தொழுகையின்போது இவைகள் வேண்டாமே! (1)
o அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது.
o உண்பதற்கு உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள.
o இயற்கை உந்துதல் (மலஜலம்) – அவரச நிலையில் தொழாதீர்கள்.
o தூக்க நிலையில் தொழாதீர்கள்.
o பேசிக் கொண்டிருக்கின்ற (அல்லது தூங்கிக் கொண்டிருப்ப)வருக்கு பின்புறமாக நின்று தொழாதீர்கள்.
o தொழக் கூடியவர் தனக்கு முன்னால் உள்ள இருப்பிடத்தை சுத்தப்படுத்துதல் அல்லது சரி செய்தல்.
o பிறருக்கு இடையூறாக சப்தமாக ஓதாதீர்கள்.
o தொழுகையில் (அங்குமிங்கும்) திரும்பிப் பார்த்தல் கூடாது.
வணக்கசாலியின் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகள்
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதியில் வண்ணத்திரையை தொங்க விட்டு மறைத்து அழகுபடுத்தி இருந்தார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அதை இங்கிருந்த அகற்றி விடுங்கள்’ என்று கூறி விட்டு, ”இது நான் தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது” என்று கூறினார்கள். (அல் புகாரீ, ஃபத்ஹ் அல் பாரி, 10-391)
அல் காஸிம் அவர்கள் அறிவிப்பதாவது, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் ஒரு துணி இருந்தது, அதில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அதனை வைத்து (தூங்குவதற்கு அல்லது பொருள்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கான) ஒரு மறைப்புப் பகுதியை ஏற்படுத்தி அதனைத் திரைத் துணி போல தொங்க விட்டிருந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை நோக்கி தொழுது கொண்டிருந்தவர்கள், ”அதனை அகற்றி விடுங்கள், ஏனென்றால் அதில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் தொழுகையில் எனது கவனத்தைத் திசை திருப்புகின்றன” என்றார்கள். அதனை அகற்றி விட்டதோடு, அதனை தலையணை உரையாகச் செய்து கொண்டார்கள். (முஸ்லிம், 3-1668).
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தந்த இன்னுமொரு குறிப்பைப் பார்ப்போம்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபாவில் தொழ விரும்பி உள்ளே நுழைந்தார்கள், அங்கு ஆட்டின் இரண்டு கொம்புகள் இருக்கக் கண்டார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய பின், உதுமான் அல் ஹஜபி ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து, இதனை மறைத்து வைக்கும்படி உங்களிடம் நான் கூற மறந்து விட்டேன், ஏனென்றால் தொழுகையாளிகளின் கவனத்தைத் திசை திருப்பக் கூடிய எதுவும் இங்கே இருக்கக் கூடாது என்றார்கள். (அபூதாவூது, 2030, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2504)
மக்கள் நடமாடக் கூடிய பகுதிகளில் தொழுவது அல்லது அதிக கூச்சல், சப்தம், மக்களின் பேச்சுக்கள் நிறைந்த இடங்களிலும் அல்லது மக்கள் கூடக் கூடிய இடங்களிலும், விவாதம் செய்யும் இடங்களிலும் இன்னும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது எங்கெல்லாம் கவனத்தைத் திசை திருப்பி விடக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவோ அங்கும் கூட தொழுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
இன்னும் அதிகமான உஷ்ணம் அல்லது கடுமையாகக் குளிரக் கூடிய இடங்களிலும் முடிந்தவரை தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான உஷ்ணம் மிகுந்த பகல் பொழுதுகளில் வெப்பம் தணியும் வரை லுஹர் தொழுகையைப் பிற்படுத்துமாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
இப்னு அல் கைய்யும் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்: ‘கடுமையான வெப்பத்தில் நின்று கொண்டு தொழக் கூடியவர் தனது கவனத்தை ஒருநிலைப்படுத்தி உள்ளச்சத்துடன் தொழ இயலாது போய் விடும், அவர் அதனை விருப்பமற்ற முறையில் நிறைவேற்றக் கூடியவராக இருப்பார் என்பதே அதன் காரணமாகும்’, எனவே தான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெப்பம் தணியும் வரைக்கும் தொழுகையைப் பிற்படுத்துமாறு அறிவுரை பகர்ந்திருக்கின்றார்கள், இதன் மூலம் அவர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி, தொழுகையை எதற்காகத் தொழுகின்றோமோ அதன் பயன்களை அடைந்து கொள்வதற்கும், உள்ளச்சத்துடன் தொழுவதற்கும் இன்னும் தனது முழுக் கவனத்தையும் வல்ல அல்லாஹ்வின் பக்கம் திருப்பிக் கொள்ளவும் இயலும்’, என்றார்கள். (அல் வாபில் அஸ்ஸயிப், தார் அல் பயான், பக்.22)
அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட
அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய
தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகைக்காக நின்ற பொழுது கோடுகள் போட்ட சட்டையை அணிந்திருந்தார்கள், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை நிறைவு செய்த பின் அவர்கள் கூறினார்கள், ”இதனை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா அவர்களிடத்தில் கொடுத்து விடுங்கள், எனக்கு கட்டங்கள் அல்லது அழகுபடுத்தப்படாத ஆடையான அன்பஜானி யைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள், ஏனென்றால் நான் தொழும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டது”. இன்னுமொரு அறிவிப்பின்படி, ”(இதில் வரையப்பட்டிருக்கும்) கோடுகள் எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டன”, என்றார்கள். இன்னுமொரு அறிவிப்பின்படி, ”(என்னிடம்) கோடுகள் போட்ட சட்டை இருந்தது, தொழுகையில் அதனை நான் அணியும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது.” என்று கூறியிருக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், 556, பகுதி 3-391).
படங்கள் வரையப்பட்டிருக்கும் துணிகளிலும் தொழாமல் இருப்பது சிறந்தது, இன்னும் உருவப்படங்கள் வரையப்பட்டிருக்கும் விரிப்புகளை, இன்னும் அதனைப் போன்று இன்று விற்பனைக்குக் கிடைக்கும் விரிப்புகளைத் தொழுகைக்குப் பயன்படுத்தும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும், அவ்வாறான விரிப்புகளில் தொழவே கூடாது.
உண்பதற்கு உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள்”. (முஸ்லிம் – 560)
உணவு தயாரிக்கப்பட்டு இன்னும் பரிமாறுவதற்குத் தயாராகி இருக்கும் பொழுது அல்லது உண்ண அழைப்புக் கொடுக்கப்பட்டதன் பின்பு, அந்த மனிதர் உணவை முதலில் உண்ண வேண்டும், ஏனென்றால் தொழுகையில் அவர் கவனம் செலுத்த இயலாது என்பதும், அவர் உண்ண விரும்புகின்ற நேரத்தில் தொழுகைக்காக நின்றால் அங்கு உள்ளச்சம் விடை பெற்று விடும் என்பதும் காரணமாகும். இன்னும் அவர் விரைந்து உண்ண வேண்டியதும் அவசியமில்லை, ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”(இரவு) உணவு பரிமாறப்பட்டிருக்கும் நிலையில், தொழுகைக்கான நேரம் வந்து விட்டால், மஃக்ரிப் தொழுகைக்கு முன்பதாக முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் உணவை வேகமாகவும் உண்டு முடிக்க வேண்டாம்.” இன்னுமொரு அறிவிப்பின்படி : ”(இரவு) உணவு பரிமாறப்பட்ட நிலையில், தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டு விட்டால், முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் விரைந்து உண்டு முடிக்க அவசரப்பட வேண்டாம்.” (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் இதா ஹழரல் தஆமு வ யுகீமத் அஸ் ஸலாத், முஸ்லிம் 557-559)
இயற்கை உந்துதல் (மலஜலம்) – அவரச நிலையில் தொழாதீர்கள்
ஒருவருக்கு அவசரமாக மலக் கூடத்திற்குப் போக வேண்டிய தேவை இருக்கும் நிலையில், தொழுகையில் நிற்பது அவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டிய அவசர நிலையில் இருக்கும் பொழுது, தொழுவதைத் தடை செய்துள்ளார்கள். (இப்னு மாஜா, 617, ஸஹீஹ் அல் ஜாமிஇ)6832)
எவரொருவர் அவசர நிலையில் இருக்கின்றாரோ அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும், அதன் தேவையை நிறைவு செய்யட்டும், கடமையான தொழுகையானதாக இருந்து அதில் அவர் தவறியதைத் தவறி விட்டாலும் சரியே, ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”கழிவறை செல்வதற்கான தேவை இருந்தும், தொழுகையும் ஆரம்பமாகி விட்டால், அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும்.” (அபூதாவூத் – 88, ஸஹீஹ் ஜாமிஇ 299)
இன்னும் அவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மல ஜலம் கழிப்பதற்கான தேவை வந்து விட்டால், அவர் தொழுகையை இடை நிறுத்தி விடட்டும், இயற்கையின் தேவையை நிறைவு செய்யட்டும், அவரைத் தூய்மைப்படுத்திக் கொண்டதன் பின் தொழட்டும், ஏனென்றால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ”உணவு தயாராகி விட்டதன் பின்பும், அல்லது ஒருவருக்கு மலஜலங்களை வெளியேற்ற வேண்டிய தேவை அதிகரிக்கும் பொழுதும் தொழுகை இல்லை.” (முஸ்லிம், 560) சந்தேகமில்லாமல், இயற்கையின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது அதனை அடக்கிக் கொண்டிருப்பது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இந்தச் சட்டம் மலப் பாதை வழியே காற்றுப் பிரிய வேண்டிய தேவை இருக்கும் பொழுதும் பொருந்தும்.
தூக்க நிலையில் தொழாதீர்கள்
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள், ”இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”தொழுது கொண்டிருக்கும் நிலையில் உங்களில் ஒருவருக்கு தூக்கம் வருமானால், அவர் (தொழுகையில்) என்ன ஓதுகின்றார் என்பதனை நினைவோடு ஓதும் வரைக்கும் (அவர் போதுமான அளவு ஓய்வெடுத்து) தூங்கிக் கொள்ளட்டும்,” அதாவது, அவர் மயக்கத்தை உணராத அளவுக்கு சிறு துயில் கொள்ளட்டும். (புகாரீ, 210)
இது (கியாமுல் லைல்) இரவுத் தொழுகையைத் தொழக் கூடியவருக்கு இம்மாதிரியான தூக்க நிலைகள் ஏற்படும், அந்த நேரத்தில் (தொழக் கூடியவன் மற்றும் பிரார்த்திக்கக் கூடியவனின்) பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, இன்னும் அந்த நேரத்தில் தொழக் கூடிய ஒருவன் (தான் என்ன கேட்கின்றோம், பிரார்த்திக்கின்றோம் என்பதை) அறியாமல் கேட்டு, தனக்கு எதிராகவே பிரார்த்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம். இந்த மாதிரியான நிலைகள் கடமையான தொழுகைகளின் பொழுதும் ஏற்படலாம், இத்தகைய நிலையில் தொழுகைக்கான குறிப்பிட்ட நேரம் இன்னும் மீதமிருக்கின்றது (நேரங் கடந்து விடவில்லை) என்ற நிலை இருப்பின், அவர் சிறு துயில் கொண்டு விட்டு பின்பு தொழலாம். (ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் கிதாப் அல் உளு, பாப் அல் உளு மினன் னவ்ம்).
பேசிக் கொண்டிருக்கின்ற (அல்லது தூங்கிக் கொண்டிருப்ப)வருக்கு
பின்புறமாக நின்று தொழாதீர்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைத் தடை செய்துள்ளார்கள், அவர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ”தூங்கிக் கொண்டிருப்பவர் அல்லது பேசிக் கொண்டிருப்பவர் இவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழ வேண்டாம்.” (அபூதாவூது, 694, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 375 – ஹஸன்)
– ஏனென்றால் பேசிக் கொண்டிருப்பவரின் பேச்சு தொழக் கூடியவரின் கவனத்தை சிதறடித்து விடும், இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்படுகின்றவையும் தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு விடலாம்.
அல் கத்தாபி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள் : ”பேசிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவதானது, அஷ் ஷாஃபிஈ மற்றும் அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோரின் கூற்றுப்படி மக்ரூஹ் – வெறுக்கத்தக்கது, ஏனென்றால் அவர்களது பேச்சு தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விடும். (அவ்ன் அல்-மாபூத், 2-388).
தூங்கிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவது குறித்து வரும் நபிமொழிகள் பலவீனமானவை என்று ஏராளமான மார்க்க அறிஞர்கள் கருதுகின்றார்கள் (அவைகளில் அபூதாவூத், கிதாப் அஸ் ஸலாத், தஃப்ரீ அப்வாப் அல் வித்ர், பாப் அத் துஆ இன்னும் இப்னு ஹஜர் – னுடைய ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் பாப் அஸ் ஸலா ஃகலஃப் அல் நயீம், கிதாப் அஸ் ஸலாத்).
அல் புகாரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்திருக்கின்றதொரு நபிமொழியை இவ்வாறு பதிவு செய்திருக்கின்றார்கள் : இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது படுக்கையில் நான் குறுக்கு நெடுக்காகப் படுத்துக் கிடக்கும் நிலையில் (எனக்கு முன்பாக நின்று) தொழுதிருக்கின்றார்கள். (புகாரீ, கிதாப் அஸ் ஸலாத்).
முஜாஹித், தாவூத், மாலிக் ஆகியோர்கள் தூங்கிக் கொண்டிருப்பவரை முன்னோக்கித் தொழுவது மக்ரூஹ் – வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார்கள், தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்பட்டு விடக் கூடியவை, தொழக் கூடியவரின் கவனத்தைத் திசை திருப்பி விடும் என்பதே காரணமாகும். (ஃபத்ஹ் அல் பாரி)
தூங்கிக் கொண்டிருப்பவருக்கு பின்னால் நின்று தொழும் பொழுது, எதுவும் வெளிப்படுவதற்கான முகாந்திரம் இல்லையெனின், அது மக்ரூஹ் ஆக மாட்டாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
தொழக் கூடியவர் தனக்கு முன்னால் உள்ள இருப்பிடத்தை சுத்தப்படுத்துதல்
அல்லது சரி செய்தல்
முஐகீப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதவாது : ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரீ – 1207, ஃபத்ஹுல் பாரி, 3-79)).
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழும் பொழுது (தரையைச் சுத்தப்படுத்துவதற்காகத்) மண்ணை விலக்கி விடாதீர்கள், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முற்பட்டீர்களென்றால் ஒருமுறை மட்டும் செய்யவும்.” (அபூதாவூத், 946, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 7452)
இதன் காரணமென்னவென்றால் உள்ளச்சத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே அதன் காரணமாகும், தொழுகையில் உள்ளசத்தைப் பெற விரும்புவோர்கள் அதில் அதிகமான அசைவைத் தவிர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தொழுகையில் சுஜுது செய்யக் கூடிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒருவர், அதனை தொழுகைக்கு முன்பதாகச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்னும் தொழுகையின் பொழுது சுஜுது செய்த பின் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணைத் தட்டி விடுதவற்கும் பொருந்தும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : தண்ணீரிலும், களிமண்ணிலும் சுஜுது செய்யும் பொழுது, அதன் எச்சங்கள் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும். தொழக் கூடியவர் சுஜுது செய்து விட்டு எழுந்ததும், அதனை அடிக்கடி தட்டி விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், ஏனென்றால் அவர் உள்ளச்சத்துடன் தொழும் பொழுது அதன் லயிப்பில் அதனை அவர் அறிந்து கொள்ள மாட்டார். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (புகாரீ, ஃபத்ஹுல் பாரி 3-72)
அபூ அத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இப்னு அபீ ஷைபா அவர்கள் கூறுகின்றார்கள் : ”எனக்குச் சிவந்த நிற ஒட்டகைகள் கிடைத்தாலும், (தொழுகையில் சுஜுதை நிறைவேற்றியபின்) எனது நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை நான் தட்டி விட மாட்டேன்.” அயாத் அவர்கள் கூறுகின்றார்கள் : தொழுகையை நிறைவு செய்யும் வரைக்கும், இறையச்சமுடைய அடியார்கள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றைத் தட்டி விட மாட்டார்கள்.” (அல் ஃபத்ஹ், 3-79).
இதனைப் போலவே தொழுகையாளி தனது தொழுகையை விட்டும் தன்னைப் பாராமுகமாக ஆக்கக் கூடியவற்றினின்றும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும், அதனைப் போலவே பிறரைத் தொந்திரவு செய்வதனின்றும் அவர் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். அவையாவன:
பிறருக்கு இடையூறாக சப்தமாக ஓதாதீர்கள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”நீங்கள் அனைவரும் உங்களது இறைவனுடன் உரையாடுபவர்களே, எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு (சப்தமிட்டு ஓதுவதன் மூலம்) இடையூறாக இருக்க வேண்டும், ஓதும் பொழுது உங்களில் ஒருவர் மற்றவரது குரலைக் காட்டிலும் சப்தத்தை உயர்த்த வேண்டாம், அல்லது, ”தொழுகையில்” என்று அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், 2-83, ஸஹீஹ் ஜாமிஇ 752). இன்னுமொரு நபிமொழியில், ”திருமறையை ஓதும் பொழுது ஒருவர் மற்றவரது குரலை உயர்த்திப் போட்டி போட வேண்டாம்”, என்றார்கள். (இமாம் அஹ்மத், 2-36, ஸஹீஹ் ஜாமிஇ 1951).
தொழுகையில் (அங்குமிங்கும்) திரும்பிப் பார்த்தல் கூடாது
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய அடியான் தொழுகையில் இருக்கும் பொழுது அல்லாஹ் அவனை நோக்கிய வண்ணமே இருப்பான், எதுவரையெனில் அவன் தொழுகையை விட்டும் திரும்பாத வரைக்கும், ஆனால் அவன் தொழுகையை விட்டும் திரும்பி விட்டானென்றால், (அல்லாஹ்) அவனை விட்டும் திரும்பி விடுவான். (அபூதாவூத், 909, ஸஹீஹ் அபூதாவூத்)
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள ‘‘Next” ஐ ”கிளிக்” செய்யவும்.