2. இந்தியாவில் நம் உறவினர்கள் மரணித்து விட்டால் வெளிநாட்டில் வசிக்கும் முக்கியமானவர்கள் மையத்தை சென்று பார்ப்பதற்கு குறைந்தது 12 மணி நேரங்களாகிறது. அதிக நேரம் மய்யித்தை காக்க வைப்பது முறையா..?
3. இஸ்ராயில் என்ற மலக்கே கிடையாது என சிலர் கூறுவது குறித்து…?!
4. ஜும்ஆவில் இமாம் குத்பா நிகழ்த்தும்போது எவராவது பள்ளியில் நுழைந்தால் உட்கார்ந்துவிடுவது வழக்கம். குத்பாவைக் கேட்டால் இரண்டு ரக்அத் தொழுத நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸ். ஆனால் இன்று இரண்டு ரக்அத் தொழாமல் உட்காரக் கூடாது என்பது ஏன்?
5. ஒரு முஸ்லிம் பெண் ஓடிப் போய் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி திருமணம் முடித்தால் அந்த திருமணம் செல்லுமா..? அவர்கள் உறவுக் கொண்டதாக கூறினால் தண்டனை வழங்க வேண்டுமா..? அல்லது அவர்களை பிரித்து வைக்க வேண்டுமா..?
6. ஒருவரைப் பற்றி முனாஃபிக் என்று நான் முடிவு செய்து பத்வா கொடுக்கலாமா? அல்லது அதை அல்லாஹ் முடிவு செய்பவனா?
7. பெண்கள் சேலை அணிந்து தொழலாமா…?
8. மனைவியிடம் இல்லறத்தில் கூடாமல் வேறு விளையாட்டால் சுகம் அனுபவித்தால் குளிப்பு கடமையாகுமா…?
9. நான் மகளுக்கு சித்தாரா என்று பெயரிடலாமா? அதன் பொருள் திரை சீலை என்று (அஃரிணையாக) வருவதால் சந்தேகம் வருகிறது!
10. விபச்சாரம் செய்வதை இஸ்லாம் பெரிய பாவங்களின் பட்டியலில் சேர்க்கிறது. சுய இன்பம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
கேள்வி : பெண்களின் அழகு முகத்தில்தான் உள்ளது. தங்கள் அழகை வெளிகாட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் முகத்தை திறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். இது பற்றி என்ன முடிவுக்கு வருவது..?
பதில் : இது பற்றி வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் விளக்கமாக உள்ள நபி மொழிகளையும் சிந்தித்தால் பெண்களை முகத்தை மூடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை என்பதை விளங்கலாம்.
குர்ஆன் வசனங்களைப் பார்ப்போம்.
இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறுவீராக!
அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
தங்கள் ஜீனத்தை அதிலிருந்து தெரியக்கூடியதைத் தவிர வெளிகாட்டக்கூடாது
மேலும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்
தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்த மாக்கிக்கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்பமுடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய ஜீனத்தை வெளிப்படுத்தக் கூடாது
மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் ஜீனத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (ப+மியில்) தட்டி நடக்க வேண்டாம். (அல் குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் ஜீனத் என்ற பதம் மூன்று இடங்களில் வந்துள்ளது. இவற்றிர்க்கு அலங்காரம் என்று பொதுவாக அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள். இது முழுமையான அர்த்தம் அல்ல.
நாமாக தேவைக்கேற்ப செயற்கையாக செய்துக் கொள்ளும் அழகிற்கே அலங்காரம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.
வீட்டை அலங்கரிக்கிறார்கள், புதுப் பெண் அலங்கரிக்கப்படுகிறாள், கணவனுக்காக மனைவி தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் போன்ற வற்றிலிருந்து செயற்கையாக செய்துக் கொள்வதையே அலங்காரம் என்ற சொல் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
திருக்குர்ஆனில் ஜீனத் என்று வரும் எல்லா இடங்களிலும் நாம் பயன் படுத்தும் அர்த்தத்தில் அலங்காரம் என்ற பொருளை கொடுக்க முடியாது இடத்திற்கு ஏற்றார்போல் அதன் அர்;த்தம் மாறுபடும்.
இதை புரிந்துக் கொள்வதற்காக சில வசனங்களைப் பார்க்கலாம்.
அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிபடுத்தி இருக்கும் ஜீனத்தையும் உணவுப் பொருள்களில் நல்லவற்றையும் தடுப்பது யார்..? (7:32)
இந்த வசனத்தில் இடம்பெறும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது. – இயற்கை
அழகு – என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
பிர்அவ்னுக்கும் அவன் அமைச்சர்களுக்கும் ஜீனத்தும் வாழ்வாதார தேவைகளும் கொடுக்கப் பட்டிருந்தன (10:88)
இந்த வசனத்திலும் ஜீனத்திற்கு – இயற்கை செல்வம் – என்று தான் பொருள் கொள்ள முடியும்.
குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறி செல்வதற்காகவும் ஜீனத்தாகவும் படைத்துள்ளான். (16:8)
இங்கும் ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம் என்று பொருள் கொள்ள முடியாது இயற்கை அழகு என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
ஆதமின் மக்களே..! தொழுமிடங்களில் உங்களை ஜீனத்தாக்கிக் கொள்ளுங்கள்(7:31)
இங்கு ஜீனத் என்பதற்கு பொருள், நிர்வாணமாக பள்ளிகளுக்கு செல்லாமல் ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
ஜீனத் என்ற பதம் இப்படி பல பொருள்களை கொண்டுள்ளது.
இப்போது பெண்கள் பற்றி பேசும் நூர் அத்தியாயத்தில் 31வது வசனத்தில் வரும் ஜீனத் என்ற பதங்களுக்கு எந்த பொருள் பொருந்தி போகிறது என்று பார்க்க வேண்டும்.
பெண்கள் ஜீனத்தை அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியதை தவிர காட்டக் கூடாது என்று இறைவன் கூறுகிறான்.
இங்கு ஜீனத்திற்கு செயற்கை அலங்காரம், அதாவது ஆடை அலங்காரம் என்று பொருள் கொண்டால் – அதிலிருந்து தெரியக்கூடியதை தவிர – என்று இறைவன் கூறுவதற்கு பொருள் விளங்காமல் போய்விடுகிறது. ஆடை அலங்காரத்திலிருந்து எதையோ வெளியில் காட்டலாம் என்று பொருள் வருகிறது.
இஸ்லாம் கூறும் முறைப்படி ஒரு பெண் ஆடை உடுத்தினால் அந்த ஆடை முழுவதையும் கூட அந்த பெண் வெளிகாட்டலாம் தடையில்லை. உறுப்புகள் எடுப்பாக வெளியில் தெரியாக அளவிற்கு கணமான விசாலமான ஒரு சேலையை ஒரு பெண் தன் உடல் முழுவதும் சுற்றிக் கொண்டால் அதுவே அவளுக்கு இஸ்லாமிய உடையாக அமைந்து விடும் அதோடு அவள் வெளியில் செல்லலாம். சூடான், பாகிஸ்தான் நாட்டுப் பெண்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
உடலை முழுதும் மறைக்காத அளவிற்கு பெண் உடை உடுத்தினால் அவள் வெளியில் செல்லும் போது புர்காவோ, துப்பட்டியோ மேலதிகமாக அவசியமாகி விடுகிறது. இந்தியா மற்றும் அரபு நாட்டுப் பெண்கள் இதற்கு உதாரணம். இவர்களின் ஆடை போதுமானதாக இல்லை என்பதால் வெளியில் செல்லும் போது மேலதிகமாக துப்பட்டி புர்கா அணிகிறார்கள்.
இந்த விளக்கம் ஏன் என்றால் 24:31 வசனத்தில் முதலில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு ஆடை அலங்காரம் என்று பொருள் கொடுக்க முடியாது என்பதற்குதான். பெண்களை பொருத்தவரை அவர்கள் உடுத்தும் எந்த உடையும் அவர்களுக்கு அலங்காரம்தான். சல்வார் கமீஸ_டன் வெளிபட்டாலும் சரி, சேலையோ, புர்காவோ. துப்பட்டியோ எதுவும் அவர்களுக்கு அலங்காரம்தான். அப்படியானால் அந்த வசனத்தில் பேசுவது அலங்காரம் பற்றியது அல்ல. அங்கு வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயற்கை அழகு என்பது தான் பொருள்.
இப்போது பொருளைப் பார்ப்போம்.
முஃமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும்
தங்கள் வெட்கத்தளங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்
தங்கள் இயற்கை அழகி(ஜீனத்தி)லிருந்து தெரியக்கூடியதைத் தவிர மற்றதைக் காட்டக்கூடாது.
இன்னும் தங்கள் மார்புகள் மீது முந்தானைகளை போட்டுக் கொள்ளட்டும்.
அதிலிருந்து தெரியக்கூடியது என்பதிலிருந்து பெண்கள் தங்கள் முகத்தையும் கைகளையும் திறந்திருக்கலாம் என்பதை தெளிவாக விளங்கலாம்.
இந்த வசனத்தில் அடுத்து தொடராக இரண்டு இடங்களில் வரும் ஜீனத் என்ற பதத்திற்கு இயல்பாக வீட்டில் இருக்கும்போதுள்ள செயற்கை அலங்காரம் என்ற பொருள்தான் பொருந்திப் போகிறது.
நபியே! விசுவாசியான பெண்களுக்கு அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! இதனால் அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல் குர்ஆன் 33:59)
பெண்கள் முகத்தை திறந்திருக்கலாம் என்பதற்கு இந்த வசனமும் சான்றாக இருக்கிறது. தலை முக்காட்டுடன் ஒரு பெண் முகத்தை திறந்திருக்கும் போது அவள் நல்லப் பெண் கண்ணியமானப் பெண் என்று பிறரால் அறியப்படுவாள். இதன் காரணமாக அவள் பற்றிய அவதூறு, அவளுக்கெதிரான ராகிங் போன்றவை நடக்காமலிருக்க இது வழிவகுக்கும் என்றெல்லாம் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகிறது.
இந்த வசனத்தில் இடம் பெறும் – தலை முந்தானைகளை தாழ்திக்கொள்ளட்டும் –
என்பதற்கு என்ன விளக்கம்? தலை முந்தானையால் முகத்தையும் மூடிக் கொள்ள வேண்டும் என்றுதானே புரிந்துக் கொள்ள முடிகிறது.,! என்று சிலருக்குத் தோன்றலாம். இதற்கு அந்த பொருளில்லை. தலை முந்தானை அடிக்கடி தலையிலிருந்து சரிந்து விழும் வாய்ப்புள்ளதால் அதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். நபிமொழிகளிலிருந்து இதை விளங்கலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பட்டாலான மேலாடையும் கீழாடையும் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து… – பெண்களுக்கு தலைக்கு போடும் முக்காடாக கத்தரித்துக் கொள்ளவே அனுப்பினேன் – என்று கூறினார்கள். (அலி ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
தனி முக்காடாக பெண்கள் தலையை மறைத்துள்ளார்கள் என்று இந்த செய்தியிலிருந்து விளங்கலாம்.
அந்த முக்காடுகள் சரிந்து விழும் நிலை இருந்ததை அடுத்த செய்தி விளக்குகிறது.
(என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்) அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் நபித்தோழர்கள் பலருடன் வந்து என்னை பெண் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; ”உஸாமாவிற்கு என்னை திருமணம் செய்ய பெண் கேட்டார்கள். யார் என்னை விரும்புகிறாரோ எவர் உஸாமாவை விரும்பட்டும் என்று நபியவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். எனவே என் திருமண விஷயத்தை அவர்களிடம் ஒப்படைத்து நீங்கள் விரும்பியவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறிவிட்டேன்.. (இது நீண்ட ஹதீஸ்) என்னை உம்ம ஷரீக் வீட்டில் இத்தா இருக்க நபி ஸல் சொன்னார்கள். பிறகு வேண்டாம் அங்கு இத்தா இருக்க வேண்டாம் ஏனெனில் அவர் வீட்டிற்கு ஏராளமான விருந்தினர் வந்து தங்குவார்கள். அப்போது உன் தலையில் போட்டுள்ள முக்காடு கீழே விழும் சந்தர்பங்களில் மற்றவர்கள் உன்னை பார்ப்பதை நான் வெறுக்கிறேன். அதனால் நீ உம்மி மக்தூம் வீட்டில் இத்தா இரு என்று கூறினார்கள். (ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா, நூல் : நஸயி)
மற்றவர்கள் முன்னிலையில் தலை முக்காட்டில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே அந்த வசனத்தில் இறைவன் – தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளட்டும் – என்று கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்திருந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உண்டு. ஒரு பெண் விரும்பி தன் முகத்தை மூடிக் கொண்டால் அது அவள் விருப்பம் அதை தடுக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
கேள்வி – இந்தியாவில் நம் உறவினர்கள் மரணித்து விட்டால் வெளிநாட்டில் வசிக்கும் முக்கியமானவர்கள் மையத்தை சென்று பார்ப்பதற்கு குறைந்தது 12 மணி நேரங்களாகிறது. அதிக நேரம் மய்யித்தை காக்க வைப்பது முறையா..?
பதில் : இத்துனை மணி நேரத்திற்குள் மய்யித்தை எடுத்து விட வேண்டும் என்ற எந்த சட்டமும் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இல்லை. தேவைக்கேற்ப கொஞ்சம் முன் பின் படுத்துவதில் தவறில்லை. ஆனாலும் பொதுவாக நீண்ட நேரம் மைய்யத்தை காக்க வைக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் அடக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடக்கி விட வேண்டும். இதை கீழ் காணும் ஹதீஸ்களிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.
மய்யித்தை மனிதர்கள் தூக்கி செல்லும் போது அவன் நல்லடியாராக இருந்தால் (தங்குமிடத்திற்கு) என்னை அவசரமாக எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பான். தூக்கி செல்லப்படுபவன் பாவியாக இருந்தால் என் கேடு என்னை பிடித்துக் கொண்டது என்று அலறுவான். இந்த சப்தத்தை மனிதர்கள் தவிர எல்லா உயிரினங்களும் செவியுறும். மனிதன் இதை செவியுற்றால் அங்கேயே மயக்கமுற்று அடித்து விழுவான் என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். (அறிவிப்பு, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி)
மய்யித்தை தூக்கி செல்லும் போது விரைவாக தூக்கி செல்லுங்கள் அந்த மய்யத் நல்லறம் புரிந்ததாக இருந்தால் அதை விரைவில் நல் வாழ்க்கையின் பால் சேர்த்தவர்களாவீர். அது தீயதாக இருந்தால் தீமையை உங்கள் தோல்களை விட்டும் இறக்கி விடுகிறீர்கள் என்பது நபி மொழி.
இந்த இரண்டு ஹதீஸ்களிலும் மரணித்தவருக்கு கப்ரில் வேறொரு வாழ்க்கை தீர்மாணிக்கப் படவேண்டியிருப்பதால் அந்த வாழ்க்கையின் பக்கம் அவர்களை விரைவாக சேர்த்து விடுங்கள் என்ற விபரம் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மையத்தை அதிக தாமதப்படுத்தி அடக்கக்கூடாது என்பதை விளங்கலாம்.
கேள்வி – இஸ்ராயில் என்ற மலக்கே கிடையாது என சிலர் கூறுவது குறித்து ?
பதில் : உண்மைதான். உயிரைப் பறித்துக் கொண்டு போகும் மலக்கை நம் மக்கள் பரவலாக இஸ்ராயீல் அல்லது இஜ்ராயீல் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஆனால் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ அப்படி எந்தப் பெயரும் வரவில்லை. உயிரை கைப்பற்றுவதற்காக இறைவன் ஒரே ஒரு மலக்கை நியமிக்கவில்லை. அந்த வேலையை செய்வதற்காக ஒரு தனி படையே இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை குர்ஆன் வசனங்களை சிந்திக்கும் போது விளங்கலாம்.
உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவுத்” (மரணத்திற்குரிய மலக்கு) உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 32:11)
”உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும்” என்ற வார்த்தை ஒரு மலக்கு மட்டுமே அனைவரின் உயிரையும் கைப்பற்றுவதில்லை என்பதை விளக்குகிறது.
அவர்களின் முகங்களிலும் – அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து மலக்குகள் (வானவர்கள்) அவர்களை மரணமடைய செய்யும் போது எப்படி இருக்கும்? (அல் குர்ஆன் 47:27)
இந்த வசனத்தில் இறைவன் மலக்கு என்ற ஒருமைச் சொல்லை பயன்படுத்தாமல் ‘மலாயிகஹ்” என்ற பன்மைச் சொல்லை பயன்படுத்தியுள்ளான். வானவர்கள் இந்தக் காரியத்தை கவனிக்கிறார்கள் என்கிறான். இதிலிருந்து மவுத்துக்குறிய மலக்கு என்ற அடைமொழியுடன் அந்த பணிக்காக ஏராளமான வானவர்களை இறைவன் நியமித்துள்ளான் என்று தெரிகிறது. இவர்களுக்கெல்லாம் தலைவர் இஸ்ராயீல் என்று கூறுவதற்கெல்லாம் ஆதாரம் எதுவும் இல்லை.
கேள்வி : ஜும்ஆவில் இமாம் குத்பா நிகழ்த்தும்போது எவராவது பள்ளியில் நுழைந்தால் உட்கார்ந்துவிடுவது வழக்கம். குத்பாவைக் கேட்டால் இரண்டு ரக்அத் தொழுத நன்மை கிடைக்கும் என்பது ஹதீஸ். ஆனால் இன்று இரண்டு ரக்அத் தொழாமல் உட்காரக் கூடாது என்பது ஏன்?
பதில் : இமாம் நிகழ்த்தும் உரையைக் கேட்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அது இரண்டு ரக்அத்திற்குரிய நன்மையைப் பெற்றுத்தரும் என்று எந்த ஹதீஸ{ம் கிடையாது. மாறாக எந்த சந்தர்ப்பத்தில் பள்ளிக்கு வந்தாலும் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுத்தான் உட்கார வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
”உங்களில் எவரேனும் பள்ளிக்கு வந்தால் இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்” (அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 444)
இமாம் உரை நிகழ்த்தும்போது வருபவர்களும் தொழுதுவிட்டுத்தான் அமர வேண்டும் என்று இந்த பொதுவான அறிவிப்பின் அடிப்படையில் முடிவு செய்ய முடியும் என்றாலும், இமாம் உரை நிகழ்த்தும் போது வருபவர் தொழத்தான் வேண்டும் என்பதற்கு நேரடியான ஆதாரமே இருக்கிறது.
”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆவில் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் வந்து உட்கார்ந்தார். உடனே நபி ஸல்லல்லாஹு
நபிவழியை மதிக்கக்கூடியவர்கள், இமாம் உரை நிகழ்த்தினாலும் இரண்டு ரக்அத் தொழுது விட்டுத்தான் அமர வேண்டும். இதற்கு மாற்றமாகத் தொழாமல் உட்காருவோர் அவர் எவராக இருந்தாலும் நபிவழியைப் புறக்கணிக்கிறார் என்பது வெளிப்படையான பொருள்.
கேள்வி : ஒரு முஸ்லிம் பெண் ஓடிப் போய் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி திருமணம் முடித்தால் அந்த திருமணம் செல்லுமா..? அவர்கள் உறவுக் கொண்டதாக கூறினால் தண்டனை வழங்க வேண்டுமா..? அல்லது அவர்களை பிரித்து வைக்க வேண்டுமா..?
பதில் : திருமணம் என்பது ஒரு சந்தைக்கடை விஷயமல்ல அது ஒரு நல்ல பாரம்பரியத்தையும் குடும்ப அமைப்பiயும் நெடிய உறவு முறைகளையும் உருவாக்கும் ஒரு காரியம் என்பதால் இஸ்லாம் இதில் மிகுந்த அக்கரை செலுத்தியுள்ளது. ஆண் பெண்ணுக்குறிய இயல்புகளை கருதி திருமண விஷயத்தில் தன் சட்டங்களை வரையறுத்துள்ளது. அப்படி வரையறுக்கப்பட்ட சட்டங்களில் ஒரு முஸ்லிம் பெண் பொறுப்புதாரர்களோ சாட்சிகளோயின்றி தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு தடையுள்ளது. – வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை – என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹுரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா (ரளியல்லாஹு அன்ஹும்) போன்ற நபித்தோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி 1107 வது ஹதீஸ்)இங்கு வலியென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளது யாரைக்குறிக்கும்..?
அந்தப் பெண்ணின் பாதுகாவலர் மற்றும் பொறுப்புதாரிகளைக் குறிக்கும்.வலி என்ற வார்த்தையின் கணத்தை நாம் விளங்கினால் எவர் வேண்டுமானாலும் வலியாகி விடலாம் என்ற வாதம் தவறு, அப்படி தீர்மாணிக்க முடியாது என்பதை விளங்கலாம். திருமணம் முடிப்பதாக இருந்தால் முஸ்லிம் பெண்ணுக்கு பொறுப்புதாரி அவசியம். இது அவள் மீது அக்கரை செலுத்தக்கூடிய ஆண் சொந்தங்களையே குறிக்கும். வலி என்பது ஒரு பெண் அவளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை குறிக்காது. அவள் மீது இறைவன் ஏற்படுத்தின உறவைக் குறிக்கும்.
கேள்வி – ஒருவரைப் பற்றி முனாஃபிக் என்று நான் முடிவு செய்து பத்வா கொடுக்கலாமா? அல்லது அதை அல்லாஹ் முடிவு செய்பவனா?
பதில் : முனாபிக் என்றால் நயவஞ்சகன் – சந்தர்ப்பவாதி – இரட்டை நாக்குடையவன் என்பது பொருளும் – கருத்துமாகும். பேச்சின் மூலமாகவோ – செயல்களின் மூலமாகவோ இத்தகையோரை நாம் அடையாளம் காணலாம் என்றாலும் அவசரமாக அத்தகையோருக்கு முனாபிக் பத்வா கொடுத்து விட நம்மால் முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமையுடன் இருப்பது போல இருந்து இரட்டை வேடம் பூண்ட பலர் இருக்கத்தான் செய்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இவர்களைப் பற்றி தெரிந்த நிலையிலும் இத்தகையோர் குறித்து எச்சரிக்கையாக இருந்தார்களே தவிர முனாபிக் பத்வா கொடுக்கவில்லை. அல்லாஹ்தான் அத்தகையோரை தன் வசனங்களின் வழியாக அடையாளம் காட்டினான். (பார்க்க 3:67,68 – 4:61,78,143 – 9:64,69,73,79 – 33:3,12,34,48,60,73 – 48:6 – 57:13,14)
கேள்வி – பெண்கள் சேலை அணிந்து தொழலாமா…?
பதில் : இந்த உடையில் தான் தொழ வேண்டும் என்று தொழுகைக்காக எந்த பிரத்யேக உடையையும் இஸ்லாம் ஏற்படுத்தவில்லை. சுத்தமான நிலையில் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைந்திருந்தால் எந்த உடையுடனும் தொழலாம். சேலை என்பது விசாலமான உடை என்பதால் சேலை உடுத்திக் கொண்டு தொழலாம். தடையில்லை.
கேள்வி : மனைவியிடம் இல்லறத்தில் கூடாமல் வேறு விளையாட்டால் சுகம் அனுபவித்தால் குளிப்பு கடமையாகுமா…?
பதில் : உங்கள் மனைவிகள் உங்கள் விளை நிலங்களாவர் எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்கு செல்லுங்கள். (அல் குர்ஆன் 2:223)
இந்த வசனப்படி நமது சொந்த விளைநிலத்தில் எப்படியும் சுகம் பெறலாம். மாதவிடாய் காலங்களிலும் – மலப்பாதையிலும் மட்டும் உறவுக் கொள்வதற்கு தடையுள்ளது. இந்த இரண்டு வழியல்லாத மற்ற வழிகளில் (நீங்கள் கேட்டுள்ளப்படியும்) சுகம் பெறலாம் தடையில்லை. இல்லறமல்லாத மற்ற அனுமதிக்கப்பட்ட வழிகளை நாடும் போது விந்து வெளிப்பட்டுவிட்டால் குளிப்பு கடமையாகி விடும். இல்லையைன்றால் குளிப்பு கடமையல்ல.
கேள்வி : நான் மகளுக்கு சித்தாரா என்று பெயரிடலாமா? அதன் பொருள் திரை சீலை என்று (அஃரிணையாக) வருவதால் சந்தேகம் வருகிறது!
பதில் : உச்சரிப்பதற்கு அழகாகவும், தவறான அர்த்தத்தை கொடுக்காத வார்த்தையாகவும் இருந்தால் எந்த வார்த்தையையும் பெயராக சூட்டிக் கொள்ளலாம். நீங்கள் அரபு நாட்டில் இருப்பதால் அரபுகளின் பெயர்களை ஊன்றி கவனித்தாலே போதும் இதை விளங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் ‘சித்தாரா” என்பது உச்சரிப்பதற்கு அழகாகவும் இருக்கிறது. அதில் தவறான அர்த்தமும் இல்லை. அஃரிணையாக வருவதை பெயராக சூட்டக் கூடாது என்றெல்லாம் சட்டம் ஒன்றும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஒருவருடைய ‘வரண்ட நிலம்” என்ற பெயரை மாற்றி ‘செழிப்பான நிலம்” என்று அஃரிணையாக வைத்ததற்கு ஆதாரம் உள்ளது (அபூதாவூத்) எனவே சித்தாரா என்று பெயரிடலாம்.
கேள்வி – விபச்சாரம் செய்வதை இஸ்லாம் பெரிய பாவங்களின் பட்டியலில் சேர்க்கிறது. சுய இன்பம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது ?
பதில் : விபச்சாரம் போன்று நேரடியான தடை சுய இன்பத்திற்கு இல்லை என்றாலும் அதை தடை செய்யும் விதமாக குர்ஆனில் வசனம் உண்டு என்று சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.
23வது அத்தியாயத்தில் வெற்றிப் பெறும் முஃமின்களைப் பற்றி இறைவன் கூறி வருகையில்,
”அவர்கள் தங்கள் மனைவிகளிடமும் – அடிமைப் பெண்களிடமும் தவிர மற்ற வழிகளை நாடாமல் தங்கள் வெட்கத்தலங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்” என்கிறான் (23:5,6)
جَزَاكَ اللَّهُ خَيْرًا –http://www.tamilmuslim.com