ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை எதிர்த்து நாடாளுமன்ற பாஜக முன்னாள் உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், “அரசு ஹஜ் மானியம் வழங்குவது சட்ட விரோதமல்ல” எனக்கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பா.ஜ.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவில், “மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல். எனவே ஹஜ்ஜுக்காக அரசு வழங்கும் மானியத்தை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
இருபக்க வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது.
சட்டத்தைப் பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும்.
ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், அதுவும் விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.
ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதைச் சட்ட விரோதமாகக் கருத முடியாது. பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்குச் செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன.
இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே” என தீர்ப்பளித்து, பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
source;: http://www.inneram.com/2011012913234/haj-subsidy-is-not-illegal-supreme-court-decree