்பும் தேவைப்படும் தருணத்தில் அவற்றைத் தரத் தவறி விட்டு அவர்கள் கைசேதப்பட்டு வருந்தியழுவதில் எத்தகைய பிரயோசமும் இல்லை என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.
குழந்தைகளை நாம் உரிய கட்டுப்பாட்டோடு வளர்க்கிறோம், அன்பும் அரவணைப்பும் தேவையான வசதிவாய்ப்புகளும் வழங்கின்றோம், இருந்தும் பருவக்கிளர்ச்சியின் உந்துதலால நம்முடைய மகள் தவறிழைத்துவிடுகின்றால் என்று வைத்துக்கொள்வோம். இத்தகையதோர் இக்கட்டாண நிலையில் நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? எடுத்த எடுப்பில் வாய்க்கு வந்தவாறு திட்டி அடித்து இம்சித்துத் துன்புறுத்துவது சரியான விதத்தில் பிரச்சனையைத் தீர்ப்பதாக அமைந்துவிடுமா? ஒரு போதும் இல்லை. அத்தகைய அணுகுமுறை நிலைமையை இன்னுமின்னும் சிக்கலாக்கும் நம் மீதான வெறுப்பை வளர்த்து தான் நம்பி நேசிக்கும் நபர் மீதான விருபத்தையும் நம்பிக்கையயும் அதிகரிக்கச் செய்யும்.
என் பெற்றோருக்கு என்மீது அன்பில்லை, உண்மை அன்பு அந்த நபரிடமே உள்ளது என்ற விபரீதமான மனப்பதிவை ஏறப்டுத்திவிடக்கூடும். எனவே முள்மீது விழுந்துவிட்ட சேலையைக் கிழிந்துவிடாமல் மீட்டெடுக்கும் சாமர்த்தியத்துடனும் மிகுந்த கவனத்துடனும் தீர்க்க முயலவேண்டும். இதற்கு மிகுந்த பொறுமையும் நிதானமும் நமக்கு கைவர வேண்டும் என்பது மிக முக்கியமானது.
ஒரு நாள் மாலை நேரம் என் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மனி ஒருவர் வாடிச் சோர்ந்த முகத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். சிவந்த விழிகளும் உப்பிய முகமும் அவர் அதிகனேரம் அழுதிருக்கிறார் எனபதைச் சொல்லாமல் சொல்லி நின்றன். வழமையான உபசரிப்புகளைத் தொடர்ந்து ஏதாவது பிரச்சனையா? என்று மெல்ல விசாரித்தேன்.
உடனே பொலபொலவென கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டார். அவர் அழுது முடியும் வரை நான் பொறுமையாக இருந்தேன். சற்று நேரத்தில் தன்னை ஓரளவு ஆசுவாசப்படுத்திக் கொண்டவராய் திக்கித் திணறி தன்னுடைய பிரச்சனையை என்னோடு பகிர்ந்து கொண்டார். அவருடைய கணவர் பல வருடங்களாக வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று மொத்தம் மூன்று குழந்தைகள் அவருக்கு. மூத்த மகளுக்கு இப்போதுதான் 14 வயது பள்ளிக்கூடம் செல்லும் வழியில் யாரோ ஒரு பையனோடு காதல்.
தற்செயலாகப் புத்தகப் பையைப் பார்த்த போது சில கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் சிக்கியுள்ளன. ஆத்திரம் தாங்காமல் பிள்ளையைத் தாறுமாறாக அடித்து ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டிவிட்டு என்னைத் தேடி வந்துள்ளார். தன்னுடைய சகல சந்தோஷங்களையும் குடும்பத்துக்காகத் தியாகம் செய்துவிட்டு மத்திய கிழக்கு நாடொன்றில் வருடக்கணக்காகப் பாடுபட்டு உழைக்கும் தன் கணவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதே அந்தத் தாயின் குமுறலாக இருந்தது. இத்தகைய ஒரு நிலைமையில் இப்படிக் கரடுமுரடாக நடந்து கொண்டது தப்பு இது ஒரு பிழையான அணுகுமுறை என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னாலும் அதனைப் புரிந்துகொள்ளும் மன நிலையிலோ உளப் பக்குவத்திலோ அந்தத் தாயார் தற்போது இல்லை என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். எனவே பிரச்சினையை வேறு வகையில் கையாளுவது என்று தீர்மானித்துக் கொண்டேன்.
நான் அவரிடம் வீட்டுக்குச் செல்லுமாறும் இன்னும் சற்று நேரத்தில் தற்செயலாக வருவது போல அங்கே வருவதாகவும் கூறி வழியனுப்பி வைத்தேன். ஆயிற்று இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த அந்த வீட்டில் மயான அமைதி ஓர் அறைக்குள் இருந்து மட்டும் மெல்லிய விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. நான் சற்று உரத்த குரலில் ஸலாம் கூறினேன். நான் அங்கே செல்லும் போது வழமையாகப் பேசுவது போன்று சகஜமாகக் குரல் வைத்து கொண்டேன்.
பொதுவாகக் கொஞ்சம் பேசிவிட்டு அந்தப் பிள்ளையின் பெயரைக் குறிப்பிட்டு “எங்கே காணோமே!” என்று விசாரித்தேன். என் சைகையைப் புரிந்து கொண்டு “அதோ அவள் அந்த அறையில் இருக்கிறாள்” என்று கூறினார் அந்தத் தாயார் நான் மெல்ல உள்ளே சென்றேன். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் நிலைகுலைந்து போயிருந்தாள் அந்தச் சிறுமி. கன்னங்கள் இரண்டிலும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் அவள் நிலையை எனக்கு உணர்த்தின.
கட்டிலில் போய் அமர்ந்து “என்னம்மா?” என்றது தான் தாமதம், மடியில் முகம் புதைத்துக் “கோ” வென்று கதறினாள். ஆறுதலாக அவள் முதுகை வருடி, அழுது முடியும் வரை காத்திருந்தேன். பின்னர் அவளைத்தேற்றி என்னோடு வீட்டுக்கு அழைத்து வந்து நிதானமாக விசாரித்ததில் அந்த பெண்குழந்தையின் பிரச்சனையில் இருந்த மற்றொரு கோணம் எனக்குப் புலப்பட்டது.
உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பற்றி சற்று நிதானமாக விசாரித்துப் பார்க்க அந்த பெண்மணி முயற்சி எடுத்திருக்கவே இல்லை. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் அந்தப் பையன் தினமும் அவளைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றான். அதைப்பற்றி அவள் ஓரிரு தடவைகள் தன் தாயிடம் முறையிட்டும் அவர் அதனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து பின்னால் வருவதும் அவளைக் காதலிப்பதாகக் கூருவதுமாக ஓரிரு மாதங்கள் கதை தொடர்ந்துள்ளது. பின்னர் ஒரு நாள் சடுதியாக ஒரு கடிதத்தை அவளிடம் நீட்டி தான் அவளை உயிருக்குயிராகக் காதலிப்பதாகவும் அவள் தனக்குக் கிடைக்காத பட்சத்தில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி, நஞ்சுக் குப்பி ஒன்றைக்காட்டி பயமுறுத்தியிருக்கிறான் செய்வதறியாது திகைத்துப்போன அவள், வேறு வழியின்றி அந்தக் கடிதத்தை எடுத்துப் புத்தக்ப்பைக்குள் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள். இதுபோல நாலைந்து சம்பவங்கள் நடந்துள்ளன.
இதற்கிடையில், அவளின் வகுப்புத் தோழியர் அவனின் பெயரைக்கூறிக் கிண்டலடிக்கவும் அளவுக்கு நிலமை போய்விஅ அந்தக் “காதலை” ஏற்பதா வேண்டாமா என்ற இரண்டுங்கெட்டான் நிலமையில் தவிதிருக்கிறாள். அதேசமயம், தன்னை ஒருவன் விழுந்து விழுந்து காதலிக்கிறான் தன் பின்னாடியே அலைகிறான் என்பதையெல்லாம் உள்ளூரச் சற்றுப் பெருமிதமாகவும் உணர்ந்திருக்கிறாள். அவன் பெயரை அவள் பெயரோடு சேர்த்து தோழிகள் கேலி செய்யம் போது மனதுக்குள் இனம் புரியாத ஒரு கிளுகிளுப்பு எழவும் தவறவில்லை. அவள் தன்னுடைய நிலையை தேம்பித் தேம்பி அழுதபடி ஒளிவுமறைவின்றி ஒருவாறு சொல்லி முடித்தாள்.
எனக்கு அவளை நினைத்து பரிதாபமாக இருந்தது. பின்னர் நான் அந்தச் சிறுமியிடம் வாழ்க்கை என்பது அவள் நினைப்பதைப்போல அவ்வளவு சுலபமான ஒன்றல்ல. இதெல்லாம் வெறுமனே பருவக் கிளர்ச்சியால் ஏற்படும் வெறும் ஈர்ப்பு மட்டுமே அதனை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒரு திருமண வாழ்வை அமைத்துவிடமுடியாது படிக்கிற வயதில் காதல் என்ற வலையில் வீழ்ந்து வாழ்வை இழந்து சமூகத்தின் முன் அவமானப்படுவது எவ்வளவு பயங்கரமானது என்பதை நான் அவளிடம் எடுத்து விளக்கினேன்.
அவளுடைய தந்தை அவர்களின் நல்வாழ்வுக்காக குடும்பத்தைப் பிரிந்து மத்திய கிழக்கில் அல்லும் பகலும் எவ்வளவு கஷ்டப்படுகின்றார். அவர்களை நல்ல முறையில் வளர்ட்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக அவளின் அன்னை எவ்வளவு பாடுபடுகிறார் எந்த நேரமும் அவர்களைப் பற்றிய கவலையிலேயே பொழுதைக் கழிக்கிறார் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தினேன்.
கூடவே, அந்தப் பையனின் நிலைமை என்ன? படிப்பைப் பாதியில் கைவிட்டுவிட்டு பொழுதுபோக்காக ஊர் சுற்றித்திரியும் ஓர் இளைஞனைத் திருமணம் முடித்துப் பிரச்சனைகள் இன்றி மகிழ்வோடு வாழ்வதென்பது நடைமுறைச் சாத்தியமா? அவன் கடைசிவரை அவளை வைத்துக் கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவான் என்பதற்க்கான உத்தரவாதம் என்ன என்பன போன்ற கேள்விகளால் அவளது சிந்தனையைத் தட்டியெழுப்பினேன்.
நீ இல்லாவிட்டால் செத்துவிடுவேன் தற்கொலை செய்வேன் என்பன போன்ற வாக்குமூலங்கள் எவ்வளவு அபத்தமானவை, போலியானவை என்பதைப் பற்றி விளக்கினேன். ” நீ சம்மதிக்காவிட்டால் நஞ்சு குடிப்பேன்” என்று மிரட்டி பலாத்காரத்தால் பெறமுனையும் அன்பு ஒருபோதும் வாழ்க்கை முழுவதையும் கொண்டு நடாத்துவதற்கு உறுதுணையாய் அமையப் போவதில்லை என்றும் அப்படி மிரட்டுபவனிடம், “சரி, நஞ்சைக் குடி, எனக்கென்ன!” என்று விட்டேத்தியாய் பதில் சொன்னால் அவன் தானாகவே விலகிக் கொள்வான் என்றும் கூறவே, அவளுடைய முகத்தில் இலேசான ஒரு தெளிவு தோன்றுவதை அவதானித்தேன்.
பின்னர் அவளாகச் சற்று நேரம் யோசிக்கட்டும் என்று அவகாசம் அளித்து விட்டு சூடாக ஒரு கப் தேநீர் குடிக்குமாறு உற்சாகப்படுத்தினேன். “புதிய பாணியில் ஒரு தலையலங்காரம் செய்துவிடுகிறேன் வா!” என்று அழைத்து அன்போடு தலைவாரிப் பின்னிவிட்டேன். அன்றிரவு அவளது பிரச்சனை பற்றி மேற்கொண்டு நான் எதுவுமே பேசவில்லை. இரண்டு நாட்கள் அவள் என்னோடு இருந்தாள் ஒரு மகளாய், தோழியாய் என்னோடு வெகு உற்சாகத்தோடு அவள் அந்த இரண்டு நாட்களையும் கழித்தாள். வீட்டை அடையும் வேளை அவள் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என் காதில் எதிரொலிக்கின்றன;
“ஆன்ட்டி, நீங்க என் உம்மாவா இருந்திருக்கக் கூடாதான்னு ஆசையா இருக்கு. எங்க உம்மா என்கிட்ட இன்னும் கொஞ்சம் அன்பாய், புருஞ்சு கொள்ளுற மனசோடு நடந்திருந்தா இந்த மாதிரி ஒரு பிரச்சனைல நான் மாட்டிக்கொண்டிருக்கவே மாட்டேன்னு தோணுது ஆனா, இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல ஆன்ட்டி, நான் ஒரு நல்ல மகள்தான்னு எங்க உம்மாவுக்கு புரிய வைப்பேன். நல்லாப் படிச்சி எங்க வாப்பா கனவை நனவாக்குவேன். இன்ஷா அல்லாஹ்!”
இதற்கிடையில், அந்தப் பெண்ணுடன் துணைக்குக் கூடவே அவளது தாயார் சென்று வரலானார். தன் மகளின் மனமாற்றமும் வெளிப்படையான பேச்சும் அந்தத் தாயின் மனதை நெகிழச் செய்தன. இருவர் மத்தியிலும் இருந்த இடைவெளி படிப்படியாகக் குறையத் தொடங்கியது அவர் தன்னுடைய ஆச்சரியத்தை என்னோடு பகிர்ந்து கொண்டபோது மனதுக்கு நிறைவாக இருந்தது.
மேற்படி சம்பவத்தின் மூலம் நாம் பெறத்தக்க படிப்பினைகள் எவை என்று நோக்குவோம். முதலாவதாக, தன்னுடைய வயது அந்த பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் எத்தகைய மனத்தடையும் இன்றி வெளிப்படையாகத் தம்மோடு கலந்துரையாடக்கூடிய சூழலை நாம் வீட்டில உருவாக்கிக் கொள்ளவேண்டும். தனக்கொரு பிரச்சனை வருமிடத்து நேரே தன் பெற்றோரிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய தோழமையான, புரிந்துணர்வுள்ள நிலைமை குடும்பத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அழுத்தமாகச் சொல்வதானால் ஒரு தாய் தன் வயது பெண் பிள்ளையிடம் ஒரு தோழியைப் போலப் பழக வேண்டும். அவளுடன் மகிழ்ச்சியோடு சிரித்துப் பேசி, நாலு விஷயங்களை உற்சாகத்தோடு கலந்தாலோசிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தோழியர் யார் யார் அவள் எங்கெல்லாம் சென்று வருகிறாள், எத்தனை மணிக்கு எங்கே வகுப்பு நடக்கிறது. அங்கு சென்று வர எடுக்கும் கால அவகாசம் என்ன முதலான சகல் விபரங்களையும் அறிந்து வைத்திருப்பவராக ஒரு தாய் இருக்க வேண்டும்.
பருவ வயதை அடைந்த ஒரு பெண் பிள்ளை தனக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகளைத் தன் தாயிடமே முறையிட முனையும் என்பதே யதார்த்தம். அத்தகைய சந்தர்ப்பங்களை அலட்சியம் செய்யாமல் காது கொடுத்துக் கேட்டு அவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய கடமை பெற்றோருக்கு குறிப்பாகத் தாய்க்கு உண்டு. மேலே நாம் கண்ட சம்பவத்தில் தன்னை ஒருவன் பிந்தொடர்ந்து வருகிறான் என்று தன் மகள் முறையிட்டபோதே அது பற்றி அந்தத் தாய் கவனம் செலுத்தியிருந்தால் பிரச்சனை முற்றாமல் ஆரம்பத்திலேயே அதைத் தடுத்திருக்க முடியும்.
அவ்வாறே, மகளின் புத்தகப் பையில் இருந்து கடிதம் முதலானவை அகப்பட்டதும் எடுத்த எடுப்பில் ஆவேசமாக நடந்துகொள்ளாமல், என்ன நடந்தது, ஏன் இப்படி நடந்துகொண்டாய் என்பதையெல்லாமல் நிதானமாக விசாரித்திருக்கவேண்டும். அப்படிச் செய்திருந்தால் நடந்துள்ள சம்பவத்தின் மறு பக்கமும் தன் மகளின் மீது முழுத்தவறும் இல்லை என்பதையும் அந்தத் தாயாரால் புரிந்துகொள்ள வாய்ப்புப் கிடைத்திருக்கும்.
இப்படிக்கு
சகோதரி லறீனா அப்துல் ஹக்
நன்றி: விடியல் வெள்ளி