ஜஹாங்கீர்
முஹல்லாவைச் சுற்றி வாழும் சகோதர, சகோதரிகள், உறவுகள் வாழ உறைவிடமில்லை. வறுமை, நோய், திருமணத்திற்கு உதவுதல், மிதமிஞ்சிய சொத்துக்கள் பிரித்து வழங்குதலில்லை, தன் தெருவில் வாழும் ஏழைகளைக் கண்டு கொள்ளாமல் சேர்த்த சொத்து வக்ஃபு சொத்தாக மாறுகிறது.
பல நூறுகோடி, பல நூறு ஏக்கர் நியாயமாகச் சம்பாதித்தலில் வராது. கடத்தல், வணிகத்தில் ஏமாற்றுதல், வரிஏய்ப்பு, ஊழியர் வயிற்றலடிப்பு மூலமே கோடிக்கணக்கான ஹரமான பணம் வந்து கொட்டும். முதல் ஹராம் முற்றிலும் ஹராமாகப் பரிணாமம் பெறுகிறது.
80,000 கோடி வக்ஃபு சொத்துக்கள் பண முதலைகளால் திண்ணப்படுகிறது என்று முன்னாள் சேர்மேன் அப்துல் லத்தீஃப் அவர்கள் கூறியது கவனித்தக்கது. அவர் அறிவாளி. பல மொழி அறிந்தவர். அவராலும் வக்ஃபுத்துறையை சீர்திருத்தம் செய்ய இயலவில்லை.
குர்ஆன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. அவர்களுக்காகப் போரிடு என்று கூறியுள்ளதே தவிர மதத்துக்கு பாதுகாப்பு கொடு என்று எங்கும் கூறவில்லை. இந்த உலகமே மஸ்ஜித் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் நிரம்ப நடவடிக்கை எடுத்திருக்கிறார், இணையதளம் காட்டுகிறது.
என்ன வகை வக்ஃபு என்னும் அவர் கேள்விக்குக்கூட முத்தவல்லிகள் பதிலளிக்கவும் கட்டுப்படவும் மறுக்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை அவர்களுக்கு வழங்கியது யார், பதவிகள் தலைமுறை தலைமுறையாக, வழிவழியாக, வாரிசுரிமையாக, சாதியினர் என்பதற்காக வழங்கப்படுகிறது.
தன் முஹல்லாவில் வாழும் அரசு ஊழியர், ஓய்வாளர், பேராசிரியர், டாக்டர், எழுத்தாளர், பத்திரிகையாளரை நிர்வாகத்தில் போட மறுக்கின்றனர்.
ஒவ்வொரு ஊரிலும் 10 அல்லது 20 வக்பு சொத்துக்கள் உள்ளன.
அவற்றில் என்ன நடக்கிறது?
என்ன வகையான வக்ஃபு?
எதற்காக உபயோகப்பட எழுதிவைக்கப்பட்டது?
வக்ஃபு செய்தவரின் நோக்கம் என்ன?
எத்தனை சதம் நிறைவேற்றப்பட்டது?
அச்சொத்துக்கள் யாருடைய ஆக்கிரமிப்பில் உள்ளன?
சொத்து மதிப்பு எவ்வளவு?
வருமானம் எவ்வளவு?
இருப்பு எவ்வளவு?
நிர்வகிப்போர் யார்?
அவர்களது தகுதி என்ன?
என்ன பணி, வியாபாரம்?
வக்ஃபு சொத்து நிர்வாகப் பொறுப்புக்கு வரும்போது அவர்களது சொத்து மதிப்பு எவ்வளவு?
பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அவர், அவரது மனைவி, மகன், மகள், பெயரர், மைத்துனர் முந்தைய பிந்தைய சொத்து மதிப்புகள் எவ்வளவு?
அனைத்தும் பள்ளிவாசல், டிரஸ்ட்டு, தர்கா, தைக்காக்கள் அலுவலகத்திலுள்ள கணினியில் பதிவு செய்யப்படவேண்டும்.
வக்ஃபு துறை கணினியைத் தட்டினால் அனைத்து விவரங்களும் அதன் பார்வைக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். வக்ஃபுபோர்டு தீவிரப்படுத்தி நெருக்கடி கொடுக்கலாம். இவ்வாறு நிகழாததால் ஆங்காங்கு அமைப்புகள், குழுக்கள் உருவாகின்றன. மோதல்கள் நடைபெறுகின்றன.
முன்னாள் சேர்மேன் பதர் சையித்துக்குப் பிறகு வக்ஃபு இணையதளம் உபயோகப்படுத்தப்படவில்லை. 5,000/& சம்பளத்தில் அரசுத்துறை கல்வி நிறுவனங்கள் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் கணினியாளர்களை வைத்து வேலை முடிக்கின்றன. அதுபோன்று முடிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில் ஏன் இணையதளம் செயல்படவில்லை என்பது ஆச்சரியமாகவிருக்கிறது.
தமிழகத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட 6,000 வக்ஃபுகளும், வரிகட்டும் 400க்கும் மேற்பட்ட வக்புகளும், 12,000 ஜமாத்துகளும் கணினியைக் கையிலெடுக்க வேண்டும். தவறினால் படித்த இளைஞர் சமூகம் கை நழுவிப்போகும் வாய்ப்பிருக்கிறது.
இப்போது இருக்கும் அறிவு, கடந்தகால அறிவை வைத்து அவர்களைத் திருப்தி படுத்தமுடியாது. அரசுத்துறை தனியார்துறை செயல்பாடுகள், வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பது இராஜிவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
தேர்தல் நேர ஒப்பந்தத்தில் வக்ஃபுத்துறை சேர்மேனாக என்னைப் போடுங்கள் எனக் கேட்கக்கூடாது. வக்புக்கு 100 கோடி ஒதுக்குங்கள் என்று ஒப்பந்தம் போடனும். அதுதான் சமூகத்துக்கு உதவும்.
வக்ஃபுதுறை பலவீனமான துறை அதை நினைத்து பெருமை கொள்ளக்கூடாது. வக்ஃபுத்துறை நிர்வாகத் தேவைகள், மீட்டெடுத்தல், சீரமைப்புக்குரிய செலவீனங்களை நோட் ஆர்டர் (குறிப்பாணை) எழுதி அரசின் கேள்விகள், சந்தேகங்களுக்கு வளுவான காரணங்களைக் கூறி அதனை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீட்டிங்கில் வக்பு ஐ.ஏ.எஸ். பேசினால் குறிப்பாணை அரசு ஆணையாக மாறும்.
மாறுமளவிற்கு அவர் கைகளில் ஆவணம் இருக்கவேண்டும். வக்ஃபு சொத்துக்களை ஆக்ரமித்துள்ள முஸ்லிம்கள் பக்கம் பார்வை செலுத்தி அதனை மறுசீரமைப்பு செய்யவேண்டும்.
வக்ஃபு சொத்துக்களுக்குரிய நிர்வாகம், வக்ஃபுத்துறை நிர்வாகம் எதுவாகவிருந்தாலும் 3 வருடத்துக்கு மேல் எவரும் பதவி வகிக்கக்கூடாது. பரம்பரை பரம்பரையாக, காலம் காலமாக இருக்கையை அபகரிக்கக் கூடாது.
சமூகத்திலுள்ள கரைபடாத கரத்தினர் திறமையாளர் அமரவேண்டும். தகுதியானவர் தகுதியான இடத்தில் அமரலாம். அல்லது அமர்ந்த பிறகு தகுதிக்குத்தக்க தன்னை மாற்றிக் கொள்ளலாம். இரண்டும் செய்யமாட்டோம் என்றால் சமூகம் அனுமதிக்காது. இடத்தை விட்டு அகலவேண்டும்.
நன்றி: ஜஹாங்கீர் (சோதுகுடியான்), டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு.
source: http://jahangeer.in/?paged=5