அன்னை ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்விலே நமக்குள்ள படிப்பினைகள்
பத்ர் யுத்தத்தின் பொழுது நடந்த கீழ்க்கண்ட இந்த நிகழ்ச்சி அத்தபரி, காமில் – இப்னு அதீர் மற்றும் சீறா இப்னு ஹிஸாம் ஆகியவற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது
அதாவது, முஸ்லிம் படை பத்ர் யுத்தத்தில் வெற்றி பெற்றுத் திரும்பிக் கொண்டிருக்கின்றது. போரில் பிடிபட்ட எதிரிகளில் அன்னையவர்களின் முதல் கணவராக ஸக்ரான் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது சகோதரர் ஸுஹைல் பின் அம்ர் அவர்களும் ஒருவராக இருந்தார்.
பிடிபட்ட எதிரிகளை கைது செய்து மதீனாவுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்ட சுஹைல் பின் அம்ர் அவர்கள், மாலிக் பின் தாக்தம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது பொறுப்பில் வந்து கொண்டிருந்தார்கள்.
அந்த நிலையில், தானாக தன்னை விடுவித்துக் கொண்டு, சுஹைல் தப்பித்து விட்டார். இந்த விஷயம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எட்டியவுடன், முழு இராணுவப் படையையும் நிற்கச் சொல்லி விட்டு, தப்பித்துப் போன அந்தக் கைதியைப் பிடித்து வரும் வரை இராணுவம் இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிடுகின்றார்கள்.
இந்த உத்தரவைப் பெற்றுக் கொண்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்கள், தப்பித்துப் போனவரைத் தேடி அலைந்து, இறுதியில் ஒரு மரத்திற்குப் பின் ஒளிந்து கொண்டிருந்த சுஹைiலைக் கைது செய்து, அவரது கைகளைக் கட்டி, அதனை கழுத்துடன் பிணைத்து இழுத்து வந்தார்கள். இந்த நிலையிலேயே மதீனாவிற்குள்ளும் அழைத்து வந்தார்கள்.
இந்தக் கோரக் காட்சியைப் பார்த்த அன்னையவர்கள், சுஹைலினுடைய அந்த இழிநிலையைப் பார்த்த அன்னையவர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக, இந்த இழிநிலையைப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் நான் கண்ணியமான முறையில் இறந்திருக்க வேண்டுமே! அதுவே மேலானது, அவமானம்..! என்று வாய் தவறிக் கூற ஆரம்பித்து விட்டார்கள். இவர்கள் கூறிய இந்த வார்த்தைகளை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவிமடுக்கக் கூடும் என்பதை அன்னையவர்கள் அறியவில்லை. அன்னையவர்கள் கூறிய இந்த வார்த்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகவும் புண்படுத்தி விட்டது.
நீங்கள் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள். நீங்கள் கூறிய இந்த வார்த்தை அல்லாஹ்வின் மற்றும் இறைத்தூதராகிய என்னுடைய எதிரியுமான இவர்களை உசுப்பேத்தி விடக் கூடியதாக இருக்கின்றதே! இன்னும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போர் புரிகின்ற எதிரிகள் எவ்வாறு கண்ணியமான முறையில் மரணமடைய முடியும்?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தக் கேள்வி அன்னையவர்களை வெட்கப்படச் செய்தது, உடனே அவர்கள் தன்னுடைய அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். மன்னிப்புக் கோரினார்கள். என்னுடைய இந்த வார்த்தை இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நினைக்கவில்லை, கைதிகள் கொண்டு வரப் பட்ட அந்தக் காட்சியைப் பார்த்தவுடன், என்னுடைய மூளையில் உதித்ததை நான் கொட்டி விட்டேன் என்று வருத்தப்பட்டுக் கூறினார்கள். இன்னும் நான் கூறியது இறைமார்க்கத்திற்கு எந்த வகையிலாவது பாதகமாக இருக்குமென்று சொன்னால், இன்னும் அல்லாஹ்வினதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதும் உத்தரவுக்கு நான் கட்டுப்படுகின்றேன், அதாவது என்ன தண்டனை கொடுத்தாலும் அதனை நான் ஏற்கத் தயாராக இருக்கின்றேன் என்று கூறி, தனது பணிவையும், கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்திக் காட்டினார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகைத்தவர்களாக, பிடிபட்ட கைதிகளை நல்ல விதமாக நடத்தும்படி உத்தர விட்டார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இந்த உத்தரவைச் செவி மடுத்த தோழர்கள், அது நிமிடம் முதல் கைதிகளுக்கு உணவு பரிமாறி விட்டுத் தான், அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். நபித்தோழர்களது இந்த பண்பாடான செயல்களால், அதனால் கவரப்பட்டு பல இறைநிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தினுள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு இஸ்லாத்தில் இணைந்து கொண்டவர்களில் ஸுஹைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறுதி ஹஜ் முடிந்தவுடன், இனிமேல் இந்த ஹஜ்ஜுக்குப் பின் நீங்கள் உங்களது இல்லங்களிலேயே தங்கி இருங்கள், இது அல்லாஹ்வினுடைய கட்டளை என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மனைவிமார்களை நோக்கிக் கூறினார்கள்.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; (33:33)
அதன் பின் அன்னையவர்களும், இன்னும் ஜைனப் பின்த் ஜஹ்ஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மரணத்திற்குப் பின்னால், எங்கும் பயணம் செய்ததில்லை, மதீனாவிலேயே தங்கியிருந்தார்கள். நாங்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹஜ்ஜும் செய்தாகி விட்டது, உம்ராவும் செய்தாகி விட்டது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கட்டளைக்கு ஏற்ப நாங்கள் இனி எங்கும் பயணம் செல்ல மாட்டோம், வீட்டிலேயே தங்கியிருந்து, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கட்டளைக்குக் கீழ்ப்படிய விரும்புகின்றோம் என்று கூறினார்கள்.
இன்னும் ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகவும் தயாள குணம் படைத்தவர்களாகவும் விளங்கினார்கள். ஒருமுறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலப் பிரிவில், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னையவர்களுக்கு ஒரு பை நிறைய திர்ஹம்களைக் கொடுத்தனுப்பினார்கள். அந்தப் பையில் உள்ளவை திர்ஹம் என்பதை அறிந்த மாத்திரத்திலேயே, இது என்ன பேரீத்தம் பழம் நிறைக்கப்பட்ட பையைப் போல உள்ளது எனக் கூறியவர்களாக, அந்தப் பையில் உள்ள அனைத்து திர்ஹம்களையும் தானமாக ஏழைகளுக்கும் இன்னும் தேவையுடைய மக்களுக்கு வழங்கி விட்டார்கள்.
இமாம் தஹபீ அவர்களது கூற்றுப்படி, அன்னையின் பெயரால் ஐந்து ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆடு ஒன்று இறந்து விட்டபின், அந்த ஆட்டின் தோலை உரித்து, அதனைப் பதனிட்டு எவ்வாறு பயன்படுத்தினோம் என்று அன்னையவர்கள் அறிவிப்புச் செய்த அந்த ஹதீஸின் மூலமாக, இறந்த ஆட்டினுடைய தோலைப் பயன்படுத்தலாம், அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள முடிந்தது.
இன்னுமொரு ஹதீஸ் அன்னையவர்களின் பெயரால் இமாம் அஹமது அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்திருக்கின்றார்கள். ஒருமுறை ஒரு மனிதர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, நான் வயதான எனது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச் செய்யலாமா? என்று கேட்டு விட்டு, இன்னும் அவர் அதன் கிரியைகளைச் செய்யச் சக்தி பெறவே மாட்டார் என்றும் கூறினார்.
இதைக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உனது தந்தையின் கடனை அடைப்பதும், இன்னும் அதுபோல உள்ளவற்றையும் அடைப்பது உன்மீது கடமையாக இருக்குமென்று சொன்னால், இதுவும் அது போல ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்று கூறினார்கள். ஆம்! அவ்வாறு (கடனை) அடைப்பதும் என்மீது உள்ளதே என்றும் கூறினார். பின்னர், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான், நீங்கள் முதலில் உங்களுக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள், பின்னர் உங்களது தகப்பனாருக்காக ஹஜ்ஜுச் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்ததன் பின்பு வந்த கலீபாக்கள் அத்தனை பேரும், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மனைவிமார்கள் மீது அளப்பரிய மரியாதை செலுத்தி, அன்னையவர்களது நலன்களில் அதிகக் கவனம் செலுத்தினார்கள். இன்னும் இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களான அவர்களை பாதுகாப்பதும், கண்ணியப்படுத்துவதும் தம் மீது உள்ள கடமையாகக் கருதினார்கள்.
ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், தனது தள்ளாத முதுமை வரையிலும், அதவாது 80 வயது வரை வாழ்ந்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சிக் காலத்தின் பொழுது அன்னையவர்கள் இறையடி சேர்ந்தார்கள், அவர்களது உடல் ஜன்னத்துல் பக்கீ யில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர்கள் தான் அல்லாஹ் ஸூரா அல் ஃபஜ்ர் -ல், இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த உத்தமர்களான அந்த நன்னம்பிக்கையாளர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றான் :
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:27-30)
(நன்றி: அந்நிஸா மாத இதழ்)
source: http://www.tamilmuslim.com/KATTURAIKAL/mother_sauda.htm