ஊதியத்தின் அருமை உழைப்பவனுக்கே தெரியும்!
மவ்லவீ, J. ஜாஹிர் ஹுஸைன், மிஸ்பாஹி
[ ‘ஒரு காலம் வரும். அக்காலத்தில் மார்க்கத்தின்படி அமல் செய்வது நெருப்பின்மீது நிற்பதைப் போன்று நிலைமை மாறிவிடும்.’ (அல் ஹதீஸ்)
‘குழப்பமான காலத்தில் எனது வழிமுறைகளில் ஒன்றை ஒழுகி நடப்போருக்கு நூறு தியாகி (ஷஹீது) களின் நற்கூலி உண்டு.’ (அல் ஹதீஸ்)
‘உஹதுப் போரிலே நபித்தோழர்கள் தடுமாற்றத்தில் இருந்த சமயம் எதிரிகளின் குறியணைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதே இருந்தது. இதைக்கண்ட தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வந்த எதிரிகளின் அம்புகளைத் தனது இருகரங்களிலே தாங்கிக் கொண்டார்கள். இறுதியில் அவர்களது கரங்களையும் சல்லடையைப் போன்று கண்டேன்’ என்று கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா இல்லத்தை நோக்கி ஒட்டகத்தில் பயணித்தபோது எதிரியின் கண்ணில் சிக்கிக் கொண்டார்கள். முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பழிதீர்க்க இதுவே தக்க தருணம் என்று அம்பினால் தாக்கினான் ஒரு கொடியவன்.
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த அவர்கள் கருக்கலைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உயிர் பிரிந்து விட்டது (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). பொதுவாக சராசரிப் பெண்ணுக்கொரு சிறுதுயர் என்றாலே கல்நெஞ்சுக்காரனும் கண்ணீரால் கரைந்து விடுவான். கர்ப்பிணிப் பெண் என்றால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை கூறவும் வேண்டுமோ? ]
ஊதியத்தின் அருமை உழைப்பவனுக்கே தெரியும்!
ஒரு பொருளை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் சிரமங்களைப் பொறுத்தே அப்பொருளின் மதிப்பை நிர்ணயிக்கிறோம். அதிக சிரமங்களுக்கு நடுவில் கிடைக்கும் பொருளுக்கு அதிக மதிப்பையும், எளிதாக பெறும் பொருளுக்கு சிறு அந்தஸ்தையும் கொடுப்பது மனித இயல்பாகி விட்டது. ஆழ்கடலில் கிடைக்கும் முத்து நம்மிடம் அபரிமிதமான மதிப்பைப் பெறுகிறது. காரணம், அதனை அடைய உயிரையே பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.
‘திருட்டு மாங்காய் ருசிக்கும்’ என்பார்கள். காரணம், அதனைப்பெற பல வேலிகளைக் கடந்து தோட்டக்காரனின் கண்ணில் மண்ணைத்தூவி, முட்செடிகளுடன் போராடி, இன்னும் பல இன்னல்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கைமேல் கனியாக எவ்வித முயற்சியும் இன்றி கிடைத்து விட்டால் அதில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.
தனையன் ஒருவன் தந்தையிடம் நூறு ரூபாய் கேட்டான். அதற்கு தந்தை ‘ஒரு ரூபாய் சம்பாதித்து வா! உனக்குப் பணம் தருகிறேன்’ என்று அனுப்பி வைத்தார். மாலை வரை கஷ்டப்பட்டு ஒரு ரூபாயுடன் திரும்பினான் தனையன். மகனைக் கண்ட தந்தை ‘இப்பொழுது உனக்கு பணத்தின் மதிப்புத் தெரிந்திருக்கும். நான் ஆரம்பத்திலேயே நீ கேட்டவுடன் தந்திருந்தால் நீ பணத்தின் அருமைத் தெரியாமல் ஊதாரியாக மாறியிருப்பாய்!’ என்று உணர்த்தினார்.
இன்று கையில் கிடைத்த இஸ்லாமும் இதே கதைதான். எந்த தருணத்திலும், சிறிதும் உடல் நோகாமல், எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் அதைப் பெற்றதினால், அதன் மதிப்புத் தெரியாமல் குரங்குக் கையில் சிக்கிய பூ மாலையாகி விட்டது.
என்னுடைய பெற்றோர்கள் முஸ்லிம்கள் ஆகையால் நான் முஸ்லிம் என்று பாரம்பரியமாகத்தான் இஸ்லாத்தில் வளர்ந்து வருகிறோமே தவிர, அதில் என்னதான் இருக்கிறது என்பதின் பக்கம் சிறிதும் நம் கவனத்தைத் திருப்புவதில்லை. இதனால் மார்க்கம் கூறும் சட்டங்கள் அனைத்தும் நமக்கு பெரும் மலையாகத் தோன்றுகிறது.
அதிகாலையில் தொழவேண்டுமா? ஏழை வரி (ஜகாத்) ஒதுக்க வேண்டுமா? வியாபாரத்தில் நீதமாக நடக்க வேண்டுமா? என்று ஒவ்வொரு சட்டத்தையும் மிகவும் ஏளனமாகப் புறக்கணித்து விடுகிறோம். தாடி வைக்க வேண்டுமா? இந்த நாகரீக உலகிற்கு உகந்ததல்ல! எக்காரியத்திலும் இறைவனை முன்நிறுத்த வேண்டுமா? அது பழமைவாதிகளின் பாரம்பரியம்! சர்வ விஷயத்திலும் சத்தியத்தை செதுக்க வேண்டுமா? அது சாத்தியமில்லாத செயல் என்றெல்லாம் கூறி சாத்தானின் வாரிசாகி விடுகிறோம். அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருஞ்சொற்கள் இதை வலுவூட்டுகிறது.
‘ஒரு காலம் வரும். அக்காலத்தில் மார்க்கத்தின்படி அமல் செய்வது நெருப்பின்மீது நிற்பதைப் போன்று நிலைமை மாறிவிடும்.’
‘குழப்பமான காலத்தில் எனது வழிமுறைகளில் ஒன்றை ஒழுகி நடப்போருக்கு நூறு தியாகி (ஷஹீது) களின் நற்கூலி உண்டு.’
பிற்காலத்தில் இஸ்லாத்தில் இஸ்லாம் என்ற பெயரைத்தவிர எதுவும் மிஞ்சாது. இதுபோன்ற எண்ணற்ற ஹதீஸ்கள் இன்றைய மாடல் முஸ்லிமின் முகத்திரையை கிழித்து அடையாளங் காட்டுகிறது. அதே நேரத்தில் ஒரு பொருளை பல தடைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் பெற்றிருந்தால் அதை அவன் பாதுகாக்கும் விதமே தனி. அதை ஒரு பெட்டியில் போட்டு அதை பீரோவில் ஒளித்து வைத்து அவ்வறைக்கு பல பூட்டுகளைப் போட்டு ஒன்றுக்குப் பலமுறை அதை இழுத்துப்பார்த்து சோதனை செய்து விட்டை சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திஸ! அல்லாஹ{ அக்பர்!
குழந்தை தரும் எந்த நோவினையும் தாய்க்கு பாரமாகத் தோன்றுவதில்லை. அந்தக் குழந்தையை பெறுவதற்கு அவள் அடைந்த இன்னல்கள், அந்நோவினைகளைக் கூட அவளுக்கு இனிமையாக மாற்றிவிடுகிறது. அதுபோலவே எவ்வளவு சிரமமான அமல்களும் அவனுக்கு மிக எளிதாக மாறிவிடுகிறது. உட்கார்ந்தால், அல்லாஹ்! எழுந்தால் அல்லாஹ்! வியாபாரத்தில், லாபத்தில், நஷ்டத்தில், துக்கத்தில், துயரத்தில், இன்பத்தில் என்று அனைத்திலேயும் இறைவன் கட்டளையை முன்நிறுத்தி விடுவான்.
வட்டியா அது ஹராமாக்கப்பட்டது. லஞ்சமா, அது நரகத்தின் குறுக்குவழி. மோசடியா அது இறைக் கோபத்தின் சொந்தக்காரன் என்று தடுக்கப்பட்ட அனைத்தையும் உதறிவிட்டு முழு தீன்தாரியாக மாறி விடுவான். சரித்திர நாயகர்கள் நபித்தோழர்கள் வணக்கங்களில் காட்டிய ஆர்வத்தைக் கண்டு மலைக்காதவரில்லை.
மூன்று ஸஹாபாக்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்கத்தைப் பற்றி விசாரித்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வணக்கங்களைக் கூறி முடித்தபோது வருகைத்தந்த தோழர்கள் ‘பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் பின் பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட்டு விட்டது, அவர்களே இவ்வாறு அமல்கள் செய்கின்றபோது நாமோ பாவத்தில் மூழ்கியிருக்கிறோம் என்று கூறியதோடு முதலாமவர் சொன்னார் ‘இனிமேல் இரவு முழுவதும் நான் நின்று வணங்குவேன், துயில் கொள்ள மாட்டேன்’.
இரண்டாவது நபர், ‘நான் பகல் முழுவதும் நோன்பு வைப்பேன், விடமாட்டேன்’ என்றார். மூன்றாவது நபர் நான் பெண்ணை விவாகம் செய்து கொள்ள மாட்டேன் (எனது வாழ்வை நற்செயல்கள் புரிவதில் அர்ப்பணம் செய்வேன்) என்று சத்தியம் செய்தார்கள்.
இதனை செவியுற்ற அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மூவரையும் கண்டித்தார்கள். ‘உங்களைவிட இறைவனை பயப்படுவதற்கு நானே தகுதியானவன். நான் நோன்பு வைக்கவும் செய்கிறேன். விட்டும் விடுகிறேன். உறங்கவும் செய்கிறேன், வணங்கவும் செய்கிறேன். பெண்களை விவாகம் செய்தும் கொள்கிறேன். இதுவே எனது வழிமுறை. அதைப் புறக்கணித்தவர்கள் என்னைச் சார்ந்தவரல்லர்’ என்று கூறினார்கள்.
‘உஹதுப் போரிலே நபித்தோழர்கள் தடுமாற்றத்தில் இருந்த சமயம் எதிரிகளின் குறியணைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதே இருந்தது. இதைக்கண்ட தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வந்த எதிரிகளின் அம்புகளைத் தனது இருகரங்களிலே தாங்கிக் கொண்டார்கள். இறுதியில் அவர்களது கரங்களையும் சல்லடையைப் போன்று கண்டேன்’ என்று கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா இல்லத்தை நோக்கி ஒட்டகத்தில் பயணித்தபோது எதிரியின் கண்ணில் சிக்கிக் கொண்டார்கள். முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பழிதீர்க்க இதுவே தக்க தருணம் என்று அம்பினால் தாக்கினான் ஒரு கொடியவன். ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த அவர்கள் கருக்கலைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்கள். சிறிது நேரத்திலெல்லாம் அவர்கள் உயிர் பிரிந்து விட்டது (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). பொதுவாக சராசரிப் பெண்ணுக்கொரு சிறுதுயர் என்றாலே கல்நெஞ்சுக்காரனும் கண்ணீரால் கரைந்து விடுவான். கர்ப்பிணிப் பெண் என்றால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை கூறவும் வேண்டுமோ?
முத்துவைப் பெற்றிருப்பது சிப்பி என்பதால் அதன் மதிப்பை நாம் குறைப்பதில்லை. அதுபோல அருமை தெரியா நம்மிடத்தில் இஸ்லாம் பரவியிருப்பதால் அதன் தரம் எப்பொழுதும் விளங்கப்படாமலேயே இருந்துவிடப் போவதில்லை. சோதனையால் சூழும்போதும் மரணத்தின் மடியில் சிக்கும் போது அதன் பெருமை வெட்ட வெளிச்சமாகிவிடும். இதையே அண்ணலம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ‘மக்கள் உறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மரணம் நெருங்கி விட்டால் விழித்துக் கொள்வார்கள்.
வருமுன் விழிப்போமாக! அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.