ஸஹாபாப் பெருமக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விதத்தை இன்றைக்கு வாழும் முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற சகோதரர்களும் தெரிந்து கொண்டால் இஸ்லாம் எவ்வளவு உயர்வான கண்ணியமான மார்க்கம் என்பதை உணர்வார்கள். அதே சமயம் அந்த சத்திய ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டுதலாக இருந்தவர்களின் குணவொழுக்கமும், பண்பும் எண்ணியெண்ணி வியக்க வைக்கிறது.
அது முரட்டுக்காளையாக இருந்து பெருமானார் முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொல்வதற்காக வாளேந்தி புறப்பட்டு தம் தமக்கையின் வீட்டில் காதில் விழுந்த இறையோனின் திருவசனத்தைக் கேட்டு கண்ணீர்வடித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தின் அரணாகத்திகழ்ந்து வெற்றிபல குவித்து இஸ்லாத்தை பலப்படுத்திய உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களாக இருக்கட்டும்,
அல்லது
‘நீங்கள் தற்சமயம் காஃபிராக இருக்கிறீர்கள், இந்நிலையில் முஸ்லிமாக இருக்கும் என்னை திருமணம் முடிக்க நாடும் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த செயலையே நீங்கள் எனக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையான மஹராக ஏற்றுக்கொள்கிறேன், இதைத்தவிற வேறு எதையும் நான் உங்களிடம் கேட்க மாட்டேன் என்றுரைத்த ஹளரத் உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் பண்பாக இருக்கட்டும். (இஸ்லாத்தைத்தழுவி அவர்களை மணந்து கொண்டவர் வேறு யாருமல்ல இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற ஸஹாபிகளில் ஒருவராகத்திகழ்ந்த அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களே!)
அல்லது
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டுவதையே வழக்கமாகக் கொண்டவராக இருந்து இஸ்லாத்தைத் தழுவியிருந்த தனது மகனான ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நேர்வழியிலிருந்து தடம்புறளச்செய்ய முயன்று தோல்விகண்டு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயாராக இருக்கட்டும் ஸ ஒவ்வொன்றும் நமது நெஞ்சின் ஆழத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பொன்னேடுகளாகும்.
பிரசித்திப்பெற்ற இரண்டாம் கலீஃபாவான உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை தழுவிய சம்பவத்தை இங்கு காண்போம்:
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமைத் தழுவினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.
‘அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக ரளியல்லாஹு அன்ஹு இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் (ரலி) உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் ரளியல்லாஹு அன்ஹு இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார்.
மற்றொருபுறம், கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக, சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.
உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ரளியல்லாஹு அன்ஹு ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் கூற,
“இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள்” (அல்குர்ஆன் 69:40, 41)
என்ற வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்கள்.
அடுத்து இவர் ‘ஜோசியக்காரராக இருப்பாரோ!’ என்று என் உள்ளத்தில் நான் கூற,
“(இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 69:42, 43)
என்ற வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இது உமர் ரளியல்லாஹு அன்ஹு இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும், அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியில் அவரை சந்தித்து,
‘உமரே (ரளியல்லாஹு அன்ஹு) நீ எங்கு செல்கிறாய்?’ என்று கேட்க,
‘நான் முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கொல்லச் செல்கிறேன்.’ என்றார்.
அதற்கு நுஅய்ம் ‘நீ முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?’ என்று அச்சுறுத்தினார்.
அவரை நோக்கி ‘நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது’ என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்.
அதற்கு நுஅய்ம் ‘உமரே! (ரளியல்லாஹு அன்ஹு) ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்’
என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் (ரளியல்லாஹு அன்ஹு) விரைந்தார்.
அப்போது அங்கு கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமரின் (ரளியல்லாஹு அன்ஹு) சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள ‘தாஹா எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு வருவதை அறிந்த கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் (ரளியல்லாஹு அன்ஹு) சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் ரளியல்லாஹு அன்ஹு,
‘உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?’ என்று கேட்டதற்கு
‘நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை’ என்று அவ்விருவரும் கூறினார்கள்.
அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு ‘நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார்.
அதற்கு அவரது மச்சான் ‘உமரே! (ரளியல்லாஹு அன்ஹு) சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?’ என்று கேட்க,
உமர் ரளியல்லாஹு அன்ஹு கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் ரளியல்லாஹு அன்ஹு கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.
கோபம் கொண்ட உமரின் (ரளியல்லாஹு அன்ஹு) சகோதரி,
‘உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று உரக்கக் கூறினார்.
தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் ரளியல்லாஹு அன்ஹு நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது.
‘உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
அதற்கு அவரது சகோதரி ‘நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்’ என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார்.
பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி
‘பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் ‘ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்’ என்று கூறி, தொடர்ந்து ‘தாஹா…. என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு ‘இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டுங்கள்!‘ என்று கேட்டுக் கொண்டார்.
உமரின் (ரளியல்லாஹு அன்ஹு) பேச்சைக் கேட்ட கப்பாப் ரளியல்லாஹு அன்ஹு வெளியேறி வந்து,
‘உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, ‘அல்லாஹ்வே! உமர் ரளியல்லாஹு அன்ஹு அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்’ என்றுரைத்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு தனது வாளை அணிந்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை ரளியல்லாஹு அன்ஹு வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள்.
மக்கள் ‘உமர் ரளியல்லாஹு அன்ஹு வந்திருக்கிறார்’ என்று கூறினார்கள். ‘ஓ! உமரா! (ரளியல்லாஹு அன்ஹு (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!’ என்று ஹம்ஜா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை (ரளியல்லாஹு அன்ஹு) சந்தித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமரின் ரளியல்லாஹு அன்ஹு சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி
‘உமரே! (ரளியல்லாஹு அன்ஹு) நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் (ரளியல்லாஹு அன்ஹு) இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!’ என்று கூறினார்கள்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு ‘அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்’ என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.)
இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;
எனது தாயார் இணைவைப்பு கொள்கையில் இருந்தபோது இஸ்லாத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்து வந்தேன். அவர் மறுத்து வந்தார். இன்றும் அதுபோல் அழைப்பு விடுத்தபோது அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறித்து நான் விரும்பாத வார்த்தைகளை என் காது பட கூறினார். நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதரிடம் சென்று நடந்தவற்றை கூறி, இந்த அபூஹுரைரவின் அன்னைக்கு நேர்வழி கிடைத்திட பிரார்த்தியுங்கள் என்றேன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இறைவா! அபூஹுரைராவின் அன்னைக்கு நல்வழி காட்டுவாயாக என்று பிரார்த்தித்தார்கள். இதைக்கேட்டு நான் மகிழ்ந்தவனாக புறப்பட்டு எனது வீட்டை அடைந்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது . எனது காலடி சத்தத்தை அறிந்துகொண்ட என் தாயார், அபூஹுரைரா! அங்கே இரு என்றார்கள்.
அப்போது தண்ணீர் சிந்தும் சத்தம் கேட்கவே என் தாயார் குளித்துவிட்டு வந்து கதவை திறந்தார். பின்பு ”அபூஹுரைராவே! அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிகூறுகிறேன்” என்றார்கள்.
உடனே மகிழ்ச்சியில் அழுதவனாக இறைத்தூதரை சந்தித்து, யாரசூலுல்லாஹ்! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை அங்கீகரித்துவிட்டான், அபூஹுரைராவின் அன்னைக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றேன். அதைக்கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனை போற்றி புகழ்ந்தார்கள்.
அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! இறை நம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும், என்தாயார்மீதும் நேசம் ஏற்படவும், அவ்வாறே அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும் பிரார்த்தியுங்கள் என்றேன்.
நபியவர்கள், ”இறைவா! உன்னுடைய அடியார் அபூஹுரைரா மீதும், அவருடைய தாயார் மீதும் இறை நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறை நம்பிக்கையாளர்கள் மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.
எனவேதான், என்னை பார்க்காவிட்டாலும் என்னைப்பற்றி கேள்விப்படும் எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை. (நூல்: முஸ்லிம்)