இன்றைய கல்வி – ஓர் இஸ்லாமிய பார்வை!
CMN சலீம்
[ ஒரு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 3 இலட்சம் பொறியியல் படித்தவர்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். அதில் 10 ஆயிரம் மாணவர்களுக்குக் கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை.
ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை உருவாக்காமல், இந்திய அரசின் உயர்கல்வி கொள்கையும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி கொள்கையும் இந்தத் தனியார் கொள்ளைக் கூட்டத்தாரின் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது.
இன்றைய கல்வி முறை சாறு பிழியப்பட்ட சக்கையாக, மனிதநேயமற்ற ஒழுக்கமில்லாத சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கின்ற குற்றங்களில் 90 விழுக்காடு படித்த பட்டதாரிகளால்தான் நடைபெறுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் முறையான தரமான கல்வியை – சரியான காலத்திற்கு – இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
முறைப்படுத்தப்பட்ட கல்வியின் மூலம்தான் இறைவனையும் அவனது ஆற்றலையும் ஒவ்வொரு மனிதனும் உணர முடியும் என்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.]
இந்திய விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் வளர்ச்சியின் மீதும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீதும் பற்றும் பரிவும் கொண்ட நேர்மையான தலைவர்கள் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று மக்களுக்காகவே அற்புதமான திட்டங்களைத் தீட்டினார்கள். அதை செயல்படுத்துவதில் உண்மையான முனைப்புக் காட்டினார்கள். அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி வேகம் மிதமாக இருந்தாலும் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டார்கள். ஏனெனில் இந்திய விடுதலை என்பதே வெள்ளையரின் சுரண்டலிலிருந்து இந்திய மக்களைப் பாதுகாக்கும் இலட்சியத்திலிருந்துதான் பிறந்தது.
இந்தியாவின் இந்த நிலையான வளர்ச்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியர்களின் நீடித்த வாழ்வும் நிலையான வளர்ச்சியும் நமது சுரண்டலுக்கு என்றைக்குமே ஆபத்து என்று உணர்ந்து இந்தியாவின் முக்கியமான துறைகளில் தங்களுக்கு சாதகமான ஆட்களை அமர்த்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கான முன்முயற்சியைச் செய்த அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அதற்கான தருணத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
தொடக்கத்தில் நேருவால் வடிவமைக்கப்பட்ட சோசலிஸ சமூக, பொருளாதார கொள்கையிலிருந்து திசைமாறி 1990-க்குப் பிறகு காங்கிரஸிலிருந்த அமெரிக்காவின் ஆதரவாளர்களால் முதலாளித்துவக் கொள்கைக்கு இந்தியாவின் சமூக, பொருளாதார கொள்கை மாற்றப்பட்டது. அன்றிலிருந்து உலகமயம், தாராளமயம் என்று இனிப்பு தடவப்பட்ட விஷம் இந்திய நாட்டின் கொள்கைகளை வகுப்பதில் முழுமையாகச் செலுத்தப்பட்டது.
1970-களில் அமெரிக்கப் பொருளியல் நிபுணர் சர். ஆர்தர் டங்கல் என்பவரால் பிற நாட்டு வணிகச் சூழலையும் வளங்களையும் மற்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான “டங்கல்” திட்டம் அறிமுகமானது. இதன் அடிப்படையில் உலக மயம் என்கிற சுரண்டலை நோக்கி உலகின் பல நாடுகளும் தள்ளப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் “காட்” (நிகிஜிணி) என்று அழைக்கப்பட்டது. சுய சார்பை நிர்மூலமாக்கும் இதன் சதி வலைகளால் நம் நாடும் சுற்றி வளைக்கப்பட்டது.
அப்போதிலிருந்து பாய்ச்சப்பட்ட விஷம் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்கி தற்போது அதன் வீரியங்கள் கொடூரமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. அதில் இந்திய மக்களை சுரண்டிவரும் முக்கிய துறைகள்தான் கல்வியும் சுகாதாரமும்.
கல்வி :
1834-இல் மெக்காலே என்ற வெள்ளையனால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற பொருள் சார்ந்த இந்தியாவுக்கான கல்வித்திட்டத்தில் 1990-க்குப் பிறகு தனியார் ஆதிக்கத்தை திறந்து விட்டதனாலும், அரசு தனது மக்களுக்கு கல்வி, சுகாதாரம் தடையின்றி கிடைக்கச் செய்யும் உன்னதமான பொறுப்பை தட்டிகழித்ததாலும், பொறுப்பற்ற அரசின் நிர்வாகத்தாலும் இன்று இந்திய மற்றும் தமிழக மக்களின் செல்வங்கள் பகிரங்கமாக கொள்ளை போய் கொண்டிருக்கின்றன.
உலகமயத்தின் விளைவாக பொருளாதாரம் தான் வாழ்வின் அதிமுக்கியக் குறிக்கோள் என்ற தத்துவம் மக்களின் மனதில் தொடர்ந்து ஆழமாகப் பதிக்கப்பட்டது. அதன் விளைவாக கவர்ச்சி மிகுந்த வாசகங்களுடன், கட்டிடங்களுடன், பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் படையெடுத்து மக்களின் சேமிப்பு, வருவாய் அனைத்தையும் அளவில்லாமல் அப்பட்டமாகச் சுரண்டி மக்களை கடன்காரர்களாக ஆக்கி வருகின்றனர்.
ஒழுக்கம், நேர்மை, பண்பாடு போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கொள்கையை உருவாக்காமல், இந்திய அரசின் உயர்கல்வி கொள்கையும் மாநில அரசுகளின் பள்ளிக்கல்வி கொள்கையும் இந்தத் தனியார் கொள்ளைக் கூட்டத்தாரின் விருப்பங்களுக்கு ஏற்ப திட்டமிட்டு வடிவமைக்கப்படுகிறது. போதாக்குறைக்கு தற்போது அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்கள் கடையை விரிக்க சட்டப்பூர்வ அனுமதியும் கொடுத்தாகிவிட்டது.
1995-க்குப் பிறகு தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் புற்றீசலாய் அதிகரிக்கத் தொடங்கின. அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை செய்து கொடுக்கும் மிஜி நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகத் தொடங்கியவுடன் இதில் பணியாற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு தொடக்கமே 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்று அறிவிப்புகள் வெளியானவுடன் பொறியியல் கல்லூரிகள் பெருகத் தொடங்கின. அதில் நிர்வாக கோட்டாவில் ஒரு சீட்டுக்கு 2 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை பழிபாவத்திற்கு அஞ்சாமல் நன்கொடை கேட்டனர்.
எங்கள் காலேஜில் படித்தால் 20 ஆயிரம் சம்பளத்தில் அனைவருக்கும் உடன் வேலை கிடைக்கும் என்று பச்சைப் பொய்யை பகிரங்கமாக அள்ளிவிட்டனர். மக்களும் அதை நம்பி வெறிபிடித்தார்போல தங்களது பிள்ளைகளைச் சேர்த்தனர். இறுதி ஆண்டு படிக்கும்போதே வேலை கிடைக்கிறது என்றவுடன் இன்னும் பித்தம் தலைக்கேறி சூழ்ச்சி விளங்காமல் என்ன விலை கொடுத்தேனும் பெரிய கல்லூரிகளில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் மனநிலை மாறிப்போனது. மக்களின் மாற்றப்பட்ட இந்த மனநிலைஆயை தனியார் கல்லூரிகள் சரியாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்தனர்.
கள்ளச்சாராயம் விற்றவர்கள், நிலச்சுவான்தார்கள், கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், கடத்தல்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள் என கல்வித் துறைக்கு தொடர்பில்லாதவர்கள் பலரும் இந்தக் கொள்ளை லாபத்தைப் பார்த்து புதிய கல்லூரிகளைத் தொடங்கினார்கள். புதிய கல்லூரிகள் தொடங்கிட உரிமம் வழங்குவதற்கு தமிழகம் தொடங்கி டெல்லி வரை பல இலட்சங்கள் லஞ்சமாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பெற்றனர். சில இடங்களில் அரசியல்வாதிகளே பினாமி பெயரில் அதிகம் கல்லூரிகள் தொடங்கினர்.
உலக அளவில் சமீப காலமாக ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் காற்று போன பலூன் போல சாயம் வெளுத்து குப்புற விழுந்தவுடன் அமெரிக்காவை நம்பியிருந்த இந்திய மிஜி நிறுவனங்களின் சாயமும் வெளுத்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போன்ற பல நிறுவனங்களின் உண்மை முகம் வெளியே தெரிந்தது. ஆனாலும் மக்களிடம் பொறியியல் படிப்பின் வெறி மட்டும் குறையவில்லை. பணம் சம்பாதிப்பது மட்டும் தான் தங்கள் பிள்ளைகளின் தலையாய வேலை என்ற சிந்தனை மூளையில் தொடர்ந்து திணிக்கப்பட்டது. பெற்ற பிள்ளையை பணம் காய்க்கும் மரமாக, பணமீட்டும் எந்திரமாகப் பார்த்தனர்.
வசதி படைத்தவர்கள் தங்களது பிள்ளைகள் பொறியியல் படிக்கத் தேவையான 4-5 இலட்சத்தை (நன்கொடை இல்லாமல்) செலவு செய்கின்றனர். அவர்களை இது பெரிதாக பாதிக்கவில்லை. அவர்களைப் பார்த்து நடுத்தர வர்க்கமும் ஏழை வர்க்கமும் தூண்டப்பட்ட பொருளாதார ஆசையின் காரணமாக பொறியியல் படித்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என்ற தனியார் நிறுவனங்களின் தவறான விளம்பரத்தைப் பார்த்து கிராமப் புறத்திலிருந்து வரும் 45-50 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துவிட்டனர். அரசு நிர்ணயம் செய்த 33,500 ரூபாய் கல்விக் கட்டணத்தைக் கூட அவர்களால் கட்ட முடியாமல் வியர்வை சிந்தி சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த நகை, பாரம்பர்ய சொத்து, வீடு, வாசல் என்று எல்லாவற்றையும் விற்றுவிட்டு கடன்காரர்களாக தெருவிற்கு வந்ததுதான் மிச்சம்.
கல்விக் கட்டணத்தைக் கட்ட இயலாமல் போனதால் தனியார் கல்வி நிறுவனங்களின் நெருக்குதலாலும் பிள்ளைகளை கல்லூரியை விட்டு வெளியேற்றியதாலும் அவமானம் தாங்காமல் பலர் தற்கொலை செய்துள்ளனர். பொறியியல் படித்தால்தான் வேலை என்ற நிலை எந்தக் காலத்திலும் இருந்தது கிடையாது. புற்றீசல் போல முளைத்த தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் பயின்று வருவதால் மாணவர்களிடம் கல்வித்திறனும் குறைவாக இருக்கிறது. தரமற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கிய தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி, நாடே தலை குனிந்தது.
ஒரு ஆண்டில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 3 இலட்சம் பொறியியல் படித்தவர்கள் பட்டம் பெற்று வெளிவருகின்றனர். அதில் 8 ஆயிரம் மாணவர்களுக்குக் கூட சரியான வேலை கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை. சென்னை தெருக்களில் பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடி அலையும் அவலத்தை கண்கூடாகப் பார்க்க இயலும். இது குறித்து தினமணி நாளிதழில் விரிவான தலையங்கம் எழுதப்பட்டிருந்தது. கூரியர் நிறுவனங்கள், சேல்ஸ்மேன் வேலை, ஓட்டல் சர்வர், ஆட்டுப் பண்ணை எனப் பலவாறு காலம் தள்ளுகின்றனர் பொறியியல் பட்டதாரிகள்..
மேலாண்மைக் கல்வி :
பொறியியல் கல்லூரிகள் அடிக்கும் கொள்ளைக்கு சற்றும் குறைவில்லாமல் கோட்டு சூட்டு மாட்டச் சொல்லி மடிக் கணினி கொடுத்து லட்சம் லட்சமாக மாணவர்களிடம் சுரண்டும் மற்றொரு படிப்புதான் மேலாண்மைக் கல்வி.
சிலருக்கு சில குறிப்பிட்ட கல்விநிறுவனங்களில் படித்தால் மட்டும் நல்ல வேலை கிடைக்கிறது என்பது உண்மை. அதை பொது விதியாக்கி பட்டித் தொட்டி எங்கும் மேலாண்மைப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்களிடம் ஆசை தூண்டப்படுகிறது. இதனால் பெற்றோரின் பரம்பரைச் சொத்துக்கள் எல்லாம் வங்கிக்கும் வட்டிக் கடைக்காரனிடமும் அடகு வைக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களும் எந்த ஒரு பாடத்தையும் படிப்பையும் அறிமுகம் செய்வதற்கு முன்பு அந்தப் படிப்பிற்கு சந்தையில் எந்த அளவிற்கு டிமாண்ட் உள்ளது? மாணவர்களிடம் வரவேற்பு இருக்குமா? வியாபாரம் நன்றாக நடக்குமா? என்று தான் சிந்திக்கின்றனர். அரசின் பல்கலைக் கழகங்கள்கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது.
தெளிவும், தீர்க்கமான கொள்கையும் இல்லாத அரசுகள், அமெரிக்காவின் சட்டதிட்டங்களையும் அதன் அடிமைகளாக உலா வரும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகளையும் நம்பி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை தொழில்நுட்பக் கல்வி என்ற பெயரால் காலம் முழுவதும் கடன்காரர்களாக மாற்றிவிட்டன. மாற்றியும் வருகின்றன.
உயர்கல்வியை சமூக விடுதலைக்கான தீப்பொறியாக, அறியாமை இருள் அகற்றும் ஒளிவிளக்காக, வறுமை ஒழிக்கும் ஆயுதமாக மாற்றியிருந்தால் அதன் அடிப்படையில் பாடங்களும் திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தால் இன்றைய இந்தியா ஊழல் அற்ற, லஞ்ச லாவண்யம் அற்ற, நேர்மை யான மக்கள் வாழும் நாடாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றிருக்க முடியும்.
ஆனால் இன்றைய கல்வி முறை சாறு பிழியப்பட்ட சக்கையாக, மனிதநேயமற்ற ஒழுக்கமில்லாத சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நாட்டில் நடக்கின்ற குற்றங்களில் 90 விழுக்காடு படித்த பட்டதாரிகளால்தான் நடைபெறுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல மனித இனத்திற்கு பயன்தரும் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளும், இயற்கை வழியிலான வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஆய்வுகளும் முறையாக நடைபெற்றிருந்தால் நமது தொழில் நுட்பங்களையும் வழிகாட்டுதலையும் பல நாடுகளும் பின்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கும். அதில் மனித குலமும் இந்த பூமியும் பயன்பெற்றிருக்கும். ஆனால் இவை எல்லாம் வல்லூறுகளுக்கு பிடிக்காதே! ஆதிக்க வெறியர்களுக்கு பிடிக்காதே!
நம்மைச் சிந்திக்க விடாமல் வைத்திருந்தால் தான் அவர்கள் சுருட்ட இயலும் என்பதால் இன்றைக்கு இந்திய உயர்கல்வியை – இந்தியர்கள் எதைப் படிக்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்கிறது. இந்தப் போக்கு நம்மை சீரழிவிற்கு கொண்டுச் சொல்லும். இதை மாற்றிட நாம் சிந்திக்க வேண்டும். சிந்தித்து விடக்கூடாது என்பதற்குத்தான் டாஸ்மாக், மானாட மயிலாட, சினிமா, சீரியல் என்ற “போதை மருந்துகள்”.
பணத்திற்காக வேகம் எடுத்து கண்மண் தெரியாமல் ஓடும் இன்றைய வாழ்வில், வாழ்க்கையின் இனிமையான காலங்களை, அதன் விழுமியங்களை பணம், பகட்டு, சொகுசு வாழ்க்கை என்பவற்றிற்கு பறிகொடுத்துவிட்டு நிற்கின்றோம். இதுதான் மெக்காலே 1834-ல் அறிமுகப்படுத்திய பொருள் சார்ந்த கல்விமுறை. 150 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்திவிட்டு இப்போது வீரியம் எடுத்து மக்களைக் காவு வாங்குகிறது.
மாற்றுத்திட்டம் :
இதற்கு தீர்வு எதுவாக இருக்க முடியும் என்பதை நடுநிலையாளர்கள், மூத்த கல்வியாளர்கள் உலகின் எல்லா சித்தாந்தங்களையும் ஆய்வு செய்திட வேண்டும். குறிப்பாக இஸ்லாம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மனிதன் இந்த பூமியில் வாழ்ந்திட வரையறுக்கப்பட்ட கால அளவைக் கொண்டுள்ளான். எந்த நேரமும் மரணம் காத்திருக்கிறது. வாழ்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட கால அளவையில் அவன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் கடமைகளும் ஏராளம் இருக்கின்றன என்று இஸ்லாம் கூறுகிறது. இவற்றை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கும் அதன்படி வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு ஆணிற்கும் பெண்ணிற்கும் முறையான தரமான கல்வியை – சரியான காலத்திற்கு – இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது.
முறைப்படுத்தப்பட்ட கல்வியின் மூலம்தான் இறைவனையும் அவனது ஆற்றலையும் ஒவ்வொரு மனிதனும் உணர முடியும் என்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
அதனால்தான் கல்வி கற்பதை இறைவனுக்கு செய்கின்ற வணக்கம் என்று இஸ்லாம் விளக்குகிறது. அதேபோல முஸ்லிம் அரசன் என்பவன் (கலீஃபா) இந்த பூமியில் இறைவனுடைய சட்டத்தை அமல்படுத்தும் பிரதிநிதியாக செயல்படுகிறான். சட்டங்கள், கொள்கைகள் வகுப்பதற்கு அரசனுக்கு அனுமதி கிடையாது. அது இறைவனுக்கு மாத்திரம் உள்ள உரிமைகள். இறைவன் வகுத்ததை நடைமுறைப் படுத்துவதுதான் அரசன் எனும் ஊழியனின் வேலை. அதாவது இஸ்லாமிய அரசின் வேலை.
குடிமக்களின் வாழ்விற்கும் வழிமுறைக்கும் அரசனே பொறுப்பாளி. நல்ல ஒழுக்கத்துடன் கூடிய பண்பாடு மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டியது அரசனின் பொறுப்பு. ஏழை எளிய மக்கள், செல்வந்தர்கள், ஆண்-பெண், குழந்தைகள், விதவைகள், ஆதரவற்றோர் என குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளங்களில் சம உரிமை படைத்தவர்கள். இன்றைக்கு நம் நாட்டில் வளங்கள் எல்லாம் ஒரு சிலரால் அனுபவிக்கப்படுவதையும் மற்றவர்கள் அவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.
இஸ்லாமிய அரசில் வறுமை அகற்றப்பட்டிருக்க வேண்டும். ஆட்சிமுறை, குடிமக்கள் குறித்து மறுமையில் இறைவனிடம் அரசன் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளான். இஸ்லாமிய அரசின் அல்லது முஸ்லிம்களின் ஆட்சியில் இதனடிப்படையில்தான் கல்விக் கொள்கை உருவாக்கம் பெறுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சியில் உயர்கல்வி நல்ல குடிமக்களை, நீதியாளர்களை, நிர்வாகத் திறன் படைத்தவர்களை, தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்கான தனிப்பெறும் ஆயுதமாக கையாளப்பட்டது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக திகழ்ந்ததற்கான காரணம் இதுதான்.
பள்ளிவாசலில் அமையப் பெற்றிருந்த மதரஸாக்கள் எனும் உயர்கல்வி நிறுவனத்தை அரசே நடத்தியது. இறைபக்தி மிகுந்த செல்வந்தவர்களும் இந்த கல்வி நிறுவனத்திற்கு வாரி வாரி வழங்கினர்.
ஒழுக்கமும் பண்பாடும் இறையச்சமும் நிறைந்த அறிவு ஜீவிகளைக் கொண்ட நல்ல தலைமுறையை உருவாக்க வேண்டும்; குற்றங்கள் குறைந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய அரசின் கல்விக் கொள்கையாக இருந்தது. இன்றைய தவறான கல்விக் கொள்கைதான் குற்றங்கள் அதிகரித்திட மூலகாரணமாக அமைந்துள்ளது.
உயர்கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு மத வேறுபாடு இல்லாமல் அரசின் சார்பிலும் வசதி படைத்தவர்கள் சார்பிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இன்றைக்கு நேர்மாற்றமாக மாணவர்களிடம் இருந்து அவனது ஆதி அந்தம் என அனைத்தையும் பிடுங்கும் அவலம் நிலவுகிறது.
ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டது. சில ஆசிரியர்கள் கற்பித்தலை இறைவனுக்குச் செய்கின்ற சேவையாகக் கருதி இலவசமாகப் பணியாற்றினார்கள். இன்றோ ஊதியமும் ஊக்கத்தொகையும் போதவில்லை என்று அன்றாடம் ஆசிரியர்கள் கொடிப்பிடிப்பதைப் பார்க்கின்றோம். மறியலில் ஈடுபடுவதைக் காண்கின்றோம்.
வரலாற்றில் உலக அளவில் உயர்கல்வி என்ற அறிவின் ஆழமான வடிவத்தை அடையும் பாதையை உலகிற்கு காட்டித் தந்தவர்கள் முஸ்லிம்கள்தான். நாங்கள் தான் இன்றைக்கு உயர்கல்வியில் மிகைத்திருக்கின்றோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இந்த வரலாற்று உண்மைகளை மறுக்கமாட்டார்கள். மறுக்கவும் முடியாது.
8-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய நிலப்பரப்பில் அமையப் பெற்றிருந்த “ஜாமிஆ” எனும் உயர்கல்விக்கான பல்கலைக்கழகத்தைப் பார்த்த பிறகு 500 ஆண்டுகள் கழித்து ஐரோப்பாவில் 12-ஆம் நூற்றாண்டில்தான் முதன்முறையாக ஆக்ஸ்ஃ
போர்டும் கேம்பிரிட்ஜும் உருவானது. அவற்றுக்கான பாடங்களைக் கூட அரபு மொழியிலிருந்துதான் லத்தீன் மொழிக்கு துறைவாரியாக மொழியாக்கம் செய்தார்கள்.
மனித வாழ்விற்குத் தேவையான பண்பாடு, ஒழுக்கம், சமநீதி போன்ற அடிப்படைக் காரணிகளோடு அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம் அனைத்திற்கும் முன்னோடிகளாக – அனைத்தையும் மேற்கத்திய மக்களுக்கு ஒளிவுமறைவு இல்லாமல் கற்றுக் கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதிலும் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்கள் ஈடுபடவில்லை. ஈடுபடக்கூடாது என்று இஸ்லாம் ஆணித்தரமாக அறிவுறுத்துகிறது. ஆனால் இன்றோ மனித இனத்தின் அழிவிற்கும், இயற்கையின் அழிவிற்கும் தேவையான அத்துனை நடவடிக்கைகளும் பகிரங்கமாக வளர்ச்சி என்ற பெயரில், உயர்கல்வி என்ற பெயரில் நடைபெறுகிறது. பணம் கிடைக்கிறது, சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது என்பதற்காக படித்தவர்களும் பட்டதாரிகளும் கூட மண்ணும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன என்று அமெரிக்க மோகத்தில் அத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல குடும்ப இயல் வாழ்விற்கு இஸ்லாமியக் கல்வி அதிமுக்கியத்துவம் கொடுக்கிறது. குடும்பங்கள் சிதைந்தால் சமுதாயமே சிதைந்துவிடும். ஆனால் குடும்பத்தைப் பார்க்கக்கூட நேரமில்லாமல் “மாடர்ன்” வாழ்க்கை என்ற மோகத்தில் மூளைச் சலவை செய்யப்பட்ட இளைய தலைமுறை பறந்து ஓடுகிறது. திருமண உறவு முறைகள் சிதைக்கப்பட்டு, ஓரினச் சேர்க்கை ஊக்கப்படுத்தப்படுகிறது. கூட்டுக் குடும்பம், விட்டுக் கொடுத்து வாழ்வது, குழந்தைகளின் நலனிற்கான வாழ்க்கை என்பதெல்லாம் இன்று கேலிக்குரிய பேச்சாக மாறிப் போய் உள்ளது. கணவன் மனைவி உறவுகள் சீர்கெட்டுப் போய் விவாகரத்துகள் பெருகி வருகின்றன.
மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டிய முஸ்லிம்களுக்கும் முதலாளித்துவச் சிந்தனை மூளையில் பதிக்கப்பட்டு தங்களுக்கான கல்விமுறைகளையும் வாழ்வியல் நெறிகளையும் மறந்து பணத்தைத் தேடுவதற்கு என்ன வழி என்று மட்டும் சிந்திக்கின்றனர்.
தங்களின் வேர்கள் வீரியம் இழந்து வருவதைக் கூட அவர்களால் அறிய முடியவில்லை. இந்த பூமியில் முஸ்லிம்களுக்கான கடமை என்னவென்றே தெரியாமல் ஆக்கும் கல்விமுறையில் படித்து வரும் அவர்களாலும் என்ன செய்ய இயலும்? தாங்கள் செல்லுகின்ற பாதை வெல்லுகின்ற பாதை தானா என்று முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும். ஏன் என்றால் அவர்களைப் பார்த்து பணம் மட்டும்தான் வாழ்க்கையா? என்று இஸ்லாம் கேட்கிறது. நல்லவர்கள், நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்களும் கேட்கின்றனர். நாளை மறுமை நாளில் இறைவனும் கேட்பான் என்பதும் உறுதி.
source: http://www.samooganeethi.org/?p=743