
‘உங்கள் வாழ்வில் இஸ்லாத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?’
இக்கேள்வி கேட்கப்பட்டது உலகளவில் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டுவீரராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, தற்போது 69 வயதாகும் முன்னால் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ அவர்களிடமே! அதற்கு அவர் அளித்த பதில் சத்தியமானதும் உண்மையானதும் ஆகும்.
அப்படி அவர் என்னதான் பதிலாகச் சொன்னார்? இதோ அவரது வார்த்தைகள்:
o ‘எனக்கு எல்லாமே இஸ்லாம்தான், சுவனத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவுச் சீட்டாகவே இஸ்லாத்தைப் பார்க்கிறேன்.’
o ‘இஸ்லாம் கூறும் மறுமைச் சிந்தனைதான் என் இதயத்தை ஈர்க்கிறது. எப்படியும் எல்லோருமே ஒருநாள் மரணமடையத்தான் போகிறோம். மரணத்திற்குப்பிறகு என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு இஸ்லாம் மட்டுமே தெளிவான பதிலை அளிக்கிறது.’
o ‘நாம் எல்லோரும் மீண்டும் எழுப்பப்படுவோம். அப்போது உலகில் நாம் செய்த செயல்கள் அனைத்தும் எடை போடப்படும். நமது நற்செயல்கள் மிகைத்து தீமைகள் குறைவாக இருந்தால் சுவனத்தில் நமக்கு இடம் கிடைக்கும். தீமைகள் மிகைத்து நற்செயல்கள் குறைந்துவிட்டால் நாம் நரகத்தில் எறியப்படுவோம்.
இந்த நினைப்பு என்னை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்கிறது. ஓர் ஏழைக்கு இரண்டு டாலர் கொடுத்தாலும் சரி, ஒரு முதியவருக்கு அவர் சாலையைக் கடக்க உதவினாலும் சரி எத்தகைய சின்னச் சின்ன நற்செயலும் வீணாகாது. எல்லாமே பதிவு செய்யப்படும். சுவனமா, நரகமா என்பதை இந்தச் செயல்கள்தான் தீர்மானிக்கும் என்பதால் நான் எந்நேரமும் அந்த மறுமை விசாரணையைக் குறித்த உணர்வுடனேயே இருக்கின்றேன்.
இந்த விழிப்புணர்வு ஒருவரிடம் ஆழமாகப் பதிந்துவிட்டால் அவரது வாழ்வில் மகத்தான மாற்றம் ஏற்படும். நன்மைகளைப் புரிவதிலும் அதிக ஆர்வம் காட்டுவார். தீமைகளில் இருந்தும் விலகி நிற்பார்.’
o ‘ஒரு பார்ட்டிக்குச் செல்கிறீர்கள். அழகிய பெண்களைக் கண்டு மனம் அலைபாய்கிறதா? அது பாவமல்லவா? அதிலிருந்து விடுபட வேண்டுமா? ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து உங்கள் விரல் நுனியில் வையுங்கள். எப்படி இருக்கும் அப்போது?! சுடுகிறதல்லவா! நரகம் அதனைவிட பயங்கரமாகச் சுடுமே! ஒரு கணப்பொழுது மட்டுமல்ல, நிரந்தரமாகச் சுடும். இதனால்தான் நான் எப்போதுமே தீப்பெட்டியை எனது சட்டைப் பையில் வைத்திருக்கிறேன்.’
மேலும் அவர் கூறியது:
o ‘எங்களது நிறம் கருப்பாக இருந்த ஒரே காரணத்தால் நாங்கள் ஒடுக்கப்பட்டோம். மிதிக்கப்பட்டோம். ‘நீக்ரோ’ என்று இழிவுபடுத்தப்பட்டோம். ஜெர்மனியர்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். கியூபர்கள் கியூபாவைச் சேர்ந்தவர்கள். நீக்ரோக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? நீக்ரோ என்ற பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? கருப்பர்களை இழிவுபடுத்தும் வசவுச்சொல் என்று பிற்பாடுதான் எனக்குத் தெரிந்தது.
அதுமட்டுமின்றி, சின்ன வயதிலிருந்தே கருப்பு இழிவானதாகவும், வெள்ளை சிறந்ததாகவும் பாடம் புகட்டப்பட்டது. வானவர்களை வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும், ஷைத்தானை கருப்பு நிறம் கொண்டவனாகவும் காட்டினர். இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால் மீண்டும் மீண்டும் மட்டம் தட்டப்பட்டேன். ஒருசிலரால் இஸ்லாத்தின்பால் வழிகாட்டப்பட்டேன். அதைப் பற்றிப்பிடித்து முஸ்லிமானேன். ஒரே இறைவனின் அடிமை ஆனேன். துவேஷம், மாச்சர்யம், இழிவு, அவமானம அனைத்தும் ஒரே அடியில் வீழ்ந்தன.
o எனது பூர்வீகப் பெயரான ‘கிளே’ என்றால் அழுக்கு, களிமண் என்று பொருள். வெள்ளை இனவெறியின் காரணமாக அழுக்கு முத்திரைக் குத்தப்பட்ட நான் முஹம்மது அலீ ஆனேன். முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள். அலீ என்றால் மேலானவர், உயர்ந்தவர் என்று பொருள்.
ஆக, ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதை ஏற்றுக்கொண்டதும் ‘அழுக்காக – கிளேயாக’ இருந்த நான் இஸ்லாத்தைத் தழுவியதும் புகழுக்குரியவனாக, உயர்ந்தவனாக – முஹம்மது அலீயாக உயர்ந்துவிட்டேன்.’
( கட்டுரையின் தலைப்பில் உள்ள புகைப்படம் – முஹம்மது அலீ முதன்முதலாக அன்றைய உலகக்குத்துச்சண்டை வீரராக இருந்த சோனி லிஸ்டனை முதல் ரவுண்டின் 35 ஆவது செகண்டில் வீழ்த்தி முதன்முதலாக உலகக்குத்துச்சண்டை வீரர் பட்டத்தை வென்றபோது எடுக்கப்பட்ட உலகப்பிரசித்திப்பெற்ற படம்.)