ரிலாக்ஸ் பிளீஸ்…!
கவ்சல்யா
[ என் கூச்சல் கேட்டு மெதுவா…?!! வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்… என் மண்டைக்கு எதுவும் ஏறல… புலம்பறதையும் நிறுத்தல… அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, “ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க…டென்ஷன் படாதிங்க”னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்…! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.
என்ன ஒரு தெளிவு! என்ன அழகான நேர்மையான எண்ணம்! இது ஏன் எனக்கு இல்லை?? அந்த நிமிஷம், சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.]
உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்…?! வேலை, விலைவாசி,கல்யாணம், குடும்பம். குழந்தை, படிப்பு…….இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.
உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்…உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை. ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா…?!
எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் “ஒருநாள் பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று…!” நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை பற்றி யோசித்து, முந்தினவற்றையே நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம்.
கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.
உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட ‘ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்’ உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே.
ரசிக்க கற்று கொள்ளுங்கள்…வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!
முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது…!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க கேட்டா ‘மழைக்கு welcome சொல்லுங்களேன்’ என்று சொல்வேன்.
உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும்.
சொந்த அனுபவம்
எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும் என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு…!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க…!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும் ஒரு குட்டி மரம் போல இருக்கும். அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.
காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு…!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம் சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான் எனக்கு…?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்…எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே தெரியல…கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்…அதை ஏன் கேட்கிறீங்க…இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்…(தொட்டி எப்படி நடந்து படி ஏறி மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல…?!!)
பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் “ரோஜா தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா?” கேட்க, அவங்களும் “அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா இருக்குமே ” அப்படின்னு எண்ணைய கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க.
அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே இருந்தேன்…! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க…! எத்தனை பேர் வந்திருப்பாங்க ……? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்……
என் கூச்சல் கேட்டு மெதுவா…?!! வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்… என் மண்டைக்கு எதுவும் ஏறல… புலம்பறதையும் நிறுத்தல… அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, “ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க…டென்ஷன் படாதிங்க”னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்…! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.
என்ன ஒரு தெளிவு! என்ன அழகான நேர்மையான எண்ணம்! இது ஏன் எனக்கு இல்லை?? அந்த நிமிஷம், “எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்… எந்த விசயமுமே நாம் எதிர் கொள்கிற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்…?!”
சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்…இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்…அனுபவம் பேசுதுங்க…!!)
source: http://kousalya2010.blogspot.com/