பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; ‘வியாபாரத்தினிடையே, அதிகமாக சத்தியம் செய்வதைக் கைவிடுங்கள். ஏனென்றால், சத்தியம் செய்வதால் வியாபாரம் நன்கு நடந்தாலும், பிறகு அதில் எந்த பரக்கத்தும் (அபிவிருத்தியும்), நன்மையும் இல்லாது செய்துவிடும்.’ (நூல்: முஸ்லிம்)
சில வியாபாரிகள், தங்களின் சத்தியத்தின மூலம் பொருட்களை வாங்க வருவோரின் மனதில் பொருளும் நல்ல பொருள், விலையும் சரியான விலை என்ற எண்ணத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இது அல்லாஹ்வின் பேரை சிறிதும் பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துவதாகும். இதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களின் இனிய போதனைகளால் விளக்கி, விலக்கியிருக்கிறார்கள்.
இத்தகைய சத்தியங்களினால் வியாபாரிகள் விரும்பும் வியாபாரம் விரிவடையலாம். ஆயினும் அதில் அபிவிருத்தி இருக்காது என்பதைத்தான் மேலுள்ள நபிமொழி உணர்த்துகிறது.
சத்தியங்கள் செய்யும் கெட்டப்பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று, வியாபாரிகளை இந்த நபிமொழி வலியுறுத்துவதோடு, பொருளை விற்பதற்காக செய்யப்படும் சத்தியம் உண்மையாகவே இருந்தாலும்கூட அல்லாஹ்வின் பெருமைக்குறிய பெயரை, பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துவதை எச்சரிக்கிறது. அதே சமயம் செய்யப்படும் சத்தியம் பொய்யாக இருந்தால் அதைப்பற்றி விளக்க வேண்டிய அவசியமே இல்லை – அது பெருங்குற்றம் என்பது அனைவரும் அறிந்ததே.
முஸ்லிம் ஷரீபில் கூறப்பட்டுள்ள மற்றொரு ஹதீஸில் ‘எந்த ஒரு வியாபாரி, பொய்ச்சத்தியம் செய்து தன் தொழிலை நடத்துகிறானோ அவன், அல்லாஹ் அருளியுள்ள திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ள, குற்றவாளிகளில் சேர்ந்தவனாவான். அந்த குற்றவாளிகள் குறித்து அல்லாஹ் அறிவித்துள்ள தீர்ப்பு இதுவாகும்: ‘அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், பாவக்கறையிலிருந்து அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். கடுமையான தண்டணையே அவர்களுக்குக் கிடைக்கும்’.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ‘வியாபாரிகளே! வியாபாரத்தில் வீண் பேச்சுக்களும், சத்தியம் செய்தலும் ஏற்பட்டுவிடும். அப்படி ஏற்பட்டுவிட்டால், அதற்குப் பரிகாரம் காணும் வகையில் உடனே தர்மம் செய்யுங்கள்.’ (நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னுமாஜா)
சத்தியம் செய்யாதீர், என்று வியாபாரிகளை எச்சரித்த நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தவறுதலாக சத்தியம் செய்துவிடும் வியாபாரிகளை அன்புடன் அழைத்து, ‘தர்மம் செய்து அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள்’ என்று அறிவுரைக் கூறுகிறார்கள்.
கசப்பு மருந்தை உண்ணக்கொடுத்த மருத்துவர், சிறிது இனிப்பை அள்ளி வாயிலிடுவதுபோல, சத்தியம் செய்து சம்பாதிக்கலாம் – தர்மம் செய்து பரிகாரம் காணலாம் என்ற வகையில் செயல்படுவது அறிவீனம். நெருப்பு பட்டுவிட்டது. மருந்திடுவது சரி. வேண்டுமென்றே சுட்டுக்கொண்டு மருந்திடுவது எதைச்சார்ந்தது?! வியாபாரிகளே! சிந்தியுங்கள், சீர்பெறுங்கள்.
பாதுகாப்பான சத்தியம் எது?
பொதுவாக சத்தியம் செய்யும்பொழுது ‘நிச்சயமாக இதைச்செய்வேன்’ என்று கூறினால் தான் அதை நிறைவேற்றுவது அவசியம். ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இதைச் செய்வேன்’ என்று ஒருவர் கூறினால் அதை அவர் நிறைவேற்ற வேண்டியது அவசியமல்ல. அதை நிறைவேற்றத் தவறியதற்காக பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
‘ஒருவர் சத்தியம் செய்யும்போது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக் கூறினால்அவர் மீது எந்தப் பரிகாரமும் அவசியமில்லை’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரளி) நூல்: திர்மிதீ 1451. இதே கருத்துடைய ஹதீஸ்கள் அபூதாவுத், நஸயீ, அஹமது ஆகியவற்றிலும் இடம்பெற்றுள்ளது.)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும்பொழுது இன்ஷா அல்லாஹ் என்பதையும் சேர்த்துக்கொண்டால் அவர் விரும்பினால் அதை நிறைவேற்றலாம். அவர் விரும்பினால் நிறைவேற்றாது விட்டுவிடலாம்.’ (நூல்: அஹமது 5108, 5814, 5830)