அண்மையில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிதலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் பெண்களின் உடைநெறி சம்பந்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது சம்பந்தமாக பலவித விவாதங்களும் நடைபெருகின்றன.
ஹிஜாப் என்பது இஸ்லாமிய மார்க்க கடமையா? அல்லது சுயவிருப்பின் பிரகாரம் அணியும் உடையா?
இஸ்லாமிய உடைநெறி ஒரு குறிப்பான வடிவமைப்பை கருதுகிறதா? அல்லது எது கண்ணியமான உடையென கருதப்படுகிறதோ அதனை தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து அணியலாமா? எனப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
வழிதவறிய கருத்துக்கள்
ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது.
உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ”தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே!” எனக் கூறுகிறார்.
மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் ‘ஹிஜாப்” அல்லது ‘ஹிமார்” உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான்
அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)
குமுர் என்பது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்
அஸ்மா-பின்-அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகத்தை அப்பாற் திருப்பியவாறு ‘ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல” எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.
அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெறிந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர்.
வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு ‘பந்தனா” அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.
பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விஷயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான்
“ஆனால் உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தயையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)
அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் ‘அவ்ரா” ஆகும் (Awrah) (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).
சூரா அந்நூரில் அல்லாஹுத்தஆலா விவரிக்கின்றான்
“இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது.
இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)
இப்ன் அப்பாஸ் அவர்கள் ‘வெளியில் தெரியக்கூடியவை” என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.
மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல. அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ”நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது.”” (அல்-முஹல்லா தொகுதி 3)
பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள். ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ், சூரா “அல்-அஹ்சாப்” யில் கூறுகிறான்.
“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)
உம்மு அதியா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். ‘அல்லாஹ்வின் து}தரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன” என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் ‘ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்.” என பதிலளித்தார்கள்.
ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.
ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து அவர்களை சந்தித்தபோது ‘இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்.” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.
இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள். சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
“ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் ‘சூரா அந்நூர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்” எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)
ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!
source: http://tamilhome.blogspot.com/