பெண்ணுரிமையின் பிறப்பிடம் இஸ்லாம்
[ கர்ப்பிணிப் பெண்களின் இத்தாவின் தவணை காலம் பிரசவிக்கும் வரையாகும். (கருத்து: அல்குர்ஆன் 65:4) கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்குப் பின் மறுமணம் செய்துகொள்ளலாம். உதிரப் போக்கிலிருந்து சுத்தமாகும் வரைக் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. பிரசவித்தப் பிறகு ஏற்படும் உதிரப் போக்கு உடலுறவுக்குத் தடையே தவிர திருமணத்திற்குத் தடை இல்லை.
மார்க்கத் தீர்ப்பு என்று யார் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தமக்குரிய மார்க்கத் தீர்ப்பை எங்கு பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தமக்குரிய மறுமணம் சட்டத்தைத் தெரிந்து கொள்கிறார்.
கணவனை இழந்து, பிரசவித்தவுடன் மறுமணம் செய்ய தயார்படுத்தி, பெண் பார்க்க வருபவர்களுக்காக தம்மை அலங்கரித்துக்கொண்டால் ஊராரின் இடித்துரைப்புக்கு ஆளாக நேருமே என்ற எண்ணமில்லை. – அன்றைய மக்களும் அவ்வாறு இல்லை என்பது தனிவிஷயம். – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படாமல் இவ்வாறு எதையும் பொருட்படுத்தாது பெண்மையின் உணர்வுக்கான உரிமைக்கு இஸ்லாமின் தீர்வு என்ன? எனக் கேட்டறிந்து செயல்பட்டனர்.]
பெண்ணுரிமையின் பிறப்பிடம் இஸ்லாம்
இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று, இறைமறையின் ஒளியில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலில் வாழ்ந்திட கடமைப்பட்டுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை முறைப்படி அறிந்தவர்களாக இல்லை. என்பதை கசப்புடன் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஆண் பெண் இளமைப் பருவ காலங்களில் உணர்வின் தூண்டுதலால் திருமண உறவின் அவசியத் தேவை இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன! தாம்பத்திய உறவின் அவசியம் இருபாலினருக்கும் பொதுவானது.
பெண்களின் உணர்வுக்குத் தடைவிதித்து, கணவன் இறந்து விட்டால் மனைவி மறுமணம் செய்தல் கூடாது என்று இளம் மனைவியும் நியாயமான உணர்வைக் கட்டுப்படுத்தி உருக்குலைந்து காலமெல்லாம் கைம்பெண்ணாக வாழ்ந்தாக வேண்டும். இன்னும் ஒருபடி மேலே சென்று, கணவன் மரணித்துவிட்டால் அவனது மனைவி கணவனின் சடலத்துடன் உடன் கட்டையேறி தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளவும் வேண்டும். என்றெல்லாம் மதங்களின் பெயரால் சட்டமியற்றி அங்கீகரிக்கப்பட்டிருந்தன. (ஏற்கெனவே நடைமுறையில் இருந்த நாட்டு நடப்பை சொல்வதைத் தவிர எந்த மதத்தையும் இங்கு விமர்சிக்கும் நோக்கமல்ல என்பதைப் பதிவு செய்து கொள்கிறோம்)
பெண்களின் விருப்பத்தை அறியாமல், அவர்களின் ஒப்புதல் பெறாமல் நடந்தேறுகின்ற பலத் திருமணங்கள் அவர்தம் இல்வாழ்க்கையில் விரும்பத்தகாத பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
“கணவனைப் பிடிக்காததால் புதுமணப்பெண் தற்கொலை” போன்ற தலைப்புச் செய்திகளின் ஆணிவேர், கட்டாயத் திருமணம்தான் என்பது திண்ணம்.பிறமதக் கலாச்சாரத்தை ஒத்து, “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” என்ற கட்டுப் பெட்டிகளாகத் தன் பெண்மக்களை இஸ்லாம் பொய்வாழ்க்கை வாழப் பணிக்கவில்லை.கன்னி(வயது)கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்.
எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டேன். அந்த(க் கட்டாய)த் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “செல்லாது” என்று அறிவித்தார்கள். (அறிவிப்பாளர்: கன்சா பின்த் கிதாம் ரளியல்லாஹு அன்ஹா, பதிவு : புகாரி 4743).
வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப் பட்டுள்ள அண்ணலாரின் மேற்கண்ட இந்த அறிவிப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிற்றைக் காலத்திலும் பின்பற்றப் பட்டது: ஜஅஃபரின் பேத்தி ஒருவர், தனக்கு விருப்பமில்லாத ஒருவருக்குத் தன்னை மணமுடித்துக் கொடுக்கத் தன் பொறுப்பாளர் முடிவெடுத்தபோது, தனக்கு (அந்தத் திருமணத்தில்) விருப்பமில்லை என்பதை ஊர்ப் பெரியவர்களும் அன்சாரிகளும் ஜாரியாவின் மகன்களுமான அப்துர் ரஹ்மான் மற்றும் முஜம்மிஉ ஆகிய இருவருக்கும் தூதனுப்பித் தெரிவித்தார்.
“(அல்லாஹ்வின் தூதரின் ஆட்சிக் காலத்தில்) கன்சாவின் விருப்பத்திற்கு மாற்றமாக அவளுடைய தந்தை கிதாம் முடித்து வைத்தத் திருமணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லாது என அறிவிப்புச் செய்தார்கள். (அந்த முன்மாதிரியைப் பின்பற்றி நாங்கள் தீர்ப்பளிப்போம்) அஞ்ச வேண்டாம்” என்று அவ்விருவரும் கூறியனுப்பினர். (அறிவிப்பாளர்: சுஃப்யான் ரஹ்மதுல்லாஹி அலைஹி, பதிவு : புகாரி – 6454).”
கணவனை இழந்த பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை :
உணர்வுகள் இருபாலினருக்கும் பொதுவானது அதில் ஏற்றத்தாழ்வு எதுவுமில்லை. என இஸ்லாம் பறைசாற்றியதோடு, விவாக விலக்கு செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்த ஒரு பெண் விரும்பினால் இத்தா தவணை முடிந்தவுடன் மறுமணம் செய்துகொள்ள பெண்ணுரிமை வழங்கிய ஒரு சம்பவம்:
என் தந்தை அப்துல்லாஹ் இப்னு உத்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், உமர் இப்னு அப்தில்லாஹ் இப்னி அர்கம் அஸ்ஸுஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் ஹாரிஸ் அல் அஸ்லமிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சுபைஆ மார்க்கத்தீர்ப்பு கேட்டது பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று) உமர் இப்னு அப்தில்லாஹ் அவர்கள் (கேட்டறிந்து என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்.
சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு இறந்துவிட்டார்கள். அப்போது ‘சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்து நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை. (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார்.
(பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார். அப்போது, பனூ அப்தித் தார் குலத்தில் ஒருவரான ‘அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக் ரளியல்லாஹு அன்ஹு சுபைஆ அவர்களிடம் வந்து, ‘திருமணம் புரியும் ஆசையில் பெண் பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறப்புக்குப் பின் இருக்க வேண்டிய ‘இத்தா’ காலமாகிய) நான்கு மாதம் பத்து நாள்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு) மணம் புரிந்து கொள்ள முடியாது” என்று கூறினார்கள்.
சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா கூறினார்: இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் என்னுடைய உடையை உடுத்திக் கொண்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, ”நீ பிரசவித்துவிட்டபோதே (மணந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்து கொள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி (நூல்கள் – புகாரி 3991, 4532, 4909, 4910, 5318-5320. முஸ்லிம் 2973)
கணவர் மரணிக்கும் போது கர்ப்பமாக இருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், கணவர் இறந்து நாற்பது நாள்களில் பிரசவித்தார் என வேறு அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமெனும் இறை மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மேல்கண்ட நபிவழிச் செய்தியில் பல படிப்பினை உள்ளன.
கர்ப்பிணிப் பெண்களின் இத்தாவின் தவணை காலம் பிரசவிக்கும் வரையாகும். (கருத்து: அல்குர்ஆன் 65:4) கணவனை இழந்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்குப் பின் மறுமணம் செய்துகொள்ளலாம். உதிரப் போக்கிலிருந்து சுத்தமாகும் வரைக் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. பிரசவித்தப் பிறகு ஏற்படும் உதிரப் போக்கு உடலுறவுக்குத் தடையே தவிர திருமணத்திற்குத் தடை இல்லை.
மார்க்கத் தீர்ப்பு என்று யார் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், தமக்குரிய மார்க்கத் தீர்ப்பை எங்கு பெறவேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்த சுபைஆ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று தமக்குரிய மறுமணம் சட்டத்தைத் தெரிந்து கொள்கிறார்.
கணவனை இழந்து, பிரசவித்தவுடன் மறுமணம் செய்ய தயார்படுத்தி, பெண் பார்க்க வருபவர்களுக்காக தம்மை அலங்கரித்துக்கொண்டால் ஊராரின் இடித்துரைப்புக்கு ஆளாக நேருமே என்ற எண்ணமில்லை. – அன்றைய மக்களும் அவ்வாறு இல்லை என்பது தனிவிஷயம். – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படாமல் இவ்வாறு எதையும் பொருட்படுத்தாது பெண்மையின் உணர்வுக்கான உரிமைக்கு இஸ்லாமின் தீர்வு என்ன? எனக் கேட்டறிந்து செயல்பட்டனர்.
இன்று இந்த சூழ்நிலையில் ஒரு பெண் இருந்து அவர் மறுமணம் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்திக்கொண்டால், – இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படைப் பெண்ணுரிமைக்கு – இந்த சமூகமே தடைகற்களாக அமைந்து பழித்துரைப்பதை எழுத்தில் வடிக்க இயலாது.
source: http://thaweedh.blogspot.com/