தர்மம் செய்த ஆன்மா மன்னிக்காது
கரீம்கனி
மனித வாழ்வில் நேர்வழி, குறுக்குவழி இரண்டுவகை தேடல் வரவுகள் இறை ஆலயங்கள், இறைநேசர் அடக்கவிடங்கள், அறக்கட்டளைகளுக்கு தர்மச் சொத்தாக வழங்கப்படுகிறது. வக்பு என்றால் தர்மச் சொத்து என்பது பொருள். தர்மச் சொத்தாக மாறிய பிறகும் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மாமன், மச்சான் என உறவினர்களுக்குள்ளாக அச்சொத்து அபகரிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது.
மேடை தோறும், அதைக் கட்டினோம், இதைச் செய்தோம், நிலம் கொடுத்தோம் எனத் தமது உரைக்கு ஊடாகப் பதிவு செய்வதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ‘‘வானம் பூமியிலுள்ளவை அனைத்தும் எனக்கே சொந்தமானவை என்று அல்லாஹ் கூறுவதாக சூறா 3:109 கூறுகிறது. மனிதர்கள் தம்முடைய சொத்து எனக்கூறிக் கொள்கின்றனர்.
தென் சென்னை பிரபல பள்ளிவாசல் வளாகத்தினுள் பல ஏக்கர் காலி நிலம் இருந்தது. இன்று திடீர்க் கட்டிடங்கள் மழைக்காளான் போல் தொடர்ந்து தோன்றிக் கொண்டுள்ளன. வேறு எவரும் உள்ளே நுழைத்து விடாதவாறு வாயிற் காப்போரால் விரட்டியடிக்கப்படுகின்றனர்.
யார் எழுதி வைத்த பொதுச் சொத்து? அப்பகுதியில் ஒரு சதுர அடிமனை 20,000/& விற்கும் நிலையில் அம்மனைகள் யாருக்கு கொடுக்கப்பட்டன? எந்த விவரமும் அறிய முடியாது. பள்ளிவாசல்களை பராமரிக்கிறோம் என்று ஒரு சில என்டோன்மெண்டினர் சென்னை நகர முஸ்லிம் சேரிகளுக்கு நிலவரி சதுர அடிக்கு ஒரு ரூபாய், 0/50 காசு என பல இலட்சம் வசூலிக்கின்றனர்.
பள்ளிவாசல் கட்டுகின்றனர். வருமானம் வேண்டுமென்று பள்ளிவாசல் முன்புறம், பின்புறம் கடைகள் அமைத்து வாடகைக்கு விடுகின்றனர். மிகுதமான வருமானம் பெருகும்போது பள்ளிக்கு ஏசி பொருத்திக் கொள்கின்றனர். கூடவே நிர்வாகம், ஜமாத்தார்களுக்குள் பிணக்கு எழுகிறது. வழக்கு வலுக்கிறது. நிர்வாகம் முடக்கம், பூட்டு, அடிதடி ரகளை. மத்தியஸ்தம் செய்ய ஒரு நிர்வாகம். இது இன்றைய நிலை.
அல்லாஹ்வோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ காட்டிய வழி இதுவல்ல. கிராமம், நகரம் வேறுபாடின்றி பரம்பரை வாரிசுப் பிரகாரம் முத்தவல்லி, நிர்வாகி பதவிக்கு வருகின்றனர். முஹல்லாவில் வாழும் மற்றவர்களை பொறுப்புக்குள் விட மறுக்கின்றனர் காரணம் பணம், பதவி இரண்டும் ஆட்டிப்படைக்கிறது.
வக்பு சொத்துக்களை நிர்வகிப்போர் தத்தமது குடும்பத்தினர், வேண்டப்பட்டவருக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இது ஒரு வகை ஆக்கிரமிப்பு. மற்றொருவகையினர் வாடகைக்கு, குத்தகைக்கு பிடித்திருந்த இடங்களை திரும்பவும் ஒப்படைக்காமல் அப்படியே அபகரித்துக் கொள்வது. இப்படி வீணாகுவதற்காகவே பள்ளிவாசல்களுக்கும், தர்காக்களுக்கும் தமது சொத்துக்களை எழுதிவைக்கிறோம் என்பதை புண்ணியம் தேட நினைப்பவர் உணர வேண்டும். அல்லாஹ்வுக்கும் ஒளலியாக்களுக்கும் சொத்துக்கள் எதற்கு எனவும் சிந்திக்க வேண்டும்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் தண்ணீர் இல்லாது சிரமப்படுகின்றனர். ஸஹாபி ஒருவர் தமது கிணற்றை வழங்குகிறார். வழங்கப்பட்ட கிணற்று நீர் உடனடி பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது. அது போன்று தர்மச் சொத்துக்கள் தேவையுள்ளவருக்கு உடனடியாகச் சென்றடைய வேண்டும். ஏழைகள் சொத்தை பராமரிக்கிறோம் பெயரில் ஒரு சிலர் வயிறு வளர்க்கவும், மொத்தமாகக் கொள்ளையடிக்கவும் உதவக்கூடாது.
2.5 சதம் தமது சொத்துக்களைக் கணக்கிட்டு முறையாக ஜகாத் கொடுக்கப்பட்டால் வக்பு செய்யவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு கொடுக்காமல் இறுக்கிக் கட்டப்படும் பணமே நாசமடைகிறது. சின்னச் சின்ன குக்கிராமங்களில் உள்ள பள்ளிவாசல் நிலங்களிலிருந்து குத்தகையாக தாணியங்கள், கருவை மரம் விதைப்பு அறுவடைகள் முத்தவல்லிகளால் கபளிகரம் செய்யப்படுகின்றன.
இந்த நிலை ஏற்படாதிருக்க ஒரே வழி தர்மச் சொத்துக்கள் தர்மம் பெறும் நிலையில் உள்ளோருக்கு உரிமையாக்க வேண்டும். வேறு இடம், வீடு இல்லாத நிலையில், தனது குடியிருப்பு மனையை மட்டுமே நம்பி தர்மச் சொத்தில் குடியிருப்பவருக்கு நியாய விலைக்கு அவ்விடத்தை கொடுத்துவிடவேண்டும். நீண்ட கால தவணை முறையிலும் வழங்கலாம். இப்படி வழங்காமல காலம் முழுவதும் காத்துக் கொண்டிருந்தால் பூதம் காத்த புதையலாக மாறுமே தவிர இறைவழிச் செலவாக அமையாது.
அல்லாஹ் திருமறை சூறா 3:75ல் கூறுகிறான். சிலர் பொற்குவியலையே நம்பி ஒப்படைத்தால் அப்படியே திருப்பி ஒப்படைப்பர். வேறு சிலர் ஒரு தங்கக் காசு கொடுத்து வைத்திருந்தால் கூட திருப்பித்தராது வம்பு செய்வர். இந்த வம்பு செய்யக்கூடிய ஆட்களிடமே வக்பு சொத்துக்கள் மாட்டிக் கொண்டு முழிக்கின்றன. வக்பு செய்த ஆன்மாக்கள் மன்னிக்காத அளவிற்கு அவை நாசமடைகின்றன.
source: http://jahangeer.in/?paged=11