மார்க்க அறிவின்றி தொழுவோரின் நிலை!
மவ்லவி, அப்துல் பாரி பாகவி, வேலூர்
ஒரு ஊரில் படிப்பறிவில்லாத (ஜாஹில்) ஒரு மனிதர் இருந்தார். நிறைய வணக்கங்கள் புரிந்தார். ஐந்து வேளைத் தொழுகைகளை சுன்னத், நஃபீல்களுடன் நிறைவேற்றுவார். தினசரி பின்னிரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுகையையும் பக்தியடன் தொழுவார். மக்களுக்கு அவர் மேல் நல்ல அன்பு, மரியாதையுடன் ‘பெரியார்’ என்பர் அவரை.
நஜிமுத்தீன் என்று ஒருவனும் அந்த ஊரில் இருந்தான். பெரிய குரும்புக்காரன். இவனுக்கு அந்த படிப்பறிவில்லாத தொழுகையாளி மீது நல்லெண்ணம் கிடையாது. யாராவது அவனிடம் அந்த தொழுகையாளரைப்பற்றி ‘அவர் பெரியார்’ என்று கூறிவிட்டால் போதும் உடனே இவனுக்கு சுருக்கென்று கோபம் வந்துவிடும். உடனே அவன் ‘அவரையா பெரியார் என்கிறீர்கள்? அவர் ஒரு ஜாஹில் என்பான். மக்கள் அவனைத் திட்டுவார்கள், ஏசிப்பேசுவார்கள்.
அவன் ஒருநாள் செய்த குரும்புத்தனம் இதோ:
அத்தொழுகையாளரின் வீட்டுக் கூறைமேல் ஏறி அமர்ந்து கொண்டான். அந்த (ஆபித்) தொழுகையாளர் தஹஜ்ஜுத்துத் தொழுகைக்காக உளூ ச்செய்துவிட்டு தொழுகை விரிப்பில் நின்று தொழுகைக்குத் தயாரானார்.
வீட்டுக்கூறைமேல் அமர்ந்திருந்த குரும்புக்கார நஜிமுத்தீன் மெதுவான குரலில் வினோதமாக அசரீரி போல், ‘என் நல்லடியானே!’ என்றழைத்தான். ஆபித், திடுக்கிட்டு ‘யார் அது?’ என்று கேட்டார்.
‘நாம்தான் ஜிப்ரயீல், அல்லாஹ்விடமிருந்து உமக்கு ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறோம். உங்களுக்கு வயதாகி விட்டது. குளிர்காலம் இது. நீங்கள் நள்ளிரவில் எழுந்து குளிர்ந்த நீரில் ஒளூச்செய்து நடுங்கிக்கொண்டே தொழுவது எமக்கு வெட்கமாக இருக்கிறது. உங்களை நாம் மன்னித்து விடுகிறோம். இனி நீங்கள் தொழவே வேண்டியதில்லை!’ என்றான் அந்த குரும்புக்காரன்.
இதைக்கேட்ட அந்த ஆபித் பூரித்துப்போனார். அப்பாடா! என்று பெருமூச்சுவிட்டபடி குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்தார். காலை ஃபஜ்ர் தொழுகையில் பள்ளியின் முதல் வரிசையில் நடுவில் நிற்பவர் இன்று காணப்படவில்லை. அடுத்த வேளையும் வரவில்லை. அதைக் கவனித்த சிலர் வியந்தனர். அவருக்கு ஏதேனும் உடல்நலக்குறைவா? பார்த்து வருவோம் என்று அவர் விடு நோக்கி நடந்தனர். குரும்புக்கார நஜிமுத்தீனும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
அனுமதி பெற்று வீட்டில் நுழைந்தனர். ஆபித் சாகிப் கட்டிலில் ஜம்மென்று சாய்ந்து படுத்துக் கிடந்தார்.
‘பெரியவரே! நலமா? ஏன் தொழுகைக்கு வரவில்லை?’ என்று கேட்டனர்.
ஆபித் சாகிப் சொன்னார், ‘சகோதரர்களே! நான் நிறைய தொழுதுவிட்டேன். என் மேல் இறைவனுக்கு முழு திருப்தி ஏற்பட்டுவிட்டது. தொழுகையின் பலன் எனக்குக் கிடைத்துவிட்டது. இறைவன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் மூலம் ‘நீ இனி தொழ வேண்டியதில்லை’ என்று அறிவித்துவிட்டதாக பெருமையுடன் கூறினார். இதுகேட்டு விசாரிக்க வந்தவர்கள் வியந்து நிற்கையில் பின்னால் நின்றிருந்த குரும்புக்கார நஜிமுத்தீன் கைகொட்டி சிரித்தான்.
‘எப்படி உங்கள் பெரியார்? என்று மற்றவர்களைப்பார்த்து கண் சிமிட்டினான்.
இதைக்கேட்டு நாம் சிரிக்கலாம். மார்க்க அறிவில்லாத ஒருவரின் கதை இது. அவரை இழிவாகவும் நினைக்கலாம். ஆனால் அத்துடன் நம்முடைய நிலை என்ன? அதைப்பற்றி சிந்திப்போமா? கொஞ்சத்தை செய்துவிட்டு பெரிதாக எதிர்பார்க்கும் நம் நிலையும் ஏறத்தாழ அதுதானே!
‘தொழ வேண்டியதில்லை’ என்று கூறும் பீர்களும் அவர்கள் சொல்படி நடக்கும் சீடர்களும் இன்றம் இருக்கத்தானே செய்கின்றனர். அவர்களைத் திருத்துவதற்கு எவரும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லையே! – (அல்லாமா தானவீ அவர்களின் பஸந்தீதா வாகிஆத்) (நன்றி: ஜமாஅத்துல் உலமா மார்ச், 2003 இல் வெளியான கட்டுரை)
முரீது கோஷ்டியுடன் திரியும் சிலர் ‘திக்ரு செய்தால் போதும், தொழுகையெல்லாம் முக்கியமில்லை’ என்று செல்லிக்கொண்டு தங்களைத்தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்கும் இந்த கதையில் வரும் ஆபிதுக்கும் எந்த வேறுபாடும் இல்லையே! தீருந்தவார்களா? இனியாவது!