மனித இனத்தை ஒன்றுபடுத்தும் இஸ்லாம்
ஷேக் அப்துல்லாஹ் (கொடிக்கால் செல்லப்பா)
[ இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.
பரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு ‘ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்’ என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.
இஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.
ஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.]
மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் செய்த சேவைகள் மகத்தானவை. அதை நாம் கண்ணியத்தோடு ஆராயும் போது தற்கால உலகை கண்ணோட்டமாக வைத்து பார்க்காமல் இன்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நமது சிந்தனையை கொண்டு செல்லவேண்டும். அப்போது தான் இஸ்லாத்தின் பெருமையையும், அதன் சேவையையும் நம்மால் உணரமுடியும்.
கல்வி, அறிவு மற்றும் நாகரீகம் வளர்ச்சியடையாத விஞ்ஞானம் வான சாஸ்திரம் என்னவென்றே தெரியாத ஒரு பாகத்து மக்கள் மறு பாகத்தை அறிந்து கொள்ளாத நிலையில் மக்கள் இருந்தனர். பொதுவாக சரித்திரத்தில் அக்காலத்தை இருண்ட காலம் என்பர். அநாகரீகம், காட்டுமிராண்டித்தனம், அதர்மம் நிறைந்த காலமாக அதை வர்ணிக்கப்படுகிறது. அதற்கு மகுடம் வைத்தாற்போல் அன்றைய அரேபிய நாட்டில் மக்கள் மூட பழக்கவழக்கத்தில் மூழ்கியிருந்தனர்.
அந்த காலத்தில் தான் இறைவனின் பிரதிநிதியாக, தீர்க்கதரிசியாக பரிசுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகின் மத்திய பாகமான அரேபிய பாலைவனத்தில் தந்தை அப்துல்லாஹ்வுக்கும், தாய் ஆமீனாவுக்கும் மகனாக பிறந்தார்கள். சிறப்புமிக்க குடும்பத்தில் பிறந்த நாயகம் அவர்கள், தாய், தந்தையரை இளம் வயதில் இழந்தார்கள். தந்தை வழி வந்தோரின் அரவணைப்பில் வளர்ந்த நாயகம் அவர்கள் ஏழ்மையில் வாழ்ந்ததினால் கல்வி அறிவு அற்ற நிலையில் வளர்ந்தார்கள். இருப்பினும், புத்தி கூர்மையும் தெளிவான ஞானமும் அளப்பறிய அறிவாற்றலும் கொண்ட நாயகம் அவர்கள் மனிதாபிமான மேலீட்டால் பிறருக்கு பெரும் தொண்டு செய்து மங்கா புகழ் பெற்ற அல்-அமீன் (நம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பட்டத்தை மக்களாலே பெற்றார்கள்.
மனித சமுதாய அமைப்பிற்கு தான் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டி நடைமுறையில் இருந்து வந்த மக்களுக்கு முற்றிலும் மாறாக வாழ்ந்தார்கள். பரிசுத்தமான நிலையிலும் உயர்ந்த அமைப்பிலும் ஏக இறைவனைப் பற்றிய சிந்தனையிலும் வளர்ந்து வந்த நாயகம் அவர்களுக்கு தமது 40 வயதில் இறைவன் புறமிருந்து நபிப்பட்டம் அருளப்பட்டது. அன்று தொட்டு நபி மணிக்கு 63 வயது வரை 23 ஆண்டுகள் பரிசுத்த திருக்குர்ஆன் என்ற இறை வாக்குகள் சிறுக சிறுக அருளப்பட்டது.
இடைவெளி விட்டும் தொடர்ச்சியாகவும் 23 ஆண்டுகள் கொண்டு நபி மணி மூலம் பரிசுத்த குர்ஆன் என்ற கிரந்தம் உலகிற்கு அருளப்பட்டது. ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள் என்ற தத்துவத்தை இதன் மூலம் நபிமணி அவர்களால் உலகிற்கு பிரகடனப்படுத்தப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு அன்று உண்டாயிற்று. உற்றார், உறவினர், நண்பர்கள் நாட்டு மக்கள் ஆகிய எல்லோரும் நபிகள் நாயகம் அவர்களை எதிர்க்கவும், துன்புறுத்தவும் தொடங்கினர்.
ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியாகிய கதீஜா பிராட்டியும் அவரைத் தொடர்ந்து ஏழை எளியோரும், இளைஞர்களும், அடிமைகளும் தான் நபியவர்களின் கொள்கைகளை முதன்முதலில் ஒப்புக்கொண்டனர். கற்றவர்களோ, படித்தவர்களோ, பணம் படைத்த செல்வந்தர்களோ கோத்திரப் பெருமை பேசி நாயகத்தின் கொள்கைதனை செவி மடுக்க மறுத்துவிட்டனர். மக்கத்து அதிபதியும் அவர் தம் அடியாட்களும் நபிகள் நாயகத்திற்கு எல்லையில்லா துன்பத்தினையும் தினம் தினம் செய்து வந்தனர்.
துன்பத்தையும் துயரத்தையும் தாங்கிக் கொண்டு தம் கொள்கைதனை தீவிரமுடன் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பரிசுத்த திருக்குர்ஆனின் கொள்கைகளை பிறருக்கு பிரச்சாரம் செய்ததோடு அல்லாமல் தானும் தன் தோழர்களும் அதனை வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு உலகிற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றிய அந்த சிறிய முஸ்லிம் சமுதாயமானது எல்லாவிதமான துன்ப துயரங்களையும் எதிர்ப்புகளையும் வெற்றிக் கொண்டு வாழ்க்கையின் எல்லா நிலையிலும் எல்லா மட்டத்திலும் எல்லா துறையிலும் முன்னேறி உலகிற்கு முன்மாதிரியாக சிறந்து பெருகி அரேபியா முழுவதும் ஆட்கொண்டது. இரத்தவெறி பிடித்த அநாகரீகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்து வந்த அரேபிய சமுதாயத்தை பரிசுத்த குர்ஆனின் கொள்கைகளுக்கு இணங்க தான் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்த அறிவுச்சுடராகவும், வீரத்தின் பாசறையாகவும், அறிவு ஆராய்ச்சியின் சுரங்கமாகவும் மாற்றி அமைத்தார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனித வாழ்க்கையின் மேன்மையை எல்லா மட்டத்திலும் அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், கலை, கலாச்சாரம், சமூக நலம், நிர்வாகம், நீதி, வீரம், வாணிபம், விளையாட்டு ஆகிய எல்லா துறைகளிலும் ஒப்புயர்வற்ற மேலான சிறப்புமிக்க ஒரு புதிய உலகை சிருஷ்டித்து அக்கடல் முதல் இக்கடல் வரை, ஸ்பெயின் முதல் சீனா வரை உலகை இஸ்லாமியக் கொடியின் கீழ் கொண்டு வந்தார்கள்.
இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.
பரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு ‘ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்’ என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.
இஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.
இஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.
ஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. சிரம் தாழ்த்த வேண்டியது இல்லை என்ற உணர்வினை அது ஊட்டி விடுகிறது. எல்லாம் வல்ல பரம் பொருளாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.
சுதந்திரம் சமத்துவம் பெற்று மனிதன் இங்கு முழு நிலவு ஆகின்றான். சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ அவன் இங்கு கூன் நிமிர்ந்து நிற்கிறான். மனிதகுலம் இதுவரைக் கண்டிராத மனித குல சுதந்திர சாசனம் மாக்ன கார்டாவை விட மிக உயர்ந்த சாசனம் திருக் குர்ஆன் ஒன்றே. முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மானிட மக்களின் நல்வாழ்விற்காக கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாம் சமுத்திரத்தை போன்றதாகும். நதிகளும், ஆறுகளும், கால்வாய்களும், கழிவு நீர் சாக்கடைகளும், சமுத்திரத்தில் கலக்கும் போது அது ஒரே தன்மையுடைய சமுத்திரத் தண்ணீராக சங்கமமாவது போல் உலகில் எல்லா இன சாதி, மொழி, நிற உயர்வு தாழ்வு மக்களும் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமில் சங்கமம் ஆகி முஸ்லிம் என்ற ஒரே சமூக மக்களாக இன, சாதி வேற்றுமை காண முடியாத ஒரே சக்தியாக ஆகி விடுகின்றனர்.
எனக்கு கிடைத்த அனுபவங்கள்:
நான் ஒரு இந்துவாக இருந்து கொண்டே முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைகளையும், மார்க்க அனுஷ்டானங்களையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். நான் சமீபத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்களுடன் வேலூருக்கு சென்றிருந்தேன்.
நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது அவர்களிடமிருந்து தொப்பி ஒன்றை வாங்கி தலையில் அணிந்து கொண்டேன். தொப்பியை அணிந்ததும் என் சிந்தனைகள் பலவாறு எழுந்தன. எனது நிலை திடீரென்று உயாந்தது மாதிரி எனக்குள்ளே மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன்.
பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போதே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான விபரங்களை அடியார் அவர்கள் எனக்கு விளக்கிக் கொண்டே வந்தார்கள். நான் எழுப்பிய பல சந்தேக வினாக்களுக்கு, தெளிவான விடை கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மாலை சுமார் 6:30 மணியளவில் வேலூரை அடைந்தோம். பஸ்ஸிலிருந்து இறங்கிய எங்கள் தோற்றத்தை கண்டு, பாய் உங்களுக்கு எங்கே போகவேண்டும் என்று ரிக்ஷாக்கரரர் கேட்டார். தொப்பி அணிந்திருந்த என்னை பாய் என்று அவர் அழைத்ததும் எனக்கு மேலும் ஒரு புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஊட்டியது.
நாங்கள் இஸ்லாமிய மதரஸா ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லி ரிக்ஷாவில் அங்கு சென்றோம். மதரஸாவை அடைந்த எங்களை இஸ்லாமிய மார்க்க முறைப்படி ஒரு பெரியவர் வரவேற்றார். சிறிது நேரத்தில் மதரஸாவின் முதல்வர் வந்தார். அவருக்கு என்னை அப்துல்லாஹ் அடியார் அறிமுகப்படுத்தினார். உடனே முதல்வர் என்னை கட்டித்தழுவி நலம் விசாரித்தார்.
இரவு தொழுகைக்கான நேரம் வந்ததும், அந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்க வந்திருந்த மாணவர்களைப் பார்த்தேன். அவர்கள் தொழுகைக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்ததையும் பார்த்தேன். பின்பு அவர்கள் அனைவரும் வரிசை வரிசையாகவும் ஒருவரை ஒருவர் நெருங்கி இணைத்துக்கொள்ளும் வகையில் நின்று தொழுதுக்கொண்டிருந்ததை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். தொழுகை முடிந்ததும், அந்த இஸ்லாமிய நண்பர்களோடு கலந்துரையாட விரும்பி அணுகினேன். என்னுடைய தோற்றத்தை கண்ட அவர்கள் இஸ்லாமிய முறைப்படி ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சொன்னார்கள். எனக்கு அந்த சலாமிற்கு பதில் சொல்ல வேண்டிய முறை தெரிந்திருந்ததால் ‘அலைக்கும் சலாம்’ என்று சொன்னேன்.
அங்கே 8 வயது முதல் 80 வயது வரையுள்ள முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர்களைப் பற்றி நான் சற்றும் எதிர்பாராத சில தகவல்களை சொன்னார்கள். அவர்களில் பெரும்பாலான பெரியவர்களும், சிறியவர்களும் சமீபத்தில் இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் என்பதை அறிந்ததும், வியப்பும் ஆச்சரியமும் அடைந்தேன். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கை, அனுஷ்டானங்கள் எல்லாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் முஸ்லிம்களை ஒத்து இருந்தன. அவ்வளவு தூரம் புதிய மார்;க்கத்தில் தங்களை இணைத்து ஒன்றி போயிருந்தனர். அவர்களுடைய கண்ணியமான பேச்சும் கனிவான நடவடிக்கையும் அவர்கள் மீது எனக்குள்ள பிடிப்பையும், பாசத்தையும் அதிகப்படுத்தியது.
இரவு மணி 9 ஆகிவிட்டதால் நான் அவர்களிடமிருந்து விடைபெற்று, மீண்டும் நாளை சந்திப்பதாக சொன்னதும் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று கூறி அவர்கள் எனக்கு விடை தந்தார்கள். நானும் மீண்டும் அப்துல்லாஹ் அடியார் இருந்த இடத்திற்கு வந்து, நடந்த விபரங்களை விரிவாகச் சொன்னேன். எனது மகிழ்ச்சியில் அவரும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு சற்று தொலைவில் இருந்த தேநீர்; கடைக்கு நான் சென்றேன். அது ஒரு ஜாதி இந்துவின் கடையாக இருந்தது. நான் கல்லாவில் இருந்த உரிமையாளரைப் பார்த்து டீ கேட்டேன். அவர் தொப்பி அணிந்திருந்த என்னைப் பார்த்ததும், பாய்க்கு ஒரு டீ கொடு என்று சொன்னார். அவர் எனது தோற்றத்தை கண்ட மாத்திரத்திலே உரிய மரியாதையை கொடுத்ததை கண்டு ஒரு புத்துணர்ச்சி ஒரு உயர்வைப் பெற்று விட்டது போல் நான் உள்ளுர உணர்ந்து கொண்டிருந்தேன்.
நான் டீயைக் குடித்துவிட்டு தங்கியிருந்த மதரஸாவிற்குச் சென்றேன். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். நான் இப்போது தேநீர் கடையில் நடந்த நிகழ்ச்சியை அவர்களிடம் ஆனந்தத்தோடு எடுத்துச் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பூரிப்பில் அவர்களும் பங்கு கொண்டனர்.
இன்னொரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய் பட்டிணத்தில் நடைபெற்ற ஒரு மீலாது விழா நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த நான் இஸ்லாமிய நண்பர்கள் என் மீது கொண்டிருந்த அன்பி;ன் காரணமாக என்னை கண்ணியப்படுத்தி மேடையில் அமர வைத்தனர்.
சிறந்த சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய அப்துல்லாஹ் அடியார் அவர்களுடைய பேச்சைக் கேட்க பெரும் கூட்டம் திரண்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பன்னிரண்டு வயதுள்ள ஒரு சிறுவன் ‘கிராத்’ ஒதினான். அவன் லுங்கியும் தொப்பியும் அணிந்திருந்தான். சிறுவனேயானாலும், அரபு மொழியில் அழுத்தமும் திருத்தமுமாக அவன் உணர்ச்சியோடு ஒதியதை செவிமடுத்த மார்க்க அறிஞர்கள், அச்சிறுவனை உற்று நோக்கினார்கள். அவன் ஓதும் முறை எல்லோரையும் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருந்தது.
இப்ராஹீம் என்ற அந்த சிறுவன் நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தில் இந்துவாக இருந்து மதம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தவன் என்ற செய்தியை தலைவர்; அவர்கள் தந்து, அறிமுகப்படுத்தியது மேலும் வியப்பை தந்தது. புதிய மார்க்கத்தை, வழியை அவன் தேடிக்கொண்டது சாதராணமாக எனக்கு படவில்லை. அவன் புதிய வழியை நன்கு அறிந்து அதைத் தழுவியுள்ளான் என்பதை அறிந்துக் கொண்டேன்.
அடுத்து எதிர்பாராத விதமாக என்னை பேசும்படி விழாத்தலைவர் அறிவித்தபோது சற்று திகைத்தேன். காரணம், அது ஒரு மார்க்க மேடை, அறிஞர்களும் உலமா பெருமக்களும் ஒருங்கே கூடியிருந்த ஒரு விழா அது. அவர்கள் முன்னிலையில் பேசுவது என்பது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் இறைவனை மனதில் நினைத்துக் கொண்டதும், தைரியமும் உற்சாகமும் தானாக ஏற்பட்டது. பேசத் துவங்கினேன்.
அங்கே கிராத் ஓதிய அந்த இப்ராஹீம் என்னும் சிறுவனுக்கு அவனை பொறுத்தமட்டில் சமூக விடுதலை கிடைத்துவிட்டது என்பதை அந்த இடத்திலேயே உணர்ந்தேன். அந்த மாபெரும் சபை அந்த சிறுவனை கண்ணியப்படுத்திக் கொண்டிருந்தது. அங்கே என்னுடைய நிலையை உணர்ந்தேன். இறைவா இந்த சிறுவனுக்கு கிடைத்த விடுதலையும் உயர்வும் எனக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தை நான் அங்கே வெளிப்படுத்தினேன்.
அச்சிறுவனை பொறுத்தமட்டில் அவனுக்கு சமூக விடுதலை மட்டுமல்ல. ஒரு புதிய அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அச்சிறுவனுக்கு தொழுகையை இமாமாக முன்னின்று நடத்தும் அருமையான கௌரவமும் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு கண்ணியமான மார்க்கம் இஸ்லாம் என்பதை அன்றைய நிகழ்ச்சியில் அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டேன்.
( جَزَاكَ اللَّهُ خَيْرًا : ஷேக் அப்துல்லாஹ் (கொடிக்கால் செல்லப்பா) அவர்கள் எழுதிய ”புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி!” நூலிலிருந்து.)