நகங்களைப் பாதுகாப்போம்
நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே ‘இன்ன நோய்’ என்பதையும் சொல்லிவிடுவார்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..
உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான்.
உடல்நிலையில் ஏற்படும் சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில் கூட மாற்றங்களை ஏற்படுத்தும்.
நகங்களை சுத்தமாகவும், சரியான அளவில் வெட்டி விடுவதும் ஒவ்வொருவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் செயலாகும்.
ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக விரிந்து வளர்வதன் மூலம் அறியலாம். சிலருக்கு நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையே காட்டுகிறது.
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.
நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கலாம். எப்போதாவது மனக்கவலை ஏற்படும் போது நகம் கடிப்பது ஒரு சிலர். ஆனால் எப்போதும் நகத்தை தேடித் தேடி கடிப்பது சிலருக்கு பழக்கமாகவே இருக்கிறது. அவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பது கூட நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தன்னம்பிக்கை குறைவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு நகம் வளர்வதே இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. வேலை செய்யும் போது நகம் தேய்ந்து அதன் வளர்ச்சி நம் கண்களுக்குத் தெரியாமலேயேப் போய்விடுகிறது..
நகங்கள் முளைக்கும்போது
நகங்கள் முளைக்கும்போது மிருதுவான செல் (cell) களால் உருவாகிறது. பிற்பாடு வளரும்போது கடினத்தன்மை அடைகிறது. நகத்தின் அடிப்புறம் உள்ள சருமத்தின் புற அடுக்கு க்யுடிகிள் (cuticle) எனப்படும். இது அழுக்கு, நுண்ணியக் கிருமிகள் போன்றவை உள்ளே ஊடுருவாமல் தடுத்துவைக்கிறது. நகத்தின் அடியில் உள்ள சருமத்தில் ரத்தம் அதிகமாய் ‘சப்ளை’ ஆவதாலும், தந்துகிகளாலும் இது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். நகத்தின் நீரகத்தன்மை 10% என்பதால் எலும்புகளை, பற்களைப் போலவே இதுவும் ஒரு கடினத் திசு ஆகும்.
இதன் வளர்ச்சி வாரத்திற்கு 0.5 – 1.2 மி.மீயாக இருக்கும். நகம் கோடையில் விரைவாக வளரும். பகலைவிட இரவில் கூடுதல் வளர்ச்சி கொண்டிருக்கிறது. நீங்கள் வலது கைப்பழக்கம் உடையவராயின் இடது கை நகத்தைவிட வலதுகை நகம் துரிதமாய் வளரும். நகத்தின் இயல்பான வளர்ச்சிக்கு சத்துள்ள உணவு தேவை. போஷாக்கின்மை அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும். ‘ப்யூலைன்’ (Beauline) என்று சொல்லக்கூடிய பள்ளங்கள் நகத்தின் குறுக்கு வசத்தில் விழும் சத்தின்மை காரணமாக அது முறிவுத்தன்மை அடையவும், சீவலாய் உதிரவும் வாய்ப்பு உண்டு.
பெண்கள் உபயோகிக்கிற நகப்பூச்சு நகங்களை மேலும் கடினப்படுத்திவிடும். சிலர் அடிக்கடி நகப்பூச்சை பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. மாதத்தில் ஓரிரு நாட்களாவது நகங்கள் காற்றோட்டத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான தன்மையை நாம் அறிய முடியும்
‘பாலிஷ் ரிமூவர்’ உபயோகிப்பதால் நகங்கள் முறிந்து போகவும் கூடும். சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். இதுபோன்றவர்கள் கை விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால், விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும். அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை அளிக்கும்.
கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தும் சோப்புத் தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட சில வித்தியாசங்கள் உண்டு. சிலவை நீள வாக்கில் பிரியும். சிலருக்கு குறுக்காக பிரியும். நகத்தில் உள்ள நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
நகச்சொத்தை ஏற்பட, நகத்தில் முன்பு எப்போதாவது ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம். விரலில் அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது, நகத் தட்டுக்கு அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது. ஆனால் நகச்சொத்தை தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்ககிவிட்டு அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
நோயின் அறிகுறியைக்காட்டும் நகங்கள்
பலர் முகத்தை அழகாக்கிக் கொள்வதில் நிறைய கவனம் செலுத்துவார்கள். ஆனால் நகங்களை கவனிக்காமலே விட்டுவிடுவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல்நிலையை நாம் நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஏன் எனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்பிற்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை நகம் காட்டுகிறது. ஏதேனும் ஒரு உடல் உபாதைக்காக நாம் மருத்துவரிடம் செல்லும் போது, சிலர் நம் கை விரல்களை பரிசோதிப்பார்கள். ஏனெனில் அவர்கள் சந்தேகிக்கும் நோய் நமக்கு ஏற்பட்டிருப்பின் அதற்கான ஆதாரம் நகங்களில் தெரிகிறதா என்பதை அறிந்து கொள்ளத்தான்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும்.
இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
நகங்களுக்கு பாலிஷ் (polish) தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும்.
ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.
இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.
அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது.
இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும்.
இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
நகங்களும் நோய்களின் பெயர்களும்
சிலருடைய நகங்கள் இயல்புக்கு மாறான தோற்றம் கொண்டிருக்கும். அவை நோய்களின் அறிகுறியை மருத்துவருக்கு புலப்படுத்தும்.
o க்ளப்பிங் (Clubbing): நகங்கள் மேற்புறத்தில் அதீத வளைவுடன், விரல் நுனியில் சுருண்டும் காணப்பட்டால் அவை அல்ஸர், டி.பி.எம் பிஸிமா போன்ற நோய்களின் வரவைக் குறிப்பதாகும்.
o ‘ப்ளு_மூன்ஸ்’ (Blue Moones): நகத்தின் அடிப்புறம் நீலமாக காணப்பட்டால் அது கால், விரல், பாத இசிவு மற்றும் இருதய நோய் குறித்தும் எச்சரிப்பதாகும். சில நேரங்களில் கீல் வாதங்களுக்கும் இந்த அறிகுறி பொருந்தும்.
o ‘ஸ்பூன் நெய்ல்ஸ்’ (Spoon Nails): தட்டையாக அல்லது கரண்டி போல் தோற்றமளிக்கும் நகங்கள். இரும்புச் சத்து குறைவில் வரும். அனீமியா, தைராய்டு கோளாறு மற்றும் சிபிலிஸ் நோய் தொடர்புகளைச் சுட்டும்.
o ‘ப்யூ’ஸ் லைன்கள் (Beau’s Lines): கடுமையான நோய் அல்லது சத்துப் பற்றாக்குறை காரணமாக நகத்தின் படுக்கை வாட்டில் பள்ளக்கோடுகள் விழும். தட்டம்மை (Measles), புட்டாலம்மை (Mumps) போன்றவற்றால் நகத்தின் வளர்ச்சி தற்காலிகமாக பாதிக்கப்படும்.
o ‘டெர்ரி’ஸ் (Terry’s): நகத்தின் அடிப்புற சருமம் ஒரேயடியாக வெளுத்துப் போகலாம். அது ஈரலில் வரும் ‘Cirrhosis’ஐ குறிக்கும்.
o ‘லிண்ட்ஸே’ (Lindsay): நகத்தின் முனைப் பக்க பாதி இளஞ்சிவப்பு அல்லது பழுப்பாக இருக்கும். க்யூடிகிள் சார்ந்த பாதியும் வெண்மையாய் காணப்படும். இது நாள்பட்ட சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகும்.
o ‘எல்லோ – நெய்ல் ஸிண்ட்ரம்’ (Yellow Nail Syndrome): நக வளர்ச்சி குன்றி கடினமாகும். மஞ்சள் அல்லது பசுமஞ்சள் நிறம் காணும். இது சுவாசக் கோளாறு பற்றிய அறிகுறி.
o ‘ஸ்ப்ளிண்டர் ஹெமரேஜஸ்’ (Splinter Haemorrhages): ரேகை மாதிரி ஓடும் செந்நிறக் கீற்றுகள் தந்துகிகளில் ஏற்படும் இரத்தக் கசிவையும் ப்ளட்_ப்ரஷ்ஷரையும் ‘Psoriasis’ என்கிற சரும நோயையும் பற்றி நமக்கு எச்சரிப்பதாகும்.
o ‘பிட்டிங்-இன்-ரோஸ்’ (PitinginRows): நகம் முழுக்க விழும் குழிகள் சீக்கிரமே முடி உதிருவதற்கான ‘சிக்னல்’. ஸோ… உங்கள் நகங்களை ஊன்றி கவனியுங்கள். அவை அதையே சொல்ல முயல்கின்றன.
நகப் பராமரிப்பு
‘வீக்’கான நகங்கள் என்றாலே சுலபத்தில் முறிந்து போகிற (Brittle) நகங்கள் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உரிதல், கிழிதல், பிளவுபடுதல் என்பன நகத்தின் தன்மைகள். சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் வறட்சி, குளுமை காரணமாக நகம் தன்னுடைய ஈரத்தன்மை இழக்கும். இதனாலும் முறிவுத்தன்மை மோசமாகும். இந்த இழப்பை ஈடுகட்ட, படுக்கப்போகும் போது சற்று வெதுவெதுப்பான நீரில் நகத்தை, ஒரு 15 நிமிடங்கள் முழுவதுமாய் நனைத்துக் கொள்ளலாம். பிறகு ‘மாய்சரைஸர்’ பயன்படுத்தலாம்.
o நமது கேசத்தைப் போலவே நகங்களும் பரம்பரையை ஒட்டியே அமைகின்றன. ஸ்ட்ராங்கான சோப், டிடர்ஜன்ட் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகழுவிக் கொண்டிருக்கக் கூடாது. அதனால், ‘நெய்ல்ப்ளேட்’டுகள் சுருங்கிப் போகும் அல்லது விரிந்துவிடும். நாம் முதுமை அடையும்போது நகங்கள் மெலிந்து, உடையக் கூடியதாகிவிடும். நடுத்தர வயதினரின் நகங்கள் வளர்ச்சி குன்றும், ஆனைவிட பெண்ணுக்கு வருஷங்கள் முன்னதாகவே நகமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. நகத்தினால் எதையும் சுரண்டவோ, கீறவோ கூடாது.
o சில பெண்கள் போலி நகங்கள் (காஸ்மெடிக் ஸ்டோரில் விற்கப்படும் Acrylic Nails) பொருத்திக் கொள்வார்கள். நீண்ட உபயோகத்தில் அவை ஒரிஜினல் நகங்கள் பாழடிந்துவிடும்.நக வளர்ச்சிக்கு என்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை.
o ஆனால் தினமும் ‘மைனாக்ஸிடில்’ (Minoxidill)- கேச வளர்ச்சிக்கு உபயோகிப்பது-பூசினால் ஆரோக்கியமான நகத்தைப் பெறமுடியும் என்கிறது அமெரிக்க கொலம்பியா மருத்துவமனையின் ஆராய்ச்சி மையம்.
o மருதாணி இலைகளை அரைத்து வைக்கப்படும் மருதாணி விரல் நகங்களுக்கு நல்ல பயனை அளிக்கிறது. அதனை முடிந்தால் செய்து வரலாம்.
நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமையப்பட்டுள்ளதை எண்ணிப்பாருங்கள். படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.