சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் வாழும் என் நண்பன் ஒருவன் காதல் திருமணம் செய்து கொண்டான். இரு வீட்டாரும் இவர்களுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால், குர்கானில் திருட்டுக் கல்யாணம் செய்துகொண்டார்கள். பிறகு அவரவர் வீட்டுக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்தனர்.
அதிர்ந்துபோன பெற்றோர்கள், இவ்வளவு தூரம் ஆன பிறகு என்ன செய்வது என்று ஒரு மாதம் கழித்து ரிசப்ஷன் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். ரிசப்ஷனுக்கு கல்யாண மண்டபமெல்லாம்கூட பார்த்துவிட்டனர். அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள், காதல் மீதான எனது நம்பிக்கையையே முற்றிலும் ஆட்டம் காணச் செய்தது.
திருமணம் முடிந்தவுடன் அந்தப் பெண் சில விஷயங்களை எதிர்பார்க்க, இவன் சில விஷயங்களை எதிர்பார்க்க… ஏதோ கருத்து வேறுபாடுகள். மிகவும் சின்னச் சின்னத் தகராறுகள். “நான் ஃபோன் செய்தபோது நீ ஏன் உடனே எடுக்கவில்லை?” “உங்கள் வீட்டில் ஏன் இப்படிச் செய்கிறார்கள்?” “என் உடல்நிலை சரியில்லாத விபரம் கேள்விப்பட்டும் நீ ஏன் உடனே ஃபோன் செய்யவில்லை?” இப்படியே தொலைபேசியிலேயே வாக்குவாதங்கள் வளர்ந்தது(பெண் வெளியூர்).
சரி… பேசினால் வாக்குவாதம் வருகிறது. இனி எஸ்எம்எஸ்ஸிலேயே தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம் என்று ஆரம்பித்து… அதிலும் சண்டையாகி… மொத்தம் 1100எஸ்எம்எஸ்கள் பரிமாறப்பட்டு, ஒரு பொன்மாலைப் பொழுதில் அந்தப் பெண், “நம் திருமணத்தை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறப்போம். இனிமேல் உன் முகத்திலேயே நான் விழிக்க விரும்பவில்லை. வேறு யாரையாவது திருமணம் செய்துகொள். குட் பை…” என்று கூறி நடக்கவிருந்த ரிசப்ஷனை நிறுத்திவிட்டாள். இவனும் விட்டாப் போதும் என்பது போல் அத்தோடு விட்டுவிட்டான்.
நம்புங்கள் நண்பர்களே…! இவை அனைத்தும் அவர்கள் திருமணம் செய்துகொண்டு, இருபது நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த ஆரம்பிப்பதற்கு முன்பே, எஸ்எம்எஸ்ஸிலேயே தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டனர். நான் கூட ஏதோ கோபத்தில் இருக்கிறார்கள். இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. ஆறு மாதங்கள் ஆகிறது. இவனும் அவளைத் தொடர்புகொள்ளவில்லை. அவளும் இவனைத் தொடர்புகொள்ளவில்லை.
ஒரு ஆணும், பெண்ணும் இத்தனை வருடம் வளர்த்த பெற்றோரை உதறிவிட்டு வந்து, திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொள்வது என்றால், இருவருக்கும் பரஸ்பரம் எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்கவேண்டும்…! எவ்வளவு வலுவான காதல் அது…!! என்றுதானே நாமெல்லாம் நினைப்போம். ஆனால் ஏன் இப்படி ஆயிற்று?
இவர்கள் மட்டும்தானா? காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பலரும் இவ்வாறு விவாகரத்து செய்துகொள்கின்றனர். கடந்த 2008 ஆம் ஆண்டில், சென்னை குடும்ப நல(?) நீதிமன்றத்தில் 4125 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கணிசமான அளவு தம்பதிகள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
நியாயமாகப் பார்த்தால் காதல் திருமணம்தான், பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களைவிட உறுதியானதாக இருக்கவேண்டும். அவர்கள் பல நாட்கள் பழகி, நன்கு புரிந்துகொண்ட பிறகே திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆகவே காதல் திருமண வாழ்க்கை என்பது, மிகவும் அற்புதமாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அதுவோ வீட்டுத் திருமணங்களை விட மோசமான நிலையில் உள்ளது. ஏன்? எங்கு தவறு நடக்கிறது?
பெரும்பாலான காதல் எப்படி உருவாகிறதென்றால், இவரை இன்ன காரணங்களுக்காக காதலிக்கவேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிட்டே உருவாகிறது. திட்டம் எனும்போதே அதில் காதல் என்பது காணாமல் போய், ஒரு போரில் வெற்றிகொள்வதற்கான தந்திரங்களும், பொய்களும்; களத்தில் இறக்கி விடப்படுகின்றன. தந்திரத்தாலும், பொய்களாலும் ஜெயித்த காதலில் எங்கிருந்து உண்மை இருக்க முடியும்.
இதனை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள, நம் நாட்டில் காதல் எவ்வாறு உருவாகிறது என்று முதலில் பார்ப்போம். பெரும்பாலான காதல்கள் புறத்தோற்றத்தின் அடிப்படையிலேயே உருவாகிறது. இங்கு நான் புறத்தோற்றம் என்பதில் அழகை மட்டும் சொல்லவில்லை. கலகலப்பாகப் பேசுதல், நாகரிகமாக நடந்துகொள்ளுதல், பிறருக்கு உதவி செய்தல் போன்ற அனைத்தையும் சேர்த்தே சொல்கிறேன். இவையெல்லாம் இல்லாமல், எல்லா மனிதர்களுக்குள்ளும் வெளியே தெரியாத இன்னொரு மனிதன் இருக்கிறான். அவன் அவ்வளவு எளிதாக நம் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.
யாரோ எழுதிய அற்புதமான வரிகள் நினைவுக்கு வருகிறது: சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மனிதர்களை மாற்றுகின்றன என்பது பொய். சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும்தான் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான மனிதர்களை வெளிக்கொணர்கின்றன. காதலர்கள் திருமணம் செய்துகொண்டு, திருமண வாழ்க்கைக்கே உரிய சில தனித்துவமான சூழ்நிலைகள் அமையும்போதுதான், அவர்களின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வருகிறது.
அடுத்து முழுக்க, முழுக்க பாலியல் தேவையை முன்னிட்டு உருவாகும் காதல்கள். நமக்கு பெரும்பாலும் 13-15 வயதிற்குள் பாலுணர்வு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் திருமணம் என்பது 25 வயதுக்கு மேல்தான். நமது சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, பாலியல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான எளிய வழி காதல்தான். எந்தவிதப் புரிந்துகொள்ளலும் இல்லாமல், பரஸ்பரம் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்வதற்காக மட்டுமே ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு, அதைக் காதலாகக் கற்பிதம் செய்துகொண்டு, காதலின் பேரில் தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்வார்கள்.
அடுத்து சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்கள், ஒருவன் அவர்கள் கண் முன் மிகவும் வசதியானவன் போல் காட்டிக்கொண்டால், அதை உண்மை என்று நம்பி, வெயிட்டாக செட்டில் ஆகிவிடலாம் என்று அவனைக் காதலிப்பார்கள்.
இங்கு ஒரு காதல் உருவான விதத்தை நான் சொன்னால் நம்பக்கூட மாட்டீர்கள். என் நண்பனுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவன், தன் சக பெண் ஊழியர், ஒருநாள் தன்னை உற்று உற்றுப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறான். அன்று பிப்ரவரி 14 வேறு. அவள் நம்மைப் பார்க்கிறாளே என்று இவன் அவளை பதிலுக்குப் பார்த்திருக்கிறான். அவளும் பதிலுக்குப் பார்த்திருக்கிறாள். இப்படியே பார்த்து, பார்த்து காதலாகி… தனிமையில் சந்தித்து, காதலைப் பரிமாறி… இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் ஒரு சண்டை வர… பின்வருமாறு அந்த வாக்குவாதம் தொடர்ந்தது:
“அப்புறம் ஏன்டி வேலண்டைன்ஸ் டே அன்னிக்கி, என்னை அப்படி உத்து உத்து பாத்த?”
“நான் எங்க பாத்தன்? நீ வெறிச்சு, வெறிச்சு பாத்ததாலதான் நான் பதிலுக்கு பாத்தேன்.”
“பொய் சொல்லாதடி… ஆபீஸ்க்கு வந்து உக்காந்தவுடனே அன்னக்கி அப்படி பாத்தியேடி… நீ பாத்ததாலதான்டி நான் பதிலுக்கு பாத்தேன்.” என்று அவன் கூற… அவள் யோசித்து, “அன்னக்கி மண்டேதானே…” என்றிருக்கிறாள்.
“ஆமாம்…”
“மை காட்… அன்னக்கி ஹெட் ஆஃபீஸ்க்கு வீக்லி பெர்ஃபாமென்ஸ் ரிப்போர்ட் அனுப்பறதுக்காக உனக்குப் பின்னாடி இருந்த காலண்டர டேட்டுக்காகப் பாத்துட்டு இருந்தேன்.” என்று தலையில் கையை வைத்துக்கொண்டாள்.
இது போன்றெல்லாம் இல்லாமல், சும்மா நண்பர்கள் உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உருவாகும் காதல்களும் இருக்கின்றன. இப்படியெல்லாம் அற்பக் காரணங்களுக்காக காதல் ஏன் உருவாகவேண்டும்? ஏனெனில் பருவச் சிறகுகள் முளைக்கும் வயதில், இங்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மிகவும் அபூர்வமான விஷயம். அபூர்வங்கள் கிடைக்க வாய்ப்பிருந்தால், யாரும் அதைக் கைவிட விரும்புவதில்லை.
இப்படித்தான் இங்கு எவ்விதப் புரிந்துகொள்ளலும் இல்லாமலே பெரும்பாலான காதல்கள் உருவாகின்றன. இப்படி உருவாகும் காதல் திருமணத்தில் முடியும்போது பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பான விஷயமாகவே தெரிகிறது.
மேலும் வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில், பரஸ்பரம் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருப்பதில்லை. எப்படி வேண்டுமானாலும் அந்த உறவு இருக்கலாம் என்ற மனநிலையுடனே திருமணம் செய்துகொள்கின்றனர். அது முன் பின்னாக இருந்தாலும், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததால் பெரிய ஏமாற்றங்களும் இல்லை.
சரி… நமக்கு அமைஞ்சது இவ்ளோதான் என்பது போல் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிடும். ஆனால் காதல் திருமணங்களில், இந்த அம்சம் காணப்படுவதில்லை. தங்கள் இனிமையான காதல் காலத்தைக் கருத்தில் கொண்டு, தங்கள் மண வாழ்க்கையும் அற்புதமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒரே வீட்டில், இருவரும் ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும்போது உருவாகும் பிரச்சினைகளை, அந்த வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கும்போதுதான் புரிந்துகொள்ளமுடியும். அப்போது ஏற்படும் சிறிய ஏமாற்றங்கள் கூட, மிகப்பெரிதாக அவர்களுடைய கண்களுக்குத் தெரியும்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்டு தற்போது மனக்கசப்பில் இருக்கும் மற்றும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் சில நபர்களிடம் நான் பேசியதை வைத்து யோசிக்கும்போது, காதல் திருமணங்களில் பல, கீழ்க்கண்ட காரணங்களால் தோற்றுப்போவதாக நான் கருதுகிறேன்:
காதலிக்கும்போது பல விஷயங்கள் தெரிவதில்லை. தினமும் இரண்டு மணி நேரம் பழகுவதற்கும், திருமணமாகி 24 மணி நேரங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சில சிறிய விஷயங்களிலிருந்து ஆரம்பிப்போம். ஒருவன் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமலே காபி குடிப்பான். ஆடைகளைக் கழட்டி திசைக்கு ஒன்றாக வீசுவான். அவன் தூங்கும்போது ஏதேனும் சத்தம் வந்தால், நாய் மாதிரி வள்ளென்று விழுவான். உணவு ருசிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவனாக இருப்பான். ஆனால் இது எதுவுமே காதலிக்கும்போது காதலிகளுக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அவர்களுக்கு முன், நீட்டாக ட்ரெஸ் செய்துகொண்டு, இனிக்க இனிக்கப் பேசும் காதலன் மட்டும்தான்.
அதே போல் ஒரு பெண் பாடல்களை சத்தமாக அலறவிட்டு கேட்பவளாக இருப்பாள். அவள் செய்யும் வேலைகளில் குறை சொல்வதை விரும்பாதவளாக இருப்பாள். இது எதுவும் காதலிக்கும்போது காதலனுக்குத் தெரியவே தெரியாது.
இவையெல்லாம் திருமணத்துக்குப் பிறகுதான் தெரிய வரும். அவ்விஷயங்கள் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. இது மாதிரியான சிறு, சிறு விஷயங்களில் ஏற்படும் மனக்கசப்புகள் சண்டையாகிறது. கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். அதுவே மிகப்பெரிய மனப்பிளவில் கொண்டுபோய் விடுகிறது. இவ்வாறு கோபமாகப் பேசுவது தொடர்பாக, அனைவரும் ஒத்த கருத்தாகச் சொன்ன ஒரு விஷயம், “ஒரு பிரச்சினை வரும்போது இவ்வளவு கோபமாக ரீஆக்ட் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை.” என்பதுதான்.
அடப்பாவிகளா… திருமண வாழ்க்கை என்றால் எப்போதும் டிவி விளம்பர கணவன், மனைவி போல் மாறாப் புன்னகையுடன் இருக்கமுடியுமா என்ன? என்னதான் கணவன், மனைவி என்றாலும் நாம் எல்லோரும் தனித்தனி மனிதர்கள்தானே… இரண்டு தனி மனிதர்கள் சேர்ந்து ஒரு அலுவலகத்தில் அல்லது பிற இடங்களில் இயங்கும்போது ஏற்படும் அனைத்து கோப, தாபங்களும் இந்த உறவிலும் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இவர்கள் இவ்வாறு நினைப்பதில்லை. ஏன்?
ஏனென்றால் காதலிக்கும்போது காதலி என்னதான் மனதுக்குப் பிடிக்காதபடி நடந்துகொண்டாலும், பத்து நிமிடம் கழித்து கிடைக்கப்போகும் முத்தத்தைக் கருத்தில் கொண்டு காதலன் சகித்துக்கொள்வான். பிறகு திருமணமாகி அவளை சலிக்க, சலிக்க அனுபவித்த பிறகுதான் தன் கோப முகத்தைக் காட்டுவான். மேலும் காதலிக்கும்போது எவ்வளவு காயப்படுத்தினாலும், கிடைத்தவரை விட்டுவிடக்கூடாது என்பதற்காக பரஸ்பரம் இருவரும் பலவற்றையும் சகித்துக்கொள்வர்.
அடுத்து பெரிய பிரச்சினை, காதலிக்கும்போது காதல் மயக்கத்தில் விட்ட டயலாக்குகள். காதல் காலத்தில், இந்த உலகத்தில் அவரைத் தவிர வேறு ஒன்றுமே தனக்கு முக்கியம் இல்லை என்பது போல் பேசிக்கொள்வார்கள். காதலிக்கும் அந்தக் குறிப்பிட்ட மாலை ஆறு டு எட்டு மணிக்கு, அவர்களைத் தவிர வேறு யாரும் முக்கியம் இல்லைதான். ஆனால் பிற நேரங்களில் அவர்களுக்கு அலுவலகம், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் போன்றவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் இவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கம் இருக்கக்கூடும். அது திருமணத்திற்குப் பிறகு, இவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய உறுத்தலாக இருக்கும்.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் இன்னும் கடற்கரைச் சந்திப்புகளின் ஹேங் ஓவரிலிருந்து விடுபடாமல், “நீதான் எனக்கு எல்லாம்.” என்பது போன்ற டயலாக்குகளைக் கூறிக்கொண்டு, தனது கணவர்கள் 24 மணி நேரமும், தன்னை விடாமல் காதலித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.
ஏனெனில் நமது பெண்களின் உலகம் மிகவும் சிறியது. வீடு, அலுவலகம், கணவன் இவர்களை விட்டால் அவர்களுக்கு வேறு உலகமே இல்லை. கணவர்களை மட்டுமே இறுக்கப் பற்றிக்கொள்கிறார்கள். ஆனால் ஆண்களின் வட்டம் மிகப்பெரிது. அவனால் பல்வேறு வட்டங்களில் சந்தோஷமாக இயங்கிக்கொண்டிருக்கமுடியும். இதைப் பெண்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. தனது காதல் கணவன் தன்னோடு மட்டுமே நெருக்கமாக இல்லாமல், பிறருடனும் நெருக்கமாக இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் சண்டைகள் வருகின்றன.
இதையெல்லாம் காதலன் முன்கூட்டியே, “நீ என் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கம். ஆனால் நீ மட்டுமே என் வாழ்க்கை அல்ல.” என்பதை தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். ஆனால் காதலிக்கும்போது, நீதான் எனக்கு எல்லாம் என்பது போல் பேசிவிட்டு, பிறகு அதற்கு மாறாக நடந்துகொள்ளும்போது இவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதை ஒரு நம்பிக்கைத் துரோகமாக நினைக்கிறார்கள். எப்போதும் நம்பிக்கைத் துரோகங்கள் ஏற்படுத்தும் காயங்கள் சாதாரணமாக ஆறுவதில்லை.
அடுத்து இன்றைய நவீனப் பொருளாதார உலகில் நம் மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள். முதலில் எல்லாம் ஒரு மனிதனுக்கான கனவு என்பது, ஒரு வேலை, கல்யாணம், குழந்தைகள், அதிகம் போனால் ஒரு சொந்த வீடு என்பதாகத்தான் இருக்கும். ஆனால் பொருளாதார தாராளமயமாக்கலின் நுகர்வுக் கலாச்சாரம் காரணமாக, நடுத்தர வர்க்கத்தினரும் பணக்காரர்கள் போல வாழ ஆசைப்படுகிறார்கள். பல ஆடம்பர சொகுசுகளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள்.
எனவே பல பெண்களும் தங்கள் காதலர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தளவுக்கு சம்பாதிக்கும் ஆண்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவ்வளவு செலவுக்கும் அவன் சம்பாதிக்கவேண்டுமென்றால் அதற்காக அவன் பல மணி நேரம் உழைக்கவேண்டியிருக்கும். காதலிக்கும்போது பெண்கள் இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தனது கனவுகளை நிறைவேற்ற வந்த தேவதூதனாக நினைத்து அவனைக் காதலிக்கிறார்கள். திருமணமான பிறகு இதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறது. இந்தப் பணத்தை சம்பாதிப்பதற்காக அவன் அதிக நேரம் செலவழிக்கவேண்டியிருக்கிறது. மனைவிக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் கருத்து வேறுபாடு வருகிறது. இந்தப் பெண்களுக்கு அவன் தேடித் தரும் சொகுசுகளும் வேண்டும். ஆனால் அவன் இருபத்திநாலு மணி நேரமும் தன்னுடனேயே இருக்கவும் வேண்டும். இதைத்தான் ஊர்ப்பக்கம், “ஆத்துலயும் குளிக்கணும். ஆனா கால்லயும் தண்ணிப் படக்கூடாதுன்னா எப்படி?” என்பார்கள்.
மேற்கூறிய காரணங்களால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகளாக மாறுகின்றன. பிறகு இத்தலைமுறையினருக்கே உரிய மிதமிஞ்சிய ஈகோ மற்றும் சகிப்புத்தன்மையற்ற குணம் ஆகியவற்றால் இச்சண்டை மிகப் பெரிதாகிறது. அடுத்து இத்தலைமுறையினருக்கே உரிய அவசரம். காதலிப்பதில் காட்டும் அவசரத்தை, செக்ஸ் வைத்துக்கொள்வதில் காட்டும் அவசரத்தை, திருமணம் செய்துகொள்வதில் காட்டும் அவசரத்தை கடைசியாக விவாகரத்திலும் காண்பிக்கிறார்கள்.
– ஜி. ஆர். சுரேந்தர்நாத்