போலீஸ் அதிகாரியின் விருந்து!
மவ்லவி, காரி, அப்துல் பாரி பாகவி, வேலூர்
[ அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும்.]
ஒரு அறிஞர் வட இந்தியாவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அக்கூட்டத்திற்கு போலீஸ் அதிகாரி ஒருவரும் வந்திருந்தார். அறிஞரின் பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. கூட்டம் முடிந்ததும் அவரை அணுகி, தனது வீட்டிற்கு வந்து விருந்துண்ணுமாறு அழைத்தார் போலீஸ் அதிகாரி.
அறிஞருக்கோ போலீஸ் அதிகாரியின் விருந்தை ஏற்றுக் கொள்வதில் சிறிதும் விருப்பமில்லை. காரணம் போலீஸ் அதிகாரிகளில் பெரும்பாலானோரது சம்பாத்தியம் எப்படி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்!
ஹலாலான உணவை மட்டுமே உண்ண வேண்டும் எனும் நோக்கமுள்ள அறிஞருக்கு அந்த அதிகாரியின் விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லையானாலும் அதை எப்படி நேரடியாக பிடிக்கவில்லை என்று சொல்ல முடியும்! ஆகவே, ‘எனக்கு இப்போது வருவதற்கு வசதியில்லை’ என்றார்.
போலீஸ் அதிகாரி விடுவதாக இல்லை. தான் வாகனம்கூட ஏற்பாடு செய்வதாகவும், அவசியம் அறிஞர் தனது இல்லத்துக்கு வந்து விருந்துண்ண வேண்டும் என்று மீண்டும் அந்த போலீஸ் அதிகாரி வற்புறுத்தினார் இம்முறையும் அறிஞர் மறுத்துவிட்டார். போலீஸ் அதிகாரியோ அவரை விடுவதாக இல்லை. ‘வேண்டுமானால் உணவு வகைகளைத் தயார்செய்து நீங்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருகிறேன்’ என்றும் சொல்லிப் பார்த்தார். அறிஞரோ மசிவதாகத் தெரியவில்லை. அன்புடனும் நயத்துடனும் மறுத்துக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் டென்ஷனான அந்த போலீஸ் அதிகாரி கோபமடைந்து வாய்க்கு வந்தபடி அந்த அறிஞரை வசைபாட ஆரம்பித்து விட்டார். பொறுமையாக எல்லா வசவுகளையும் கேட்டுக்கொண்டிருந்த அந்த அறிஞர் ‘நீங்கள் என்னை வசைபாடியதிலிருந்தே என் குறைபாடுகள் உங்களுக்குத் தெரிந்திருக்கின்றன. என்னுடைய எல்லா குறைபாடுகளும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் என் முகத்தைக்கூட பார்க்க விரும்ப மாட்டீர்கள்!’ என்றார்.
அவ்வளவுதான் அந்த போலீஸ் அதிகாரி திடுக்கிட்டவராக கோவென்று அழ ஆரம்பித்துவிட்டார். அவருக்கு உண்மை விளங்கியது. தன் பக்கமுள்ள தவறுகள் அவருக்குப் புரிந்தது. தனது சம்பாத்தியம் சரியானதல்ல என்கின்ற உண்மையை தெரிந்து கொண்டதால்தான் அறிஞர் தான் அழைக்கும் விருந்துக்கு வர மறுக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.
‘அறிஞரே! நான் போலீஸ் என்பதால் எனது விருந்துபசரிப்பை மறுக்கின்றீர்கள். நான் பாவமன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி நான் பணியில் இருக்கும்போது தவறிழைக்க மாட்டேன். என் சொந்த சொத்துக்களிலிருந்து வரும் வருவாயிலிருந்து தங்களுக்கு விருந்தளிக்கின்றேன். அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கண்ணீருடன் கேட்டுக்கொண்டார். அறிஞரும் அதன்பின் அவரின் விருந்தை ஏற்றுக் கொண்டார். அந்த அறிஞர் முஜஃப்பர் நகரில் வசிக்கும் மவ்லானா முஹம்மது காசிம் ஆவார்.
அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.