தொழுகையின்போது இவைகள் வேண்டாமே! (2)
o அல்லாஹ்வின் நினைவினை விட்டும் ஒருவன் தன்னுடைய கவனத்தைத் திசை திருப்புவது அவனது கண்களைத் திசை திருப்புவது.
o தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது
o தொழுது கொண்டிருப்பவர் தனக்கு முன்னால் (எச்சிலைத்) துப்ப வேண்டாம்.
o தொழுகையின் பொழுது கொட்டாவி விட வேண்டாம்.
o தொழுகையின் பொழுது இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தொழ வேண்டாம்.
o தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுதல் கூடாது.
o விலங்கினங்களைப் போல இருக்கக் கூடாது.
தொழுகையை விட்டும் ஒருவன் திரும்புவது இரண்டு வகையில் அமையும்:
அல்லாஹ்வின் நினைவினை விட்டும் ஒருவன் தன்னுடைய கவனத்தைத் திசை திருப்புவது அவனது கண்களைத் திசை திருப்புவது
இரண்டுமே தொழுகையின் பொழுது தடுக்கப்பட்ட செயல்களாகும், இவை தொழுகையாளியினுடைய வெகுமதிகளைக் குறைத்து விடும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தொழுகையின் பொழுது ஒருவன் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்ட பொழுது, ”அது ஷைத்தான் அவனுடைய தொழுகையிலிருந்து (வெகுமதிகளைத்) திருடுவது போன்றதாகும்” என்றார்கள். (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் அல் இல்திஃபாத் ஃபில் ஸலாத்)
தொழுகையின் பொழுது ஒருவன் தனது மனதால் அலை பாய்ந்து கொண்டிருப்பவனாக அல்லது கண்களால் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருப்பதனை இவ்வாறு விளக்கலாம், அதாவது ஒரு மனிதனை அவனது ஆட்சியாளன் அழைத்திருக்க, அவன் முன் நின்று கொண்டிருக்கும் குடிமகனைப் பார்த்து அந்த ஆட்சியாளன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னுடைய ஆட்சியாளன் தன்னை நோக்கி என்ன கூறிக் கொண்டிருக்கின்றான் என்பதனைச் செவிமடுக்காமல், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் திரும்பிக் கொண்டிருப்பானேயானால், அந்த ஆட்சியாளன் சொல்ல வந்த விஷயமென்ன என்பதைப் பற்றி இவன் கேட்கவுமில்லை, அவன் சொல்ல வந்ததில் எதனையும் இவன் புரிந்து கொள்ளவும் இல்லை, ஏனென்றால், அவனது உள்ளமும், மனதும் அவனிடமில்லை அது எங்கோ அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது என்பதே காரணமாகும். இத்தகையவனுக்கு அந்த ஆட்சியாளன் என்ன தான் செய்து விட முடியும்? இன்னும் எப்படி அவனுக்கு உதவுவதற்கு மனது வரும்? இந்த மனிதனும் அந்த ஆட்சியாளனிடம் என்ன தான் எதிர்பார்க்க முடியும்?
அந்த ஆட்சியாளனை விட்டும் அவன் அகன்று விட்ட பொழுது, அவன் வெறுக்கப்படக் கூடியவனாகவும் இன்னும் எந்தவிதத்தில் மதிப்பற்றவனாகவும் ஆகி விடுவான். தொழுகையின் பொழுது தன்னுடைய முழுக் கவனத்தையும் இறைவனின் பால் செலுத்தக் கூடியவனும், தொழுகையைப் பராக்காக்கிக் கொண்டவனும் சரி சமமாகி விட முடியாது. இறையச்சமுடையவன் மகத்துவமிக்கவனாகிய வல்ல இறைவனின் முன்பாக நாம் நின்று கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வுடன் அவன் அச்சத்துடனும், அற்பணிப்புடனும் நின்று கொண்டிருப்பான், இன்னும் அத்தகையவன் தன்னுடைய இறைவன் முன் நின்று கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வின் மீதான கவனத்தை விட்டும் அல்லது தன்னுடைய பார்வையைத் திருப்பி விடுவதற்கு வெட்கப்படக் கூடியவனாக இருப்பான்.
இறையச்சத்துடன் தொழுபவனுக்கும் இன்னும் தொழுகையில் பாராமுகமாக இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஹஸன் இப்னு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : ”கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் இரண்டு மனிதர்கள், ஆனால் அவர்களது நற்பேறுகளோ வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தொலைவைப் போன்றது. ஒருவன் தன்னுடைய முழுக்கவனத்தையும் அல்லாஹ்வின்பால் திருப்பியவனாக இருக்கின்றான், அடுத்தவனோ பொடுபோக்குத் தன்மையுடனும், (இறைவனை) மறந்த நிலையிலும் நிற்கின்றான். (அல் வாபில் அல் ஸயிப் – இப்னுல் கைய்யிம், தார் அல் பயான், பக்.36)
ஒருவன் தொழுது கொண்டிருக்கும் நிலையில் நன்னோக்கத்திற்காகத் திரும்பினால், அது ஒன்றும் பிரச்னையில்லை. அபூதாவூத் ல் ஸஹ்ல் இப்னு அல் ஹன்ஸலிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது : ”நாங்கள் சுபுஹ் தொழுகையை ஆரம்பித்தோம், (அப்பொழுது) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமவெளிப்பகுதியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.”
அபூதாவூத் அவர்கள் அறிவிப்பதாவது: ”சமவெளிப்பகுதியினைப் பாதுகாப்பதற்காக வேண்டி இரவில் ஒரு குதிரை வீரரை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.” இது எதைப் போன்றதென்றால், உமாமா பின்த் அபு அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சுமந்து கொண்டிருந்த போதும், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு கதவைத் திறந்து விட்ட போதும், மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்காக மிம்பரிலிருந்து கீழிறங்கி வந்த அதேவேளையில் தொழுத பொழுதும், கிரகணத் தொழுகையின் பொழுது ஒரு அடி பின்னோக்கி காலடி எடுத்து வைத்த பொழுதும், தொழுகையின் பொழுது அதனைக் கெடுப்பதற்காக ஷைத்தான் இடையூறு செய்த பொழுது அவனை எட்டிப் பிடித்த பொழுதும் – என்பதனை ஒத்திருக்கின்றது.
தொழுகையின் பொழுது குறுக்கிடும் பாம்பு, தேள் போன்றவற்றைக் கொல்லும்படியும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் இன்னும் தொழுது கொண்டிருக்கின்ற நபருக்கு முன்னால் குறுக்கே நடக்கின்றவனைத் தடுத்து நிறுத்துவதற்காக தன்னுடைய தொழுகையை இடைநிறுத்தி விடவும், இன்னும் (அதையும் மீறிச் செல்பவன் எவனோ) அவனிடம் சண்டையிடவும் கூட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இன்னும் (தொழுகையின் பொழுது இமாம் தவறிழைத்து விட்டால்) பெண்கள் தங்கள் கைகளைத் தட்டி ஓசை எழுப்பும்படியும், தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் உங்களுக்கு ஸலாம் சொல்லக் கூடியவரை நோக்கி கைகளை அசைத்து சைகை செய்து கொள்ளவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள்.
இன்னும் தேவையின் நிமித்தம் தொழுகையின் பொழுது பல்வேறு அசைவுகளுக்கு அனுமதி இருக்கின்றது, ஆனால் அது தேவையற்ற வகையில், விளையாட்டுத் தனமாக செய்யக் கூடிய அசைவுகள் இறையச்சத்தைப் பாதிக்கும் இன்னும் இவை போன்றவைகள் தொழுகையின் பொழுது அனுமதிக்கப்படவில்லை. (மஜ்மஊ அல் ஃபத்வா, 22-559).
தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது
தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்ப்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருப்பதோடு, எச்சரிக்கையும் செய்திருக்கின்றார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் தொழுது கொண்டிருக்கின்ற எவரும் வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது, பார்க்கக் கூடியவர் தனது பார்வையை இழந்து விடுவார்.” (அஹ்மத், 5-294, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 762).
இன்னுமொரு அறிவிப்பில், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் வானத்தை நோக்கி அன்னாந்து பார்க்கக் கூடியவர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?” என்று கூறினார்கள். இன்னுமொரு அறிவிப்பில், ”தொழுகையின் பொழுது துஆக் கேட்கும் நேரத்தில் அவர்கள் தங்களது முகங்களை வானத்தை நோக்கிப் பார்க்கின்றார்கள்?” என்று வந்துள்ளது. (முஸ்லிம், 429).
இவ்வாறு தொழுகையின் பொழுது வானத்தை நோக்கிப் பார்ப்பதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, ”அதனை அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்”, அல்லது ”அவர்களது பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்” என்று கூறினார்கள். (இமாம் அஹ்மத், 5-258, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 5574).
தொழுது கொண்டிருப்பவர் தனக்கு முன்னால் (எச்சிலைத்) துப்ப வேண்டாம்
இது இறையச்சத்திற்கு முரணானது, இன்னும் அல்லாஹ்வின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது இது பண்பாடான செயலல்ல. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”உங்களில் தொழுது கொண்டிருப்பவர், அவருக்கு முன்பாக துப்பிக் கொள்ள வேண்டாம், தொழுது கொண்டிருப்பவருக்கும் பொழுது, அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான்.” (புகாரீ, 397)
இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவருக்கு முன்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவர் அருட்கொடையாளனும், இன்னும் மகத்துவமிக்கவனுமாகிய – அல்லாஹ்வினிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றார், அவர் தொழுகைக்கான இடத்தில் நின்று கொண்டிருக்கின்ற வரையிலும், இன்னும் அவர் தனது வலப்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவருக்கு வலப்புறமாக ஒரு மலக்கு (நியமிக்கப்பட்டு) இருக்கின்றார். அவர் தனக்கு இடப்புறமாகத் துப்பிக் கொள்ளட்டும் அல்லது அவரது பாதத்திற்கு அடியில் துப்பி அதனை மூடி விடட்டும்.” (புகாரீ, அல் ஃபத்ஹ். 416, 1-512).
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவர் அகிலங்களின் அதிபதியுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார், இன்னும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அவனுக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருக்கின்றான், எனவே உங்களில் எவரும் கிப்லாவை முன்னோக்கித் துப்ப வேண்டாம், ஆனால் அவர் தனக்கு இடப்புறமாகவோ அல்லது பாதத்திற்கு கீழாகவோ துப்பிக் கொள்ளட்டும்”. (புகாரீ, அல் ஃபத் அல் பாரீ, 417, 1-513).
இப்பொழுது பள்ளிவாசல்கள் கார்பெட் மற்றும் கோரைப் பாய் அல்லது ஜமுக்காளம் போன்ற தொழுகை விரிப்புகளாக விரிக்கப்பட்டு தொழுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்பெட்டுக்குக் கீழாகவோ அல்லது பாய் அல்லது ஜமுக்காளத்திற்குக் கீழாகவோ துப்பாமல் கைக்குட்டை மற்றும் காகிதத்தில் துப்பி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்து, பின்பு வெளியில் சென்றவுடன் குப்பையில் போட்டு விட வேண்டும்.
தொழுகையின் பொழுது கொட்டாவி விட வேண்டாம்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால், அவரால் இயன்ற அவரை அவர் அதனை அடக்கிக் கொள்ளட்டும், அவ்வாறில்லா விட்டால் (அவரது தொழுகையில் இடையூறு செய்ய) ஷைத்தான் நுழைந்து விடுவான்.. ..” (முஸ்லிம், 4-2293). தொழுகையாளியின் தொழுகையில் ஷைத்தான் நுழைந்து விட்டால், அவன் அவனுக்கு அதிக இடையூறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவான், இன்னும் மேலதிகமாக கொட்டாவி விடுபவனைப் பார்த்து அவன் சிரிக்கின்றான் (என்றும் கூறினார்கள்).
தொழுகையின் பொழுது இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தொழ வேண்டாம்
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ”தொழுகையின் பொழுது இடுப்பில் கை வைப்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.” (அபூதாவூத் 947, ஸஹீஹ் புகாரீ, கிதாப் அல் அம்ல் ஃபில் ஸலாஹ், பாப் அல் ஹழர் ஃபில் ஸலாஹ்).
ஸியாத் இப்னு ஸுபைஹ் அல் ஹனஃபி என்பவர் கூறுவதாவது : ”நான் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன், (அப்பொழுது) எனது கையை எனது இடுப்பில் போட்டேன், இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனைத் தட்டி விட்டார்கள். இன்னும் அவர் தொழுகையை முடித்ததன் பின்னால், ”இது தொழுகையில் இடையூறு விளைவிப்பதாகும்”, இதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்”, என்றும் கூறினார்கள். (இமாம் அஹ்மத் 2-106 இன்னும் பலர். அல் ஹாபிழ் அல் இராக்கி அவர்கள் தனது தஃக்ரீஜ் அல் இஹ்யா எனும் நூலில் இதனை ஸஹீஹ் என்று கூறியிருக்கின்றார்கள். இன்னும் இல் இர்வா 2-94 ஐயும் பார்க்கவும்).
”(இத்தைகய) செயல்கள் ஒருவரை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள், அல்லாஹ் அவ்வாறான தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக.” (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக பைஹகி இதனை அறிவிக்கின்றார்கள். அல் இராகி அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருத்துரைத்திருக்கின்றார்கள்).
தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுதல் கூடாது
”தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுவதையும் அல்லது வாயை(ச் சுற்றி துணி போன்றவற்றினைக் கொண்டு) மூடி வைத்திருப்பதும் கூடாது. (அபூதாவூத் 643, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6883, ஹஸன் – ஸஹீஹ்).
‘அவ்ன் அல் மாபூத்’ (2-347) – ல் அல் கத்தாபி அவர்கள் கூறுவதாவது : ‘அல் ஸத்ல்’ என்பது வழி நெடுகிலும் ஒருவர் ஆடையைக் (கிரண்டைக் காலுக்கும் கீழாக அணிந்து) தொங்க விட்டபடி செல்வது, என்றார்கள். மர்காத் அல் மஃபாதீஹ் (2-236) ல் குறிப்பிட்டிருப்பதாவது: ”அல் ஸத்ல்’ என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது, ஏனென்றால் அது பெருமையடிப்பதாகவும், இன்னும் தொழுகையினை மோசமாகவும் ஆக்கக் கூடியது.” அந் நிஹாயா – ல் குறிப்பிடப்படுவதாவது : ”ஒருவர் தன்னை ஆடையால் போர்த்திக் கொண்டு, அதனுள் தன்னுடைய கையை நுழைத்துக் கொண்டு, இன்னும் ருகூஉ வையும், சுஜுதையும் செய்வதைக் குறிக்கும்.” இது யூதர்களின் பழக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்னும் ஸத்ல் என்பது – ஒருவர் தனது தலைக்கு மேலாக துணியைப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும் அல்லது தோள்பட்டையின் மீது, இன்னும் கைலியின் அடிப்பகுதியை முன்பாகத்தில் தவழ விடுவது இன்னும் ஒருவருடைய தோள்பட்டையின் மேலாகப் போட்டுக் கொள்வது, இன்னும் தனது உடைகள் மற்றவைகள் சரி செய்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது, இன்னும் இவை போன்ற செயல்கள் ஒருவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும், இன்னும் உடைகளை சரியானபடி அணிந்திருத்தல் அல்லது பட்டன்கள் சரியானபடி மாட்டியிருத்தல், இவை போன்றவைகள் ஒருவரது தொழுகையைப் பாதிக்காது, அல்லது தொழுகையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பாது. ஆனால் உடைகளைச் சரியான விதத்தில் அணியவில்லை என்றால், அதனைச் சரி செய்வதற்கும் இன்னும் அதனை பராமரிப்பதற்குமே அவர் தொழுகையின் பொழுது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவராக இருப்பார். இது போன்ற தொழுகையைப் பாழடிக்கக் கூடியவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இன்னும் ஒருவர் தொழுகையின் பொழுது ஏன் தனது வாயை மூடிக் கொண்டிருப்பது கூடாது என்றால், அவ்வாறு வாயை இறுக மூடி இருக்கும் பொழுது அவர் திருமறையைத் தெளிவாக ஓத முடியாது என்பதும், இன்னும் சரியான முறையில் சுஜுது செய்வதற்கு அது தடையாக இருக்கும் என்பதினாலாகும். (மர்காத் அல் மஃபாதீஹ், 2-236)
விலங்கினங்களைப் போல இருக்கக் கூடாது
அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது மக்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான், இன்னும் மனித வர்க்கத்தை படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாகப் படைத்துள்ளான், எனவே இவ்வளவு உன்னதத்துடன் படைத்திருக்கக் கூடிய மனிதப் படைப்பு? விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதோ அல்லது விலங்கினத்தைப் போல ஒப்புவமைப்படுத்திக் கொள்வதோ அழகல்ல, வெட்கரமானது. தொழுகையின் பொழுது – விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதையோ அல்லது நடித்துக் காட்டுவதையோ அல்லது விலங்கினம் போல நடந்து காட்டுவதையோ இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. ஏனெனில் இவை தொழுகையாளியின் உள்ளச்சத்தைப் பாதிக்கும் அல்லது இது போன்ற நடத்தைகள் அசிங்கமானது இன்னும் இது தொழுகையாளிக்கு ஏற்புடையதுமல்ல.
உதாரணமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது, அவர்கள் மூன்று விஷயங்களைத் தடை செய்திருக்கின்றார்கள் : (அதாவது) காக்கையைப் போலக் கத்துவது, புலால் உண்ணிகள் (புலி, சிங்கம், நாய்) போல முன்னங்கால்களைப் பரப்பிக் கொள்ளுதல், அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் மீதே எப்பொழுதும் தொழுதல், அதாவது ஒட்டகம் தனக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதன் மீதே எப்பொழுதும் உட்காருவது போல. (அஹ்மத், 3-428, அல் ஃபத்ஹ் – அல் ரப்பானி, 4-91).
இன்னுமொரு அறிவிப்பின்படி, ”கழுதை போலக் கத்துவதையும், நாயைப் போல அல்லது நரியைப் போல உட்காருவதையும் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) தடை செய்திருக்கின்றார்கள்.” (இமாம் அஹ்மத், 2-311, ஸஹீஹ் அல் தர்கீப், 556).
மேற்கண்ட அனைத்தும் தொழுகையில் இருந்து கொண்டிருக்கக் கூடியவரின் உள்ளச்சத்தைப் பாதிக்கக் கூடியவைகள், எனவே அவற்றைத் தவிர்ந்து கொள்வதன் மூலமும், இன்னும் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
( جَزَاكَ اللَّهُ خَيْرًا : அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் அவர்களால் தொகுக்கப்பட்ட ”இஸ்லாமிய இல்லம் – 40 வழிமுறைகள்” கட்டுரையின் ஒரு பகுதி, நன்றி: தமிழ் இஸ்லாம்)