ஜெ. ஜஹாங்கீர்
இறையச்சத்தை உணர்த்தும் மாதம் ரமலான். புனித மாதத்தின் ஸஹர் இரவு நேரத்தில் தாடி, தொப்பி, மேல் அங்கியோடு காட்சிதந்து கனத்த, உரத்த குரலில் வந்துபார் என முழக்கமிடுவது, முண்டாதட்டுவது. அவன், இவன் எனக் கிண்டலடிப்பது. ஏக வசனத்தில் திட்டுவது. ஆதாரத்தோடு எடுத்துரைக்காமல் வெற்றுவார்த்தைகளை அள்ளிவீசுவது. நபி வாரிசுக்கு தகுதியற்ற செயல்.
காட்சி ஊடகத்தில் உரை தரும்போது நாவடக்கம் வேண்டும். ஸஹர் நிகழ்ச்சி முன்பும், பின்பும் அடுத்தடுத்த சில நிமிடங்களில் இந்து, கிறிஸ்துவ போதகர் உரைகள், மத நிகழ்ச்சிகள், ஆலய நிகழ்வுகள் ஒலிபரப்பப்படுகின்றன. அவற்றை காண்பதற்காகக் காத்திருக்கும் கண்களுக்கு மதகுரு உதட்டிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் அந்த மதத்தை எடைபோட உதவும்.
உலகத்தின் விழிகள், சட்டத்தின் விழிகள், உளவுத்துறையின் விழிகள், நீதித்துறையில் விழிகள், தீவிர மதத்தன்மையுள்ளவர், எதிரி அமைப்புகள் விழிகள் தம்மை உற்றுநோக்குவதை உணர்ந்து ஒவ்வொரு சொல்லையும், வெளிப்படுத்த வேண்டும். எம் மதத்தவரையும் காயப்படுத்தாமல், எவர் மனமும் புண்படாமல் நடுநிலையோடு பேசப்பழக வேண்டும். தான் உச்சரிக்கக்கூடிய ஒவ்வொரு சொல்லும் தமது சமூகத்தை புதைகுழியில் தள்ளிவிடக்கூடாது.
சுயமாக எழுந்து நிற்கும் முஸ்லிம்கள் நம்முடைய சொல்லால் மற்ற சமூகத்தவரிடம் சுயமரியாதை இழந்துவிடக்கூடாது. குடிமகனுக்குரிய தேவைகளைப் பெற முஸ்லிம்கள் செல்லும் போது பாதிப்படையக்கூடாது என்ற அச்ச உணர்வோடு வார்த்தைகளை அளந்து உதிர்க்கவேண்டும்.
ஒரு அமைப்புத் தலைவர், வழிகாட்டும் மதவாதி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கான முன்னூதாரணம் நபிகளார் வரலாற்றிலிருந்து கிடைக்கின்றன. மக்கத்து குறைஷிகள் கொடுமையிலிருந்து பிழைக்க இஸ்லாமிய வருடம் 5இல் 11 ஆண்கள். 4 பெண்கள் தப்பிவிக்க வைக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஆப்பிரிக்காவின் கிழக்குப்பகுதி அபிசீனியாவிற்கு கப்பலேறி செல்கின்றனர். நீதியை நம்பும் கிறிஸ்துவ மன்னர் நஷாஜி அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்.
தமது மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை ஏற்று தப்பிச்சென்ற அவர்களைப் பழிவாங்கும் பொருட்டு அப்துல்லாபின் ரபிஆ. அம்ர் பின் ஆஸ் என்ற இருவரைத் தேர்வு செய்து மக்கா குறைசிகள் அபிசீனியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
அபிசீனியா வந்தடைந்த இருவரும் அங்குள்ள பாதிரியார்களிடம் இங்கு தங்கியுள்ள முஸ்லிம்கள் 15 பேரும் எங்கள் நாட்டு குற்றவாளிகள். அவர்களை எங்களிடம் ஒப்படைக்க அரசரிடம் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறியதோடு, மன்னர் நஷாஜியிடம் எடுத்துரைக்கின்றனர். மன்னர் முஸ்லிம்களை அழைத்து விசாரித்து உண்மை உணர்ந்து அவர்களை ஒப்படைக்க முடியாது எனக்கூறி விடுகிறார்.
அடுத்த நாள் அவ்விருவரும் மன்னரிடம் வந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி இவர்களுடைய நம்பிக்கை என்னவென்று கேளுங்கள் அப்போது தெரியும் அவர்களது சுயரூபம் என்று கிறிஸ்துவ மன்னர் நஷாஜியிடம் கோள்மூட்டுகின்றனர்.
ஈஸா அலைஹிஸ்ஸலாம் பற்றி உங்களது கருத்து என்ன என்று மன்னர் கேட்கின்றார். அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களது சகோதரர் ஜாஃபர்பின் அபுதாலிப் முன்வந்து ‘‘எங்கள் இறைத்தூதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரென்றும், அவனது திருத்தூதரென்றும் எங்களுக்கு கூறியுள்ளார் எனக்கூற, தரையில் கிடந்த சிறு துரும்பை கையிலெடுத்த மன்னர் நஷாஜி இறைவன் மீதாணையாக ‘‘இயேசு’’ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த துரும்பின் அளவிற்குக் கூட நீங்கள் சொன்னதைவிட அதிகமான அந்தஸ்துடையவரல்லர் என்று கூறுகின்றார்.
நடுநிலையோடு அலி ரளியல்லாஹு அன்ஹு சகோதரர் வெளிப்படுத்திய அணுகுமுறை. அதனை ஆமோதித்த மன்னரின் தன்மை. முஸ்லிம்களை வழிநடத்தும் வாழ்க்கைப் பாடங்கள். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நபிகளார் வாரிசு இந்த அணுகுமுறையோடு இரத்தத்தில் ஊறிப்பயணப்படவேண்டும்.
அறிவுடைய காலமிது. நாட்டில், சமூகத்தில் அறிவு வறட்சி ஏற்பட்டு தேடலை அதிகப்படுத்தியிருக்கிறது. தமது சொல்லை, செயலை அறிவுடைய சமூகம் எவ்வாறு கருதுகிறது. ஏற்றுக் கொள்கிறது என்ற ஆய்வு நோக்கோடு உரை தரவேண்டும். பாமரப் பெண்மணி கூட உதாசீனப்படுத்தி டி.வி. பொத்தனை அமர்த்தும் நிலைக்கு சொற்கள் வெளிப்படுத்திவிடக்கூடாது.
நாம் வாழும் நாடு பல லட்சம் ஆண்டுகள் பாரம்பரியப் பெருமைமிக்க நாடு. இறைநேசர்கள், தீர்க்கதரிசிகள் பலர் வாழ்ந்த நாடு. பெருமை மிக்க கலாச்சாரம் கொண்ட நாடு. உயர்வான தலைவர்களை உருவாக்கிய நாடு என்ற எண்ணத்தோடு பொதுமீடியாவில் பேசவேண்டும்.
எடுத்தேன் கவிழ்த்தேன் உரை தரும் நபர்களுக்கு நிறுவனங்கள் விளம்பரம் தரக்கூடாது. ஸ்பான்சர்கள் உதவி செய்வது நிறுத்தப்படவேண்டும். தமது நச்சு வாய் நாசக்கருத்துக்களை வெளிப்படுத்தும் மதவாதிகளை சமூகம் ஒதுக்கித்தள்ளவேண்டும். எச்சரிக்கை விடுக்கவேண்டும்.
நன்றி: ஜெ. ஜஹாங்கீர் அக்டோபர் 2010 முஸ்லிம் முரசு.