பெண்கள் வெளியில் போகலாம்!
மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ
இஸ்லாம் பெண்கள் சமுதாயத்தைக் கண்களுக்குச் சமமாகக் கருதுகின்றது. எனவே ஆண்களின் காமக்கண்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அவர்களுக்குப் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் மொழிந்துள்ளது. அதில் ஒன்றுதான் பர்தா முறை.
”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக் அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.” (அல்குர்ஆன் 33:59)
பெண்கள் தங்கள் தலை, கழுத்து, முகம் போன்ற அலங்காரப் பகுதிகளை மறைத்துக் கொள்வதன் மூலம் ‘நாங்கள் கண்ணிமான பெண்கள், தீய நோக்குடன் எங்களை எவரும் நோக்கவோ அணுகவோ முடியாது’ என்று சொல்லாமல் சொல்கின்றனர்.
இந்த பர்தா மூலம் பெண்களுக்குப்; பாதுகாப்பும், உலகின் பல்வேறு பயன்களும் இருப்பதை அனுபவப்பூர்வமாக நாம் பார்க்கின்றோம். எனவே பெண்கள் பர்தாவைக் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும். இதைக் குடும்பத்தலைவர்கள் கண்காணிக்க வேண்டியது அவர்களது கடமை.
வெளியே செல்லலாம்
பர்தா அனுஷ்டிக்கும் பெண்கள் வீட்டுக்குள்ளேளே முடங்கிக் கிடக்கும் அவசியம் ஏதுமில்லை. முக்கியத் தேவைகளுக்காக அவர்கள் வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டதே! தங்களைப் பராமரிப்பதற்கு கணவரோ, தந்தையோ, சகோதரர்களோ, பிள்ளைகளோ இல்லாத போது தங்கள் வாழ்க்கை நடத்திட உழைத்துத்தான் ஆகவேண்டும் என்றால் தாராளமாக வேலைகளுக்குக் கூடச் செல்லலாம்.
இதோ திருக்குர்ஆன் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றை எடுத்தோதும்போது இரண்டு பெண்கள் தங்கள் ஆடுகளை மேய்ப்பதற்காகவும், தண்ணீர்ப் புகட்டுவதற்காகவும் வெளியில் வந்து நின்ற காட்சியை விபரிக்கிறது.
‘ஏன் நீங்கள் இங்கு நிற்கிறீர்கள்?’ என மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வினவ, ‘எங்கள் தந்தையோ முதிர்ந்த வயதுள்ள கிழவர். அவரால் ஏதும் செய்ய இயலாது. நாங்கள் தான் எங்கள் ஆடுகளுக்கு நீர் புகட்ட வேண்டியுள்ளது’ என்ற தாங்கள் வெளியில் வந்த காரணத்தை விளக்குகின்றனர் அப்பெண்மணிகள். (பார்க்க: திருக்குர்ஆன் – அல் கஸஸ் அத்தியாயம், வசனம் 22 முதல் 28 வரை)
எனவே இதுபோன்று பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான குடி தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துவர வெளியில் செல்லலாம். உழைக்க வேண்டிய தேவையிருந்தால் தாராளமாக வெளியே செல்லலாம். அதே போல் மருத்துவம் செய்து கொள்வதற்காகவும், அவசியமான கல்வியைக் கற்றுக் கொள்வதற்காகவும், பெண்கள் மட்டுமே படிக்கிற பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும், பணி புரியவும் அனுமதியுண்டு.
ஆக, அவசியமான தேவைகளுக்காக வெளியில் செல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை. ஆனால் ஒரேயொரு நிபந்தனை! தன் அழகை அந்நிய ஆடவர் பார்த்திடாதவாறு தனது உடலை முழுமையாக மறைத்த நிலையில் செல்ல வேண்டும். இதற்கு மாற்றமாக இன்றைய பெரும்பாலான பெண்களைப் போன்று தன் உடல் உறுப்புகளைப் படுகவர்ச்சியாகக் காட்டும் மெல்லிய சேலையைப் பின்குத்தி அணிந்து கொண்டு முதுகு, வயிறு, கழுத்து, முழங்கைகள் உட்பட அனைத்தும் அனைவருக்கும் காட்சியளிக்கும் நிலையை, இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.” (அல்குர்ஆன் 33:33)
என்ற வசனத்தையும் ‘ஒரு பெண் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு வெளியே கிளம்பினால் அவள் அப்படித்தான் அப்படித்தான் (ஒழுக்கங் கெட்டவள் தான்)’ என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையையும் மனதில் நிலை நிறுத்தியவர்களாக, தங்கள் அழகை கணவரைத் தவிர மற்றவர்கள் காணாத முறையில் பர்தா அணிந்து வெளியில் செல்லலாம் தாராளமாக.