அரபி மருமகன் & மருமகள் தேவை!
அமீர்கான்
[ அயலகத்தில் வாழும் தமிழக முஸ்லிம்கள் வியட்னாம், லாவோஸ். கம்போடியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பர்மா நாடுகளைச் சேர்ந்த மங்கையரை மணமுடித்துள்ளனர்.
அரபுலகத்தில் பணம் பெறுவது, மார்க்கப் பிரச்சாரம் செய்வது. இன்னும் சுயத்துக்காகச் சாதிப்பது எல்லாமும் இருந்தும், அரபி, தமிழ்முஸ்லிம் இருவருக்கிடையில் இணக்கமிருந்தும் நிக்காஹ் உறவுக் கலப்பு ஏற்பட வில்லை.
உலகத்தவருக்கு இஸ்லாத்தை வழங்கிய பூமி. நபிகளாரும், ஸஹாபாக்களும் வாழ்ந்த தேசம் அரபுலகம். அங்கிருந்து ஒரு அரபிப்பெண்ணும், அரபி ஆணும் மருமகளாக, மருமகனாக தமிழ்ப்பூமியில் கால்பதிக்க வில்லை.
அரபு நாட்டில் வாழும் தமிழக முஸ்லிம் ஆணும், பெண்ணும் அரபுக்கள் வீட்டிற்கு மருமகனாக, மருமகளாகச் செல்லவில்லை.
இருபுறமும் தீண்டாமைச் சுவர் சீனச் சுவர் போல் நீண்டிருப்பதற்குக் காரணம் புரியவில்லை.]
[ வாசகர் கருத்து கட்டுரையின் இறுதில் சேர்க்கப்பட்டுள்ளது. – adm.]
பரந்து விரிந்த பூமிப் பரப்பைப் படைப்பினங்கள் வாழ அல்லாஹ் படைத்தான். குறிப்பிட்ட ஊர், இடம், பகுதி மீது பற்று வைக்கக்கூடாதென்பதற்கு நபியவர்கள் மூலம் ‘ஹிஜ்ரத்’ புலம் பெயர்தலைக் காட்டினான்.
தன் மொழி உயர்ந்தது. மற்ற மொழி தாழ்ந்தது என்றுரைக்காதிருக்க ஒரு அரபிக்கு அரயில்லாதவரை விடவும், அரபியல்லாதவர்க்கு அரபியை விடவும் எந்த மேன்மையும், சிறப்பும் இல்லையென ஹஜ்ஜூப் பேருரையில் அறிவித்தார்கள் அண்ணலார்.
“யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது” முன்னோடித் தமிழனின் முழக்கம். ஒரு ஆணும், பெண்ணும் இல்வாழ்க்கை இணை சேர ஊர், நாடு, மொழி, இஸ்லாத்திற்குள் தடையல்ல. மதம் கடக்காது எந்த நாட்டு முஸ்லிம் ஆணும், பெண்ணும் தம்பதிகளாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இதனை தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் செய்து காட்டியுள்ளனர்.
அயலகத்தில் வாழும் தமிழக முஸ்லிம்கள் வியட்னாம், லாவோஸ். கம்போடியா, சீனா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பர்மா நாடுகளைச் சேர்ந்த மங்கையரை மணமுடித்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள இந்துக்கள், உயர்சாதியினர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், நார்வே, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் தமிழகப் பெண்களையும், தமிழக ஆண்கள் அங்குள்ள பெண்களையும் மணமுடிப்பது அவ்வப்போது பதிவாகும் பத்திரிகைச் செய்தி.
1970க்குப்பிறகு படிப்படியாக அரபு நாடுகளுக்குச் சேவக மாற்றச் சென்றனர் தமிழக முஸ்லிம்கள். கடந்த 40 வருடங்களில் பல இலட்சம் பேர் வலுவாகக் கால் பரவியுள்ளனர் வளை குடாவில். பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்தவர், வணிகத்தில் கொடிகட்டிப் பறப்போர் இன்னும் பல துறை வித்தகர் விரிந்து பரந்த வளைகுடாவில் பரத்தலாக உள்ளனர். கோலோச்சுதலுக்குக் குறைவில்லை.
அரபுலகத்தில் பணம் பெறுவது, மார்க்கப் பிரச்சாரம் செய்வது. இன்னும் சுயத்துக்காகச் சாதிப்பது எல்லாமும் இருந்தும், அரபி, தமிழ்முஸ்லிம் இருவருக்கிடையில் இணக்கமிருந்தும் நிக்காஹ் உறவுக் கலப்பு ஏற்பட வில்லை.
உலகத்தவருக்கு இஸ்லாத்தை வழங்கிய பூமி. நபிகளாரும், ஸஹாபாக்களும் வாழ்ந்த தேசம் அரபுலகம். அங்கிருந்து ஒரு அரபிப்பெண்ணும், அரபி ஆணும் மருமகளாக, மருமகனாக தமிழ்ப்பூமியில் கால்பதிக்க வில்லை. அரபு நாட்டில் வாழும் தமிழக முஸ்லிம் ஆணும், பெண்ணும் அரபுக்கள் வீட்டிற்கு மருமகனாக, மருமகளாகச் செல்லவில்லை. இருபுறமும் தீண்டாமைச் சுவர் சீனச் சுவர் போல் நீண்டிருப்பதற்குக் காரணம் புரியவில்லை.
தமிழக முஸ்லிம்கள் அரபிக்களை வெறுத்தனரா? அரபிக்கள் தமிழக முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளவில்லையா சமூகத்திற்கு விளக்க வேண்டிய கடமையிருக்கிறது. நபிகளாரின் வழி முறையில், இஸ்லாத்தின் பார்வையில் சுன்னத்தான செயல் நிறைவேற்றப்படவில்லை. இனியாவது அரபு, தமிழ் இனத்தவருக்கிடையில் ஹலாலான திருமணக் கலப்பை அங்கு வாழ்வோர் முன்னெடுக்க வேண்டும். புதிய சமூகம் உருவாகும்.
நன்றி: டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
இவ்வாக்கம் குறித்து வாசக சகோதரர் அமீன் <ameenshell@gmail.com> அவர்களின் கருத்தை இங்கு தருகிறோம்.
”அரபு நாட்டில் வாழும் தமிழக முஸ்லிம் ஆணும், பெண்ணும் அரபுக்கள் வீட்டிற்கு மருமகனாக, மருமகளாகச் செல்லவில்லை. இருபுறமும் தீண்டாமைச் சுவர் சீனச் சுவர் போல் நீண்டிருப்பதற்குக் காரணம் புரியவில்லை” – எனக்கு தெரிந்த வரை நாம் குடும்பத்துக்கு எத்தனை முக்கியத்துவம் தருகிறோம், ஆனால் இன்றைய அரபிகளிடத்தில் அப்படி இல்லை.
குழந்தை வளர்ப்பு மற்றும் இரண்டாம் திருமணத்திற்கு பிறகு அந்த குழந்தையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் நீதமாக நடக்க முடியாது என்றால் ஒன்றே போதும் என்று சொல்லும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். அதனால் கலாச்சார ரீதியாக மிகவும் வேறுப்ட்டுள்ளோம்.
மேலும் அவர்களிடத்தில் மொழி வெறி அதிகம் காணப்படுகிறது. மேலும் 90 சதம் லேபர்களாக நாம் இருக்கிறோம் அதனால் திருமணம் செய்யும் நிலையில்லை. இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்
– அமீன்