இண்டர்நெட் – டெலிஃபோன் மூலம் திருமணம்!
மவ்லவி, அஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி எம்.ஏ.,பி.எட்
[ முற்காலத்தைவிட தற்போது செய்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் நவீனமாக மிக அதிக அளவில், வியக்கத்தக்க வகையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.
எனவே ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தொலைவில் இருந்து கொண்டே தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இருசாராரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒப்பந்தம் கூடும் என அடம்பிடிப்பதில் நியாயமில்லை என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இண்டர்நெட் தகவல் சாதனம், தகவல் சாதனங்களில் மிகப்பெரும் சாதனையாகும். இதில் மணமக்கள் இருவரும் நேருக்கு நேராக, ஒருவர் பிறரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதால் இதை நவீனகால மார்க்க அறிஞர்கள் ஏகமனதாக ஏற்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் அறிய கட்டுரைக்குள் செல்லுங்கள்.]
நவீன தகவல் சாதனங்களும் இண்டர்நெட் மூலம் நடைபெறும் திருமணங்களும்
இஸ்லாம் பின்பற்றவதற்கு இலகுவான மார்க்கம். வியாபாரம் மற்றும் கொடுக்கல் – வாங்கல், பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக செய்து கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் பற்றி திருக்குர்ஆனும் திரு நபிமொழியும் பல விளக்கங்களைத் தந்துள்ளன.
வியாபாரம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களில் இரு சாராரின் திருப்தி ஏற்படுவது அவசியமாகும். ஏதாவது ஒரு சாராரின் அதிருப்தியான நிலையில் அவ்வொப்பந்தம் நிறைவேறூது. திருக்குர்ஆன் கூறுகிறது:
‘விசுவாசங் கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தகம் மூலமாக அன்றி (உங்களுக்கு மத்தியில்) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள்: ‘தனது சகோதரரின் பொருளை அவரது அனுமதியில்லாமல் உண்பது ஒரு முஸ்லிமான மனிதருக்கு ஹலால் இல்லை.’ (அல் ஹதீஸ்)
ஈஜாபும் – கபூலும்
ஒப்பந்தங்கள் நிறைவேற்றவதற்கு ஈஜாபும் (ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுதல்) கபூலும் (ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுதல்) அவசியமாகும். அவ்விரண்டின் நிகழ்வுகளும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். முற்காலங்களில் வியாபரியும், வாங்குபவரும் ஒரே சபையில் இருந்து ஈஜாப், கபூல் செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது. எனினும் ஒரே சபையில் இரு சாராரும் இருந்து ஒப்;பந்தம் செய்து கொள்வது எல்லா நிலைகளிலும் முடியாது. எனவே ஒப்பந்தம் செய்து கொள்ளும் நேரம் ஒன்றுபட்டிருந்தால் போதும் அவ்வொப்பந்தம் நிறைவேறிவிடும் என நிர்ணயம் செய்யப்பட்டது.
தபால், தூதர் மூலம்
வியாபாரம், கொடுக்கல் – வாங்கல் சம்பந்தமான ஒப்பந்தங்கள் தபால்கள் மூலமாகவும், தூதர்களை அனுப்பியும் நிறைவேற்றப்பட்டு வந்;தன. ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுபவரும், அதை ஏற்பவரும் படர்கையில் அதாவது வேறு வேறான இடங்களில் இருக்கும்போது தபால், தூதர் என்ற இரண்டு துணைச் சாதனங்களின் மூலமும் ஈஜாப், கபூல் ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேறும் என்ற முறைகளும் கையாளப்பட்டன என்பதில் மார்க்க அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளனர். (நூல்: அல்மத்கல் அல்ஃபிக்ஹி அல்ஆம்)
திருமண ஒப்பந்தம்
ஒப்பந்தங்களில் திருமண ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பரிசுத்தமானதாகவும், அதே சமயம் சிக்கலானதாகவும் இருப்பதால் திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகனும், மணமகளும் படர்கையில் இருக்கும்போது தபால் அல்லது தூதர் மூலமாக திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா? என்பதில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி
இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தபால் மூலமான திருமணம் தக்க காரணமின்றி கூடாது என்கின்றனர். மணமகன் அல்லது மணமகளால் மொழிவதற்கு முடியாது (ஊமைகள்) என்ற நிலையில் தவிர தபால் ஒப்பந்தம், எழுத்துவடிவிலான ஒப்பந்தம் அல்லது சைக்கினை மூலமான ஒப்பந்தம் கூடாது. (நூல்: அஷ்ஷாஹுஸ்ஸயீர் 2 ஃ 17)
இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஷாஃபிஈ மத்ஹபில் இருவித கருத்துக்கள் உள்ளன. ஒன்று மேற்கண்ட இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அதே கருத்து. இரண்டாவது எழுத்து வடிவிலான அல்லது தபால் வடிவிலான திருமண ஒப்பந்தம் கூடும் என்பதாகும். இமாம் நவவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அதன் முறையை பின்வருமாறு விளக்குகிறார்கள்.
பெண்ணின் தந்தை ‘நான் எனது மகளை உனக்கு திருமணம் செய்து தந்து விட்டேன்’ என எழுத வேண்டும். எழுதும்போது நீதமான இரண்டு சாட்சிகள் இருந்தால் நல்லது. அல்லது அவசியமில்லை. இந்த தபால், மணமகனை அடைந்ததும் நீதமான இரண்டு சாட்சிகளுக்கு முன்னிலையில் ‘நான் இந்த திருமணத்தை ஏற்றக் கொண்டேன்’ என வாய் மூலமாகவும் சொல்லலாம். அல்லது எழுதியும் தெரிவிக்கலாம். மணமகனின் ஒப்புதலை சாட்சிகள் மணமகளின் வீட்டிற்கு அனுப்புவார்கள். (நூல்: அல்அஸ்பாஹ் வந்நளாயிற், இமாம் சுயூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி, பக்கம் 334)
இமாம் ஹனஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் இமாம் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஹனஃபி மற்றும் ஹன்பலி மத்ஹபுவாசிகள் படர்கையில் இருக்கும் மணமகன், மணமகளுக்கிடையே தபால் மூலமான திருமண ஒப்பந்தம் கூடும் என்கிறார்கள். ஆனால் அதன் முறை பின்வருமாறு இருக்க வேண்டும் என்கின்றனர்: –
திருமணமோ அல்லது வியாபார சம்பந்தமான வேறு எவ்வித ஒப்பந்தமாக இருந்தாலும் சரி இரு சாராரும் முன்னிலையில் இருக்கும்போது எழுத்து வடிவிலான ஒப்பந்தம் கூடாது. வாய் மூலமான ஒப்பந்தம் அவசியமாகும். தக்க காரணம் இருந்தாலே தவிர மேலும் படர்கையில் இருக்கும் மணமக்கள் ஈஜாப் – கபூல் இரண்டையும் தபால் அல்லது எழுத்து வடிவில் செய்வது கூடாது. ஈஜாப் (ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுதல்) எழுத்து வடிவிலும் அல்லது தபால் வடிவிலும், கபூல்(ஏற்றுக் கொள்ளுதல்) வாய் மூலம் மொழிவதாகவும் இருக்க வேண்டும். இந்தத் திருமணமுறை பின்வருமாறு விளக்கப்படுகின்றது:
மணமகன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மணமகளுக்கு எழுதுகிறார். அந்த தபால் மணமகளக்குக் கிடைத்தவுடன் அவள் நீதமான இரு சாட்சிகளை முன் வைத்துக் கொண்டு ‘நான் அவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறேன்’ அல்லது ‘இன்ன நபர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றேன். இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று கூற வேண்டும். (நூல்: ரத்துல் முக்தார், பகுதி: 3 பக்கம் 12-13)
தூதர் மூலம்
நவீனகால மார்க்க அறிஞர் டாகடர் ஜஹீலி என்பவர் கூறுகிறார்: ‘திருமண ஒப்பந்தம் செய்து கொள்ளும் இரு சாராரில் ஒருவர் ஒப்பந்தம் அரங்கேற இருக்கும் சபையை விட்டும் படர்கையில் இருந்தால் தபால் மூலமாக அல்லது தூதரை அனுப்பித் திருமணம் செய்து கொள்வது ஹனஃபி மத்ஹபில் மட்டும் கூடும். அந்த தபால் அல்லது தூதர் மறுபக்கம் அடையும்போது இரண்டு சாட்சிகள் இருப்பது அவசியம். படர்கையில் இருந்து எழுத்து மூலமாகத் தெரிவிப்பவர் முன்னிலையில் இருந்து மொழிபவரைப் போன்றவராவார் என்பது ஹனஃபி மத்ஹபின் கருத்தாகும்.
வித்தயாசம்
ஹனஃபி உலமாக்கள் கூறுகிறார்கள்: ”திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுபவர் தனது வேண்டுதலை தபால் மூலம் அனுப்பும்போது இரு சாட்சிகள் இருக்க வேண்டமென்பது அவசியமில்லை. ஆனால் திருமண ஒப்பந்தத்தை சம்மதிப்பவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்போது இரு சாட்கள் இருப்பது அவசியமாகும்.”
நவீன தொடர்பு சாதனங்கள்
முற்காலத்தைவிட தற்போது செய்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் நவீனமாக மிக அதிக அளவில், வியக்கத்தக்க வகையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தொலைவில் இருந்து கொண்டே தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இருசாராரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒப்பந்தம் கூடும் என அடம்பிடிப்பதில் நியாயமில்லை என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன் விபரம் பின்வருமாறு:
இண்டர்நெட் மூலமான திருமண ஒப்பந்தம்
இண்டர்நெட் தகவல் சாதனம், தகவல் சாதனங்களில் மிகப்பெரும் சாதனையாகும். இதில் மணமக்கள் இருவரும் நேருக்கு நேராக, ஒருவர் பிறரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதால் இதை நவீனகால மார்க்க அறிஞர்கள் ஏகமனதாக ஏற்று கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் ஈஜாப் – கபூல் இரண்டும் எழுத்து வடிவில் மட்டும் இருந்தால் போதாது. உதாரணமாக மணமகன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி மணமகளுக்கு ‘ஈமெயில்’ செய்கிறார். அந்த ஈமெயிலைப் பார்த்த மணமகள் தனது விருப்பத்தைத் தெரிவித்து மணமகனுக்கு சம்மதத்தை ஈமெயில் மூலம் தெரிவிக்கிறார். இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சாட்சிகள் இருந்து எழுத்து வடிவிலான ஈஜாப் – கபூலைப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான திருமண ஒப்பந்தம் நிறைவேறாது.
வாய்மூலம் கபூல்
கபூல் வாய் மூலம் இருப்பது அவசியமாகும். அதன் முறை பின்வருமாறு:-
மணமகன் ஈமெயில் மூலம் திருமணம் செய்து கொள்ள வேண்டி மணமகளுக்கு தெரிவிக்கிறார் அல்லது மணமகள் சார்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டி மணமகனுக்கு ஈமெயில் செய்யப்படுகிறது. ஒப்பந்தத்ததிற்கு சம்மதிப்பவர் நீதமான இரு சாட்சிகளிடம் அந்த வேண்டுதலைக் காண்பித்து ‘இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன்’ என் வாய் மூலம் கூற வேண்டும். இந்த நிகாஹ்தான் கூடும்.
குறிப்பு: ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுபவரிடம் (ஈஜாப்) இரு சாட்சிகள் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. சம்மதிப்பவருக்கு அவசியமாகும்.
மேலும் இவ்வொப்பந்தம் ஒரே கனெக்ஷனில் (Connection) நடைபெற்று முடிந்து விட வேண்டும். ஒப்பந்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இண்டர்நெட் தொடர்பு (கனெக்ஷன்) துண்டிக்கப்பட்டால் மீண்டும் புதிதாக ஒப்பந்தத்தை இருசாராரும் துவங்க வேண்டும்.
தொலைபேசித் திருமணம்
தொலைபேசி மூலம் திருமண ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம். ஆனால் ஒரே கனெக்ஷனில் இருக்க வேண்டும். கனெக்ஷன் துண்டித்துவிட்டால் புதிதாக ஒப்பந்தத்தை துவங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத்தை ஏற்பவரிடம் இரு சாட்சிகள் இருக்க வேண்டும்.
மணமகன் மற்றும் மணமகளின் சப்தத்தின் அமைப்பை சாட்சிகள் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்க வேண்டும். மணமகன் மற்றும் மணமகளின் ஈஜாப் – கபூல்களை சாட்சிகள் காதால் கேட்க வேண்டும். ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுபவரிடமம் கூட இரண்டு சாட்சிகள் இருந்தால் மிகவும் நல்லது. காரணம், அது இரு சாராரின் சபைகள் ஒன்றுபட்டிருப்பதை மேலும் உறுதி செய்யும்.
வகீல் நியமித்தல்
திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பும் இருசாரார் சில காரணங்களை முன்னிட்டு சந்தித்துக் கொள்ள முடியாது, எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது என்ற பட்சத்தில் இருவரில் ஒருவர் மற்றவர் வசிக்கும் ஊரில் உள்ள ஒரு நபரை தனது வகீலாக நியமனம் செய்து, அவர் மூலம் திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அந்த நபரை வகீலாக நியமிக்க தபால், தூதர், தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை!
மேற்கண்ட அனைத்து வசதிகள் மூலமாகவும் திருமண ஒப்பந்தம் கூடும் என்றாலும் திருமண ஒப்பந்தம் மற்ற ஒப்பந்தங்களைப் போன்றதல்ல. அது மிகவும் புனிதமானது, சிக்கலானது, முக்கியமானதுமாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக தொலைபேசித் திருமணம், வகீல் நியமித்துச் செய்தல் போன்றவற்றை தவிர்க்க முடியாத நிலையில் செய்தல் போன்றவற்றை தவிர்க்க முடியாத நிலையில் தவிர செயல்படுத்தக் கூடாது.