லைலா மஜ்னூன் காதல்!
மவ்லவி, எஸ்.ஏ. காஜா நிஜாமுத்தீன் யூஸுஃபி
[ மனிதக் காதலைக் கருவியாகக் கொண்டு இறைக் காதலை மிக எளிதாகப் பேசிவிடமுடியும் என்பதை உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் கண்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ஆன்மிக உணர்வுகளை மனிதத் தளத்தில் பிரதிபலித்துக் காட்டுவதற்கு காதலை விடவும் சிறந்த கருவி வேறு இல்லை! எனவே சூஃபிகள் லைலா-மஜ்னூன் குறியீட்டைத் தங்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள்.]
லைலா மஜ்னூன் என்றால் எல்லோருக்கும் ‘காதல் ஜோடி’ தான் நினவுக்கு வரும். மஜ்னூனுடைய உண்மையான பெயர் என்னவென்றுகூட பல பேருக்குத் தெரியாது. மஜ்னூன் அவருடைய பட்டப்பெயர். மஜ்னூன் என்றால் பைத்தியம் என்று பொருள். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கைஸ் (Khaise) இந்தப் பெயர் மஜ்னூன் என்று எப்படி மாறியது என்பது சுவாரசியமான கதை.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்குப்பின் இமாம் ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிலாஃபத் ஆட்சி பொறுப்பேற்றார்கள். எனினும் மக்கள் நலன் கருதியும், பிளவை நீக்கி ஒற்றமையை ஏற்படுத்துவதற்காகவும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டார்கள். இவ்விதமாக இஸ்லாமிய உலகம் கருத்து வேற்றுமைக்குப்பிறகு ஒன்றுபட்டது.
என்னுடைய மகன் (பேரன்) மூலம் முஸ்லிம்களின் இரு பிரிவினர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச்சென்றதை அந்த நேரத்தில் நிதர்சனமாகப் பார்க்க முடிந்தது.
ஒருமுறை ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, கைஸ் என்பவரைப் பார்த்து, ‘நான் ஆட்சியை அதற்குத் தகுதியான ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறேன். இது நல்லதுதானே!’ என்று கேட்டார்கள். அதற்கு கைஸ் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு கைஸிடம், ‘என்னுடைய கேள்விக்கு ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை?’ என்று மீண்டும் கேட்டார்கள்.
அதற்கு கைஸ், ‘ஆட்சியை லைலாவிடம் கொடுத்திருந்தால் அழகாக இருந்திருக்கும்!’ என்று கூறினார். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அன்த்த மஜ்னூன்’ – ‘நீ பைத்தியம்’ என்று கூறிவிட்டார்கள். அன்றிலிருந்து கைஸ{டைய பெயர் மஜ்னூன் என்றாகி விட்டது.
மஜ்னூனுடைய தந்தை ஒருநாள் மகனிடம், ‘உன்னால் எனக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. உன்னை கஃபத்துல்லாவுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு போய் நீ பாவமன்னிப்புத் தேடு. உன்னுடைய தவறை திருத்திக்கொள்!’ என்று கூறினார்.
கஃபத்துல்லாவில் ‘மகாமெ இப்ராஹீம்’ என்ற இடத்தில் நின்று அவருடைய தந்தை மகனிடம், ‘லலாவின் மீதுள்ள மோகத்திலிருந்து மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று ‘துஆ’ செய்’ என்று கூறினார்.
இதைக்கேட்ட மகன், ‘இறைவா! என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் மன்னிப்புத் தேடுகிறேன். ஆனால் லைலாவுடைய பிரியத்திலிருந்து ‘தவ்பா’ (பவமன்னிப்பு) செய்ய மாட்டேன்’ என்று கூறினார்.
இதைக்கேட்ட தந்தை கோபப்பார்வையோடு மகனைப் பார்த்தார். தந்தையின் கோபத்தை உணர்ந்தும் மஜ்னூன், ‘அவளின் மீதுள்ள பிரியத்தை ஒருபோதும் என்னுடைய உள்ளத்தை விட்டும் அகற்றிவிடாதே, யார் யாரெல்லாம் இந்த துஆவிற்கு ஆமீன் சொல்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் (கிருபை) செய்வானாக!’ என்று கூறினார்.
‘ஒரு பொருளைப் பிரியப்படுவது கண்ணைக் குருடாக்கிவிடும், காதை செவிடாக்கிவிடும்’ என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். படைப்புகளின் மீது அளவுகடந்த பிரியம், படைத்தவனை விட்டும் தூரமாக்கிவிடும்.
அல்லாஹ் தனது தூதரைப் பார்த்துக்கூட, ‘…இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து கொண்டிருப்பீராக! அனைத்தையும் விட்டு ஒதுங்கி முழுமையாக அவனுக்காகவே ஆகிவிடுவீராக!’ என்று கூறினான். அல்லாஹ்வின்மீது முழுமையான பிரியம் இருப்பதற்கு அடையாளம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதுதான் என்பதை திருக்குர் ஆனும் உணர்த்துகிறது. (குத்பாதெ துல்ஃபிகார்)
சில உண்மை சம்பவங்களைத்தழுவிய நாடோடிக்கதையாகவும் லைலா மஜ்னு அறியப்படுகிறது :
”லைலா மஜ்னூன்” நாடோடி அரபுக் கதையைப் பாரசீக மொழியில் கற்பனை கலந்து எழுதிய கவிஞர் நிஜாமி அதை உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக ஆக்கிவிட்டார். பதினாறாம் நூற்றாண்டில் அதை ஃபுஜூலி என்னும் கவிஞர் துருக்கிமொழியில் காவியமாக்கினார். அதனைத் தொடர்ந்து பலரும் பல்வேறு மொழிகளில் ‘லைலா-மஜ்னூன்’ காவியம் எழுதியிருக்கிறார்கள். நிஜாமி, ஃபுஜூலி ஆகியோரின் காவியங்களில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ரீமிக்ஸ் ‘லாலா-மஜ்னூன்’கள் தோன்றினார்கள்.
நிஜாமியும் ஃபுஜூலியும் சூபி மரபில் இருந்தவர்கள் என்பதால் ‘லைலா-மஜ்னூன்’ கதைக்கு ஆன்மிகக் குறியீட்டுத் தன்மையை வழங்கிவிட்டார்கள்.
மனிதக் காதலைக் கருவியாகக் கொண்டு இறைக் காதலை மிக எளிதாகப் பேசிவிடமுடியும் என்பதை உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் கண்டுள்ளன. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் ஆன்மிக உணர்வுகளை மனிதத் தளத்தில் பிரதிபலித்துக் காட்டுவதற்கு காதலை விடவும் சிறந்த கருவி வேறு இல்லை! எனவே சூஃபிகள் லைலா-மஜ்னூன் குறியீட்டைத் தங்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்கள்.
லைலாவின் தெருவில் அலைந்துகொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:
“லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச் சுவற்றின் மீதோ
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ
காதல் கொண்டவனல்ல நான்.
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!”
“தப்லீக்” இயக்கத்தின் நூலான “அமல்களின் சிறப்புக்கள்” என்னும் நூலில்கூட இந்தக் கவிதை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது! இறைவனின் நினைவில் சதா மூழ்கியிருத்தல் என்னும் நிலையை விளக்குவதற்கு இந்தக் கவிதையை மவ்லவி ஜகரிய்யா எடுத்தாண்டுள்ளார் என்பது மனிதக் காதலை வைத்து இறைக் காதலை விளக்கும் உத்தியைக் காட்டுகிறது. இறைவனைக் காதலியாகக் குறிப்பிடும் சூபி “நாயகி-நாயக” பாவனையின் சாயை இது.