[ o ஸலாம் வெறும் சடங்கல்ல!
o ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஸலாமும்.
o ஸலாம் கூறுவதின் சிறப்பும் அதை பரவலாக்குவதின் கட்டளையும்.
o ஸலாமின் ஒழுங்கு முறைகள்.
o முதலில் ஸலாம் சொல்பவரின் சிறப்பு.
o வீட்டில் நுழையும்போது அவசியம் ஸலாம் கூறுங்கள்.
o ஸலாம் கூறுவதால் என்ன பயன்?]
ஸலாம் வெறும் சடங்கல்ல!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: ‘நீங்கள் இறைநம்பிக்கையாளராக மாறாத வரை உங்களால் சுவனத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவர் மற்றவரை நேசிக்காத வரை உங்களால் இறைநம்பிக்கையாளராக ஆகவே முடியாது. நீங்கள் எல்லொரும் ஒருவரையொருவர் நேசிப்பவர்களாக உங்களை மாற்றிவிடக்கூடிய நற்செயல் ஒன்றைச் சொல்லட்டுமா? ஒரவருக்கொருவர் ‘ஸலாம்’ சொல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம்
வெறுப்பு, கள்ளம், கபடம் போன்ற உணர்வுகளுக்க சுவனத்தில் இடமில்லை. வெறுப்பம், குரோதமும் துளியம் இல்லாத அன்பும், நேசமம் நிரம்பிய உள்ளங்களைக் கொண்டவர்கள் தான் சுவனத்தில் நுழைவார்கள்.
இஸ்லாம் வகுத்துத் தந்துள்ள சமூக நடைமுறைகள், வாழ்வியல் நெறிமுறைகள் யாவும் வெறுப்புக்குப் பதிலாக பாசத்தையம், நேசத்தையம் வலுப்படுத்துபவையாகவே இருக்கின்றன.
மேலே தலைப்பில் கண்ட நபிமொழியில் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எளிமையான, நடைமுறைப்படுத்தத்தக்க அழகிய வழிமுறையைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். அதாவது இறைவன் மீதும், இறைத்தாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் நம்பிக்கைக் கொண்டவர்கள் சமூகத்தில் ஒருவர் மற்றவர் குறித்த கவலையின்றி தனித்து ஒதுங்கி இருந்துவிடக் கூடாது. அதற்கு மாறாக ஒருவர் மற்றவரைச் சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்திக்கும்போது ‘ஸலாம்’ சொல்ல வேண்டும். ‘ஸலாம்’ சொல்வதை சடங்குத்தனமாக சுரத்தில்லாமல் செல்லக்கூடாது. உண்மையான அன்புடனும், நேசத்துடனும் சரியான சிந்தனைத் தெளிவுடனும் சொல்ல வேண்டும்.
இம்மையிலும் மறுமையிலும் ஒருவர் மற்றவரின் அமைதியையும், வளத்தையும், நலத்தையும், வெற்றியையும் விரும்புகிறவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாக ‘ஸஸலாம்’ சொல்லுதல் உயிர்த்துடிப்புடன் அமைய வேண்டும்.
‘ஸலாம்’ சொல்வதை பண்பாட்டு உட்கூறாகவோ, சடங்காகவோ, மரபாகவோ செய்யாமல் இஸ்லாம் சொல்லும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அதனைச் சொன்னோமானால் ஒருவர் மற்றவரை மதிக்கக் கூடிய, நேசிக்கக்கூடிய பண்பும், அக்கரையும் சமூகத்தில் வேரூன்றும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஸலாமும்
அல்லாஹுதஆலா முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்த பொழுது அவர்களை அழைத்துச் சொன்னான்: ‘இதோ இங்கு இருக்கக்கூடிய கூட்டத்தினிரிடம் சென்று ஸலாம் கூறுவீராக. அவர்களோ மலக்ககள் எனும் வானதூதுவர்களில் உள்ளவர்கள். அவர்களிடமிருந்து வழங்கப்படும் காணிக்கையையும் கேட்டுப் பெற்றுக் கொள்வீராக. அந்தக் காணிக்கையோ உங்களுக்கும் உங்களது சந்ததிகளுக்கும் உரித்தானதாகும்’
உடன் ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மலக்ககளின் கூட்டத்திடையே சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூறினார்கள். அதற்கு அம்மலக்குகளோ ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி’ என்று பதில் கூறி ஹளரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைவிட ஒருபடி உயர்ந்து அல்லாஹ்வுடைய ரஹ்மத்தையும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக வேண்டி துஆச் செய்து பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்; புகாரி, முஸ்லிம்)
ஸலாம் கூறுவதின் சிறப்பும் அதை பரவலாக்குவதின் கட்டளையும்
நபித்தோழர் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசினால் அதனை மூன்று முறை கூறுவார்கள். அவர்கள் ஒரு கூட்டத்தாரிடம் வந்தால் மூன்று முறை ‘ஸலாம்’ கூறுவார்கள். (அக்கூட்டத்திலுள்ள அனைவரும் அவர்களின் ஸலாமைக் கேட்பதற்காக) (நூல்: புகாரி)
இவ்வாறு மும்முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மும்முறை ஸலாம் கூறுவது கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுதாகும் (நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)
நபித்தோழர் மிக்தாது பின் அஸ்வது அல்கின்தீ ரளியல்லாஹு அன்ஹு தங்களது நீண்ட அறிவிப்பின் ஒரு பகுதியில் கூறுகிறார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (ஆட்டின்) பாலில் அவர்களுக்குரிய பங்கை அவர்கள் சமூகம் முற்படுத்துபவர்களாக நாங்கள் இருந்தோம். அவர்கள் இரவில் வருவார்கள். அப்பொழுது தூங்குபவரை எழுப்பாத அளவிலும், வழித்திருப்பவருக்கு கேட்கும் விதத்திலும் (நடுத்தரக் குரலில்) ஸலாம் கூறுவார்கள். (நூல்: முஸ்லிம்)
அஸ்மா பின்த் யஜீது ரளியல்லாஹு அன்ஹா என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள்: ‘ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுக்கு வந்தார்கள். அப்பொழுது பெண்களின் ஒரு கூட்டம் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தது. அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் கரத்தால் சமிக்ஞை செய்து ஸலாம் கூறினார்கள்’. (நூல்: திர்மிதீ)
ஹளரத் அபூ ஜுரைய்யி அல் ஹஜீமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகம் வந்து ‘அலைக்கஸ்ஸலாம் யாரஸூலல்லாஹ்’ என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அலைக்கஸ்ஸலாம்’ என்று கூறாதீர்கள். ஏனெனில் அவ்வாறு கூறுவது மரணித்தவர்களுக்கு (அறியாமைக் காலத்தில்) கூறப்படும் ஸலாமாகும். (எனவே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவீராக) எனப்பகர்ந்தார்கள். (நூல்: அபூதாவூது)
ஸலாமின் ஒழுங்கு முறைகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘வாகனத்தில் சவாரி செய்பவர், நடந்து செல்பவருக்கு ஸலாம் கூறுவார். நடந்து செல்பவர் அமர்ந்து இருப்பவருக்கு ஸலாம் கூறுவார். சிறு கூட்டத்தினர் அதிகமானவர்களுக்கு (பெருங்கூட்டத்தினருக்கு) ஸலாம் கூறுவர். (நூல்: புகாரி, முஸ்லிம்)
முதலில் ஸலாம் சொல்பவரின் சிறப்பு
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹளரத் அபூ உமாமா ஸுதை பின் அஜ்லான் அல் பாஹினி ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘ஸலாமை முதலில் கூறுபவர் மக்களில் அல்லாஹ்விடம் மிக மேன்மையானவராகத் திகழ்வார்.’ (நூல்: அபூதாவூது)
இமாம் திர்மிதீயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ‘இரு மனிதர் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அப்பொழுது யார் முதலில் ஸலாம் கூறுவார்? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக மேன்மையானவர் முதலில் ஸலாம் கூறுவார்’ எனப் பகர்ந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஹளரத் அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘உங்களில் ஒருவர் தம் சகோதரரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் கூறியபின் அவ்விருவருக்கும் மத்தியில் ஒரு மரமோ, ஒரு சுவரோ அல்லது ஒரு கல்லோ குறுக்கிட்டு, பின்னர் அவர் அவரை மீண்டும் சந்திப்பாரானால், அப்பொழுது அவர் அவருக்கு (மீண்டும்) ஸலாம் கூறட்டும். (நூல்: அபூதாவூது)
இந்த ஒரு ஹதீஸே ஸலாம் கூறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்தவில்லையா?
வீட்டில் நுழையும்போது அவசியம் ஸலாம் கூறுங்கள்
அல்லாஹுதஆலா கூறுகின்றான்:
‘நீங்கள் வீடுகளில் நுழைந்தால் அல்லாஹ்விடமிருந்துள்ள, அபிவிருத்திக்குரிய மணமான காணிக்கையாக நீங்கள் உங்களின் மீது ஸலாம் கூறிக்கொள்ளுங்கள்.’ (அல்குர்ஆன் 24:61)
யூதர்களும், கிறிஸ்தவர்களும் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் முஸ்லீம்களும் அமர்ந்திருந்தால் அப்பொழுதுகூடு ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று அவர்களுக்கு ‘ஸலாம்’ கூற வேண்டும் என்று நபிமொழி நமக்கு வலியுறுத்துகிறது.
ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமிடம் ஏதேனும் பேச நாடினால் முதலில் ஸலாத்தை சொல்லி விட்டுத்தான் பேச்சை ஆரம்பிக் வேண்டும் என்கிறது இஸ்லாம்.
ஆதிபிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வாயிலாக துவக்கி வைக்கப்பட்ட ‘ஸலாம்’ கியாம நாள் வரை நீடித்து நிலைத்து நின்று மனித நேயத்தை வளர்க்கும் கருவியாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸலாம் கூறுவதால் என்ன பயன்?
முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு?
ஒரு மனிதர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடந்து செல்லும் போது “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “பத்து நன்மைகள்” என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கடக்கும்போது “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்தல்லாஹ்” என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இருபது நன்மைகள்” என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடந்தார். அவர் “அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு ” என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் “முப்பது நன்மைகள்” என்றார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன… அல்ஹம்துலில்லாஹ்.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக. ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு