ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது.
ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை.
இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தொகுத்து வழங்குகிறோம்.
மகத்தான அத்தியாயம்!
நான் ஒரு முறை தொழுது கொண்டிருக்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களுடைய அழைப்புக்குப் பதில் கொடுக்கவில்லை. தொழுது முடித்த பின் அவர்களிடம் சென்றேன். “நான் அழைத்தவுடன் வருவதற்கு என்ன தடை?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். “அல்லாஹ்வின் தூதரே! தொழுது கொண்டிருந்தேன்” என்று நான் கூறினேன்.
“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு உயிர் அளிக்கக் கூடிய ஒரு காரியத்திற்காக இத்தூதர் அழைக்கும் போது இத்தூதருக்கும் அல்லாஹ்வுக்கும் பதிலளியுங்கள்‘ (அல் குர்ஆன் 8:24) என்று கூறவில்லையா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டு விட்டு, “இந்தப் பள்ளியிருந்து நீ புறப்படுவதற்கு முன் குர்ஆனில் உள்ள மகத்தான ஒரு அத்தியாயத்தை உனக்கு நான் கற்றுத் தருகிறேன்” என்று கூறி எனது இரு கையையும் பிடித்துக் கொண்டனர்.
அவர்கள் பள்ளியிலிருந்து புறப்படுவதற்குத் தயாரான போது, “அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மகத்தான ஓர் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதாகக் கூறினீர்களே!” என்று நினைவு படுத்தினேன். அவர்கள் ‘ஆம்‘ அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பது தான் அந்த அத்தியாயம் என்று கூறினார்கள். (நூல்: புகாரி 4474.)
இதே ஹதீஸ் புகாரி (4647, 4703, 5006), நஸயீ (904), அபூதாவூத் (1246), இப்னு மாஜா (3775), அஹ்மத் (15171, 17117), தாரமி (1454, 3237), ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் திர்மிதீ (2800வது) அறிவிப்பில் “தவ்ராத், இன்ஜீல் மற்றும் ஸபூர் ஆகிய வேதங்களில் இல்லாத மகத்தான சூராவை கற்றுத் தரட்டுமா?” என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.
குர்ஆனின் அன்னை!
“திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும், மகத்தான குர்ஆனும் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4704)
இறைவனிடம் உரையாடும் அத்தியாயம்!
தொழுகையில் ஓதுவதை எனக்கும் எனது அடியானுக்கும் மத்தியில் பங்கிட்டுள்ளேன். என் அடியான் கேட்டவை அவனுக்கு உண்டு.
‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ என்று ஒருவன் கூறும் போது ‘என்னை என் அடியான் புகழ்ந்து விட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான்.
அவன் ‘அர்ரஹ்ப்னிர் ரஹீம்‘ என்று கூறும் போது ‘என் அடியான் என்னைப் பாராட்ட வேண்டிய விதத்தில் பாராட்டி விட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான்.
‘மாலிக்கி யவ்மித்தீன்‘ என்று கூறும் போது ‘என்னைக் கவுரவப்படுத்த வேண்டிய விதத்தில் கவுரவப்படுத்தி விட்டான்‘ என்று அல்லாஹ் கூறுகிறான்.
‘இய்யாக நஃபுது வ இய்யாக நஸ்தயீன்‘ என்று கூறும் போது ‘இதுதான் எனக்கும் எனது அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும்‘ என்று அல்லாஹ் கூறுகிறான்.
‘இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்‘ என்று கூறும் போது ‘என் அடியானின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்‘ என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 655)
ஒளிச்சுடர்!
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அமர்திருந்த போது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கண்டார்.
அப்போது வானத்தை அன்னாந்து பார்த்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், “இதோ! வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார்.
அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், “இதோ! இப்போது தான் இந்த வானவர் பூமிக்கு வந்திருக்கிறார். இதற்கு முன் அவர் பூமிக்கு இறங்கியதில்லை” என்று கூறினார். அவ்வானவர் ஸலாம் கூறிவிட்டு, “உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப்பட்டிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியைப் பெறுங்கள்.
அல் ஃபாத்திஹா அத்தியாயமும் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை! அவற்றிலுள்ள எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை” என்று கூறினார். (நூல்: முஸ்லிம் 1472, நஸயீ 903)
அதற்கு நபித்தோழர்கள், “நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்” என்று கூறினார்கள். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள்.
அதன் பின்னர் ஒருவர், ‘அல்ஹம்து‘ சூராவை ஓதி உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். “நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்” என்று கூறி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டார்கள்.
இதைக் கேட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தார்கள். ‘அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு ‘எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள்‘ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2276)
இதே ஹதீஸ் புகாரி (5007. 5736. 5749) ஆகிய எண்களிலும், முஸ்லிம் (4428, 4429), திர்மிதி (1989), அபூதாவூத் (3401, 2965), இப்னுமாஜா (2147), அஹ்மத் (11046, 10972, 10648, 10562) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
திர்மிதியின் மற்றொரு (1989) அறிவிப்பில் முப்பது ஆடுகள் கொடுத்தார்கள் என்றும் ஃபாத்திஹாவை ஏழு தடவை ஓதினார் என்றும் இடம் பெற்றுள்ளது.
அஹ்மத் (10972) என்ற நூலில், தேள் கொட்டிய இடத்தில் ஓதி துப்பினார் என்று இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸிலிருந்து தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் ஃபாத்திஹாவை வைத்து ஓதிப் பார்க்கலாம் என்று நமக்கு தெரிகிறது. என்றாலும் நிவாரணம் கிடைப்பது அவர்களின் இறையச்சத்தைப் பொறுத்தது. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே மருத்துவம் செய்வதுடன் இறைவனிடமும் நோய் நிவாரணத்திற்கு துஆச் செய்ய வேண்டும்.
பைத்தியத்திற்கும் மருந்து!
அலாகா பின் சுகார் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அம்மக்கள், “நீர் இந்த மனித(தூத)ரிடமிருந்து நல்ல செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர். எங்களுக்காக இந்த மனிதருக்கு ஓதிப் பார்ப்பீராக!” என்று கூறி விட்டு, சங்கலியால் பிணைக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.
காலையிலும் மாலையிலும் சூரத்துல் பாத்திஹாவின் மூலம் ஓதிப் பார்த்தர்கள். பின்பு அவர் முடிச்சியிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று மகிழ்ச்சியில் திளைத்தார். இதற்காக அம்மக்கள் அவருக்கு (ஆடுகளை அன்பளிப்பு) வழங்கினார்கள்.
இதை அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொன்ன போது, “நீ அதில் சாப்பிடு! என்னுடைய வாழ்நாள் மீது சத்தியமாக! மக்களில் சிலர் தவறானதன் மூலம் மந்திரித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீர் உண்மையைக் கொண்டு சாப்பிடுகிறீர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 2966, அஹ்மத் 20833, 20834)
மற்ற வேதங்களில் இல்லாத அத்தியாயம்!
அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைப் போன்று வேறு எந்த வேதத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்முல் குர்ஆன் (ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாகச் சொல்கிறேன். தவ்ராத், இன்ஜீல், ஸபூர், புர்கான் ஆகிய வேதங்களில் இது போன்று அருளப்படவில்லை. இதுதான் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களைக் கொண்டதும், மகத்துவம் மிக்க குர்ஆனும் ஆகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்:அஹ்மத் 8328)
இதே ஹதீஸ் திர்மிதி (2800, 3049, 3050) நஸயீ (905), அபூதாவூத் (1245), தாரமி (3238) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.