திருமதி!
அபூ ஃபௌஸீமா
இஸ்லாம், யாருமே சிந்திக்காத ஒரு காலத்திலே பெண்களின் உரிமைகளைப் பற்றியும் அவர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, கௌரவம் ஆகியவற்றைப் பற்றியும் குரல் கொடுத்தது. குரல் கொடுத்தது மட்டுமல்ல அந்த மகோன்னதக் கைங்கரியத்தைச் செயல்படுத்தி பெண்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலையும் செய்தது.
கிடைத்த அந்த விடுதலையைப் பாதுகாத்துக் கொள்வதில் பெண்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அலசிப் பார்க்கும் போது அடிமையாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவர்களை எப்படி விடுவிப்பது என்ற பெரிய கேள்விதான் நம்முன்னே தொக்கி நிற்கிறது.
நாகரிகம் என்ற மயக்கத்தில் தமது அறிமுகத்தையே இழந்து விட்டிருக்கிறார்கள். அதை மீளப்பெறுவதற்கு பெண்கள் முன்வருவார்களா?
மாற்றுக் கருத்துக்கள் இருப்பவர்கள் அவற்றை ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டி சமூக அமைப்பிலே இன்று இருக்கக் கூடிய அந்நியரைப் பின்பற்றும் நிலைமை மாற்றமுற தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் மேலைத்தேய நாடுகளில் இருப்பது போல பெண்களின் பெயர்களை கணவன் மையப்படுத்தும் நிலைப்பாடு நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலைப்பாடு இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சரியானதுதானா அல்லது அல்லாஹ்வின் கட்டளைக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலுக்கும் முரணானதா என்பதைத் தெளிவாக அறிந்து செயல்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு.
அது மட்டுமல்ல, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கோர் முன்மாதிரி என்ற அடிப்படையில் அதன் சரியான தாற்பரியத்தை முஸ்லிமல்லாதோரும் சரியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதைச் செயல்படுத்த வேண்டும்.
இப்படி ஏன் இன்று முஸ்லிம்கள் தமது பெண்களின் பெயர்களை அவர்கள் திருமணம் செய்தபின் கணவன்மயப் படுத்துகிறார்கள் என்பதைச் சிந்திக்கும் போது சில காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன:
கற்றவர்கள் மேலைத்தேய மயப்படுத்தப் பட்டமை.
வாழும் சூழல்.
அன்னியமான பழக்கவழக்கங்கள் பற்றிய உயர்வான எண்ணம்.
கௌரவம்.
இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல்களை அறியாமை.
மார்க்கம், மார்க்க அறிஞர்கள் – உலமாவுத்தீன் – என்பவர்களுக்கு மட்டும் உள்ளது என்ற எண்ணப்பாடு.
குறைந்தபட்சம் வாரமொரு முறை திருமண விருந்துக்கான அழைப்பிதழ்கள் கிடைக்கின்றன. எந்த அழைப்பிதழை எடுத்தாலும் அது இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. மொழியைப் பற்றிய எந்த விமர்சனத்தையும் செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஏனென்றால், மொழி என்பது மனிதன் தத்தமது கருத்துக்களை, உணர்வுகளை மற்றவர் விளங்கிக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் ஒரு சாதனமே தவிர அது வெறி பிடித்தலைவதற்கு ஏற்பட்ட ஒரு போதைப் பொருளல்ல.
ஆங்கிலத்திலிருந்தாலும் வேறொரு மொழியில் இருந்தாலும் இன்றைய அழைப்பிதழ்களில் காணப்படும் பெயர்கள் எப்படி அச்சிடப்பட்டுள்ளன என்பதை முதலில் அறிவோம்:
மணமகனினதும் மணமகளினதும் பெற்றோர்களின் பெயர்கள்:
திரு,
அழைப்பு விடுக்கப்படுபவர்கள்:
திரு,
என்று அச்சிடப்பட்டும் எழுதியிருப்பதையும் பார்க்கலாம். பெயர்கள் எழுதப்படக் கூடிய இடங்களிலே அப்பெயர்கள் சரியாகவே எழுதப்படல் வேண்டும். மேலே காட்டப்பட்ட உதாரணத்தையே இதற்குக் காட்டுவதாயிருந்தால், அது அமைய வேண்டிய முறை இப்படித்தான் இருக்க வேண்டும்:
திரு. அ.க. அவன், அவரது மனைவி திருமதி. அ. பா. அவள்.
அல்லது,
திரு. அ.க. அவன், மேலும் அவரது மனைவி
மேற்கத்திய நாடுகளில் என்றுமே ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டதன் பின் தனிக்குடித்தனம் போய் விடுவார்கள். அப்படித் தனிக்குடித்தனம் போய் விட்ட பிறகு அந்த வீடு ஆணின் பெயர் கொண்டுதான் அறிமுகமாகிறது. ஆதலால், அவர்கள் மத்தியிலே அந்த ஆணின் மனைவியைப் பற்றி அறிமுகப் படுத்தப்படும் போது அவளுடைய பூர்வீகம் முழுமையாக மறுக்கப்பட்டு மறக்கப் படுகிறது. அவளும் அவனுக்கு அடிமையானவள் என்ற மனப் போக்கில் ஒரு பொருளாகக் கணிக்கப் படுகிறாள். அப்படியல்ல, அவளுக்கு ஒரு கௌரவம் கொடுப்பதற்காக, இன்னாருடைய மனைவி, என்று சுட்டிக் காட்டுவதற்காக அப்படி ‘திருமதி” என்ற அடைமொழியிட்டுக் காட்டப்படுகிறது என்ற விளக்கம் கிடைக்கிறது. அப்படியானால், திருமணமாகும் வரை அவர்கள் அறிமுகமாகியிருந்த அவர்களின் தகப்பனார் பெயர் கௌரவக் குறைவானதா என்பது பற்றி பெண்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.
ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்று வாதிடும் மேற்கத்திய நாகரிகம் ஏன் பெண்ணின் பெயரை தன்னோடு அமிழ்த்தி விடுகிறது என்று யாருமே கேட்பதில்லை.
இதன் காரணமாக, இன்று மேற்கத்திய நாடுகளிலே ‘சுதந்திர” மனப்போக்குள்ள பெண்கள், திருமணம் என்ற பந்தத்திற்குள் தம்மைக் கட்டிப் போட்டுக் கொள்ளாமல், ஆண்களைத் துணையாக சட்டபூர்வமில்லாமல் வைத்துக் கொண்டு பிள்ளைகளையும் கூடப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இஸ்லாம் திருமண ஒப்பந்தத்திற்குள்ளாகும் ஆண்களுக்குத் தெளிவாகக் கட்டளையிடுவது என்னவென்றால், அவன் அவனுடைய மனைவிக்குத் தேவையான அனைத்தையும் அவனுடைய வசதிக்கேற்ப கொடுக்க வேண்டும். உணவு, உடை, உறையுள் இவற்றை ஏற்பாடு செய்வதோடு அவள் கௌரவமாக வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்களிடமும் தனிக் குடித்தனம் தான் சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும், அவள் தனது அறிமுகத்தை தனது தந்தையின் பெயரோடுதான் வைத்துக் கொள்வாள்.
மேலை நாடுகளில் பெண்ணுரிமை பற்றி பேசினாலும் அவர்கள் அதில் நேர்மையுடன் நடந்து கொள்கிறார்களில்லை என்பது திருமணமான பெண்களின் அறிமுகத்தை கணவன்மயப் படுத்துவதிலிருந்து அறியலாம்.
அப்படி அவர்கள் பெயர் மாற்றம் செய்வதிலிருந்து பெண்கள் தம் அடிமைகள் என்ற ஒரு மனோபாவத்தைப் பெண்கள் மனதிலே விதைக்கிறார்கள்.
கணவனை விட்டுப் பிரிந்தாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ அவள் தொடர்ந்தும் கணவனின் பெயராலேயே அறிமுகமாகிறாள்.
மாறாக,
இஸ்லாம் எந்தப் பெண்ணுக்கும் தமது பெற்றோர்களோடு இருக்கக் கூடிய பிணைப்பை இழந்து விடுவதற்கு இடமளிப்பதில்லை.
பெண்கள் தத்தம் தகப்பனின் குடும்பப் பெயரையே திருமணமானதன் பின்னாலும் உபயோகிப்பதில் அவர்களின் உள்ளங்களிலே ஒரு பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
கணவனை விட்டுப் பிரிந்தாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ பெயர் மாற்றம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அவள் தனது குடும்பப் பெயரிலேயே தொடர்ந்தும் அறிமுகமாகிறாள்.
அல்லாஹ் கூறுகிறான்:
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்-குர்ஆன் 2:228 வசனத்தின் ஒரு பகுதி)
மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் பெண்களின் கடமைகள் சம்பந்தமாகப் பேசிவிட்டு, அவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துகிறான். உரிமைகள் என்று குறிப்பிடும்போது அவர்களின் சொத்துரிமை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மற்றுமுண்டான உணவு, உடை, உறையுள் சம்பந்தமான உரிமைகள் என்றுதான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் உலகுக்கு எப்படி அறிமுகமாயிருக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியமான விஷயமாகும்.
ஒரு பெண் தனது தகப்பனின் பெயருடன் அறிமுகமாகியிருந்து திருமணமானவுடனே அந்த அறிமுகத்தை இழந்து தான் அவள் வாழ்க்கையைத் தொடங்குகிறாள் இன்று. இந்த நிலை இஸ்லாமிய சமூகத்திலும் நாகரிகம் என்ற போர்வையிலே படித்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அலங்காரமாகிக் கொண்டிருக்கிறது. இதன் பலனாக தாம் எவ்வளவு பெரிய இழப்புக்கு ஆளாகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேலே பெண்களும் அதைப் பின்பற்றுகிறார்கள்.
கணவன் மரணித்த பின்னாலும், விவாகரத்துச் செய்யப்பட்டதன் பின்னாலும் தமது உண்மையான பெயரிழந்து அந்தக் கணவனின் பெயரில் அறிமுகமாகி உரிமையிழந்து வாழும் பெண்கள் எத்தனையோ பேரை இன்று காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். அறிமுகம் என்பது ஒரு மனிதனின் பிறப்புரிமை. அது பின்னால் வரும் உறவு முறைகளால் மாற்றப்படுவதல்ல.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரளியல்லாஹு அவர்களின் ஒரு முக்கியமான வழிகாட்டலை குறிப்பிட்டுக் காட்டுவது மிகவும் சிறப்புடையதென்று நினைக்கிறேன். ஏனென்றால், அல்லாஹ்வின் தூதை மனிதனுக்கு எத்தி வைப்பதில் எந்த ஒரு சின்ன விடயமாகவிருந்தாலும்; அந்தத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பராமுகமாக இருந்ததில்லை. அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தமது முடியை சாயம் பூசி) நிறம் மாற்றுவதில்லை, எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸஈ)
யூதர்களும், கிறிஸ்தவர்களும் செய்யக் கூடிய செயல்களுக்கு மாறு செய்யும்படி தெளிவான கட்டளை இருப்பதை மேலே காட்டிய கட்டளையின் மூலம் நாம் தெளிவு பெறுகிறோம். ஆகவே, திருமணம் செய்யும் பெண்களைப் பொருத்தமட்டில் தமது பெயர்களைக் கணவன்மயப்படுத்தும் இந்தச் செயலும் யூதர்களிடமிருந்தும், கிறிஸ்தவர்களிடமிருந்தும் வந்தவைதான் என்பதை உணர்ந்து இனிமேலும் அப்படிச் செய்வதிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
இந்த விடயத்திலே மிக முக்கியமாக வழி காட்ட வேண்டியவர்கள் ஆண்கள்தான். சமூகத்திலே ஒரு மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள்தான் முன்னின்று முன்மாதிரியாகச் செயலாற்றி குரல் கொடுக்க வேண்டும். ஏனென்றால், ஏற்கனவே இந்த வழக்கத்தை வாழ்க்கையில் கொண்டிருக்கக் கூடியவர்கள் அதை நடைமுறைப் படுத்தும்போது எமது புதிய தலைமுறையும் அதன் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள வசதியும் வாய்ப்பும் ஏற்படும்.
இந்த உண்மையை உணர்ந்து, அறிமுகத்தை உறுதிப்படுத்தி, முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதார்களுக்கு முன்மாதிரியானவர்கள் என்பதை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும். அந்த முயற்சியிலே அல்லாஹ் நம்மனைவருக்கும் அறிவுத் தெளிவையும், மனோபலத்தையும் தர வேண்டும். அந்த அறிவுத் தெளிவும் மனோபலமும் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலில் நம்மைப் பரிசுத்தப் படுத்திக் கொள்ள வழிவகுக்கும். அதுவே, சுட்டெரிக்கும் நரக நெருப்பிலிருந்து தப்பிக் கொள்ள ஒரு காரணியாக, இன்ஷா அல்லாஹ், இருக்கும்.
(முக்கியக் குறிப்பு: தேவையின் நிமித்தம் கணவனின் பெயரை மையப்படுத்த அவனது மனைவியை தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. மேற்கத்திய நாகரீகத்தை மையப்படுத்தி கட்டுரையாளர் தம் கருத்துக்களை முன் வைத்துள்ளதால் அதில் நாம் எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட்டுள்ளோம். இணையக்குழு)
source: http://www.tamilmuslim.com/KATTURAIKAL/thirumathi.htm