ஒற்றுமையே வலிமை
மவ்லவி, எம். ஜாஃபர் ஸாதிக் இப்னு முஹம்மது ஹனீஃப்
[‘அல்லாஹ்வின் உதவிக்கரம் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கே உண்டு’ என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதின் மூலம் எவ்வளவுதான் இறைவனை துதிபாடினாலும், வணங்கினாலும் மக்களிடையே ஒற்றுமை இல்லையெனில் சமுதாயம் சீரிகுலைந்து போகும் என எடுத்துரைக்கிறார்கள். அது மட்டுமன்று. அவர்கள் செல்லுமிடம் நரகமாகத்தான் இருக்கும்என்றும் கூறுகிறார்கள்.]
‘நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.” (அல்குர்ஆன் 3:103)
ஒற்றுமை! அது வெற்றியின் இரகசியம். அதன் அவசியம் பற்றி பல்வேறு அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களே அதைப் பின்பற்றவில்லை என்பதோடு அதற்கு எதிரான காரியங்களைப் பின்பற்றி பீடுநடைபோடுவதில் முன்னனியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆகவே இந்த கட்டுரை பொதுமக்களுக்கு என்று சொல்வதைவிட அறிஞர்களுக்கு என்று சொல்வதுதான் சாலப் பொருத்தம்.
அறிஞர்களுக்கு புத்தி சொல்ல வந்துவிட்டீர்களோ?! அதற்கான தகுதி உண்டோ உமக்கு என்று சில குரல்கள் எழுந்தாலும் சமூக அக்கரைக் கொண்ட எந்த ஒரு முஃமினுக்கும் நல்லதை எடுத்துச்சொல்லவும் தீமையைத்தடுக்கவும் கூடிய அத்தனை உரிமையையும் இஸ்லாம் வழங்கியிருப்பதோடல்லாமல் வலியுறுத்தவும் செய்கிறது செயல்பட! என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.
பஞ்சினால் திரிக்கப்படுவது நூல்கள். ஒன்றையொன்று இணைந்து உருவாகுவது கயிறு. ஊதினால் பறந்துவிடக்கூடிய நிலையிலிருக்கும் பஞ்சு கயிறாக உருப்பெறும் பொழுது அதன் வலிமை மிகப் பெறும் அளவு காணப்படும். அத்தகைய கயிற்றைப் போன்று, தன் கருத்திலிருந்து பிறளாமல் வேதத்தினை பற்றிப் பிடித்துக் கொள்ளச் சொல்கிறது மேற்காணும் திருவசனம். பிரிந்துவிட வேண்டாம் என உத்தரவும் பிறப்பிக்கின்றது.
ஒற்றுமைக்கே வழியில்லாமல் இருந்தவர்கள் கூட ஒற்றுமைக் கயிற்றை தளரவிடாமல் பிடித்துள்ளனர். ஆனால் இக்காலத்திலும் ஒன்றுபடாமல் பிரிந்திருக்கும் சமுதாயம் ஒன்று உண்டு என்றால் அது நம் சமுதாயமாகத்தான் இருக்கும்.
நம்மில் சமுதாய அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும், கிராம அமைப்பிலும், ஜமாஅத்திலும், தொழில்களிலும் ஒற்றுமை காணப்படுவதில்லை. அப்படியே காணப்பட்டாலும் அது நிலையில்லாததாக காணப்படுகின்றது. அல்லது தன் சுய தேவையை நிறைவு செய்யும் வரையில் மட்டும் காணப்படுகிறது.
நம் சமுதாயத்தில் பற்பல இயக்கங்கள் தோன்றினாலும் அவை உருப்படியான காரியத்தை செய்வதில்லை. ஒற்றுமையை நிறைவேற்றுவதில்லை என்பதோடு சமுதாய பிளவுக்கு காரணமாகவே திகழ்கின்றன. ஆம்! அவைகள் எச் செயலைச் செய்கின்றனவோ இல்லையோ சமுதாயத்தில் காணப்படும் சிறிதளவு ஒற்றுமையையும் சீரிகுலைத்து பிளவுறச் செய்யும் வேலையை ஒவ்வொன்றும் தவறாது செய்து முடிக்கின்றன. பிளவு படுத்தும் செயல் நம் சமுதாயத்திற்குத் தரும் ஒரு தீய பரிசாகும். இதனால் நம் சமுதாயம் பிறரால் நகைக்கப்படுகிறது.
‘நம் சமுதாயத்தில் இல்லையா ஒற்றுமை?’ என்று சிலர் கேட்பதும் காதில் விழத்தான் செய்கிறது. நம் சமுதாயத்தில் காணப்படும் கருத்து வேற்றுமைகைளையும், அரசியல் வேற்றுமைகளையும், வேறுபட்ட ஜமாஆத்துகளையும் பிற சமுதாயத்தவர் காணும்போது இஸ்லாத்தில் ஒற்றுமை இல்லையா? அங்கு ஒற்றுமை வலியுறுத்தப் பட வில்லையோ? என்று எண்ணுகின்றனர். உண்மையில் நம் ‘இஸ்லாத்தில் ஒற்றுமை இல்லையா?’ என்ற கேள்வி எழுமானால், இருக்கிறது.
1. இஸ்லாம் மார்க்கத்தின் அடித்தளமே ஒற்றுமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
குலங்கள் பலவும் கோத்திரங்கள் பலவும் இருந்தன. அக்கால அரபு மக்களிடையே இதனால் சண்டைகள் பலவும் கொலைகள் பலவும் நிகழ்ந்தன. ‘இஸ்லாம்’ எனும் உயரிய கொள்கையைக் கூற வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மக்களை இஸ்லாத்தில் இணைத்து நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற கொள்கையை நிலை நாட்டினார்கள். இதையே குர்ஆன் ‘நிச்சயமாக முஃமீன்கள் (தமக்கிடையே) சகோதரர்கள்.’ (49:10) என்று கூறுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமுதாயத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக பல உபாயங்களைக் கையாண்டுள்ளார்கள்.
‘முஃமீன்கள் ஒருவருக்கொருவர் பல பொருட்களால், உருவாக்கப்பட்ட கட்டிடத்தின் அமைப்பைப் போன்று இருக்கிறார்கள்’ (நூல்: புகாரி)
‘நிச்சயமாக அல்லாஹ் எனது சமூகத்தை வழிகேட்டிலே ஒன்றிணைக்க மாட்டான். அல்லாஹ்வின் (உதவிக்) கரம் ஒன்றுபட்ட சமூகத்திற்கே உண்டு. (எனவே சமூகத்திலிருந்து) பிரிந்து சென்றவன் நரகத்திற்கும் பிரிந்து சென்று விடுவான். (நூல்: திர்மிதீ)
கட்டிடத்தில் ஒரு கட்டிடம் பல செங்கற்களாலும், சிமெண்ட் பூச்சுக்களாலும் உருவாக்கப்படுகிறது. அக்கட்டிடத்தில் செங்கற்கள் ஒவ்வொன்றும் சண்டையிட்டுக் கொண்டால் அக்கட்டிடம் நிலை பெறுமா? கட்டிடம் கட்டும்பொழுது சிமெண்டாவது செங்கல்லுடன் இணைந்து வாழ மாட்டேன் எனக் கூறினால் அக்கட்டிடம் உருப்பெறுமா? ஆகாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உவமையை முன்னிறுத்தி சிந்தித்துப்பார்க்கும் பொழுது விளக்கம் இவ்வாறு கிடைக்கிறது.
கட்டிடத்தின் உறுப்புகள் ஒன்றிணையாமல் கட்டிடம் எப்படி உருப்பெறாதோ அவ்வாறு தான் முஃமின் எனும் கட்டிடத்தின் உறுப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து சகிப்புத்தன்மையோடும், சண்டையிட்டுக் கொள்ளாமலும் வாழ்ந்தால் தான் சமுதாயம், சமுதாயமாக இருக்கும்.
‘அல்லாஹ்வின் உதவிக்கரம் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கே உண்டு’ என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதின் மூலம் எவ்வளவுதான் இறைவனை துதிபாடினாலும், வணங்கினாலும் மக்களிடையே ஒற்றுமை இல்லையெனில் சமுதாயம் சீரிகுலைந்து போகும் என எடுத்துரைக்கிறார்கள். அது மட்டுமன்று. அவர்கள் செல்லுமிடம் நரகமாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
2. இஸ்லாமிய மார்க்கக் கடமைகளில் ஒவ்வொன்றிலும் ஒற்றுமை எடுத்துக் காட்டப்படுகிறது.
வலியோர், எளியோர், ஏழை, பணக்காரன் ஆகிய அனைவரும் பேதமை இல்லாமல் தோளோடு தோள் நின்று தொழுவதிலும், ஜகாத் என்னும் ஏழை வரி கொடுத்து உலகத்தோரை தன் பக்கம் அரவணைத்துக் கொள்வதிலும் இனம், மொழி, நாடு போன்ற பேதங்களை மறந்து அனைவரும் ஓரிடத்தில் கூடி நின்று இறைவனை வணங்கும் முறையான ஹஜ்ஜிலும் ஒற்றுமை நிலை நிறுத்தப்படுகிறது, போதிக்கப்படுகிறது. ரமளான் மாதத்தில் தேவையிவல்லாமல் நோன்பை விட்டுவிட்டால் அவன் வாழ்நாள் முழுவதும் நோன்பிருந்தாலும் ரமளானில் கிடைக்கும் பலன் அவனுக்குக் கிடைக்காது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதின் வாயிலாக அனைவரும் ஒற்றுமையுடன் ரமளானில் நோற்பதினால் நோன்பும் ஒற்றுமையை போதிக்கிறது.
3. நபித்தோழர்கள் பேணிய ஒற்றுமை
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ‘தாதுஸ்ஸலாஸில்’ என்றொரு போர் நிகழ்ந்தது. ஹளரத் அம்ரிப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் நானூறு வீரர்களைக் கொண்ட ஒரு சிறு படையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பி வைத்தார்கள். அந்தப்படை போர்க்களம் சென்று பார்த்தபோது எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததைக் கண்டு கொண்டார்கள். இதுகுறித்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் செய்தி அனுப்பப்பட்டது. தகவலைப் பெற்றுக் கொண்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மேலும் மூவாயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்தார்கள்.
இரண்டு படைகளும் ஒன்று சேர்ந்தபோது இரண்டும் இணைந்த படைக்கு யார் தளபதியாக இருப்பது? என்ற பிரச்சனை எழுந்தது. முதலில் வந்த படைதான் அசலானது, எனவே அதன் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹளரத் அம்ரிப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மொத்த படைக்கும் தானே தளபதி என்று சொன்னார்கள். ஆனால் பின்னால் வந்து சேர்ந்த படைதான் அதிக எண்ணிக்கைக் கொண்டது. எனவே அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் மொத்தப் படைக்கும் தலைமையேற்பது நியாயமாகும். மேலும் அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இந்த சமுதாயத்திற்கு நம்பிக்கைப் பெற்றவர்’ என சிறப்பித்துக் கூறப்பட்டவர். எனவே அவர்கள் தளபதி பொறுப்பேற்பதே சிறப்பைத் தரும் என படை வீரர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர். ஹளரத் அம்ரிப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு தம் கருத்திலிருந்து மாறவில்லை.
இச்சூழ்நிலையில், ஹளரத் அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹளரத் அம்ரிப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் காணச் சென்று ‘நீங்கள் தளபதியாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டீர்களா?’ எனக் கேட்டார்கள். ஹளரத் அம்ரிப்னுலஆஸ் ரளியல்லாஹு அன்ஹு மறுத்திடவே, ‘நீங்கள் விலகிக்கொள்ளவில்லை எனில் தளபதியாக இருப்பதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என பகிரங்கமாகக்கூறி தன் கொடியை ஹளரத் அம்ரிப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்து விட்டு ஹளரத் அபூஉபைதா ரளியல்லாஹு அன்ஹு விலகிக் கொண்டார்கள்.
மேற்கண்ட சம்பவத்தில் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருவரும் தளபதியாக இருக்க எண்ணிக் கொண்டு தங்கள் முடிவை மாற்றாமலிருந்தால் என்னவாகியிருக்கும்?! ஒருவரில்லையேல் மற்றொருவர் விட்டுக் கொடுத்ததின் விளைவாக ஒரே தலைமையின் கீழ் போர் நடைபெற ஏதுவாக அமைந்தது. இதன் மூலம் இஸ்லாமியப் படையின் ஒற்றுமை அவ்விடத்தில் நிலைநாட்டப்பட்டது.
அல்லாஹ்வின் திருமறையிலும் ஒற்றுமையைப் பற்றிய உன்னதக் கருத்துக்கள் ஜொலிக்கின்றன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்றிலும் ஒற்றுமையின் அவசியம் எடுத்துரைக்கப்படுகிறது. ஐங்கடமைகளிலும் ஒற்றுமை ஜொலிக்கிறது. இவைகள் அனைத்திலும் கூறப்பட்ட ‘ஒற்றுமையின்’ கருத்துக்கள் நம் வாழ்விலும் ஜொலிக்க வேண்டும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.
நன்றி: ‘அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா’ ஜூன், 2009
இறக்கும் தருவாயில் இருந்த பெரியவர் ஒருவர் தம் மக்கள் ஐவரையும் அழைத்தார்.
அருகிலிருந்த சுள்ளிகளை ஒவ்வொன்றாக உடைக்கச் சொன்னார். அவர்கள் மிக எளிதாக அவற்றை உடைத்துவிட்டார்கள்.
பிறகு சில சுள்ளிகளைச் சேர்த்து ஒரு கட்டாகக் கட்டி உடைக்கச் சொன்னார். எவ்வளவு முயன்றும் அவர்களால் சுள்ளிக்கட்டை உடைக்க முடியவில்லை.
“தனித்தனியாய் இருந்த சுள்ளிகளை எளிதில் உடைத்தீர்கள்; ஆனால் சுள்ளிக்கட்டை உடைக்க முடியவில்லை. ஒற்றுமையே பலம் என்பது இதிலிருந்து தெரிகிறதன்றோ? எனவே என்றும் ஒற்றுமையாக இருங்கள்!” என்று அறிவுரை பகர்ந்தார் தந்தை.
இந்தக்கதை இன்று எவர்க்கு அவசியமோ இல்லையோ முஸ்லீம்களுக்கு, அதுவும் குறிப்பாக முஸ்லீம் இயக்கங்களுக்கு மிக மிக அவசியம்.