தாயா, தாரமா?
மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ
[ மாமியார் – மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புக்கு அடிப்படைக் காரணம் தன் மீது இருவரும் கொள்கின்ற அன்பின் போட்டிதான் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரு ஆணுக்குப் பெரும் சவால் தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் நடுநிலையாக வாழ்ந்து காட்டுவதே! மற்றெல்லா சவால்களும் இதற்கப்பால்தான்!
ஒரு ஆண்மகன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த இரு உறவுகளின் உணர்வுகளையும் மதித்து இருவரின் மீதும் தனக்குள்ள அன்பு சரிசமமானது தான் என்பதை எடுத்துக் காட்டி இருவரும் தனக்கு இரண்டு கண்கள் என்று புரிய வைத்து விடவேண்டும். தன்னைப்பெற்ற அன்னை தனக்கு உயிர் போன்றவள். தன் மனைவி உடல் போன்றவள் என்ற உணர்வுடன் இருபக்கமும் ஒரே கண்ணோட்டத்துடன் பாசத்தைப் பொழிய வேண்டும். மனதுக்குள் குறை தொன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது.
மாமியார் – மருமகள் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான் என்பதை உணர்ந்து அதைச் சீர் செய்யத்தக்க நடவடிக்கைகளை உடனே மெற்கொள்ள வேண்டும்.
தாய்க்காக தாரத்தையோ, தாரத்திற்காக தாயையோ வெறுத்து ஒதுக்கக் கூடாது.
இருவரும் பெண்கள் தான்.
பெண்மைக்கு உரிய பலவீனமான குணங்கள் இருசாராரிடமும் இருக்கவே செய்யும்.
அதை அனுசரித்துச் செல்ல வேண்டும்.]
மாமியார் – மருமகள்
மாமியார் மருமகள் பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை எனலாம். இதற்குக் காரணம் என்ன என்பதை அறிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. இதற்கு அடிப்படை, பெண்களின் இயல்புதான். மாமனார் – மருமகன் பிரச்சனை ஏன் எழுவதில்லை? பொதுவாக பெண்கள் தங்கள் வாழ்வுக்கு யாரையாவது சார்ந்திருக்க வேண்டிய நிலையில்தான் படைக்கப்பட்டுள்ளார்கள்.
பெற்றெடுத்துப் பேணிப் பாதுகாத்துப் பாலூட்டித் தாலட்டிச் சீராட்டி, வளர்த்து ஆளாக்கிய அருமை மகனின் அன்பு முழமையாக தனக்கே கிடைக்க வேண்டும் என்று தாய் விரும்புகிறாள். அதில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அதற்குக் காரணம் புதிதாக வந்த தன் மருமகள்தான் காரணம் என்று நினைக்கிறாள்.
இதைப்போன்ற மனப்பான்மை புதிதாக வந்துள்ள மருமகளுக்கும் ஏற்படும்தானே! அவளும் ஒரு பெண் அல்லவா? தன் கணவரை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அவள் எண்ணம்கூட தவறு என்று சொல்ல முடியாதுதான். கணவனின் அன்பு சற்று மாறுபடுவதாக அவளுக்குத் தோன்றும்போது அதற்குக் காரணம் தன் மாமியார்தான் என அவளும் எண்ணுகிறாள்.
ஆக, மாமியார் – மருமகள் இடையே ஏற்படும் மனக்கசப்புக்கு அடிப்படைக் காரணம் தன் மீது இருவரும் கொள்கின்ற அன்பின் போட்டிதான் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஓரு ஆணுக்குப் பெரும் சவால் தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் நடுநிலையாக வாழ்ந்து காட்டுவதே! மற்றெல்லா சவால்களும் இதற்கப்பால்தான்!
ஒரு ஆண்மகன் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான இந்த இரு உறவுகளின் உணர்வுகளையும் மதித்து இருவரின் மீதும் தனக்குள்ள அன்பு சரிசமமானது தான் என்பதை எடுத்துக் காட்டி இருவரும் தனக்கு இரண்டு கண்கள் என்று புரிய வைத்து விடவேண்டும். தன்னைப்பெற்ற அன்னை தனக்கு உயிர் போன்றவள். தன் மனைவி உடல் போன்றவள் என்ற உணர்வுடன் இருபக்கமும் ஒரே கண்ணோட்டத்துடன் பாசத்தைப் பொழிய வேண்டும். மனதுக்குள் குறை தொன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தக் கூடாது.
‘தன் மனைவியின் காரணமாக தாயின்மீது தனக்குள்ள அன்பும் பாசமும் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை’ என்று மகன் தாயிடம் அதிக பாசம் காட்டினால் அந்தத் தாய் மருமகளை நேசிப்பாள். அதே போல ‘தன் தாயின் தூண்டதலாலேயே உன்ன நான் மேலும் நேசிக்கின்றேன்’ என்று மனைவியிடம் காட்டிக் கொண்டால் மருமகள் மாமியாரைத் தன் தாய்ப்போல் கருதுவாள். இவ்வாறு அன்பை இருபக்கமும் ஆண்கள் பொழிந்;தால் குடும்பத்தில் பிரச்சனைக்குறைவு.
பொய்கூட சொல்லலாம்
இவ்வாறு நடந்து கொள்ளும்போது சில சமயங்களில் பொய் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் மனைவியிடம் பொய் சொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதி உண்டு.
‘மனிதன் மூன்று விஷயங்களில் பொயப்; பேசலாம். 1. போர்க் களங்களில், 2. இரவருக்கிடையே சமாதானம் செய்வதற்காக, 3. தன் மனைவியைத் திருப்தி படுத்துவதற்காக’ என்ற நபிமொழியை நினைவில் கொண்டு செயல்பட்டால் இருவரையுமே சமாதானம் செய்து வாழ்வது சிரமமானதல்ல, எளிதானதுதான்.
பெண்களை நிர்வகிக்கும் திறமை ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்ற திருக்குர்ஆனின் கூற்றும் இவ்விஷயத்தில் ஆண்களின் கடமையை உணர்த்துகிறது.
மாமியார் – மருமகள் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் ஆண்களின் பலவீனம்தான் என்பதை உணர்ந்து அதைச் சீர் செய்யத்தக்க நடவடிக்கைகளை உடனே மெற்கொள்ள வேண்டும்.
தாய்க்காக தாரத்தையோ, தாரத்திற்காக தாயையோ வெறுத்து ஒதுக்கக் கூடாது. இருவரும் பெண்கள் தான். பெண்மைக்கு உரிய பலவீனமான குணங்கள் இருசாராரிடமும் இருக்கவே செய்யும். அதை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
மாமியார் மருமகள் இருவரும் ஒத்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவ்விருவரும் தனித்தனியாக வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதும் இருவருக்கும் நாம்தான் செலவு செய்ய வேண்டும். இருவரையுமே பாசத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு ஆணும் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அது, சுவர்க்கம் தாயின் காலடியில் தான் உள்ளது மனைவியின் மடியில் அல்ல. உலகில் நாம் எந்த தவறைச் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மன்னித்து விடலாம். ஆனால், பெற்றோருக்கு இழைக்கும் துன்பத்திற்குரிய தண்டனையை மட்டும் இம்மையிலேயே வெகு சீக்கிரத்தில் அனுபவித்தே தீர வேண்டும். ஏனெனில் பெற்றோரின் மனக் கொதிப்பு நிச்சயம் பாதிக்கும். நாம் வேறு வகையில் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் சரியே.