முபல்லிஃகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்
( கட்டுரையின் இறுதியிலுள்ள ”முல்லா நஸீருத்தின் வாழ்வில் ஒரு படிப்பினை தரும் சம்பவம்” படிக்கத் தவறாதீர்கள்.)
[ மனித வாழ்வில் மரணம் ஒரு கட்டாயம். நாம் என்று பிறந்தோமோ அன்றைக்கே என்று சொல்வதைவிட அதற்கு முன்னமேயே எழுதி வைக்கப்பட்ட ஒரு முடிவுதான் மரணம். என்றாவது ஒருநாள் மரணம் நம்மைக் கொண்டு போகும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ மரணம் நம்மை ஒரு நாள் விரும்பும். நாம் அதன் பின்னால் இறுதி ஊர்வலமாகச் செல்லக்கூடியவர்களே. சிலருக்கு மரணம் சொல்லிக் கொண்டே வரும். பலரை அது சொல்லாமலேயே கொண்டு போய் விடும்.
மரணத்தைப் பலர் பயப்படுவது உண்டு. சில பெரிய மேதைகள் வரவேற்பதும் உண்டு. வரவேற்பதற்குத் தகுதிவாய்ந்த வணக்கசாலிகள் சிலர் அச்சம் தீர்ந்தவர்களாக மரணிப்பதை அறிந்திருக்கிறோம்.
சில குடும்பங்களில் மரணமாகப்போகும் நபரைவிட அருகிலிருப்பவர்கள் அதிகக் கலவரம் செய்து ஆர்ப்பாட்டம் செய்து மரணப்படுக்கையில் இருக்கும் நபரைக் கலங்கடித்து விடுகிறார்கள்.]
ஹளரத் உபாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத் மரண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் ‘எனக்காக எவரும் அழக்கூடாது. என்னுடைய உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் ஒழுங்கான முறையில் உளூச் செய்ய வேண்டும். பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத் தொழுது எனது பாவமன்னிப்புக்காக ‘துஆ’ச்செய்ய வேண்டும். ஏனெனில் ‘தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள்’ என்று அல்லாஹ் கூறி இருக்கின்றான். தொழுத பின் என்னை நல்லவிதமாக அடக்கம் செய்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.
ஹளரத் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தார்கள். அப்போது அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த மனைவி ஒருவர் மரணமாகி விட்டதாக தகவல் வந்தது. உடனே அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். இதைக் கண்ணுற்ற ஒருவர் ‘ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என வினவும்போது ‘உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் ஸஜ்தாவில் (தொழுகையில்) ஈடுபடுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார்கள். இப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த மனைவி அவர்களின் மரணச்செய்தி கிடைத்து இருக்கிறது. இதைவிடத் துயரம் தரும் சம்பவம் வேறு எதுவாக இருக்க முடியும்?’ என் பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூது)
மரணமடையும் நிலையில் உள்ளவர்களும், மரணத்தருவாயில் உள்ளவர்களின் அருகில் உள்ளவர்களும் எத்தகைய பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் நமக்கு தெளிவுறுத்துகின்றன.
மரணம் கட்டாயம்
மனித வாழ்வில் மரணம் ஒரு கட்டாயம். நாம் என்று பிறந்தோமோ அன்றைக்கே என்று சொல்வதைவிட அதற்கு முன்னமேயே எழுதி வைக்கப்பட்ட ஒரு முடிவுதான் மரணம். என்றாவது ஒருநாள் மரணம் நம்மைக் கொண்டு போகும் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ மரணம் நம்மை ஒரு நாள் விரும்பும். நாம் அதன் பின்னால் இறுதி ஊர்வலமாகச் செல்லக்கூடியவர்களே. சிலருக்கு மரணம் சொல்லிக் கொண்டே வரும். பலரை அது சொல்லாமலேயே கொண்டு போய் விடும்.
மரணத்தைப் பலர் பயப்படுவது உண்டு. சில பெரிய மேதைகள் வரவேற்பதும் உண்டு. வரவேற்பதற்குத் தகுதிவாய்ந்த வணக்கசாலிகள் சிலர் அச்சம் தீர்ந்தவர்களாக மரணிப்பதை அறிந்திருக்கிறோம்.
சில குடும்பங்களில் மரணமாகப்போகும் நபரைவிட அருகிலிருப்பவர்கள் அதிகக் கலவரம் செய்து ஆர்ப்பாட்டம் செய்து மரணப்படுக்கையில் இருக்கும் நபரைக் கலங்கடித்து விடுகிறார்கள்.
உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் கூட உயிர் போகப்போகிறது என்பதை அறிந்து பாசங்களைக்(!) கொட்டி பாட்டுப்பாடி ஒப்பாரி வைக்க வந்து விடுவார்கள். இது பாவமான செயலாகும்.
மரணத்தின் வாசலிலே!
மரணம் உறுதியாகி இருக்கும் நேரம் படுக்கையில் உள்ளவருக்கு ஏக தெய்வக் கொள்கையின் உறுதிப்பிரமானக் கலிமா ஷஹாதாவை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அருகில் இருப்பவர்களும் அவரின் உயிர் மிக மிக சுலபமாகப் பிரிவதற்கு ‘துஆ’ச்செய்து கொண்டிருக்க வேண்டும்.
மரணப்படுக்கையில் உள்ளவர்கள் தனக்கு மரணம் வரப்போகிறது என்பதை உணரமுடியும் போது மனிதர்களிடம் பேசுவதை முடித்துக்கொண்டு இறைவனிடம் பேசத்துவங்கி விட வேண்டும். தான் வாழ்க்கையில் செய்துவிட்ட தவறுகளை எண்ணிப் பிழை பொறுக்கத் தேடி இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டும். ‘இஸ்திஃக்ஃபார்’ தஸ்பீஹ் (அஸ்தஃக்ஃபிருல்லாஹ்….) சொல்லிக் கொண்டும் கலிமாவை மொழிந்து கொண்டும் இருக்க வேண்டும்.
உலகை விட்டும், உறவை விட்டும் சொத்தை விட்டும், சுகத்தை விட்டும் போகப் போகிறோம் என்ற பதட்டம் வரக்கூடாது. எல்லாவற்றையும்தான் விட்டுவிட்டுப் போகப்போகிறோமே இனி நமக்கு உலகில் என்ன இருக்கிறது? என்ற மரணத்துணிவு வேண்டும். (இந்தத் துணிவை எல்லா மக்களுக்கும் அல்லாஹ் தருவானாக!)
அமைதி தேவை!
நூறாண்டு காலம் செல்வச்செழிப்போடு வாழ்ந்த மனிதராக இருந்தாலும் மரணத்தருவாயில் இன்னும் கொஞ்சமாவது வாழ முடியாதா? என்ற ஏக்கப் பெருமூச்சுதான் விட்டுக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக மரணிப்பவர்களைவிட உயிரோடு இருப்பவர்கள் தான் அதிகப் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றார்கள். நமது குடும்பங்களில் மரணப்படுக்கையில் கிடப்பவர்களுக்கு அமைதியைக் கொடுப்பது மிகமிக அபூர்வமாகி விட்டது. அமைதியைக் கெடுப்பதிலேயே அதிகமான நேரங்களைக் கழித்து விட்டு கண்ணீரும் அழுகையுமாக உயிர் பிரிய வைத்து விடுகின்றோம்.
இதில் பெண்கள்தான் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். மரணப்படுக்கையில் கிடப்பவரிடம் அவர்களுக்குப் பாசமானவர்களை இழுத்து வந்து நிறுத்தி ‘இதோ பாருங்கள் உங்கள் பிள்ளையை…. இதோ பாருங்கள் உங்கள் பேத்தியை’ என்று அமைதியாகப் பிரியும் உயிரையும் பதறப் பதறப் பிரித்து விடுகின்றார்கள்.
இன்னும் சில மணி நேரம் உயிரோடு இருப்பார் என்ற நிலையில் கிடப்பவர்களைக்கூட, போடும் சப்தத்தாலும் தலைவிரிக் கோலத்தாலும் சில நிமிடங்களிலேயே மரணமாக்கி விடுகிறார்கள்.
உறவின் கடமை
இதுதான் அவர்களுக்கு நாம் செய்யம் உதவியா? நாமும் ஒருநாள் மரணப் படுக்கையில் படுக்கப் போகிறவர்தாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் மரணித்த பின் அந்த உடலின் மீது விழுந்து அழுது உருண்டு இம்சை செய்வது அறவே கூடாது. ஒருவரையொருவர் கட்டித்தழுவி கதறி அழுவதும் கூடாது. அழுகை ஒரு இயற்கை. அதை யாரும் நிறுத்த முடியாது. அதே சமயம் அந்த அழுகையையே செயற்கையாக்கி ஆர்ப்பாட்டம் பண்ணவும் கூடாது.
அழுதால் தான் உறவு என்பது உண்மையல்ல! மரணவீட்டில் அழுதால் தான் மதிப்பு என்பதம் உண்மையல்ல. சிலருக்கு எத்தனை இடி விழுந்தாலும் அழுகையே வராது. சிலர் எதையும் தாங்கும் இதயம் உள்ளவராக இருப்பர். அவர்களையெல்லாம் குறையுள்ளவர்களாக எண்ணக் கூடாது. ‘உன் கண்ணில் ஒரு துளி நீர் வடியவில்லையே! நீ எல்லாம் ஒரு சொந்தமா?’ என்று ஏளனம் பேசக்கூடாது.
மரண நிலையில் உள்ளவர்களுக்கு அமைதியைக் கொடுப்பதும், மரணமாகி விட்டவர்களுக்கு நன்மையைச் சேர்ப்பிப்பதும்தான் உண்மையான நன்மை. அதுதான் உறவுக்கும் உரிமைக்கும் உரித்தான கடமை.
முல்லா நஸீருத்தின் வாழ்வில் ஒரு படிப்பினை தரும் சம்பவம்:
முல்லா நஸீருத்தீன் அப்போதுதான் திருமணம் முடித்துத் தன் புது மனைவியைப் புகுந்தகம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். கிராமத்திலிருந்து புறப்பட்ட படகு ஆற்றில் சென்று கொண்டிருந்தது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த படகு அலைகளால் தாக்கப்பட்டு ஆட்டம் போட ஆரம்பித்தது.
படகுப் பயணிகளுக்கு பயம் கவ்விக் கொண்டது. அனைவரும் அலற ஆரம்பித்தார்கள். முல்லா நஸீருத்தீன் தனது புது மனைவியைப் பார்த்தார். அந்தப் புதுப்பெண் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார்.
‘எல்லோரும் கதறுகிறார்களே! உனக்கு எந்த மரண பயமும் இல்லையா?’ என்று முல்லா கேட்டார்.
‘நீங்கள் புதிதாக என்னை மணமுடித்த அன்புக் கணவர். எனக்கு ஏதேனும் ஒரு ஆபத்து என்றால் நீங்கள் சும்மா இருந்து விடுவீர்களா? எப்படியாவது என்னைக் காப்பாற்றி விட மாட்டீர்களா? அந்த நம்பிக்கையில் தான் அமைதியாக இருக்கிறேன்!’ என்று சொன்ன அந்த புதுமணப்பெண் ‘உங்களுக்கு பயம் இல்லையா?’ என்று முல்லாவிடம் கேட்டார்.
அதற்குப் புன்னகையுடன் முல்லா நஸீருத்தீன், ‘நான் எங்கோ பிறந்தேன்! நீ எங்கோ பிறந்தாய்! இன்றுதான் உன்னை நிகாஹ் செய்து அழைத்துப் போகிறேன். உனக்கு ஒரு ஆபத்து என்றால் நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கையில், என்னைப் படைத்து இத்தனை வருடங்கள் வாழ வைக்கும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்காதா? அந்த நம்பிக்கையில்தான் நடப்பது நடக்கட்டும் என்று நான் பயப்படாமல் அமைதியாக இருக்கிறேன்!’ என்றார். (ஸுப்ஹானல்லாஹ்!)
வாழ்வில் எந்த நிலை வந்தாலும் இறைவனிடம் நம்பிக்கை இருக்க வேண்டும். மரணம் நம்மைத் தழுவப் போகிறது என்ற நிலையில் இருக்கும்போது கூட பண்பட்ட மனித இதயம் பதறாமல் அமைதியாகவே இருக்கும் என்பதற்கு அழகான எடுத்துக்காட்டாக ஒரு படிப்பினை தரும் சம்பவமாக இதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் நமக்கும் அதுபோன்ற அமைதியான வாழ்வு கிட்டும்தானே! அல்லாஹ் போதுமானவன்.